நுஃமானிசம் : முற்றுப்பெறாத விவாதங்கள் - ஈழக்கவி -
- பேராசிரியர் எம். ஏ. நுஃமானுக்கு 2024இல் வயது 80. அதன் நிமித்தம் எழுதப்பட்ட ஈழக்கவியின் சிறப்புக் கட்டுரை -
நுஃமான் என்ற பெயர் நான் ஏழாம் எட்டாம் வகுப்புகளில் கற்கின்ற காலத்தில் எனக்குள் பதியமாயிற்று. எழுபதுகளின் நடுப்பகுதியில் என்னிரு சகோதரிகளும் கொழும்பு, யாழ் பல்கலைக்கழ கங்களில் பயின்றுக்கொண்டிருந்தனர். பல்கலைக்கழக விடுமுறையின் போது அவர்கள் வீட்டுக்கு வந்தால் பல்கலைக்கழக சங்கதிகள் பற்றி கதைப்பார்கள். குறிப்பாக குசினியில் வேலை செய்கின்ற பொழுது இலக்கியம் (கவிதை, நாவல்), சினிமா, அரசியல் என்று இன்னோரன்ன விடங்கள் பற்றி விமர்சனப்பூர்வமாக விவாதிப்பார்கள். நான் “ஒரு கண்விடுக்காத ஒரு பூனைக்குட்டியாய்” (நுஃமான் கவி வரி) ஓர் ஓரமாக நின்று இவற்றினை கேட்டுக்கொண்டிருப்பேன். யாழ் பல்கலைக்கழகத்தில் பயின்றுக் கொண்டிருந்த என் இளைய சகோதரி (மும்தாஜ் பேகம்) ‘நுஃமான்’ என்ற பெயரை அடிக்கடி பயன்படுத்துவதனை அவதானித்திருக்கிறேன். அவரது தமிழ் கற்பிக்கும் நுட்பம் பற்றியும் அவரது கவிதைகள் பற்றியும் அவர் தமிழ்பெயர்த்த பலஸ்தீன கவிதைகள் பற்றியும் சிலாகித்து பேசக்கேட்டிருக்கிறேன். இப்படித்தான் நுஃமான் என்ற பெயரையும் அவரது புலமைத்துவத்தையும் அறியமுடிந்தது. அக்காலம் தொட்டு இன்று வரை ஒரு தவிர்க்க இயலாமையுடன் நுஃமான் அவர்களது எழுத்துக்களை வாசித்துவருகின்றேன். அவரது பிரதிகளை படிப்பது, அவை பற்றி எழுதுவது, அவற்றினை அடுத்தவர்களுக்கு அறிமுகம் செய்வது என் விருப்புக்குரியதாயிற்று. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக என்னிடம் தமிழ் கற்கின்ற மாணாக்கருக்கு (உயர்தரம், பட்டப் படிப்பு) பேராசிரியர் நுஃமான் அவர்களது “அடிப்படைத் தமிழ் இலக்கணம்” என்ற நூலை வாங்க வைத்திருக்கிறேன். நுஃமான் அவர்களது எழுத்துக்களை தொடர்ச்சியாக படிக்கையில் அவை எனக்குள் ஒரு இசமாக/ இயமாக பரிமாணமடைந்து, நுஃமானிசமாக பரிணமித்துநிற்கின்றது. ‘முற்றுப்பெறாத விவாதங்கள்’ (2023) என்ற நேர்காணல் தொகுப்பில் ‘நுஃமானிசத்தை’ அவரது வாக்குமூலமாக நோக்க முடிகின்றது.
ism என்ற ஆங்கிலப் பதம் இயல் அல்லது வாதம் என தமிழ் பெயர்க்கப்படுகிறது. இசம் படைப்பின் மூன்று அம்சங்களான காலம், வெளி, பாத்திரங்கள் (மேற்கத்திய இலக்கியத்தின் இலக்கிய வரையறைகளைப் பேசும் அரிஸ்டோடிலின் (Aristotle; 384-322 BC) கவிதையியல் (Poetics) காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றும் முக்கியமானவை என்கிறது) என்பன ஒரு படைப்பிற்குள் எவ்வாறு இருக்க வேண்டும் எனப் பேசுகின்றது. மனிதனை அல்லது மனிதனின் சாராம்சத்தை எவ்வாறு படைத்துக் காட்ட வேண்டும் என்று பேசுவதில் தான் இசங்கள் வேறுபடுகின்றன. உலகெங்கிலும் படைப்புரீதியாகவும் படைப்பு சார்ந்த சித்தாந்தங்கள் ரீதியாகவும் பிரமிக்கத்தக்க மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. மார்க்சிசம், யதார்த்தம், சோஷலிஸ யதார்த்தம், மிகை யதார்த்தம், மாயாஜால யதார்த்தம், இருத்தலியம், ஃபிராய்டியம், அமைப்பியல், பின் அமைப்பியல், நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்’று பலவித கருத்தாக்கங்கள்/ இசங்கள் இலக்கிய உலகைப் பெருமளவு மாற்றங்களுக்கு உள்ளாக்கியப்படி இருக்கின்றன. இலக்கிய ரீதியாக முக்கியமானதாகக் கருதப்படக்கூடிய எல்லா மொழிகளிலும் இந்த மாற்றங்களை உணர்த்தும் பதிவுகள் இருக்கின்றன. தமிழும் இதற்கு விதிவிலக்கு அல்ல. தமிழ்ப் படைப்புலகம் வெளிக்காற்றை சுவாசிக்கவோ மாற்றங்களுக்கு உள்ளாகவோ இல்லை என்று சொல்லிவிட முடியாது என்கிறார் அரவிந்தன். மேலும் அவரது விளக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது. ஆனால் பாதிப்புகள், மாற்றங்கள் எல்லாமே ஒரு சிறிய வட்டத்திற்குள் அல்லது சில சிறிய வட்டங்களுக்குள் அடங்கியிருக்கிறது. இந்த வட்டத்தை (அல்லது வட்டங்களை) சேர்ந்தவர்கள் மண்டையை உடைத்துக் கொண்டு யோசிப்பதும் விவாதிப்பதும் (சில சமயம் இந்த விவாதங்கள் சண்டைகளாக மாறுவதும்) படைப்புகளில் இவை ஏற்படுத்தும் தாக்கங்களும் தமிழ்ச் சமூகத்தின் மிகப் பெரும்பாலான பகுதிகளைச் சென்று அடையவேயில்லை. பசுவய்யாவின் (சுந்தர ராமசாமி) கொள்கை கவிதை கூறுவது போலத்தான் இருக்கிறது தமிழ்ச் சூழல்.