நதியில் நகரும் பயணம் 8 பாம்பேர்க் (Bamberg) - நடேசன் -
- நான்கு கோபுரத்துடன் அமைந்துள்ள தேவாலயம் -
இதுவரையும் பார்த்த நகரங்களில் எது அழகானது என்று கேட்டால் பாம்பேர்க் என்பேன். இது பவேரியா மாநிலத்தில் உள்ள ஜெர்மனியின் புராதன நகர். இந்த நகரம் ஏழு குன்றுகளின் மேல் அமைந்திருக்கிறது. இரண்டு ஆறுகள், அழகான தேவாலயம் , கோட்டை , பெரிய மாளிகையும் அதனருகே தோட்டம் புகையூட்டப்பட்ட பியர், பல உணவகங்கள் எல்லாம் பொடி நடையில் சென்று பார்க்கும் தொலைவில் அமைந்துள்ளது. பல காலமாக முழு நகரமும் யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழைய மரத்தால் அமைக்கப்பட்ட மீனவர் குடியிருப்புகள் என்ற கட்டிடங்கள் ஆற்றின் அருகே இங்கு பாதுகாப்பாக உள்ளது. இங்கும் நான்கு கோபுரத்துடன் அமைந்துள்ள தேவாலயம் முக்கியமான கட்டிடம் . ஆயிரம் வருடங்கள் பழமையான இந்த நகரம் அக்காலத்தில் ரோமன் பேரரசர் (Holy Roman Emperor Hentry11) தலைநகராகச் சில காலம் இருந்தது.
ஐரோப்பிய வரலாற்றில் ரோமர்கள், நான்காம் நூற்றாண்டின் பின் அதாவது, கிறிஸ்துவத்தை அரச மதமாக ஏற்றுக்கொண்ட கொன்ஸரன்ரைன் இறப்புக்குப்பின், ரோமர்களின் ஆட்சி நலிவடைந்து போனது. தற்கால துருக்கியில் அமைந்த பைசான்ரனம் கிழக்கு ரோம ராச்சியமாக வளர்ந்தபோது அவர்களது மதம் ஈஸ்ரேன் ஓதோடொக்ஸ் மதம். அதற்கான விசேட மதத் தலைவர் அங்குள்ளார். இப்படியான பலகாரணிகளால் வத்திக்கானில் அமைந்துள்ள கத்தோலிக்க பாப்பரசரின் மதிப்பு நலிவடைந்து, சில இத்தாலியச் செல்வந்தர்கள் குடும்பங்களால் இயக்கப்பட்டார்.
இக்காலத்தில் ஜேர்மன் பிரதேசத்தில் பல சிறிய அரசுகள் இருந்தன. அங்குள்ள அரசர்களே பாப்பரசரையும் பாதுகாத்து தங்களைப் புனித ரோமப் பேரரசின் வாரிசாக (Holy Roman Empire) பிரகடனப்படுத்தினார்கள். ஒரு வகையில் அவர்கள் இல்லாதிருந்திருந்தால் தற்போதைய கத்தோலிக்க மதம் நலிந்திருக்கும். கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பின்பாகவே 1871இல் பிஸ்மார்க் ஜேர்மனியை ஒரு சமஷ்டி பிரதேசமாக ஒன்றிணைத்தார்.