[ஏப்பிரல் 28, 2012] மத்திய சிறீலங்காவில் தம்புளையிலுள்ள இசுலாமியரின் பள்ளிவாசலை அகற்றுவதற்குச் சிறீலங்கா அரசு இட்ட கட்டளை தொடர்பான கபடத்தனத்தை உலகத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கின்றது. ஏப்பிரல் 20, 2012 அன்று புத்த பிக்குகளின் தலைமையில், சிறுபான்மையினரே ஆயினும் ஆயிரக்கணக்கிலான தீவிரவாதப் புத்த மதத்தினர், சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளதெனவும் அதனை அழிக்கவேண்டுமெனவும் கோரி அங்குள்ள பள்ளிவாசலைத் தாக்கியமை பற்றி உலகத் தமிழர் பேரவை பெரும் கவலை கொண்டுள்ளது. சட்ட நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் இத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியமையும் பள்ளிவாசலை அகற்றி அதனை வேறிடத்திற்கு மாற்றும்படி பிரதம மந்திரி இட்ட கட்டளையும், இலங்கைத் தீவில் அரச உயர் அதிகாரிகள் மதச் சுதந்திரத்தை தொடர்ந்து மீறிவருவதையும் புத்த மதம் தவிர்ந்த மற்றைய மதங்கள்மீதான அவர்களின் சகிப்பின்மையையும் கோடிட்டுக் காட்டுகின்றன. பிரதம மந்திரியின் இம்முடிவானது இசுலாமியரின் அரசியல் தலைவர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு எடுக்கப்பட்டதெனப் பிரதம மந்திரியின் அலுவலகம் அறிவித்துள்ள போதிலும, செய்தி ஊடகங்களில் வெளிவந்தது போன்று, இந்த அறிவித்தல் வன்மையாக மறுக்கப்பட்டுள்ளமை மேலும் கவலையளிப்பதாக உள்ளது. இன நெருக்கடிகள் ஏற்படும் போதெல்லாம் பெரும்பான்மையினரின் அழுத்தங்களுக்கு அடிபணிதல் என்பது அடுத்தடுத்து வந்த சிறீலங்கா அரசுகளின் சிறப்பியல்பாக இருந்து வருகின்றது.
இந்தப் பள்ளிவாசல் 50 ஆண்டுகளுக்கு மேலாக, அப்பிரதேசம் பௌத்த புனித பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப் படுவதற்கு நெடுங்காலத்துக்கு முன்தொட்டே இருந்து வருகின்றது எனவும் இது சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் இசுலாமிய சபை கூறியுள்ளது. இத்தீவில் இலங்கை வாழ் இசுலாமியருக்கு எட்டாம் நூற்றாண்டு தொடங்கி நீடித்த வரலாறு உள்ளது. தம்புளைப் பள்ளிவாசலில் நடைபெற்ற இந்நிகழ்வு இசுலாமியரின் வழிபாட்டுத் தலங்களில் அண்மை மாதங்களில் நடைபெற்ற தனித்த ஒரு நிகழ்வல்ல. செப்தெம்பர் 2011இல் அனுராதபுரத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்று சில புத்த பிக்குகளால் தகர்க்கப்பட்டது. புத்த மதத்தினர் அல்லாதோர் கொடுமைப்படுத்தப்படும் போது பாராமுகமாக இருப்பதோடல்லாமல் அதை ஊக்கிவிக்கும் ஓர் அரசின் கீழ்த்தான் இவ்வாறான சம்பவங்கள் நிகழ முடியும்.
இந்தப் பள்ளிவாசலும் அங்குள்ள ஒரு தமிழ் இந்து ஆலயமும் உட்பட 72 கட்டிடங்களைத் தம்புளைப் பிரதேசத்தில் தகர்க்க உத்தேசித்துள்ளதாகச் சில புத்தமதத் தலைவர்கள் அறிவித்துள்ளனர். புத்தமதம் தவிர்ந்த மற்றைய மதங்கள் எவ்வாறு துன்புறுத்தப்படுகின்றன என்பதை வருத்தத்துக்குரிய மேற்படி நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
தமிழர் பெரும்பான்மையாக வாழும் வடக்கிலும் கிழக்கிலும் இந்து ஆலயங்களினதும் கிறிஸ்தவ தேவாலயங்களினதும் தெய்வீகம் கெடுக்கப்பட்டு அவை தகற்கப்பட்டு அதே இடங்களிலோ அவற்றிற்கு அண்மையிலோ பல பௌத்த கடடிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணியானது அக்தோபர் 2011 இல் நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பித்துள்ள நிலவர அறிக்கையில் துரித கதியில் இலங்கையின் வடக்கில் ஏற்பட்டுவரும் மக்கட்தொகை மாற்றம் பற்றியும் அங்கு ஏ-9 வீதியோரமாகக் கணிசமான அளவிற் பெருகிவரும் புத்த சிலைகள், விகாரைகள், ஸ்தூபிகள் பற்றியும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. மேலும், போரின்போது உடைக்கப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட கிறஸ்தவ, இந்து வழிபாட்டுத் தலங்களை மக்கள் திருத்திக் கட்டுவதை இராணுவம் தடைசெய்து வருவதையும் அவ்வறிக்கை கோடிட்டுக் காட்டியுள்ளது.
பௌத்த மதமானது அரச மதமாக அரசியல் மயப்படுத்தப்பட்டமையும் அது அரசியலிலும் சமூக விவகாரங்களிலும் தலையிடுவதற்கு அதற்குள்ள செல்வாக்கும் சிறுபான்மை மதத்தினரைப் பயமூட்டுவதோடு இலங்கைத் தீவில் அனைத்துச் சமூகத்தினரும் சமாதானமாக ஒன்றுபட்டு வாழ்வதற்கும் இடையூறாக அமைந்துள்ளது.
எந்த மதத்தைச் சார்ந்தவை எனினும் வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தப்படும் அனைத்துத் தாக்குதல்களைத் தடுக்கவும் இலங்கையிலுள்ள அனைத்து மதங்களும் ஒரேமாதிரியாக நடத்தப்பட்டு மதிக்கப்படவும் வேண்டிய வழிமுறைகளை உடனடியாக எடுக்குமாறு சிறீலங்காவிலுள்ள அரச நிறுவனங்களையும் சட்ட ஒழுங்கைப் பேணுவதற்கான துறைகளையும் உலகத் தமிழர் பேரவை வேண்டிக்கொள்கின்றது. இலங்கையில் மீளிணக்கத்தையும் நிலைக்கக்கூடிய சமாதானத்தையும் உண்டாக்குவதற்குää அனைத்துக் குடிமக்களினதும் மத, கலாச்சர உரிமைகளை அரச நிறுவனங்களும் அரச அமைப்புக்களும் ஏற்றுப் பாதுகாத்து ஊக்குவித்தலே அத்திவாரமாக அமையும் என்பதை அவர்களுக்கு உணர்த்தி அனைத்துச் சமூகங்களிடையேயும் நம்பிக்கையைக் கட்டி எழுப்புவதற்குச் சிறீலங்கா அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உலகத் தமிழர் பேரவை வேண்டிக்கொள்கின்றது.
ஊடகத் தொடர்பு: சுரேன் சுரேந்திரன்
தோலைபேசி: 10 44 (0) 7958 590 196
மின்னஞ்சல்: ;: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Skype: surendirans
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.