( மீள்பிரசுரம்: சரிநிகர் ) பிறேமவதி மனம்பேரி: ஒரு அழகிய போராளியின் நினைவுகள்
1971 ஜேவிபி'யினரின் அரசுகெதிரான புரட்சியின் போது கதிர்காமம் அவர்களின் முக்கியதொரு கோட்டையாக விளங்கியது. அங்கு புரட்சியாளர்களை அடக்கிய இலங்கை அரச படையினர் ஆண்கள், பெண்களென்று பலரைக் கைது செய்தார்கள். அவர்களில் பிரேமவதி மனம்பெரியும் ஒருவர். இரவு முழுவதும் தடுப்புக்காவலில் அவரைப்பலமாகச் சித்திரவதைக்குட்படுத்தினர். அவரிடமிருந்து எவ்விதமான தகவல்களையும் பெற முடியாத நிலையில் ஆத்திரமுற்ற உயர் இராணுவ அதிகாரி அவரை நகரத்தெருக்களினூடு நிர்வாணமாக்கி நடக்க வைத்தார். அவ்விதம் செல்லும்போது இன்னுமோர் அதிகாரி அவரைப்பலமாகத் தாக்கினார். இறுதியில் தபால் நிலையமருகில் அவரைச்சுட்டு உயிருடன் புதைகுழிக்குள் விட்டுச் சென்றனர். பின் மீண்டும் இரு தடவைகள் வந்து அவரைச் சுட்டுக் கொன்றனர். பிரேமவதி மனம்பெரிக்கு அப்பொழுது வயது 22. அவரைக்கொன்ற இராணுவ அதிகாரிகளான விஜேசூரியா, அமரதாச ரட்னாயக்க ஆகியோர் நீதி விசாரணைக்குட்படுத்தப்பட்டு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றனர். இவர்களில் விஜேசூரியாவை 1988இல் ஜேவிபியினர் பிரேமவதி மனம்பெரியைக் கொன்றதற்காகச் சுட்டுக்கொன்றனர். சுடப்பட்டு புதைகுழிக்குள் மரணத்தின் விளிம்பில் இருந்தபோதும் அவர் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. யார் மேலும் தனக்குக் கோபமில்லையென்றே கூறியிருக்கின்றார். அந்த மனவலிமை எல்லோருக்கும் வந்து விடாது. பிரேமவதி மனம்பெரி உண்மையான புரட்சிப்பெண். - பதிவுகள் -
இன்று (ஏப்ரில் 16) ஜே.வி.பி. ஏப்ரல் கிளர்ச்சியின் 40வது வருட நினைவுநாள்…
இக்கட்டுரை ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சியான 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் 40 வது வருட நினைவு கூரல் நாடெங்கிலும் நடந்து கொண்டிருகின்ற இந்த வேளை அதன்போது கொல்லப்பட்ட மனம்பேரியை நினைவு கூருகிறது. 1996ஆம் ஆண்டு ஜே.வி.பி. கிளர்ச்சியின் 25வது வருட நிகழ்வை நினைவை முன்னிட்டு சரிநிகரில் எழுதிய சிறப்புக் கட்டுரைகளில் இதுவும் ஒன்று. இக்கட்டுரை எழுதுவதற்காக கதிர்காமத்திலுள்ள மனம்பேரியின் வீட்டுக்குச் சென்று வீட்டாருடனும் பெற்றோருடனும் உரையாடினேன். கதிர்காமத்தில் மனம்பேரி கொல்லப்பட்ட இடத்தையும் சென்று பார்வையிட்டேன். ஜே.வி.பி தோழர்கள் என்னுடைய இந்த பயணத்தில் உதவினார்கள். குறிப்பாக முற்றிலும் சிங்களப் பிரதேசமான அங்கு அன்றைய சமயத்தில் தமிழர்கள் அச்சமின்றி போய் வரும் நிலை இருக்கவில்லை. என்னோடு வந்த என் சக ஜே.வி.பி. தோழர்கள் என்னுடைய பாதுகாப்பில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டனர்.
மனம்பேரி வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான எலடினையும் போய் சந்தித்தேன். அது தவிர 71 கிளர்ச்சி பற்றி விசாரணை செய்த விசேட நீதிமன்ற நீதிபதி ஏ.சி.அலஸ் (*1) எழுதிய நூலில் இருந்த தகவல்கள் சில இக்கட்டுரைக்கு உதவிற்று. மேலும் மனம்பேரி வழக்கு இடம்பெற்ற (1973 – மே) காலப்பகுதியில் வெளியான பத்திரிகைகளை தேசிய சுவடிகூடத் திணைக்களத்தில் இருந்து சில நாட்களாக திரட்டிய தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இக்கட்டுரை தயாரிக்கப்பட்டது. இலங்கையில் முதன் முதலில் பாரிய ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினர். 1971 ஏப்ரல் கிளர்ச்சி என அழைக்கப்பட்ட இது அரசாங்கத்தின் கொடூர ஒடுக்குமுறையினால் அடக்கப்பட்டது. இக்காலப் பகுதியில் கொல்லப்பட்ட ம.வி.மு. பெண் போராளி மனம்பேரி பற்றி இந்த 40 வது வருட நினைவில் சில குறிப்புகள்.
அவள் கொல்லப்பட்டு 40 வருடங்கள். 20,000க்கும் மேற்பட்ட அவளின் தோழர்கள் கொல்லப்பட்டு 40 வருடங்கள். அவளையும் அவளது தோழர்களையும் கொன்றழித்த அந்த அரசமைப்பு மட்டும் இன்னமும் வாழ்கிறது. அவர்களது போராட்டம்…?
ஏப்ரல் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக அன்றைய பிரதமர் சிறிமா பண்டாரநாயக இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் உதவியை நாடியதைத் தொடர்ந்து, இந்திரா காந்தி இந்திய படைகளை அனுப்பி உதவினார். இந்தியப் படைகள் தெற்கு காடுகளில் புரிந்த சித்திரவதைகளை பலர் சிங்களத்தில் பதிவு செய்திருக்கின்றனர்.) 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் போது அரச படையினால் கொல்லப்பட்ட பெண் போராளிகளில் அவளும் ஒருத்தி. இருபதாயிரத்துக்கும் மேற்ப்பட்ட இளம், ஆண், பெண் போராளிகளை அரச யந்திரம் கொன்றொழித்தது. ஆனால் அத்தனைக்கும் நியாயம் கற்பித்த அரசு, ஒரே ஒரு கொலையை மாத்திரம் படையினரின் அதிகார துஷபிரயோகச் செயல் எனக் கூறி கண்துடைப்புக்காக விசாரணையை நடத்தியது. அவ்விசாரணை தான் பிரேமவதி மனம்பேரியின் கொலை விசாரணை. இதிலுள்ள இன்னொரு முக்கிய அம்சம் என்னவெனில் படையினருக்கு எதிரான விசாரணையொன்றில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்ட ஒரே வழக்கும் இதுதான்.