“பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்பது பாரதியார் வாக்கு. மானிடவாழ்வில் தாய்க்கே முதலிடம் வழங்கப்படுகின்றது. முற்றும்; துறந்த முனிவர்களும் தாயைப் போற்றியுள்ளனர். அத்தகைய தாய்க்கு அடுத்தபடியாகப் போற்றப்படவேண்டியது ஒருவர் பிறந்த நாடாகும். தேசப்பற்று, ஊர்ப்பற்று, நாட்டுப்பற்று எல்லோருக்கும் இருக்கவேண்டிய ஒன்றாகும். ஆனால் அப்பற்று மற்றைய இனத்தவரையோ மற்றைய ஊரவர்களையோ துன்புறுத்துவதாகவும் தாழ்த்துவதாகவும் அமைந்துவிடக் கூடாது என்பது ஆன்றோர் வாக்கு. ஒரு நாட்டின் பண்டைய வரலாற்றை நாம் அறிந்துகொள்ள உதவும் வழிகளுள் பிரதேச வரலாற்றாய்வுகள், இடப்பெயர் ஆய்வுகள் என்பன முக்கியமானவை. இவ்வாய்வுகள் மொழியியல், வரலாறு, தொல்பொருளியல், நிலநூல், சமூகவியல் போன்ற பல்வேறு துறைகளின் ஆய்வுகளுக்கும் வழிகாட்டுகின்றன. மக்களின் நாகரீகம், பண்பாடு ஆகியவற்றை அறியவும் இவ்வாய்வு துணைசெய்கின்றது. பல்லாண்டு காலமாக ஊரின் சிறப்புப் பற்றிக் கூறும் வழக்கம் தமிழ்மொழியில் இருந்து வந்துள்ளதை நாம் காண்கிறோம். பட்டினப் பாலை, மதுரைக் காஞ்சி முதலிய சங்ககால நூல்கள் நகர்கள் பற்றிக் கூறுவனவாகும். ஊரின் அமைப்பு, மக்களின் தொழில்வளம், பழக்க வழக்கங்கள், பண்பாட்டுச் சிறப்பு ஆகியவை பற்றிய பல செய்திகளை இந்நூல்கள் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. சிற்றிலக்கிய வகைகளான ஊர் விருத்தம், ஊர்வெண்பா என்பனவும் ஊரின் வரலாறு பற்றிக் கூறுவனவாகும். பாட்டுடைத்தலைவன் வாழ்ந்த ஊரின் சிறப்பினை பத்து ஆசிரிய விருத்தங்களால் சிறப்பித்துப் பாடப்பெறுவது ஊர்விருத்தம் என்பார்கள். ஒரு ஊரினைப் பத்து வெண்பாக்களால் சிறப்பித்துக் கூறுவது ஊர் வெண்பா எனவும் அறியப்படுகின்றது.
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வால் விளைந்த அலைந்துழல்வு (Nostalgia) வாழ்க்கை தருகின்ற துயரத்திலிருந்தும், ஏக்கத்திலிருந்தும் எம்மைத் தற்காலிகமாகவேனும் ஆறுதல்படுத்துவது நாம் சார்ந்த ஊர் பற்றி அவ்வப்போது எமக்குக் கிடைக்கும் செய்திகளாகும். எமது இனத்துவ அடையாளங்களை நமது அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச்செல்ல உதவுவதும் இத்தகைய பிரதேச வரலாற்று நூல்களே.
தாம் வாழ்ந்த மண்ணின் பிரதேச, சமூக வரலாறுகளைத் தம் சந்ததியினர் அறிந்துகொள்ளவென வழங்கிவிட்டுச் சென்ற நம் முன்னோர்களின் மண்மணம் மறவாத படைப்புக்கள் பல இன்றும் எம்மை நாம் இழந்தவிட்ட அந்தக்காலத்துக்கு அழைத்துச்சென்று புளங்காகிதமடையச் செய்கின்றன. தாம் பிரிந்துவந்த மண்ணின் நினைவுகளை பிரதேச வரலாறுகளாகப் பதிவுசெய்யும் நடைமுறை புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் நீண்டகாலமாகவே இருந்து வந்துள்ளது. அதே வேளை உள்ளக இடப்பெயர்வுகளால் தாம் இழந்த மண் பற்றிய துயரப் பதிவுகளை மேற்கொண்டு வரலாறாக்கும் பணிகளும் அண்மைக்காலத்தில் தாயகத்தில் முனைப்புப்பெற்று வந்திருக்கின்றன. ஆகமொத்தம் பிரதேச வரலாறென்பது வளர்ந்துவரும் ஒரு ஆய்வுப்பரப்பாக மாறிவிட்டதெனலாம்.
இன்று நமது புகலிடங்களில் உருவாக்கப்பட்டு இயங்கிவரும் கோவில்கள் கூட, தாயகத்துக் கோயில்களின் நினைவுகளைத் தாங்கியே இயங்குவதை ஆழ்ந்து அவதானிக்கமுடிகின்றது. ஆங்காங்கே உருவாக்கப்பட்டு, ஆண்டுதோறும் சந்திப்பு நிகழ்வுகளை மேற்கொண்டு கூடிப் பேசிப் பிரியும் ஊர்ச் சங்கங்கள் கூட, பிரதேச வரலாற்றின் கூறுகளாகவே அமைகின்றன. அவை அவ்வப்போது வெளியிடும் மலர்களும் அவ்வப் பிரதேசத்தின் வரலாற்றுப் படிமங்களாகவே காணப்படுகின்றன. பாடசாலை பழைய மாணவர் சங்கங்களும் இந்த வகைக்குள் அடங்குகின்றன.
இன்று ஈழத்தமிழர்களால் ஆங்காங்கே பதிவுசெய்யப்பட்டுவரும் பிரதேச வரலாற்றுக் கூறுகளைத் தொகுத்துப் பகுத்துப் பார்ப்பதே ஒரு வரலாற்று ஆவணமாகி விடும். அத்தகையதொரு விரிந்த தேடலுக்குத் தேவையான ஆய்வுப்பரப்பினை அடையாளம் காண்பதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
பிரதேச வரலாறுகள் ஒரு குறித்த புவியியல் எல்லைக்குட்பட்டதொரு பிரதேசத்தின் வரலாற்றை, அந்த மண்ணின் வளத்தை, மக்களின் பண்பாட்டை, குடித்தொகையை, அப்பிரதேசத்தில் எழுந்த கோவில்களை, அந்த மண்ணில் பிறந்து புகழ்பெற்ற மைந்தரைப் பற்றிய தகவல்களைப் பதிவுசெய்த தனி நூல்களாகவும் அமைகின்றன. அலைகடல் ஓரத்தில் தமிழ்மணம் என்ற பெயரில் உடப்பூர் வீரசொக்கன் எழுதி, உடப்பு இளம் தாரகை வட்டம் 1997இல் வெளியிட்டிருந்த ஒரு நூல் இதற்கு நல்லதொரு உதாரணமாகும். இலங்கையில் புத்தளம் மாவட்டத்தின் வடமேல் கரையில் உள்ளது உடப்பூர். புத்தளம் மாவட்டத்தில் தமிழரின் பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் பேணிப் பாதுகாத்துவரும் கிராமங்களில் உடப்பு கிராமமும் முன்னிலையில் திகழ்கின்றது. இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்து மன்னார்க் கரையினை அடைந்து கிட்டத்தட்ட 5 நூற்றாண்டுகளாக இவ்வூரிலேயே நிலைகொண்டு வாழ்ந்துவரும் தமிழ்பேசும் மக்களின் பிரதேச வரலாறு இதுவாகும். இம்மக்களிடையே வழங்கும் கர்ணபரம்பரைக் கதைகளையும் அம்மக்களின் வாழ்க்கை முறைகளையும் கலை பண்பாட்டு அம்சங்களையும் உற்றுநோக்கி இவ்வரலாறு எழுதப்பட்டுள்ளது. உடப்பூர் விஷேட குறிப்புகள், குடியேறிய வரலாறு, தொழில், கிழக்குக் கடலோர மீன்பிடித் தொழில், உடப்பில் வழக்கிலுள்ள பழமொழிகள், வில்லிசை, திரௌபதையம்மன் வழிபாடு, சித்திரைச் செவ்வாய், உடப்பின் நாட்டுப்பாடல், மரபுவிளையாட்டுகள், அம்பா பாடல், இந்து ஆலயங்கள் என்று பல அம்சங்கள் பற்றி இந்நூல் விரிவான தகவல்களைக் கொண்டுள்ளது.
ஒரு பிரதேச வரலாறு அப்பிரதேச மக்களின் இனவரலாறாகவும் எழுதப்படுவதுண்டு என்பதற்கு உதாரணமாக, அக்கரைப்பற்று வரலாறு என்ற நூலைக் குறிப்பிடலாம். யு.சு.ஆ.சலீம் அவர்களால் அக்கரைப்பற்று பள்ளிவாசல்களின் சம்மேளன வெளியீடாக, 1990 இல் இந்நூல் வெளிவந்தது. அக்கரைப்பற்றுப் பிரதேசத்தின் இயற்கைவளமும் கலாச்சாரமும் ஆக்கங்களும் சாதனைகளும் பெரியார்கள் உத்தமர்கள் போன்றோரின் வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அக்கரைப்பற்றுப் பிரதேசத்தின் பெயர்விளக்கம், புவியியல் அமைவு, மழைவீழ்ச்சி, குடியேற்ற வரலாறு, கிராமங்களின் தோற்றம், சமூக வாழ்வியல் அமைப்பு, குடும்ப அமைப்பு, பொருளாதாரமும் போக்குவரவும், கல்வி, இலக்கியச் செழுமை, வணக்கஸ்தலங்களும் ஸியாறங்களும், அரசியல் மேடை, ஆயுதப் போராட்டத்தில் அக்கரைப்பற்றின் பங்களிப்பு ஆகிய தகவல்கள் விபரமாகத் தரப்பட்டிருந்தன. அப்பிரதேசத்தின் முஸ்லிம் மக்களின் பூர்வீக வரலாற்றுக் குறிப்புகளை இப்பிரதேச வரலாறு இரண்டறக் கலந்து உள்ளடக்குகின்றது.
ஒரு பிரதேசத்தில் எழுந்தருளியிருக்கும் கோவில்களின்; கும்பாபிஷேக மலர்கள், கிறிஸ்தவ, இஸ்லாமிய வணக்கத்தலங்களின் வரலாறுகளைப் பதிவுசெய்யும் நோக்கில் எழுதப்பட்ட தனி நூல்கள் போன்றவற்றிலும் அப்பிரதேசத்தின் வரலாற்றுக் கூறுகளைக் காணமுடிகின்றது. ஆழ்கடலான் என்ற நூல் முருக.வே.பரமநாதன்அவர்களால் சிங்கை ஆழியான் என்ற புனைபெயரில் எழுதப்பெற்று கனடாவிலிருந்து நெய்தலங்கானல் வெளியீடாக 2000ஆம் ஆண்டு வெளிவந்தது. இதன் மூலப்பதிப்பு யாழ்ப்பாணம் திருமகள் அழுத்தகத்தில் அச்சிடப்பெற்று ஏற்கெனவே 1983இல் வெளியாகியிருந்தது. வெளிப்படையான ஆவணங்களோ, போதிய தொல்லியல் சான்றுகளோ இல்லாத நிலையில், ஈராயிரம் ஆண்டு வழிபாட்டு மரபொன்றைக் கொண்ட யாழ்ப்பாணம் வல்லிபுரம் ஆழ்வார்சுவாமி கோவிலின் வரலாற்றை மக்கள் பேணிவந்த மரபுகள், வாய்மொழி இலக்கியங்கள் ஆகியவற்றிலிருந்து பெற்று இக்கோவில் வரலாற்று நூலை முருக.வே.பரமநாதன்ஆக்கியுள்ளார். இவ்விரண்டாம் பதிப்பில், யாழ்ப்பாண மாவட்டத்துச் சாசனங்களில் இடப்பெயர்கள் (கலாநிதி இ.பாலசுந்தரம்), The Vallipura Alvar temple dedicated to the worship of God Vishnu (Puloly V.Arumugam)ஆகிய கட்டுரைகளும் வல்லிபுரக் கோயில்மீது பாடப்பெற்ற பாடல்களும் இடம்பெறுகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் நூலகர் திருமதி வி. பாலசுந்தரம் இம்மூலநூலுடன் பின்னிணைப்புகளையும் சேர்த்து கனடாவில் இரண்டாம் பதிப்பினை பதிப்பித்துள்ளார்.
இது போலவே ஈழத்துக் காரைநகர் திக்கரை முருகன் திருத்தலப் பாமாலை என்ற நூலையும் குறிப்பிடலாம். பொன்.பாலசுந்தரம் அவர்கள் இதனைத் தொகுத்து, காரைநகர் திக்கரை முருகன் தேவஸ்தான வெளியீடாக, 2006 இல் வெளியிட்டிருந்தார். ஈழத்துக் காரைநகர், களபூமியில் கோயில்கொண்டருளியிருக்கும் முருகன்மீது இயலிசைவாருதி, யாழ்ப்பாணம் பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர் அவர்கள் 1953ம் ஆண்டில் பாடிக்கொடுத்த நூறு அந்தாதிக் கீர்த்தனைகளே இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இக் கீர்த்தனைகளில் முருகனது தலப்பெருமைகளும் இணைந்துள்ளன. இசையோடு பாடுவதற்கேற்ப ராகம் தாளம் ஆகியவற்றுடன் இயற்றப்பட்ட இந்நூல் பக்தர்களுக்குச் சிறந்த தோத்திரத் தொகுதியாகவும், இசைத்துறையில் வல்லவர்களுக்கு ஏற்றதொரு கீர்த்தனைத் தொகுதியாகவும் வெளிப்படையாக அமைகின்றது. மேற்படி கோவில்சார்ந்த அரிய பல பிரதேச வரலாற்றுக் குறிப்புகளும் இக்கீர்த்தனைகளில் பொதிந்துள்ளமையையும் அவதானிக்கமுடிகின்றது. இந்நூல் - பிரதேச வரலாறுகள் உரைநடையில்தான் இருக்கவேண்டுமென்பதில்லை என்பதற்கு நல்லதொரு உதாரணமாகும்.
ஊர்காவற்றுறை புனித மரியாள் ஆலயத்தின் நூற்றாண்டுச் சிறப்பு மலர் 1895-1995 என்ற நூல் எஸ்.எம்.யோசெவ் அவர்களால் தொகுக்கப்பெற்று 1995 இல் வெளியிடப்பட்டது. காவலூர் புனித மரியாள் ஆலய நூற்றாண்டை முன்னிட்டு வெளியான இந்நூல், காவலூரின் இன்றைய நிகழ்வுகளையும், நிலவரங்களையும் உள்ளடக்கிய ஒரு வரலாற்றுத் தொகுப்பாய் மலர்ந்துள்ளது. ஊர்காவற்றுறை பற்றிய வரலாற்றைக் கத்தோலிக்க மறை வளர்ச்சியின் பின்னணியில் நான்கு ஆலயங்களின் வரலாற்று விபரங்களுடன், அங்கு பணியாற்றிய குரவர்கள், துறவிகள், முதலியோரின் சேவைகள் உட்பட பல தகவல்களையும் திரட்டி இயன்றளவு கோவைப் படுத்தி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறையின் பிரதேச வரலாற்றைக் கூறும் முக்கிய ஆவணமாக இந்நூல் கருதப்படுகின்றது.
ஈழத்துப் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் உலகெங்கும் பரந்து வாழும் அதன் பழைய மாணவர்களால், உருவாக்கப்பட்டு ஆண்டுதோறும் சந்திப்புகளை மேற்கொண்டு அச்சந்திப்பகளின் வழியாகப் பெறும் நிதியுதவிகளை தமது பாடசாலைக்கு வழங்கும் நற்பணியினையும் ஆற்றி வருவதை புகலிடத்தில் ஆங்காங்கே காணலாம். இவ்வமைப்புகள் சில சமயங்களில் தரமான சிறப்பு மலர்களையும் வெளிக்கொணர்வதுண்டு. அருணோதயம் என்ற பெயரில் நான் கண்ட ஒரு மலரை இதற்கு உதாரணமாகக் கூறலாம். 1995இல் கனடாவிலுள் அளவெட்டி அருணோதயக் கல்லூரிப் பழைய மாணவர் சங்கம், இத்தகைய சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டிருந்தது. அளவெட்டி அருணோதயக் கல்லூரி 1994ம் ஆண்டு நூற்றாண்டுவிழாவை தாயகத்தில் கொண்டாடியது. அதனையொட்டி கனடா அருணோதயக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் வெளியிட்ட நூற்றாண்டுவிழா மலர், கல்லூரியின் வரலாறு, வளர்ச்சி தொடர்பான கட்டுரைகளை மட்டுமின்றி அக்கல்லூரியின் அமைவிடமான அளவெட்டி ஊரைப்பற்றிய சிறப்புக்களையும் இம்மலர் பேசுகின்றது. 2000ஆம் ஆண்டிலும் இதே அமைப்பு மற்றுமொரு பிரதேச வரலாற்றுப்பதிவை பூச்சொரியும் பொன்னொச்சி மரம்: அருணோதயம் 2000. என்ற பெயரில் வெளியிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. சொந்த ஊர் வரலாற்றைப் பதிவுசெய்யும்வகையில், மண்ணின் மைந்தர்களான தட்சிணாமூர்த்தி (தவில்), பத்மநாதன் (நாதஸ்வரம்), வி.பொன்னம்பலம் (அரசியல்), மஹாகவி (இலக்கியம்), செ.சிவப்பிரகாசம் (சிற்பம்), அருட்கவி விநாசித்தம்பி (சமயம்), ஆகியோர் உள்ளிட்ட ஏராளமான மண்ணின் மக்களது செய்திகள் கலைநயத்துடனும் புகைப்பட ஆவணங்களுடனும் இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஊர் உரைத்தமை, ஊர் இழந்தமை, ஊர் நினைந்தமை, ஊர் மீண்டமை, ஊர் விளைந்தமை, ஊர் விரிந்தமை, என்று ஐந்து பிரிவுகளில் ஆக்கங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பாடசாலை, கல்லூரிகளின் பழைய மாணவர் சங்கங்கள் போலவே புகலிடத்தில் தாம் வாழும்வேளையில், தமது பிரதேசத்தின் பெயரால் அமைப்புகளை உருவாக்கி அதன் வழியாக புலம்பெயர்ந்து வாழும் அப்பிரதேச மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தவும், தாயகத்தில் தம் பிரதேச மக்களுக்குப் புலம் பெயர்ந்த பின்பும் உதவிகளை வழங்கவும் என பல்வேறு நோக்கங்களை முன்வைத்து அமைப்புகள் பல உருவாகியுள்ளதை அவதானிக்கலாம். அவற்றின் ஆண்டுவிழாக்களிலும், சிறப்பான நிகழ்வுகளிலும் வெளியிடப்படும் மலர்கள் பிரதேச வரலாற்றை பிரதிபலிக்கும் ஆக்கங்களையும் அவ்வப்போது உள்ளடக்குவதையும் காணலாம். இதற்கு உதாரணமாக கொம்பறை: வன்னிவிழா: ஆண்டுமலர்களைக் குறிப்பிடலாம். கனடா, வன்னி நலன்புரிச்சங்கம், ஆண்டுதோறும் வெளியிடும் இம்மலரின் சில பிரதிகளே என்கைக்கெட்டியுள்ளன. அதில் ஒன்றாக 1997ம் ஆண்டில் கே.பி.சிவானந்தராஜ் அவர்களைச் செயலாளராகக் கொண்டு வெளிவந்த கொம்பறை: வன்னிவிழா 97 என்ற சிறப்பு மலரை இங்கு உதாரணத்துக்கு எடுத்துக் கொள்கின்றேன். (வன்னிப் பிரதேசத்தில் நெல்மணிகள் சேமித்து வைக்க உபயோகிக்கும் நெற்களஞ்சியம்; “கொம்பறை” எனப்படும்). பண்டாரவன்னியன் நினைவையொட்டி கனடாவில் வன்னி நலன்புரிச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட வன்னி 97 சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்ட இம்மலர், ஆசிச்செய்திகளுடன் வன்னியும் வீர வரலாறும் (இரா.சரோஜினி), வன்னிநாட்டின் பாரம்பரியங்கள் (சிவா சேனாதிராஜா), வன்னிச் சிற்றரசுகளின் சமூகப் பொருளாதார அமைப்புமுறைகள் (பாலா கணபதிப்பிள்ளை), வன்னியியல் சில வரலாற்றுக் குறிப்புகள் (சிலையூரான்), வன்னிநாட்டின் கறைபடிந்த வரலாற்று நாயகர்கள் (முல்லைமணி), காணிநிலம் (அ.பாலமனோகரன்), வளம்கொழிக்கும் வன்னிநாடும் பண்டாரவன்னியனும் (அருணா செல்லத்துரை), வன்னிப்பிரதேச நாட்டார் இலக்கியச் சான்றுகளும் ஈழத்தில் கண்ணகி வழிபாட்டுப் பரவலும் (இ.பாலசுந்தரம்) ஆகிய வன்னியியல் சார்ந்த பல படைப்புக்களை உள்ளடக்கியிருந்தது.
புகலிடத்திலிருந்து வெளிவரும் இன்றைய பிரதேச வரலாற்று நூல்களின் தவிர்க்கமுடியாத ஒரு அம்சமாகக் குறித்ததொரு பிரதேசம் சார்ந்த சமூக வரலாற்றுக்கூறுகள் -மலரும் நினைவுகளாக அமைந்தவிடுவதைக் காணலாம். யாழ்;ப்பாணத்து மண்வாசனை என்ற நூல் வண்ணைதெய்வம் அவர்களால் பிரான்சிலிருந்து தொகுத்து வெளியிடப்பட்டது. சென்னை, மணிமேகலைப் பிரசுரமாக 2003இல் வெளிவந்தது. இந்நூல் ஈழத்து மண்வாசனையை-மண்ணின் மைந்தர்களின் வழியாகவே வெளிக்கொண்டுவரும் வித்தியாசமான யுக்தி. சுமார் 46 படைப்புக்களின் வாயிலாக, இன்று புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்துவாழும் ஈழத்தமிழர் தமது தாயகமண்; பற்றிய சிறப்பை எண்ணவரிகளாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அறிமுக எழுத்தாளர்களையும், அனுபவ இலக்கியவாதிகளையும் ஒரே தளத்தில் நிறுத்தி வண்ணைதெய்வம் இத்தொகுதியை வெற்றிகரமாக வெளிக்கொண்டுவந்துள்ளார். கவிதைகள், கட்டுரைகள், குறிப்புக்கள் என பலவடிவங்களின் வாயிலாகவும் யாழ்ப்பாணத்துப் பிரதேச வரலாற்றுத் தகவல்கள் பதிவாக்கப்பட்டுள்ளன.
பிரதேச வரலாறு பற்றிப் பேசும் நூல்களின் வரிசையில் ஒரு பிரதேசத்தின் வரலாற்று முக்கியத்துவமான அமைவிடம் பற்றிய தனி நூல்களையும் நாம் உள்ளடக்கவேண்டியுள்ளது. ஒரு பிரதேசத்தை முக்கியத்துவமுடையதாக்கும் அப்பிரதேசத்தின் வரலாற்று முக்கியத்துவமானதொரு இடத்தைப் பற்றி எழுதப்படும் இத்தகைய நூல்களும் பிரதேச வரலாற்று நூல்களே. களம்பல கண்ட யாழ். கோட்டை: யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு என்ற நூல், நீலவண்ணன் என்ற புனைபெயரில் செங்கை ஆழியான் க.குணராசா அவர்களால் எழுதப்பட்டு யாழ்ப்பாணத்திலிருந்து அவரது வெளியீட்டகமான கமலம் பதிப்பகத்தின் வாயிலாக 1995இல் வெளியிடப்பட்டது. இவ்வாய்வின் முதற்பகுதி 8.7.1990 முதல் யாழ்ப்பாணத்தில் முரசொலியில் தொடராக வெளிவந்திருந்தது. மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இத்தொடர் மேலும் விரிவாக்கப்பட்டு முழுநூலாக வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக்கோட்டையின் உருவாக்கம் முதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் அது விடுவிக்கப்பட்ட செப்டெம்பர் 26, 1990 வரையிலுமான காலவரலாற்றை, போர்த்துக்கேயர் காலம், ஒல்லாந்தர் காலம், ஆங்கிலேயர் காலம், ஈழயுத்தம்1, ஈழயுத்தம்2 என்ற ஐந்து பகுதிகளில் இந்நூல் பதிவுசெய்கின்றது. (நூலின் அட்டையில் யாழ்ப்பாணக்கோட்டை வரலாறு என்று குறிப்பிடப்பட்டுள்ளது).
ஈழத்தில் எழுந்த சில ஆக்க இலக்கியங்களும் பிரதேச வரலாற்றுக் கூறுகளை முதன்மைப்படுத்தி வெளிவந்துள்ளன. கற்பனைகலந்த நாவல்களான போதிலும் அவற்றில் கதை நிகழும் மண் பற்றிய பல வரலாற்றுத் தகவல்கள் உண்மையானவையாக இருக்கின்றன. இதற்குப் பொருத்தமான உதாரணமாக அந்த நதியும் அதன் மக்களும்... என்ற நாவலைக் குறிப்பிடலாம். நீர்கொழும்பூர் முத்துலிங்கம் எழுதிய இந்நாவல் அவரது குடும்பத்தினரால் நீர்கொழும்பில் 2005இல் வெளியிடப்பட்டது. நீர்கொழும்பூர் முத்துலிங்கம் 09 ஜனவரி 2000 அன்று சுகவீனம் காரணமாக மறைந்தவர். அவர் மறையும் முன்னர் இறுதியாக எழுதிய இந்நாவல் தினக்குரலில் வாராந்தம் பிரசுரமாகிவந்த வேளையிலேயே அவரது மரணமும் நிகழ்ந்தது. கதை நிகழும் களம் சிலாபம், சித்தாமடம், மாயவன் ஆற்று மையம் என்பவையாகும். சிலாபத்திலிருந்து புத்தளம் செல்லும் பாதையில் தெதுரு ஓயா என்ற மாயவன் ஆற்றின் ஒரு கரையை எல்லையாகக் கொண்டிருக்கும் சித்தாமடம் என்னும் கிராமமும் அக்கிராமத்து பால்பண்ணையும், அப்பண்ணையோடிணைந்த மக்களும் அப்பிரதேசத்தை ஆட்டிப்படைத்த 1957 பெருவெள்ளமும் நாவலை விறுவிறுப்பாக்கக் காரணமாகின்றன. இதன்வழியாக பின்னாளில் சிங்களமயப்படுத்தப்பட்ட அப்பிரதேசத்தின் தமிழ்ப்பாரம்பரிய வரலாற்றுச் செய்திகளை இந்நாவலும் பொதிந்து வைத்திருப்பதை நாம் அவதானிக்கலாம்.
சில இலக்கியவாதிகள் தான் பிறந்து வளர்ந்த கிராமத்தின் சமூக வரலாற்றையும் தான் வாழ்ந்த காலத்தின் மலரும் நினைவுகளையும் நூல்களாகப் பதிவுசெய்துவைத்திருக்கிறார்கள். நடைச்சித்திரங்களாகவும், கட்டுரைகளாகவும் இவை பதிவிலுள்ளன. பின்னாளில் தமது சந்ததியினர் நூல்வழியாகவேனும் கடந்த காலத்தைக் கற்பனையில் கண்டு ரசிக்கட்டும் என்ற போக்கில் இத்தகைய படைப்புக்கள் எழுதப்பட்டுள்ளதாகத் தோன்றுகின்றது. அந்தக் காலக் கதைகள் என்ற நடைச்சித்திரம் தில்லைச்சிவன் (இயற்பெயர்: தி.சிவசாமி) அவர்களால் எழுதப்பட்டு யாழ்ப்பாணம் மல்லிகைப் பந்தல் வெளியீடாக 1997இல் வெளிவந்தது. சரவணைக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் தில்லைச்சிவன். மல்லிகை இதழ்களில் 1993களில் அவ்வப்போது பிரசுரமான அவரது விவரணக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்தது. இத்தொகுப்பில் வேலணைத்தீவுச் சைவ இளைஞர் சபை, ஊரிமண்காடு, அன்பு வியாபாரி, தூக்கணாங்குருவி, புளிச்சாதம், எனது பாட்டனார் ஒரு துப்பாக்கி வைத்திருந்தார், பாட்டனார் சொன்ன தோம்புக்கதை, பண்டமாற்று, மாற்றம் வரும்போது, வண்டியின் பின்னால் வந்த பேய், திருமணங்கள் இரண்டு, ஐயனார் கோவில் திருவிழா, உமிரிக்கீரை, மீசை முளைத்தது, அராலிச்சந்தித் தண்ணீர்ப் பந்தல், வலம்புரிச் சங்கு, சித்திரை வெள்ளம், தேர்தல் வந்தது, கவிதை பிறந்த கதை, விசாலாட்சி விசுவநாதர் திருமணம், பாஞ்சாலி, பாட்டனாரின் கதை ஆகிய 22 தலைப்புக்களில் தில்லைச்சிவனின் பார்வையில் தான் வாழ்ந்த மண்ணின் விவரணங்கள் விரிகின்றன.
தாயக மண்ணைப் பிரிந்துவந்த வேதனையில் அதன் நினைவுகளை அழியாது காக்கும் பணியில் புகலிடத்தில் வாழும் எம்மவரும் மேற்குறிப்பிட்ட வகையிலான நடைச்சித்திரங்களை எழுதிவந்தள்ளார்கள். அந்தக் காலத்து யாழ்ப்பாணம் என்ற தலைப்பில் இன்று அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் சி.சு.நாகேந்திரன் அவர்கள் அவுஸ்திரேலியாவில் சிட்னி மாநிலத்தில் இயங்கும் அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் காலாண்டு வெளியீடான கலப்பை காலாண்டிதழில் முதியோன் என்ற புனைபெயரில் தொடராக இதனை எழுதிவந்தார். இக் கட்டுரைத்தொடரின் நூல்வடிவமே தனிநூலாக 2004இல் வெளிவந்தது. 1920களிலிருந்து படிப்படியாக மாறிவந்த யாழ்ப்பாணத்துச் சமூகவாழ்க்கை முறையை, உள்ளது உள்ளபடி காய்தல் உவத்தலின்றி சி.சு.நாகேந்திரனின் கட்டுரைகள் வழங்குகின்றன.
ஒரு பிரதேச வரலாற்றை நாம் அறிந்துகொள்ள உதவும் வழிகளுள் இடப்பெயர் ஆய்வுகளும் முக்கியமானவை என ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தோம். ஈழத்தின் இடப்பெயர் ஆய்வு தொடர்பாகத் தீவிர ஈடுபாட்டுடன் இயங்கியவர் தற்போது கனடாவில் வாழும் கலாநிதி இ.பாலசுந்தரம். அவரது இடப்பெயர் ஆய்வு: காங்கேசன் கல்வி வட்டாரம் என்ற நூல் இளவாலை: பண்டிதர் அப்புத்துரை மணிவிழாக்குழுவினால் 1988இல் வெளிவந்திருந்தது. நீர்நிலைப்பெயர், நிலவியல்பு, நிலப்பயன்பாட்டு நிலை, குடியிருப்பு நிலை, ஊராட்சி நிலை, தாவரப்பெயர், சிறப்பு நிலைப்பெயர் ஆகிய தலைப்புக்களின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட, காங்கேசன் கல்விவட்டார எல்லைக்குள் அமைந்துள்ள இடங்களின் பெயர்கள் இந்நூலில்ஆய்வு செய்யப் பட்டிருந்தன. இலங்கை இடப்பெயர் ஆய்வு 2: வடமராட்சி, தென்மராட்சி என்ற மற்றொரு நூல் புலோலி, வல்லிபுரம் இந்து கல்வி கலாச்சார மன்ற வெளியீடாக, 1989இல் வெளிவந்தது. யாழ்ப்பாண மாவட்டத்தில் வடகரையிலே தொண்டைமானாறு பிரிக்கும் வடபகுதியும், அதனோடு இணைந்த வடகிழக்குப்பகுதியும், தென்பகுதியும் வடமராட்சி, தென்மராட்சிப் பிரதேசங்களாகும். இப்பிரதேசத்து இடப்பெயர்களின் ஆய்வு ஒன்பது இயல்களில் விரிவாக இந்நூலில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேற்கண்ட இரு நூல்கள் தந்த விடயங்களையும் பிற ஆய்வுகளையும் உள்ளடக்கியதாக, பின்னாளில், ஈழத்து இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். என்றவொரு நூல் கனடா, தமிழர் செந்தாமரை வெளியீட்டக வெளியீடாக 2002 இல் வெளிவந்திருந்தது.
பிரதேச வரலாற்றுக் கூறுகள் பயண இலக்கியங்களுக்குள்ளும் பொதிந்து கிடக்கின்றனவாயினும், அவை ஒரு பிரதேசத்தின் வரலாற்றை, வாழ்க்கை முறைகளை அந்நியப்பார்வை கொண்டு பார்த்து வியக்கும் அல்லது பெருமிதம் கொள்ளும் பாங்குடையவையாகும். இலங்கையில் தமிழர்களின் வரலாறுகளை நாம் ஆதாரபூர்வமாக நிரூபிக்க இன்றும் சீன யாத்திரீகர்களினதும், ஐரோப்பியரினதும் கீழைத்தேய மேலைத்தேய பயணிகளின் நாட்குறிப்புகளிலும் இருந்தும் ஆதாரங்களைத் தேடி வந்திருக்கிறோம் என்ற வகையில் எமது மண்ணின் பிரதேச வரலாற்றை ஆராய்வதற்கு இத்தகைய வரலாற்றாதாரங்களும் முக்கியமாகும். இதற்குச் சுவையான ஆதாரமொன்றைக் குறிப்பிடலாம்.
நியூசிலந்தில் தமிழன் பதித்த சுவடுகள் என்ற நூல் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனில் பிறந்த ஆ.தா.ஆறுமுகம் அவர்களால் எழுதப்பட்டு நியுசிலாந்து வெலிங்ரன் தமிழ்ச் சங்க வெளியீடாக 2007இல் வெளிவந்தது. தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர் 1985இல் முஃஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் அதிபராகவிருந்து ஓய்வுபெற்றவர். தற்போது நியுசிலாந்தில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். நியுசிலாந்தின் வெலிங்டன் தொல்பொருளகத்தில் (ஆரளநரஅ) காட்சிப்படுத்தப்பட்டுள்ள தமிழ் எழுத்துக்கள் பொறித்த மணியைப் பற்றிய விரிவான ஆய்வு இதுவாகும். வுயஅடை டீநடட என்ற பெயரில் இவ்வரும்பொருட் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த மணி “முகையயதினவககுசுஉடையகபலஉடையமணி” என்று புடைப்பு (நஅடிழளள) எழுத்துடன் வார்க்கப்பட்டுள்ளது. இது தமிழரின் கடற்பிரயாணம் 15ம் நூற்றாண்டில் இப்பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதையும், இம்மணிக்கும், இங்கு புதையுண்டுள்ள ஒரு மரக்கலத்திற்கும், ஊhசளைவஉhரசஉh என்ற பகுதியிலுள்ள குகை ஓவியங்களுக்கும் தொடர்புள்ளதாகவும் இவர் தன் ஆய்வின்மூலம் வெளிப்படுத்த முனைகின்றார்.
மேற்கண்ட நூலுடன் வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள் என்ற தலைப்பில் ஈ.கே.ராஜகோபால் (இயற்பெயர்: இளையதம்பி குமாரசாமி ராஜகோபால்) எழுதி யாழ்ப்பாணம், கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள் அமைப்பினால் 1984இல் வெளியிடப்பட்ட மற்றுமொரு நூலையும் குறிப்பிடவேண்டும்;. 1930ம் ஆண்டளவில் இலங்கை வடபுலத்தின் கரையோரப்பகுதியான வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவின் குளொசெஸ்டர் துறைமுகத்துக்குச் சென்றடைந்த அன்னபூரணி கப்பலின் பிரயாண வரலாறு இந்நூலாகும். இவையிரண்டும் ஒன்றுக்கொன்று நேரடித் தொடர்பற்ற நூல்கள். ஆனாலும், மேற்சொன்ன இவ்விரு நூல்களும் வல்வெட்டித்துறை மண்ணின் கப்பல்கட்டும் தொழிலின் வரலாற்றுப் பெருமையை தொடர்புபடுத்துவதால், பிரதேச வரலாற்றாய்வாளர்களுக்கு முக்கியமான நூல்களாகக் கருதப்படலாம்.
ஒரு பிரதேச வரலாற்றை எழுதப்புகும் ஒருவர் நிச்சயமாக அந்த மண்ணின் மைந்தனாக இருக்கவேண்டியது கட்டாயமல்ல. ஆயினும் அத்தகையதொரு மண்ணின் மைந்தனால் எழுதப்படும் பிரதேச வரலாறுகள் அதிக உள்வீட்டுத் தகவல்களைத் தரும் என்ற வகையில் ஆழமானதாக அமைய வாய்ப்புள்ளது. அதே வேளையில், தாய்மண் பற்றிய அவரது பார்வை உணர்வுபூர்வமாக அமைந்து சமநிலை தவறிவிடும் ஆபத்தும் உள்ளது என்பதையும் மனதில் கொள்ள வேண்டியுள்ளது.
இன்று எமது பாரம்பரிய பிரதேசங்கள் சிங்களக் குடியேற்றங்களாலும், இராணுவக் குடியிருப்புகளாலும் கையகப்படுத்தப்பட்டு பாரம்பரியமாக வழங்கிவந்த ஊர்ப்பெயர்களே மாற்றம் கண்டுவருகின்றன. புவியியல்ரீதியான குடித்தொகைப் பரம்பல்கள் திட்டமிட்டவகையில் படிப்படையாக மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. எம் கண்முன்னேயே கையறு நிலையில் இவை அரங்கேறுகின்றன. இந்நிலையில் எமது பாரம்பரியப் பிரதேசங்களின் வரலாறுகள் எதிர்காலச் சந்ததியினருக்காக பதிவுசெய்யப்படவேண்டிய தேவை அழுத்தமாக உணரப்பட்டு வருகின்றது. அதன் ஒரு புலப்பாடே அதிக அளவில் பிரதேச வரலாற்று நூல்களின் அண்மைக்கால வருகையாகும். ஈழத்தில் எழுந்த பிரதேச வரலாற்று நூல்கள் பற்றிய விரிவான தேடலொன்றை மேற்கொண்டு வரும் நிலையில் அவை பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் பரந்த அடிப்படையில் தமது தேடலை விரிவாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்புடையவர்களாக உள்ளனர். அவர்களுக்கு உதவும் தேடற்புலங்களை அடையாளம் காட்டுவதாகவே இக்கட்டுரை அமைகின்றது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.