ஐநா அதிகாரிகளின் தகுதி, அனுபவம் போதவில்லை
இலங்கையில் முன்றரை ஆண்டுக்கு முன் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களை அழிவிலிருந்து பாதுகாக்க ஐநா மன்றம் மோசமாகத் தவறியுள்ளது என்று ஐநாவுக்குள் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை ஒன்று கூறுகிறது. ஐநாவுக்குள் உள்ளளவில் நடத்தப்பட்ட ஆய்வுடைய அறிக்கையின் வரைவு பிரதி ஒன்று பிபிசியிடம் கசியவிடப்பட்டுள்ளது. தாங்கள் பாதுகாக்க வேண்டிய மக்களை ஐநா கைவிட்டிருந்தது என்று இந்த அறிக்கை முடிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் ஐநா ஆற்றிவந்த பணியின் நோக்கம் யுத்தத்தை தடுப்பது என்பதல்ல, மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கச்செய்வதுதான் அவர்களுடைய வேலை. ஆனால் இலங்கைத் தலைநகர் கொழும்பில் பணியாற்றிய ஐநா பணியாளர்களுக்கு அவ்வாறான உதவிகளை செய்வதற்கான தகுதிகளோ, அனுபவமோ இல்லை என்பதை இந்த ஆய்வு அறிக்கை விவரிக்கிறது. இலங்கையின் கொடூரமான யுத்தத்தால் எழுந்த சவால்களை இவர்களால் சமாளிக்க முடியவில்லை என்றும், நியுயார்க்கிலுள்ள ஐநா தலைமையகத்திலிருந்து இவர்களுக்கு ஒழுங்கான உதவிகளும் கிடைக்கவில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. பயங்கரவாதத்தை நசுக்குவதாக சூளுரைத்துவிட்டு அரசாங்கம் முன்னெடுத்த விஷயங்களை சர்வதேச நாடுகள் பெருமளவில் கண்டும்காணாமல் இருந்துவிட்டனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது. ஆக கட்டமைப்பு ரீதியாகவே கூட பெரும் தவறுகள் நடந்துள்ளன என்றும், இப்படி ஒன்று எதிர்காலத்தில் நடக்கவே கூடாது என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
யுத்தப் பிரதேசத்திலிருந்து ஐநா விலகியது
செப்டம்பர் 2008ல், ஐநா தனது பணியாளர்களை இலங்கையின் வடக்கிலுள்ள யுத்த பகுதிகளிலிருந்து விலக்கிக்கொண்டிருந்தது. ஐநா ஊழியர்களின் பாதுகாப்புக்கு தாங்கள் உத்திரவாதம் வழங்க முடியாது என்று இலங்கை அரசாங்கம் எச்சரித்ததை அடுத்து அது இம்முடிவை எடுத்திருந்தது. இலங்கை அரசாங்கத்தின் இந்த எச்சரிக்கையை ஐநா எப்போதும் எதிர்த்துக் கேள்வி கேட்கவே இல்லை என்றும், ஐநா அந்த இடத்திலிருந்து விலகியதால் யுத்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்களுக்கு உதவிகள் கிடைப்பதிலும் அவர்களுடைய உயிர்கள் பாதுகாக்கப்படுவதிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டதென்று இந்த அறிக்கை கூறுகிறது.
யுத்தப் பிரதேசத்துக்குள் லட்சக்கணக்கான மக்களை விட்டுவிட்டு ஐநா பணியாளர்கள் வெளியேறிய பின்னர், அரச படைகளும் விடுதலைப் புலிகள் தரப்பும் அம்மக்களை தமக்கு வேண்டிய விதத்தில் பயன்படுத்திக்கொண்டனர். விடுதலைப் புலிகளை அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியும், கட்டாயப்படுத்தி சண்டையில் ஈடுபட வைத்தும் வந்தனர் என்றால், அரச படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு அவர்கள் விலைகொடுத்தும் வந்தனர்.
கொல்லப்பட்ட பொதுமக்கள் எண்ணிக்கை
இலங்கையில் மிக மோசமான ஒரு பெருந்துயர சூழல் நிலவியதாக ஐநாவின் இந்த அறிக்கை கூறுகிறது. பொதுமக்கள் கொல்லப்படாமல் தடுப்பதற்கு முயல வேண்டும் என்பதை கொழும்பிலுள்ள மூத்த ஐநா அதிகாரிகள் தங்களது பொறுப்பாகவே கருதியிருக்கவில்லை என்றும், நியூயார்க்கிலுள்ள ஐநா தலைமையக அதிகாரிகளும் அவர்களுக்கு அறிவுறுத்தல்களையோ மாற்று உத்தரவுகளையோ வழங்கியிருக்கவில்லை என்றும் இந்த அறிக்கை விமர்சித்துள்ளது.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது என்பதை வலுவான உத்திகள் மூலம் தெளிவாக கணக்கிட்டுவருகிறது ஐநா என்று அதுவே கூறினாலும், அந்த விவரங்களை ஐநா பிரசுரிக்கத் தவறியது என்பதையும் இந்த அறிக்கை விவரமாக எடுத்துரைக்கிறது. மேலும் பொதுமக்கள் உயிரிழப்புகளில் பெரும்பான்மையானவற்றுக்குக் காரணம் அரச படையினரின் ஷெல் தாக்குதல்தான் என்பதை இலங்கை அரசின் அழுத்தங்கள் காரணமாக ஐநா தெளிவுபடுத்தியிருக்கவில்லை என்றும் இந்த அறிக்கை குற்றம்சாட்டுகிறது. ஆனால் தகவல்களை உறுதிசெய்ய முடியவில்லை என்பதால்தான் அவற்றை வெளியிடவில்லை என்று ஐநா வாதிடுகிறது.
இவையெல்லாம் ஏன் நடந்தன?
ஐநா கட்டமைப்புக்குள் ஒரு விஷயத்துக்கு மாறாக இன்னொரு விஷயத்தை விட்டுக்கொடுப்பது என்ற ஒரு கலாச்சாரம் அதிகம் என்று இந்த அறிக்கை கூறுகிறது. யுத்தப் பிரதேசத்தில் மக்களுக்கு சென்று உதவ கூடுதலான இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரியான விஷயங்கள் பற்றி வெளியில் பேசாமல் இருந்துவிட ஐநா பணியாளர்கள் தீர்மானித்திருந்தனர் என்று இது சுட்டிக்காட்டுகிறது. இலங்கையில் யுத்தத்தின் இறுதிக்கட்டம் அரங்கேறியபோது ஐநா பாதுகாப்பு சபையோ, வேறு முக்கிய ஐநா நிறுவனங்களோ ஒருமுறைகூட உத்தியோகபூர்வமாகக் கூடியிருக்கவில்லை. ஐநா உறுப்பு நாடுகளுக்கு எது தெரியவேண்டுமோ அதனை வெளியில் சொல்லாமல், அவர்கள் எதனைக் கேட்க விரும்புவார்களோ அதனைத்தான் ஐநா வெளியில் சொன்னது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த அறிக்கையைப் பிரசுரித்து அதிலிருந்து படிப்பினைகளை கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் இப்படியான விஷயம் நடக்காமல் பார்த்துக்கொள்ள ஐநா முயல வேண்டும் என்று ஐநா தலைமைச் செயலர் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
மூலம்: http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/11/121113_uninternalreport.shtml
BBC News Asia: UN 'failed Sri Lanka civilians', says internal probe
By Lyse Doucet , Chief International Correspondent, BBC News
13 November 2012- The United Nations failed in its mandate to protect civilians in the last months of Sri Lanka's bloody civil war, a leaked draft of a highly critical internal UN report says. "Events in Sri Lanka mark a grave failure of the UN," it concludes. The government and Tamil rebels are accused of war crimes in the brutal conflict which ended in May 2009. The UN's former humanitarian chief, John Holmes, has criticised the report. Mr Holmes said the UN faced "some very difficult dilemmas" at the time and could be criticised for the decisions it had taken. "But the idea that if we behaved differently, the Sri Lankan government would have behaved differently I think is not one that is easy to reconcile with the reality at the time," he told the BBC's Newshour programme. The UN does not comment on leaked reports and says it will publish the final version.....Read More