[பதிவுகள் யூன் 2009இல் , முள்ளிவாய்க்கால் சமரினைத் தொடர்ந்து வெளியான கட்டுரையின் சில பகுதிகள் மீள்பிரசுரமாகின்றன.- பதிவுகள்].... விடுதலைப் புலிகளின் தலைவரைப் பொறுத்தவரையில் உலகத் தமிழர்களின் வரலாற்றில் முக்கியமானதோர் இடமுண்டு. மாவீரன், தேசியத் தலைவர், சர்வாதிகாரி, இரத்த வெறியன், கொடிய பயங்கரவாதி.... இவ்விதம் பலவேறு கோணங்களில் பல்வேறு பிரிவின மக்களால் பார்க்கப்படும் புலிகளின் தலைவர் பற்றி அனைவரும் ஒரு விடயத்தில் மட்டும் ஒருமித்த கருத்தினைக் கொண்டிருக்கின்றார்கள். அது தமிழீழம் என்ற நோக்கத்திலிருந்து இறுதிவரை அவர் நிலை தழும்பவில்லையென்பதுதான் அது. ஆக முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அமைப்புகளில் வரலாறென்பது எவ்விதம் எழுதப்படுமோ அவ்விதமே விடுதலைப் புலிகளின் தலைவரின் வரலாறும் எழுதப்படுமென்பதை இப்பொழுதே ஊகித்துக் கொள்ளலாம். வீரபாண்டிய கட்டப்பொம்மன், ஈழ மன்னன் சங்கிலியன், நெப்போலியன் போன்றவர்களின் வரலாறு சமகாலச் சமுதாய அமைப்பில் எவ்விதம் அவர்களின் முடிவினை மட்டும் மையமாக வைத்துக் கணிக்கப்படுவதில்லையோ அதுபோன்றே எதிர்காலத்தில் மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன், கரிகாலன் கனவு என்றெல்லாம் இவரைப் பற்றியும் வரலாற்றுப் பதிவுகளிருக்குமென்பதையும் அனுமானித்துக் கொள்ளலாம்.
அண்மையில் முன்னாள் விடுதலைப் புலியான இராகவன் பிரபாகரன் பற்றியொரு கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அதிலவர் பிரபாகரன் ஏன் ஒரு கட்சி, ஒரு தலைவன் என்னும் சிந்தனையில் ஊறியிருந்தார் என்பதற்கான காரணங்களைக் குறிப்பிட்டிருந்தார். தமிழர்களின் இன்றைய நிலைக்குக் காரணம் அன்று தமிழர்கள் சேர, சோழ, பாண்டியர்களாகப் பிளவுண்டு கிடந்ததுதானென்பதே அவர் ஒரு கட்சி, ஒரு தலைவனென்ற கோட்பாட்டினை இறுக்கமாக நடைமுறைப்படுத்தியதன் காரணமென்று மேற்படி கட்டுரையில் அவர் குறிப்பிடுவார். மாற்று அரசியல் அமைப்பினரோ அதற்குக் காரணமாகப் பிரபாகரன் பதவியாசை பிடித்தவர். தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டுமென விரும்புவரென்று குறிப்பிடுவர்.
மேலும் விடுதலைப் புலிகளின் தலைவர் இறுதிவரை தப்பிச் செல்லுவதற்கு முனையவில்லையென்றும் தென்படுகிறது. பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜா அவரது அண்மைய கட்டுரையொன்றில் குறிப்பிடுவது போன்று காயமடைந்தவர்களையும், அரசியற் பிரிவினைரையும் சரணவடைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட அனுமதித்த பின்னர் சூசை போன்ற தளபதிகளுடன் இணைந்து ஸ்ரீலங்கா அரச படைகளுடன் போராடியிருக்க வேண்டும். அச்சண்டையில் மரணத்தைத் தழுவியிருக்க வேண்டும். இதனை ஸ்ரீலங்கா அரசபடையினரின் பல்வேறு முரண்பட்ட குறிப்புகளும் புலப்படுத்துகின்றன. நீண்ட மோதலொன்று நந்திக்கடலுக்கண்மையில் ந்டைபெற்றதை அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளார்கள். மேலும் தப்பிச்செல்லுவதுதான் முக்கியமான நோக்கமாக இருந்திருந்தால் விடுதலைப் புலிகளின் தலைவர் எதற்காக இராணுவச் சீருடையிலிருக்க வேண்டும்? ... சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் நடைபெற்ற அம்மோதலில் தப்பும் சாத்தியங்கள் அரிதான நிலையில் இறுதிவரைப் போராடும் முடிவினை அவர் எடுத்திருக்கலாம்? புலிகளின் தலைவரின் குழந்தைகளான சார்ஸ் அந்தனி, துவாரகா போன்றவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்றவர்கள். அவர்கள் மிகவும் இலகுவாக வெளிநாடுகளில் தங்கியிருந்திருக்கலாம். ஆனால் அவர்களும் இறுதிவரை தந்தைக்குத் துணையாக இருந்திருக்கின்றார்கள். கடற்புலிகளின் சூசை போன்ற முக்கியமான தலைவர்கள் இறுதிவரை தமது தலைவருக்கு விசுவாசமாகவிருந்து போராடி மடிந்திருக்கின்றார்கள். இறுதிவரை கூடவிருந்த மனைவிக்கும், இரண்டாவது மகனான பாலச்சந்திரனுக்கும் என்ன் நடந்ததென்பது தெரியவில்லை. இருந்தாலும் ஆரம்பத்தில் அவர்களது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறிய ஸ்ரீலங்கா இராணுவம் பின்னர் அவர்களது உடல்களைக கண்டுபிடித்ததாக வெளிவந்த செய்திகள் தவறானவை என மறுத்திருந்ததைப் பார்க்கும்போது அவர்களையும் கொன்றுவிட்டு எதிர்காலத்தில் யுத்தக்குற்றச் சாட்டுக்குள்ளாகலாமென்ற அச்சம் காரணமாக அச்செய்தினை மறுத்திருக்கலாமென்றே படுகின்றது. மேற்படி சம்பவங்களை மையமாக வைத்தெல்லாம் பலவேறு வரலாற்றுப் புனைவுகள் எதிர்காலத்தில் எழுதப்படும். மொத்தத்தில் வரலாற்றில் பிரபாகரன் இறுதிவரை தனது இலட்சியத்திற்காகப் போராடி மறைந்த மாவீரனாகவும், தரை, கடல் மற்றும் வான் படைகளை வைத்துக் குறிப்பிட்ட காலம் வன்னிப்பரப்பை ஆண்டு , சிங்களவர்களுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கியவராகவும் குறிப்பிடப்படும் அதே சமயம். எல்லாளன் / துட்டகாமினி போன்று மகிந்தா / பிரபாகரன் பற்றியும் பல்வேறு கோணங்களில் எதிர்காலத்தில் புனைவுகள் இன, மதப் பிரிவுகளுக்கேற்ப புனையப்படும். ஆயினும் உள்/வெளி அரசியல் முரண்பாடுகளை எதிர்கொள்வதற்கு அவர் கையாணட இராணுவ நடவடிக்கைகள், அதன் விளைவுகள், செல்வி, கேசவன் போன்ற படைப்பாளிகள், ரஜனி திரணகம போன்ற மனித உரிமைச் செயல் வீரர்கள் பற்றிய அரசியல் துயரச் சம்பவங்கள், போன்றவையெல்லாம் அவ்வரலாற்றின் கறைபடிந்த அத்தியாயங்களாகவிருக்கும். இது சகல விடுதலை அமைப்புகளின் உள் / வெளி முரண்பாடுகளின் விளைவாக உருவான மனித உரிமை மீறல்களுக்கும் பொருந்தும். எனவே சகல தமிழ் அமைப்புகளும், புலம் பெயர்ந்த சூழலில் வாழும் தமிழ் மக்கள் அனைவருமே இன்றைய புதிய சூழலில் ஒன்றிணைந்து தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காகத் தொடர்ந்தும் அரசியல்ரீதியில் போராடுவதே தற்போதுள்ள சூழலில் ஆக்கபூர்வமானதும் சர்வதேச சூழலுக்கு ஏற்றதாகவுமுள்ளது. இப்போராட்டமும் வழக்கம்போல் தோல்வியில் முடிவுற்றால் மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் மீண்டுமொரு முறை ஆக்ரோசத்துடன், சரவதேசரீதியாகக் கிளர்ந்தெழுவதைத் தவிர்க்க முடியாது.
அதே சமயம் பதுங்கு குழிகளுக்குள் வாழ்ந்து கொண்டே மாபெரும் விடுதலை அமைப்பொன்றை, ஒரு தலைவன் ஒரு கொள்கை என்னும் கோட்பாட்டின் அடிப்படையில், தரை, கடல் மற்றும் வான் படைகளுடன் கூடியதாக அமைத்ததுடன், தன் கட்டுப்பாட்டில் இன்னுமொரு நிழல் அரசினை அமைத்து இறுதியில் தமிழ் ஈழத்தினை அடைவதற்குக் கனவுகள் கண்டுகொண்டிருந்த கரிகாலனின் கனவு தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணிகளாகப் பின்வருவனவற்றை நாம் கருதுகின்றோம்:
1. தமிழ் அமைப்புகளுக்கிடையிலான முரண்பாடுகளை பகை முரண்பாடுகளாக்கியது. 83 இனக்கலவரத்தைத் தொடர்ந்து உருவான அரசியற் சூழலில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் ஸ்ரீலங்கா அரசின் அடக்குமுறைகளுக்கெதிராகப் பலவேறு அரசியற் சித்தாந்தங்களுடன் கிளர்ந்தெழுந்தார்கள். அவர்களின் எண்ணிக்கையும், அந்த ஆர்வமும் மேற்படி மோதல்களால சிதைக்கப்பட்டதானது துயரகரமானதொரு துன்பியல் நிகழ்வு. அனைவரும் ஒன்றிணைந்து, சர்வதேச மற்றும் பிராந்திய சக்திகளின் சூழச்சிகளுக்குப் பலியாகாமல் போராடியிருந்தால் என்னுமொரு எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதற்காகக் கடந்தவற்றையே எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதில் பயனில்லை. 'இன்று புதியாய்ப் பிறந்தோமென்று' எண்ணிச் செயற்படவேண்டிய தருணமிது. தமிழ் மக்களுக்கிடையிலான ஒற்றுமையினச் சிதைக்கும் சக்திகளை இனங்கண்டு தூக்கியெறிய வேண்டிய தருணமிது. உரிமைப் போராட்டத்தினை மீண்டும் உயிர்ப்புடன் முன்னெடுக்க வேண்டிய தருணமிது.
2. பிராந்திய அரசியலில் நிலவிய நட்புச் சக்திகளைப் பகைச் சக்திகளாக்கியது.
3. முறையான, தமிழ் மக்களின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய அரசியல் அமைப்பொன்று சர்வதேச ரீதியாகச் செயற்படாமலிருந்தது. ஒரு அமைப்பின் பிரச்சாரச் சக்தியாக மட்டுமே அது இயங்கி வந்தது. அதனால் அதனால் சர்வதேச நாடுகளின் நல்லெண்ணத்தினைத் தேவையான அளவில் பெற முடியாமல் போயிற்று.
4. புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் வெளிவந்த ஊடங்களில் பல நடுநிலையில் நின்று சரி பிழைகளைச் சுட்டிக் காட்டும் தமது கடமையினின்றும் தவறியமை. தமது சுய இலாபத்திற்காக உத்தியோகச் சார்பற்ற பிரச்சார ஊதுகுழகளாக இயங்கித் தமிழர்கள் மத்தியில் அரசியல் ரீதியில் பிளவுகளை மேலும் வளர்த்து வந்தமையானது ஆரோக்கியமான செயற்பாடல்ல. இவ்வூடகங்களில் எழுதுபவர்கள் லசந்தா விக்கிரமதுங்க போன்ற பத்திரிகையாளர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறையவே உள.
5. பல்வேறு முரண்பட்ட பிராந்திய, சர்வதேச அரசியற் சக்திகளையெல்லாம் மிகவும் சாமர்த்தியமாகத் தமது அரசியல். இராணுவச் செயற்பாடுகளுக்கு ஏற்ற வகையில் அணிதிரட்டி, மிகுந்த ஆயுத பலத்துடன் ஸ்ரீலங்கா அரசு ஆரம்பித்த போர். அதற்குத் தாக்குப் பிடிக்கும் வகையில் தம் ஆயுத வலுவினை உணர்ந்து அதற்குரிய மாற்று ஆயுத நடவடிக்கைகளை எடுக்கச் சந்தர்ப்பமிருந்தும் புலிகள் எடுக்காமல்; தொடர்ந்தும் மரபுரீதியிலான இராணுவமாக யுத்ததில் பங்குபற்றியமை.
இவை முக்கியமான விடயங்களாக எமக்குப் படுகின்றன. இவை பற்றியெல்லாம் அனைவரும் விரிவாக சுயபரிசீலனை செய்ய வேண்டிய தருணமிது. தற்போது நடைபெற்று முடிந்துள்ள இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையிலான மோதல்களும், அதன் பின் விளைவுகளும் சில விடயங்களைப் புலப்படுத்தியுள்ளன.
1. போரில் இறுதிவரை போராடி மரணித்த விடுதலைப் புலிகளின் தலைவரின் உடல் ஸ்ரீலங்காப் படையினரால் கொத்திக் குதறப்பட்டுள்ள காட்சிகள் ஸ்ரீலங்காப் ப்டையினரின் இனவெறி உணர்வுகளையே புலப்படுத்துகின்றன. தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடிய ஒருவரின் உடலை இவ்விதம் கொத்திக் குதறிச் சீரழித்த படையினரின் செயல்கள் இலங்கைத் தீவின் இரு பெரும் இனங்களுக்குமிடையில் நிலவும் புரையோடிப்போயுள்ள இனவாதப் புண்ணுக்கு எந்தவித மருந்தாகவும் இருக்கப் போவதில்லை. துட்டகாமினி கூட போரில் மடிந்த எல்லாளனுக்கு மரியாதை செய்ததாக மகாவம்சம் கூறுகிறது. ஆனால் தன்னை நவீன துட்டகாமினியாகக் கருதிக் கொள்ளும் ஸ்ரீலங்காவின் இன்றைய ஜனாதிபதி மகிந்தாவுக்கு அந்தத் துட்டகாமினிக்கு இருந்த அரசியற் பண்பு கூட இருக்கவில்லையென்பது ஒருவித முரண்நகைதான்.
2. ஸ்ரீலங்கா அரசின் அண்மைய யுத்தத்தில் மோதல் பகுதியில் அகப்பட்டிருந்த சுமார் 300, 000க்குமதிகமான தமிழ் மக்களில் ஆயிரக்கணக்கில் பலியாகியிருக்கின்றார்கள். இவ்விதமான மூர்க்கத்தனமான போரின் விளைவாகத் தமிழர்கள் மேல் திணிக்கப்படும் எந்தவிதத் தீர்வுகளும் ஈழத் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்கப் போவதில்லை. போரில் பாதிக்கப்பட்ட அகதிகளைத் தடுப்பு முகாம்களில் வைத்துக் கொண்டு, ஏனைய வடகிழக்கும் பகுதிகளையும் திறந்தவெளிச் சிறைச்சாலைகளாக் வைத்துக் கொண்டு, ஈழத் தமிழர்களை அடிமைகளாக வைத்துக் கொண்டு அவர்கள் மேல் எறியப்படும் எந்தவித் தீர்வுகளும் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்கப் போவதில்லை.
3. தெற்கில் சிங்கள் மக்கள் வெற்றிக் களிப்பில், வாணவேடிக்கைகளில், வெற்றி பவனிகளில் மூழ்கிக் கிடக்கின்றார்கள். தமிழ் மக்களோ அச்சத்துடன், ஒருவித அவமானத்துடன் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு நாளும் பாதுகாப்பென்ற பெயரில் தமிழ்ர்கள் கைது செய்யப்படுகின்றார்கள்; காணாமல் போய்க்கொண்டிருக்கின்றார்கள்.
4. உண்மையில் ஸ்ரீலங்கா அரசானது ஈழத் தமிழரின் பிரச்சினையைத் தீர்ப்பதில் இதய சுத்தியுடனிருந்தால், அது ஈழத் தமிழர்களின் நெஞ்சில் நம்பிக்கையினை ஊட்டும் வகையில் பின்வரும் நடவடிக்கைகளைச் செயற்படுத்த வேண்டும்:
அ., தமிழ் மக்கள் ஏற்கத்தக்க அதிகாரப் பகிர்வுக்கான திட்டங்களைக் காலந்தாழ்த்தாமல் அறிவித்துச் செயற்படுத்த வேண்டும்.
ஆ., தமிழ்ப் பகுதிகளிலிருந்து படையினர் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும்.
இ., சகலவிதமான குடியேற்றத் திட்டங்களும் நிறுத்தப்பட வேண்டும்.
ஈ. தமிழ் மொழிக்கு அரசியலமைப்பில் உரிய கெளரவம் கொடுக்கப்பட வேண்டும். தரப்படுத்தல் போன்ற திட்டங்கள திறமையுள்ள மாணவர்கள் பாதிப்புறா வண்ணம் இன, மத பேதமற்று நடைமுறைப்படுத்த வேண்டும் தரப்படுத்தலின் நல்லதொரு அம்சமாக நாம் கருதுவது: அது பின் தங்கிய பிரதேச மாணவ்ர்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல வழியினை ஏற்படுத்தியது. ஆனால் அதற்காகத் திறமையான மாணவர்கள் மிக அதிக அளவில் தமிழ் மாணவர்கள் பாதிக்கப்பட்டதுதான் பிரச்சினைக்குக் காரணம. இக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு அதிகளவு உயர்கல்வி நிலையங்கள் (பல்கலைககழகங்கள், தொழில் நுட்பக் கல்லூரிகள் ஆகியன) அமைக்கப்பட வேண்டும்.
உ. நாட்டின் பல்வேறு சிறைகளில் ஆண்டுக்கணக்கில் வாடும் சகல தமிழ் அரசியற் கைதிகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
ஊ., இதுவரையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள், காணாமல் போனவர்கள், பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட பெண்கள்,,,,, பற்றிய பாரபட்சமற்ற விசாரணைகள் நடைபெற வேண்டும். அதற்குக் காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இது போன்ற தேவையான சகல நடவடிக்கைகளையும் ஸ்ரீலங்கா அரசு செய்ய வேண்டும் அவ்விதம் செய்யுமானால் ஈழத்தமிழர்களுக்கு ஓரளவாவது ஸ்ரீலங்கா அரசின் மேல் நம்பிக்கை ஏற்படும். அதன் பின்னரே ஈழத் தமிழர்களும், சிங்கள மக்களும் , ஏனைய இன மக்களும் சின்னஞ்சிறு தீவான இலங்கையில் ஒன்று பட்டும் வாழும் சூழல் உருவாகும். அழகிய தீவில் பல்லின மக்களும் ஒன்றிணைந்து வாழும் சூழல் உருவாகுமானால் அது போன்ற மகிழ்ச்சியானதொரு சூழல் இருக்க முடியாது. அது தற்போது ஸ்ரீலங்கா அரசின் கைகளில்தானுள்ளது. சகல இன மக்களும், பிராந்திய, சர்வதேசச் சக்திகளின் அரசியல் சூதாட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல் ஒன்றிணைந்து வாழவேண்டுமானால் தெற்கின் அனைத்துச் சக்திகளும் ஒன்றிணைந்து ஈழத் தமிழர்களின் பிரச்சினையத் தீர்க்க வேண்டும். ஆயினும் இதற்கான சாத்தியங்கள் மிகவும் அரிதானதே. ஆயினும் அதற்குமொரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்ப்பதில் தவறில்லை. இதிலும் தோல்வியேற்படுமானால் சர்வதேசரீதியில் கிளர்ந்தெழும் உலகத் தமிழர்களின் அடுத்த கட்டப் போராட்ட நடவடிக்கைகள் இலங்கையினை இரண்டாகத் தூண்டாடுவதில்தான் முடியும். தேவையற்ற இரக்களரியினை அது உருவாக்கும். நாடு பிரிபடாதிருப்பது தென்னிலங்கைப் பெரும்பான்மை அரசியற் சக்திகளின் நடவடிக்கைகளில்தானுள்ளது. இதே சமயம் எதிர்காலத்தில் இத்தகைய நிலை மீண்டும் தோன்றாதிருப்பதற்கு அண்மைய யுத்தத்தில் யுத்தக்ககுற்றம் பற்றிய விசாரணை சர்வதேச அனுசரணையுடன் சுயாதீனமாக ஆரம்பிக்கப்பட்டு, குற்றம் புரிந்தவர்கள் அனைவரும் இனங்காணப்பட்டுப் பாரபட்சமின்றித் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கான சாத்தியங்கள் பலமாகவேயுள்ளன. இத்தீவின் மக்களின் நிரந்தரமான ஒற்றுமைக்கு இது முக்கியமானது.
நன்றி: பதிவுகள் யூன் 2009; இதழ் 114.