முகநூல்: எழுத்தாளர் 'கம்பிகளின் மொழி' பிரேம் அகால மரணம். ஆழ்ந்த இரங்கல். - யோ.புரட்சி -
- எழுத்தாளர் 'கம்பிகளின் மொழி' பிரேம் அவர்களின் அகால மரணம் பற்றிய எழுத்தாளர் யோ.புரட்சியின் முகநூற் பதிவு. போர்ச்சூழலில் பாதிப்புகளுக்கு உள்ளாகி, மீண்டும் தன் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கையில் எழுத்தாளர் பிரேமுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. அவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல். - பதிவுகள்.காம் -
கை ஒன்றினையும் கால் ஒன்றினையும் போராட்ட காலத்தில் இழந்த கம்பிகளின் மொழி பிரேம் அவர்கள் 05.07.2024 இரவு மரணித்தார். சிறை வாழ்வும் அனுபவித்தவர். அதன் தாக்கத்தால் 'கம்பிகளின் மொழி பிரேம்' என தன்னை அடையாளப்படுத்தியவர். இப்படம் 2017இல் பிரேம் எடுத்தது. தன்னைப் போலவே போரில் காயமுற்ற ஒருவரை திருமணம் செய்தவர். இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆனவர்.
2016இல் 'காய்ந்து போகா இரத்தக்கறை' எனும் நாவலினை யாழ்ப்பாணம் நெல்லியடியில் வெளியீடு செய்திருந்தோம். அந்நாவல் இவர் எழுதியது. இக்காலத்தில் இவர் அச்சு ஊடகம் ஒன்றில் பணியாற்றியிருந்தார் இந்நூலுக்காக பின்னட்டைக் குறிப்பினை எழுதிக் கொடுத்திருந்தோம். அதன் பின்பு 'மறந்திடுமோ மனதை விட்டு' கவிதை நூலினை யாழ்ப்பாணத்திலும், 'பொன்னான பரிசு' நூலினை மன்னாரிலும் வெளியீடு செய்திருந்தார்.