தீப்பாஞ்சியம்மன் என்னும் காவல் தெய்வம் - ப. தமிழரசி, SHC / SH / Fellowship / 2024 /05), முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு, தமிழ் முதுகலை ஆய்வுத் துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் – 635 601
நெறியாளர்: முனைவர். ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை ஆய்வுத் துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் – 635 601
முன்னுரை
தன்னை மீறிய அல்லது தன் கட்டுப்பாட்டில் இல்லாத அதே சமயம் அச்சுறுத்தும் செயல்கள் எல்லாம் மனிதர்களை அச்சம் கொள்ள வைத்தன. அப்படி அவர்களை அச்சுறுத்தும் எல்லாவற்றையும் வணங்குவதால் அதன் பெரிய சீற்றமோ பாதிப்போ அவர்களுக்கு ஏற்படாது என அம்மனிதர்கள் எண்ணி வழிபாட்டைத் தொடங்கினார். அப்படி தொடங்கிய வழிபாட்டில் தோன்றிய தெய்வங்களில் பல தெய்வங்கள் இன்று கலாச்சாரத்தை காக்கும் மற்றும் கலாச்சாரத்தை போதிக்கும் சின்னங்களாக மாறியுள்ளன. அவ்வகையில் தீப்பாஞ்சியம்மன் என்னும் பெண் தெய்வம் எப்படி கலாச்சார காவலாளியாக மாறி வழிபடப்பட்டு வருகிறது என்பதை ஆராய்வதாக இவ்வாய்வானது மேற்கொள்ளப்படுகிறது.
ஆய்வு நோக்கம்
தீப்பாஞ்சியம்மன் என்னும் பொதுப் பெயரால் வணங்கப்படுகின்ற அப்பெண்கள் ‘கலாச்சாரத்தைக் காப்பது‘ என்பதன் எதிரொலியாக எப்படி கொல்லப்பட்டு தெய்வமாக்கப்பட்டனர் என்பதை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கம்.
கடவுளின் பிறப்பு
கடவுளே மனிதர்களை படைத்தார். அவரே அம்மனிதர்களை காக்கின்றார். பின்னர் அவரே மனிதர்களை அழிப்பார். அந்தக்கடவுளே மண் தொடங்கி வான் வரையிலும் உள்ள அனைத்து பருப்பொருட்களையும் உயிர்களையும் படைத்தார். இத்தனை பெரிய செய்லகளைச் செய்கின்ற அந்தக் கடவுள் யார்? அந்தக் கடவுளை யார் படைத்தார்? அந்தக் கடவுளை யார் அழிப்பார்? ஒரு மனிதர் பிறக்கிறார், வளர்க்கிறார், பின்னர் இறக்கிறார். கடவுளும் மனிதரை ஒத்த உருவம்தானே? எனில் கடவுள் எப்படி பிறப்பார்? எப்படி வளர்வார்? எப்படி இறப்பார்?