- மே 8, 2012 - தோழர், அமைச்சர் இராதாகிறிஷ்ணா (றோய்) படையாட்சி அவர்களின் மறைவை அறிந்து நாம் கடும் அதிர்ச்சியும் ஆறாத் துயரமும் அடைந்துள்ளோம். அன்னார், மனித மேம்பாட்டுச் செயல்வீரனக விளங்கியதோடு வறியோருக்கும் மிக ஒடுக்கப்பட்டோருக்கும் உதவும் பணிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். அன்னாரின் மறைவானது அவரது குடும்பத்தினருக்கும் அவரது மக்களுக்கும் உலகளாவிய மட்டத்தில் அவரின் தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, கருணையுள்ளம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டோருக்கும் உண்மையிலேயே ஒரு பேரிழப்பாகும். குடியரசுத் தலைவர் சூமா அவர்கள் மிக அழகாக எடுத்துரைத்தது போன்று, “படையாட்சி அளவிடமுடியாத அற்பணிப்பையும் ஆளுமையையும் பெற்ற ஒருவர். சிறப்புமிக்க ஆபிரிக்காவையும் உலகத்தையும் உருவாக்கும் தன் குறிக்கோளுக்காக வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துப் புறப்பட்ட பயணத்தில் அவர் தன் தலைவிதியையும் சாவினையும் சந்திக்க நேர்ந்தது மிகவும் கவலை அளிக்கின்றது.”
சிறீலங்காவில் நீதியும் சமத்துவமுமுடைய சமாதானத்திற்கான எமது போராட்டத்திற்குத் தோழர் றோய் அவர்கள் பெரும் ஆதரவாளராக விளங்கினார். ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கட்டி எழுப்புவதற்கு, தென் ஆபிரிக்காவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் தான் பெற்ற அனுபவங்கள,; விளக்கங்கள் ஆகியன பற்றியும் உண்மை, மீளிணக்கம், பொறுப்புக்கூறுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றியும் எம்முடன் பகிர்ந்துள்ளார்.
அமைச்சர் றோய் படையாட்சி அவர்கள் உலகத் தமிழர் பேரவைக்கு வழங்கிய ஆதரவையிட்டு நாம் உண்மையிலேயே பெருமிதமடைவதோடு அவருக்கு நன்றிக்கடன் உடையவர்களாகவும் உள்ளோம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஆபிரிக்க தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழாவிற் கலங்து கொள்வதற்கு எமக்கு அழைப்பு விட்டமையிட்டுத் தனிப் பெருமையடைகின்றோம்.
தோழர் றோய் படையாட்சி அவர்கள் ஒரு தலை சிறந்த மனிதர் மட்டுமல்லாது அவர் ஒரு கடும் உழைப்புடைய சமூக சேவகர், தன்னலமற்ற மனிதாபிமான ஆர்வலர், விடுதலைப் போராளி, வறியோருக்காக பாடுபட்டவர் என்பதையெல்லாமிட்டுப் பெருமையடைதல் அவரது மறைவால் ஆற்றொணாத் துயரில் வாடும் அவர் குடும்பத்தினருக்கு மன ஆறுதலைக் கொடுக்குமென நம்புகின்றோம். உலகத் தமிமர் பேரவை, சிறீலங்கா வாழ் தமிழர்கள், உலகளாவிய தமிழ் மக்கள் ஆகிய அனைவரினதும் போற்றுதற்குரிய நண்பனாக விளங்கிய அன்னாரின் பிரிவு ஈடு செய்ய முடியாதது.
உலகத் தமிழர் பேரவையின் தலைவர் என்ற முறையிலும் அன்னாரின் நண்பன் என்ற முறையிலும் அவரின் ஆன்மா என்றும் சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.
வண. முனைவர் எஸ். ஜே. இமானுவல்
தலைவர், உலகத் தமிழர் பேரவை
ஊடகத் தொடர்பு: சுரேன் சுரேந்திரன்
தோலைபேசி: 10 44 (0) 7958 590 196
மின்னஞ்சல்: ;: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Skype: surendirans
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.