[தனது முகநூல் பக்கத்தில் 'பாலன் தோழர்' மலையக விடுதலைக்காகச் செயற்பட்டவரான இர.சிவலிங்கத்தின் தமிழகத் தடுப்பு முகாம் அனுபவங்களை விபரிக்கும் 'சிறைக்குறிப்புகள்' நூலினைப் பதிவு செய்திருந்தார். அதனை நாமும் 'பதிவுகள்' வாசகர்களுக்க்காக இங்கு பதிவு செய்கின்றோம். - பதிவுகள்-]
இலங்கை மலையகத்தைச் சேர்ந்த இர.சிவலிங்கம் என்பவர் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டார். அங்கு தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து “சிறைக் குறிப்புகள்” என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ளார். அவற்றை இங்கு பதிவு செய்ய உள்ளேன்....அவர் பற்றி மு.நித்தியானந்தன் அவர்கள் எழுதிய முன்னுரையில் இருந்து சில பகுதிகள் கீழே தரப்ட்டுள்ளது. 'அடிமை இருளில் சிக்கியிருந்த மலையக சமுதாயத்தின் விடுதலைக்காக ஓயாது சிந்தித்துச் செயற்பட்ட பெருமகன் இர.சிவலிங்கம். இருண்ட வரலாற்றின் விளைபொருளாயும் அதே நேரத்தில் அச் சமுதாய மாற்றத்தின் நெம்புகோலாகவும் திகழ்ந்த அறிஞர் அவர். நூற்றாண்டுகளாய் அடிமைப்பட்டிருந்த மலையகத்தின் சமூக வாழ்வில் அறுபதுகளில் ஒரு அசிரியனின் குரல் அட்டனிலிருந்து எழுந்தது. வெங்கொடுமைச் சாக்காட்டில் வீழ்ந்து பட்ட சமூகத்தின் துயரத்தையெல்லாம் சுமந்த ஒரு குரல். ஆண்டாண்டு காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மனட்சாட்சியின் குரல். பரிகசிக்கப்பட்டு இழிந்துரைக்கப்பட்ட தனது சமுதாயத்தின் மேன்மையைப் பாடுவேன் என்று உறுதி பூண்ட குரல். அடிப்படை உரிமைகள் அனைத்துமே மறுதலிக்கப்பட்ட ஒரு சமூகக் கூட்டத்தின் விலங்குகளை ஒடிக்க முனைந்த வீராவேசக் குரல்.
மக்கள் சுபீட்சத்தை மறந்து தமது சுய பிரதிமைகளில் முழுகிப்போன அரசியல் தலைமைத்துவத்தின் கோபுரவாசல்களில் ஆர்ப்பரித்த எதிர்ப்பு குரல். சமூக உணர்வு கொண்ட படித்த இளைஞர்களின் நெஞ்சங்களின் கொதி நெருப்பில் எண்ணெய் வார்த்த குரல். அட்டனில் முரசறைந்த இக் குரல் மலையகத்தின் முகடுகள் எங்கணும் அதிர்வுகளை எழுப்பியது. இந்த குரலின் சொந்தக்காரர் “சிவா” என்றழைக்கப்படும் இர.சிவலிங்கம் ஆவார். அறுபதுகளில் இவரால் ஈர்க்கப்படாத இளைஞர்கள் இல்லை என்று சொல்ல வேண்டும். அறுபதுகளில் மலையகத்தில் ஊற்றுக்கண்டு இன்று சீரிய நதிப் பிரவாகமாக ஓடிக்கொண்டிருக்கும் எழுச்சியின் மையநாயகனகாக இர.சிவலிங்கம் திகழ்கிறார். மலையக இளைஞர் மத்தியில் இத்தகைய ஈடிணையற்ற ஆளுமையை நிலை நிறுத்திய தனிப் பெருந்தலைமகனாக சிவா திகழ்கிறார்.' - (மு.நித்தியானந்தனின் முன்னுரையிலிருந்து)
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்துவைத்து சித்திரவதை செய்யப்பட்ட மலையகத் தமிழரான இர.சிவலிங்கம் அவர்கள் எழுதிய சிறைக்குறிப்புகள்: சிறைக்குறிப்புகள் - பகுதி-1
- இர. சிவலிங்கம் -
அண்மையில் எனது கைக்கெட்டிய நூல்களெல்லாமே சிறைவாசத்தைப் பற்றிய நூல்கள்தான்.... செங்கல்பட்டில் 120 நாட்கள் அரசாங்க விருந்தாளியாக இருந்துவிட்டு வெளியே வந்த பின்னர் கூடலூர் தோழர்கள் வழங்கிய நினைவுப் பரிசு ஜீலியஸ் பியூசிக் என்பவருடைய “தூக்குமேடைக் குறிப்பு”. ஜீலியஸ் பிய+சிக் என்பவர் செக்கோஸ்லவாக்கிய நாட்டைச் சேர்ந்தவர். 1943ல் செக்கோஸ்லவாக்கிய நாட்டை ஜெர்மனிய நாசிகள் கைப்பற்றிய பொழுது தனது நாட்டுக்காக மறைமுகமாகப் போராடிய வீரர் பிய+சிக். அவர் சிறையிலிருந்த பொழுது எழுதிய குறிப்புகளே “தூக்குமேடைக் குறிப்புகள்”. இதில் அவர் கூறினார் “மனிதர்களுக்குத் தங்களுடைய கண்களைத் திறந்து பார்க்க எத்தனை நூற்றாண்டுகள் வேண்டியிருக்கிறது? தன் சரித்திரக் காலத்தில் முன்னேற முயன்ற மனிதவர்க்கம் எத்தனை ஆயிரம் சிறைகளில் நுழைந்து அவதியுற்றிருக்கிறது? முன்னேற்றப்பாதையில் சொச்சமுள்ள தூரத்தைக் கடப்பதற்கும் இன்னும் எத்தனை சிறையறைகளை அது தாண்ட வேண்டியிருக்கும்?”
இதன் கருத்தே மனித முன்னேற்றப் பாதையில் நாம் சந்திக்கும் மைல்கற்கள் சிறையறைகள் தான் என்பதாகும். நம் நாட்டில் சுதந்திரத்திற்காகப் போராடிய காந்தி நேரு முதல் பல்லாயிரக் கணக்கான தியாகிகள் இந்தியச் சிறைகளில் பல்லாண்டு காலங்கள் வாடி வதங்கிய பின்னர் தான் இந்தியா விடுதலை அடைந்தது. அநேகமாக இந்திய அரசியல் தலைவர்கள் அனைவருமே சிறைவாசம் அனுபவித்தவர்கள்தான். கோவை மத்திய சிறைச்சாலையிலே செக்கிழுத்த சிதம்பரனார் சிறைவைக்கப்பட்டிருந்த சிறைக்கூடம் புனித கூடமாக கருதப்படுகின்றது. எரவாடா சிறைச்சாலையில் காந்தி சிறைவைக்கப்பட்டிருந்த சிறைக்கூடமும் நினைவுச் சின்னமாக போற்றப்படுகின்றது. சுதந்திர இந்தியாவில் அரசியல்வாதிகளையும் விடுதலைப்போராட்ட வீரர்களையும் சிறைவைக்கும் பணி சற்றும் குன்றாமல் தொடர்ந்து வருகின்றது. 1950ல் கோவையில் சிறைவைக்கப்பட்ட தோழர்.சி.ஏ.பாலன் அவர்கள் “தூக்குமர நிழலில்” என்ற நூலில் 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அனுபவித்த சித்திரவதைகளையும் கசப்பான அனுபவங்களையும் மிக விரிவாக எழுதியிருக்கிறார். அந் நூலின் இறுதியில் அவருக்கு விதிக்கப்பட்ட மரணதன்டனை மாற்றப்பட்டு பன்னிரண்டு வருடகால ஆயுள்தண்டனை முடிவடைந்த பின்னர் விடுதலை செய்யப்பட்ட பின் அவர் இவ்வாறு கூறினார் : “தொழிலாளர்கள் உழவர்கள் ஏனைய மனிதாபிமானம் படைத்த கட்சிகள் குழுக்கள் தனிநபர்கள் ஆகியோர்களுடைய அன்புகனிந்த ஆற்றல் இருந்திராவிட்டால் நான் இன்று மண்ணோடு மண்ணாகச் சேர்ந்து மண்ணில் வளரும் செடிகொடிகளுக்கு இரையாகி இருப்பேன். என் உயிரைக் காப்பாற்ற உழைத்தவர்கள் காலப்போக்கில் என்னை மறந்திருக்கலாம். ஆனால் உயிர் பெற்று பெற்ற அந்த உயிரின் கதையைச் சொல்ல வாழ்ந்து வரும் நான் யாரையும் மறந்திட முடியாது. நன்றியறிதலுடன் நான் அவர்களை என்றென்றும் மறவாதிருப்பேன்.”
இதே போலத்தான் எனது உள்ளத்தின் அடிநாதத்திலும் என்னைப் பலவந்த நாடு கடத்தலினின்றும் காப்பாற்றிய பல்லாயிரக் கணக்கான அன்பு நெஞ்சங்களுக்கு அளவற்ற நன்றி சுருதி மீட்டுக்கொண்டே இருக்கிறது. இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய முற்போக்குவாதிகளை பிரித்தானிய அரசு அந்தமான் சிறைச்சாலையில் அடைத்து வைத்தது. அவர்களில் ஒருவர் பிஜோய்குமார் சின்கா என்பவர். அவர் அந்தமான் சிறைச்சாலை அனுபவங்களை “அந்தமான் ஒரு இந்திய பாஸ்டீல்” என்ற ஆங்கில நூலில் எழுதியிருக்கிறார். பாஸ்டீல் என்பது பிரான்சு நாட்டில் சர்வாதிகாரத்தின் சின்னமாக இருந்த சிறைச்சாலை. அதனோடு ஒப்பிடக்கூடியது அந்தமான் சிறைச்சாலையென்று எழுதியிருக்கிறார். அந்த நூலில் அரசியல் கைதிகள் எவ்வித காரணமுமின்றி ஏறக்குறைய நான்கு மாதங்களுக்கு சிறையிலடைக்கப்பட்ட அந்த மாபெரும் தலைவர் தனது சிறைவாசச் சிந்தனைகளை “சிறைச்சாலை டைரி” என்ற நூலில் எழுதியிருக்கிறார். எப்படி ஒரு சுதந்திர ஜனநாயக நாட்டில் எல்லா உரிமைகளும் எவ்வித காரணமும் இன்றி பறிக்கப்படக்கூடும் என்று அவர் வியந்து நொந்து போயிருக்கிறார். நாம் சட்டப்படி ஒழுகுகிறோம் என்று நாம் இறுமாந்திருக்க முடியாது. சட்டம் நமக்கு பாதுகாப்பில்லை. சர்வாதிகாரம் தலையெடுத்து விட்டால் ஒரு நாட்டின் தலையெழுத்தே மாறிவிடக் கூடுமென்று எழுதியிருக்கிறார். அவர் சிறையிலிருந்தே பிரதமர் இந்திரா காந்திக்கு எழுதிய ஒரு மனுவில் கூறுகிறார்: “நான் ஒரு வயது முதிர்ந்த மனிதன் என்பது உங்களுக்குத் தெரியும். எனது வாழ்க்கைப் பணிகள் முடிவடைந்து விட்டன. எனது பிரபா (மனைவி) வின் மரணத்திற்குப் பின்னர் நான் யாருக்காகவும் வாழ வேண்டிய அவசியமே இல்லை. நான் கல்வியை முடித்துக்கொண்ட பின்னர் என் வாழ்நாள் முழுவதையும் என் நாட்டுக்காகவே அர்ப்பணித்துள்ளேன். இதற்கு பிரதி பலனாக எதையும் கேட்கவில்லை. ஆகவே உங்கள் ஆட்சியில் ஒரு கைதியாகவே மரணமடைவதில் எனக்கு திருப்திதான்”.
“அப்படிப்பட்ட ஒரு மனிதன் வழங்கும் ஆலோசனைகளை நீங்கள் கேட்பீர்களா? நம் நாட்டின் சுதந்திர பிதாமகன்கள் உங்கள் தந்தை (நேரு) உட்பட நிர்மாணித்துள்ள தேசிய அடிப்படைகளை அழித்துவிடாதீர்கள். மிகப் பெரிய ஒரு பாரம்பரியத்திற்கு நீங்கள் உரிமை உடையவர். உன்னத இலட்சியங்களும் செயற்படும் ஜனநாயகமும் அந்த பாரம்பரியத்திற்கு உரியவை. அவைகள் எல்லாம் சிதைத்து சின்னாபின்னமாக்கி விட்டுச் செல்லாதீர்கள். அந்த உன்னதங்களை மீண்டும் நிலை நாட்டுவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்.”.
இந்த உருக்கமான வேண்டுகோள் நம் உள்ளங்களை நெருடுகிறது. மனித உரிமைகளை மனித சுதந்திரத்தைப் பறிப்பது ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைப்பதற்கு சமமாகும்.
சிறைக்குறிப்புகள் - பகுதி-2
நெல்சன் மண்டேலா இந்த நூற்றாண்டின் மகத்தான மனிதருள் ஒருவர். தென் ஆபிரிக்க நாட்டின் நிறவெறித் தீண்டாமையை முழு மூச்சுடன் எதிர்த்தவர். மகாத்மாகாந்தியினால் கூட நமது நாட்டில் தீண்டாமையை அழிக்க முடியவில்லை. ஆனால் நெல்சன்மண்டேலா இனவெறி நிறவெறி அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டார். வருகிற ஏப்ரலில் நடைபெறப்போகிற தேர்தலில் வெற்றி பெற்று தென் ஆபிரிக்க நாட்டின் முதலாவது ஜனாதி...பதியாகப் பொறுப்பேற்கப் போகிறார். வெள்ளை ஆட்சிக்கு முடிவுகட்டி உண்மையான ஜனநாயக ஆட்சிக்கு அடித்தளமிட்டிருக்கிறார். இத்தகைய அவர் 27 ஆண்டுகள் சிறையிலிருந்திருக்கிறார். எவ்வளவு சிறந்த வரலாற்று நாயகன் சிறையிலிருந்து புடம் போடப்பட்டிருக்கிறார். அவர் நான்கு ஆண்டு;களுக்கு முன்பு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலைக்காக உலகமே குரல் கொடுத்தது. எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவருக்கு விடுதலை கிடைத்தது. அண்மையில் அவரை விடுதலை செய்த டிகிளாக் அரசு வெள்ளை ஆட்சியை ஒழிப்பதற்கு அவரோடு ஒரு இணக்கம் ஏற்படுத்திக்கொண்டது. இரத்தக் களறி ஏற்படுவதைத் தடுத்து சமாதான உடன்படிக்கை மூலமாக ஜனநாயகத்தை நிறுவியமைக்காக இருவருக்கும் இவ்வாண்டின் சமாதான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சிறைவாசம் இத்தகைய பெருமை வாய்ந்தது.
இத்தகைய பெருமையைத்தான் தமிழக அரசு எனக்கு நல்கியது. ஆகஸ்டு மாதம் 5ம் தேதி காலை நான் வீட்டிலிருக்கும் பொழுது தொண்டாமுத்தூர் பொலிசார் என்னை தேடி வந்தனர். அதற்கு முன் இரண்டு நாட்கள் என்னை தேடி வந்திருக்கிறார்கள். ஆனால் வந்த காரணம் சொல்லவுமில்லை. வரச் சொல்லவுமில்லை. அவர்கள் தேடிவந்த நாட்களில் நான் நீலகிரியில் நமது மக்களுடனிருந்தேன். ஆகஸ்டு 5ம் நாள் நான் வீடு திரும்பிய உடனே பொலிஸ்காரர்கள் மோப்பம் பிடித்துக்கொண்டு வந்துவிட்டனர்.
அன்றுதான் அந்த பொலிஸ் அதிகாரி முதன் முதலாக என்னை சந்திக்கிறார். தன்னை அறிமுகம் செய்து கொண்டார். நீங்கள் உடனடியாக எங்களோடு காவல் நிலையம் வரவேண்டும் என்றார்கள். “என்ன காரணம்?” என்று வினவினோம். “அரசாங்க உத்தரவு” என்று பதிலளித்தார். உத்தரவைக் காட்டுங்கள் என்று கேட்டேன். “கொண்டுவரவில்லை” என்றார். அப்படியானால் நான் மறுக்கலாம்தானே? என்று கேட்டேன். காவல் நிலையத்திற்கு வந்தால் உத்தரவைக் காட்டுவதாக சொன்னார். நான் உணவு அருந்தி உடை உடுத்திக் கொண்டு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்று சொன்னேன். எவ்வளவு நேரமானாலும் காத்திருக்க தயார் என்றும் கையோடு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறினார். எனக்கு இது புதுமையாக இருந்தது. அப்படி அவசரமாக என்னை அழைத்துச் செல்லக் காரணமில்லையே என்று நான் அதிசயித்தேன். பின்னர் எனக்கெதிராக எந்தக் காரணமுமில்லையாதலாலும் நான் எவ்வகையிலேனும் சட்ட விரோதமாக நடக்கவில்லையாதலாலும் நான் அச்ச மின்றி அலட்சியமாக அவர்களுடன் சென்றேன். பொலிஸ் வண்டியில் ஏறுமாறு கூறினார்கள். நான் மறுத்து எனது வண்டியில்தான் வருவேன் என்றேன். சிறிது விவாதத்திற்கு பிறகு அதற்கு சம்மதித்து அவர்களும் எனது வண்டிக்குள் ஏறிக்கொண்டார்கள்.
அப்பொழுது தான் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. என்னைக் கைது செய்கிறார்கள் என்று உணர்ந்தேன். ஆனால் காரணமில்லாமல் பிடியாணையில்லாமல் கள்ளத்தனமாகக் கடத்தல் போல் கபடமாக அழைத்துச் சென்றார்கள். காவல் நிலையம் வந்த உடனே அந்தப் பொலிஸ் அதிகாரி அரசாங்க உத்தரவைக் காட்டினார். நான் அதிர்ந்து போனேன்! என்னைக் கைப்பற்றி உடனடியாக காஞ்சிபுரம் அகதிகள் முகாமிற்கு அழைத்துச் சென்று ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டிருந்தது என்றால் நம்பமுடியவில்லை. கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் சட்டபூர்வமாக வாழ்ந்து வந்த என்னை திடீர் என்று அகதியாக்கி பொலிஸ் காவலில் அகதிகள் முகாமில் வைக்க அரசுக்கு என்ன கேடு வந்தது?
இன்றுவரை இந்தக் கேள்விக்கு விடையில்லை. நான் அகதியாக இந்தியாவிற்கு வரவில்லை. அரசிடம் அடைக்கலம் கோரவில்லை. ஜந்து பைசா உதவி கோரவில்லை. எனது முந்தையர் நாட்டுக்கு என் சுயவிருப்பப்படி வந்து குடியேறி அரசாங்க அனுமதியுடன் பொதுத்தொண்டில் ஈடுபட்டிருக்கும் ஒருவனை எவ்வித எச்சரிக்கையும் ஏதுவுமின்றி சிறைபிடிக்கும் செயலை யார் செய்வார்? ஏன் செய்வார்? இந்தியா ஜனநாயக நாடுதானா? சட்டத்தையும் மனித உரிமைகளையும் மதிக்கும் நாடுதானா? இதில் ஏதோ மர்மமிருக்கிறது என்று எனது மனம் தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தது. எனினும் எனது துணிச்சல் குன்றவில்லை. ஓரளவு நிலைமையை ஊகித்துக் கொண்டேன். எனது மனைவிக்கும் எனது அலுவலகத்திற்கும் செய்தி சொல்லி அனுப்பினேன். சென்னை செல்ல அவசியமான உடைகளையும் வாசிக்க சில நூல்களையும் அனுப்பிவைக்குமாறும் சென்னையில் உள்ள வழக்கறிஞர்களுக்கும் நீலகிரியில் நமது மன்றத்திற்கும் அறிவிக்குமாறு உடனே செய்தி அனுப்பினேன்.
தொண்டாமுத்தூர் பொலிசார் என் கை ரேகைகளைப் பதிவு செய்து என்னைப் புகைப்படமெடுத்தார்கள். உணவுக்குப் பிறகு அயர்வதற்கு வசதி செய்து கொடுத்தார்கள். சற்றே உறங்கினேன். மாலை எனது மனைவியும் மகளும் உறவினர் ஒருவரும் என்னைக் காண வந்தார்கள். எனக்குப் பிரயாணத்திற்கு தேவையான பொருட்களையும் உடைகளையும் கைச்செலவுக்கு பணமும் கொண்டு வந்து கொடுத்தார்கள். சிறிது நேரம் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்துவிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பிவிட்டு பந்தயக் குதிரைகள் போல பாய்ந்து செல்லும் எனது சிந்தனைகளோடு ஒன்றிவிட்டேன். என் மூளை நெருப்பாய் கொதித்தது. என் மனம் அநீதி கண்டு பொங்கியது. காவல் நிலையமோ வழக்கமான கலகலப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.
என்னைக் காவல் நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு வந்த உடனேயே தொலைபேசி கணகணத்தது. உயர் அதிகாரிகள் விசாரித்துக்கொள்கிறார்கள். கொண்டு வரப்பட்டு விட்டாரா? அடம் பிடித்தாரா? ஒத்துழைத்தாரா? இப்படிப் பல கேள்விகள். எஸ்.பி கியு பிராஞ் உதவி எஸ்.பி ஆகியோர் விசாரித்துக் கொள்கிறார்கள். என்னைக் கைப்பற்றிய அதிகாரி கூறுகிறார் அப்படியெல்லாமொன்றுமில்லை ஒத்துழைக்கிறார்!” சென்னைக்கு எப்படி அழைத்துச் செல்லப் போகிறீர்கள்? உயர் அதிகாரியின் கேள்வி. எல்லா ஏற்பாடுகளும் செய்கிறோம் என்று அதிகாரி பதில் அளிக்கிறார். சேரனில் சென்னை செல்ல ஏற்பாடு. காவல் நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் வரை ஆறு ஆயுதந்தாங்கிய பொலிசார் காவலுக்கு வர வேண்டும். இரண்டு இயந்திரத் துப்பாக்கிகள் இரண்டு சுழல் துப்பாக்கிகள் காவலர்கள் கொண்டு செல்ல வேண்டும். ஒரு சப் இன்ஸ்பெக்டர் ஒரு கியு பிராஞ் பொலிஸ் அதிகாரியும் உடன் செல்ல வேண்டும். சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தொண்டாமுத்தூர் இருண்டது. இரவு உணவுக்கு அருகிருந்த உணவகத்திற்கு அழைத்து சென்றனர். நன்கு சாப்பிடச் சொன்னார் உடன் வந்த பொலிஸ்காரர். அந்த நேரத்தில் இந்த கொதிக்கும் உடல் உணவைப் பற்றி எண்ணியது? ஏதோ பசியாறினேன். மீண்டும் காவல் நிலையத்தில் அமைதிச் சூறாவளியாய் அமர்ந்திருந்தேன். இரவு பத்து மணிக்கு பொலிஸ் வாகனம் வந்தது. ஆயுதம் தாங்கிய பொலிசார் புடைசூழ எனது பயணம் ஆரம்பித்தது. [தொடரும் ]