சென்னை ஜூலை 21, 2011 : அமெரிக்கா வர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை பிரச்னையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஹிலாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா ஆகியோரை சந்தித்து பேசினார். இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஹிலாரி கிளிண்டன் சென்னை வந்தார். தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். சந்திப்பின் போது ஹிலாரி கிளிண்டன், அப்போது அவர் ஜெ., அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்தார். ஜெயலலிதா அமெரிக்கா வருவதன் மூலம் தமிழகத்தின் சாதனைகளை அமெரிக்கர்கள் அறிந்து கொள்ள முடியும் என்று கூறினார். ஹிலாரியிடம் ஜெயலலிதா, இலங்கையில் தமிழர்கள் இன்னும் முகாம்களில் வசித்து வருவதாகவும், இன்னும்அவர்கள் சொந்தமான இடங்களுக்கு திரும்பவில்லை எனவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
முன்னதாக ஹிலாரி கிளிண்டன், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவின் மிகப்பெரிய நூலகத்தில் பேசுவதில் பெருமையடைகிறேன். தொழில் மற்றும் கல்வித்துறைகளில் வளர்ந்த சென்னை நகருக்கு வந்ததில் பெருமிதம். 21ம் நூற்றாண்டை வடிவமைப்பதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆசியாவின் எதிர்காலத்தை இந்தியா நிர்ணயிக்கும். இந்தியாவின் வளர்ச்சியை பெருமையுடன் பார்க்கின்றோம். இந்தியா அமெரிக்கா இடையிலான உறவு உலக அரங்கில் முக்கியமானதாகும். ஐ.நா.,வில் நிரந்தர உறுப்பினர் பதவி பெற இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதே இருநாடுகளுக்கும் இலக்காகும். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் பாதுகாப்புத்துறையில் இந்தியாவுடன் உறவை மேம்படுத்த வேண்டும் பொருளாதார உறவை விரிவுபடுத்த வேண்டும். சந்தைகளை திறந்து விடுவதன் மூலம் இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவின் பொருளாதாரம் மேம்படும். நாம் வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ளோம். நம்மிடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு இன்றியமையாதது. இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே பலமான உறவு முக்கியமானதாகும்.
இந்திய தேர்தல் ஆணையம் உலக அளவில் சிறந்ததாக உள்ளது. ஈராக் மற்றும் எகிப்து நாடுகளில் தேர்தல் நடத்த உதவ வேண்டும் சர்வதேச அளவிலான பிரச்னைகளை தீர்ப்பதில் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் முன்னெடுத்து செல்ல வேண்டும். மத்திய கிழக்கு மற்றும்வடக்கு ஆப்ரிக்காவில் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் மியான்மரில் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய இந்தியா அந்நாட்டு அரசுடன் ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்.
இலங்கையில் அரசியல் பொருளாதர நடவடிக்கைகளில் தமிழ் மக்களின் பங்கேற்பு குறிப்பிடத்தக்கது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்க வேண்டும். டர்பனில் நடக்கவுள்ள உலக வெப்பமய மாநாடு வெற்றி பெற இந்தியா உதவ வேண்டும். ஈரானில் அணு ஆயுதங்களை தடுக்க வேண்டும். அணு ஆயுதங்கள் பரவலை தடுப்பதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உண்டு என கூறினார்.
முதல்வர் ஜெ.,வுடன் சந்திப்பு: பி்ன்னர் மாலையில் தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அப்போது தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதாவுக்கு ஹிலாரி வாழ்த்து தெரிவித்தார். சென்னை வந்த ஹிலாரிக்கு முதல்வர் வரவேற்பு தெரிவித்தார்.