தமிழ் படைப்பாளிகள் கழகத்தின் ஊடக அறிக்கை: மே 18 தமிழீழ தேசீய துக்க நாள்! எமது மக்களின் தியாகம் வீண்போகக் கூடாது!
மே 13, 2014 , ம 18, சிங்கள இராணுவம் தமிழ்மக்களை ஆண், பெண், குழந்தைகள் எனப் பாராது குண்டுகள் போட்டுக் கொன்றொழித்த நாள். இந்த ஆண்டு 5 ஆவது நினைவேந்தல் ஆண்டாகும். சிங்கள இராணுவம், பாதுகாப்பு இடத்தில் ஓடிப் பதிங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அந்த இடத்தைக் குறிவைத்து வானில் இருந்து குண்டுகளும் தரையில் இருந்து செல்தாக்குதல்களையும் மழை போல் பொழிந்து தமிழ்மக்களைச் சங்காரம் செய்த நாள். பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகளைக் கூட கொடிய சிங்களப் படைகள் விட்டுவைக்கவில்லை. மருத்துவமனைகள் இராணுவ தாக்குதலுக்குரிய இலக்குத்தான் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராஜபக்சே கொக்கரித்தான். மக்களைக் காப்பாற்ற வேண்டிய அய்நா அதிகாரிகள் வன்னிக் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்களும் தப்பினோம் பிழைத்தோம் என கொழும்புக்கு ஓடித் தப்பினார்கள். உலக நாடுகள் கண்ணை மூடிக்கொண்டன. காதுகளைப் பொத்திக் கொண்டன. தமிழ்மக்களின் அழுகுரலைப் பார்க்கவும் கேட்கவும் இந்த நாடுகள் மறுத்தன.