மானிட விழுமியம் போற்றும் 'பாவனை பேசலன்றி' - கலாநிதி சு. குணேஸ்வரன் -
அறிமுகம்தமிழ்ப் புனைகதைத் துறைக்கு வளஞ்சேர்க்கும் படைப்பாளிகள் வரிசையில், அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் ஆசி. கந்தராஜாவும் ஓருவர். அறிதொழில் சார்ந்த தனது பேராசிரியர் பணிக்கு அப்பால் இலக்கியத் துறையிலும் ஈடுபட்டு வருபவர். 80களின் பின்னர் போரும் வாழ்வும் இடப்பெயர்வும் ஆயுதக்கலாசாரமும் என்று சுற்றிக்கொண்டே இருந்த ஈழப் புனைகதைப் பரப்பில் ஈழத்து இலக்கியத்தின் தொடர்ச்சியோடு புதிய வாழ்வியல் அனுபவங்களையும் தந்தவர்களில் ஒருவராகக் காணப்படுகின்றார். அவரின் முதலாவது சிறுகதைத் தொகுதியாகிய 'பாவனை பேசலன்றி' (2000, மித்ர பதிப்பு) குறித்த பார்வையாகவே இக்கட்டுரை அமைகின்றது.
ஆசி. கந்தராஜா தனது தொழிலின் நிமிர்த்தம் உலகின் பல பாகங்களுக்கும் பயணப்பட்டவர். அதன்மூலம் தனது தரிசனங்களைத் தனது கதைகளுக்குப் பகைப்புலமாகக் கொண்டுள்ளார். மிகப் பரந்த ஒரு புறவுலகச் சித்திரிப்பின் ஊடாக கதை சொல்லியாகத் திகழும் அ. முத்துலிங்கத்தின் தொடர்ச்சியாகப் பல புதிய களங்களையும் கதைகளையும் ஆசி. கந்தராஜாவும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அதில் சில கதைகளை இத்தொகுப்பில் காணலாகும்.
தொகுப்பில் பத்துக் கதைகள் உள்ளன. குடும்ப வாழ்வு குறித்த சிக்கல்கள், போலிப் பெருமைகள், புதிய களங்களில் கிடைத்த அநுபவங்கள், தனித்துப்போன முதியோரின் வாழ்வில் ஏற்படுகின்ற ஏமாற்றங்கள் ஆகியவற்றை இத்தொகுப்பு மையமாகக் கொண்டமைந்துள்ளது.
குடும்ப வாழ்வு குறித்த சிக்கல்கள்
தொகுப்பில் உள்ள கதைகளில் அம்மா பையன், அடிவானம் ஆகியவை குடும்பத்தில் ஆண் பெண் குறித்த சிக்கல்களைக் கூறும் கதைகளாக உள்ளன. இக்கதைகளின் ஊடாக மேலைத்தேயக் குடும்பங்களையும் தமிழர் குடும்பங்களையும் இரண்டு புறமும் வைத்து சீர்தூக்கிப் பார்க்கின்றார்.