குறுநாவல்: புகையில் தெரிந்த முகம்! - அ.செ.முருகானந்தன் -
அ.செ.மு,.வின் 'புகையில் தெரிந்த முகம்' பற்றிச் சில வார்த்தைகள்!
மாயவாத சித்திரிப்பில் எழுதப்பட்டுள்ள நடேசனின் பண்ணையில் ஒரு மிருகம்' என்னும் தலைப்பில் ஜொஸப்பின் பாபா (துணைப் பேராசிரியர், புனித சேவியர் கல்லூரி பாளையங்கோட்டை ) எழுதிய விமர்சனத்தை வாசித்தபோது தமிழகப் பண்ணையொன்றில் கால்நடை வைத்தியராகச் செல்லும் ஒருவரிடம் அங்கு காதற் பிரச்சினையால் காதலன் படுகொலை செய்யப்பட, தற்கொலை செய்துகொண்ட கற்பகம் என்னுமொரு பெண் தன் கதையைக் கூறுவதாகக் கதையோட்டம் செல்வதை அறிய முடிந்தது.
இறந்தவர்கள் தம் கதைகளைக் கூறி தம் கொலைகளுக்கான மர்மத்தைத் தீர்க்கும் வகையிலான படைப்புகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. உலகப்புகழ் பெற்ற நாவல்களிலொன்றான நோபல் பரிசு பெற்ற துருக்கிய நாவலாசிரியரான ஓரான் பாமுக்கின் 'எனது பெயர் சிவப்பு' (My Name is Red) நாவல் இத்தகைய பாணிப் படைப்புகளிலொன்று. 'மாஜிக்கல் ரியலிசம்' மிக்க பின் நவீனத்துவப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. ஆனால் இது போன்ற பாணியில் அமைந்த குறுநாவலொன்றினை ஐம்பதுகளிலேயே இலங்கைத் தமிழ் எழுத்தாளர் ஒருவர் எழுதியுள்ளார் என்பது கவனத்துக்குரியது. அவர் அ.செ.முருகானந்தன். அக்குறுநாவல் சுதந்திரன் வாரவெளியீட்டில் தொடராக வெளியாகி, நவலட்சுமி புத்தகசாலை (136 செட்டியார் தெரு, கொழும்பு) பதிப்பகத்தால் 1950இல் வெளியிடப்பட்ட 'புகையில் தெரிந்த முகம்'.