மீள் பிரசுரம் : அநுர குமார திசாநாயக்க - இலங்கை வானில் ‘ இடதுசாரி ‘ நட்சத்திரம் - ஆங்கிலத்தில்: டி.பி.எஸ். ஜெயராஜ் | தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம் -
அண்மையில் ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் 'Leftist Star Rises Over Sri Lanka' என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதி Daily Mirror (Sri Lanaka) பத்திரிகையில் எழுதிய இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பற்றிய கட்டுரை ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கத்தால் தமிழாக்கம் செய்யப்பட்டு வீரகேசரியில் வெளியானது. அதனை ஒரு தகவலுக்காக இங்கு பகிர்ந்துகொள்கின்றோம்.- பதிவுகள்.காம் -
அமெரிக்க பத்திரிகையாளர் எட்கார் சினோவின் ‘ சீன வானில் சிவப்பு நட்சத்திரம் ‘ (Red Star over China ) என்ற நூல்தான் கட்டுரைக்கு இந்த தலைப்பை வைப்பதற்கு தூண்டுதல் அளித்தது. சீனக் கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ சேதுங்குடனும் செஞ்சேனையுடனும் தனது ஊடாட்டம் பற்றிய உயிர்களையுடைய விபரிப்பாக அமைந்த அந்த முதலில் 1937 ஆம் ஆண்டில் பிரசுரமானது. மாவோ என்று அறியப்பட்ட மாவோ சேதுங்கைப் பற்றி அந்த நேரத்தில் மேற்குலகில் பெரிதாகத் தெரியாது. பல வருடங்கள் கழித்து மாவோவின் தலைமையில் கம்யூனிஸ்டுகள் சீனாவில் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது ‘ சீன வானில் சிவப்பு நட்சத்திரத்தின் ‘ பிரதிகள் பிரமிக்கத்தக்க அளவில் பெரும் எண்ணிக்கையில் உலகெங்கும் விற்பனையானது. சீனாவின் புதிய கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் பற்றி ஒரு உள்நோக்கைப் பெறுவதற்கு அந்த்நூல் பேராவலூடன் வாசிக்கப்பட்டது.
இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க ஒரு அர்த்தத்தில் இன்று இலங்கை வானில் எழுந்திருக்கும் சிவப்பு நட்சத்திரம் அல்லது இடதுசாரி நட்சத்திரமே . அநுரா அல்லது ஏ.கே.டி. என்று பிரபல்யமாக அறியப்பட்ட திசாநாயக்க 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இலங்கையின் ஒனபதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அவர் செப்டெம்பர் 23 ஆம் திகதி பதவியேற்றார்.
55 வயதான திசாநாயக்க ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) யினதும் தேசிய மக்கள் சக்தியினதும் தலைவர். ஒரு தீவிரவாத இயக்கமாக இருந்து பிறகு அரசியல் கட்சியாக மாறிய ஜே.வி.பி. ஆறு தசாப்த கால வரலாற்றைக் கொண்டது.