குறுநாவல் : தாய் நிலம்! - கடல்புத்திரன் -
* ஓவியம் AI
1. ஆரம்பமாகி விட்டது ..
தற்போது ,ஆரம்ப இளைஞர் அமைப்பில் இருந்தவர்கள் சிதறி , சிலர் சேர்ந்து தோழர்களாகி இயக்கங்ககளை உருவாக்கியும் , சேராது தனிப்பட நட்பு வட்டத்துடன் இயங்கிறதென மக்களுக்குத் தெரியாத பல அமைப்புகள் இருந்தன. தலைவர்களாக உருவெடுத்திருப்பவர்கள் ஒருத்தர் வீட்டிலே ஒருத்தர் தலைமறைவாகி இருந்த காலமும் இருந்தது . அச்சமயம் , வீட்டுப்பிள்ளையாக .. சகோதராக அரவணைக்கப்பட்டவர்கள் . இப்ப என்னப் பிரச்சனையோ ...? எதிரியாகி , சார்ப்பாக நின்றதிற்கு அல்லது தெரியாத ஒரு காரணத்திற்காக ..சுட்டு த் தள்ளும் செய்திகள் நகரை பரபரப்பாக்கி விடுகிறது . விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த இளைஞர்கள் ...இப்படி விரயமாக சாகிறது வருத்தமாக இருக்கிறது .
உள்ளூர் அரசியல் தலைவர்கள் கலவரங்களில் எல்லை மீறும் ஈழவரசை கட்டுப்படுத்த போட்ட இரகசிய விதையே இந்த ஆயுதம் ஏந்தல் . வன்முறைக்கு வன்முறை தீர்வாவதில்லை என்பதை நிரூபிப்பது போல கோபம் , விரக்தி ..என கொந்தளித்த குறைபாடுடைய ( ஆங்கிலேயக்) கல்வியைக் கற்ற மாணவர்களிற்கு அடுத்து என்ன செய்வது எனத் தெரியவில்லை . விடுதலைக் கொள்கையை ஏற்படுத்தியவர்கள் இளைஞர்களில்லை , அவர்களுக்கு அதற்கான புத்திசாலித்தனமும் கிடையாது . இந்த அரசியல் தலைவர்கள் தாம் . . எனவே , கையில் ஆயுதம் கையில் ஏற கட்டுப்பாடின்றி செயல்படத் தொடங்கி விட்டனர் .
அமைப்புகளாக தாமே ஏற்படுத்திக் கொண்ட புதிய விதிமுறைகள் சிலந்திக்கணவாய் கணக்கில் அவர்களையே கவ்விப்பிடித்து ஆட்டுவித்துக் கொண்டிருந்தன . பேச்சு தடிக்கிற போது கேட்கவில்லையா ... உடனே சூடு . மக்கள் மத்தியில் அமைப்புக்கள் தெரியாமலே இருந்தன . வங்கிக்கொள்ளை நடைபெறுகிற போது பலவித இடையூறுகள் ஏற்பட்டன . மக்கள் சிலசமயம் கொள்ளையர் என கருதி தடுக்க முயன்றனர் . விடுதலைப்போராட்டதிற்கு அளவுக்கதிகமாக ஏற்படுத்திக் கொண்ட புனிதம் குழப்பித் தள்ளியது . அதனால் , எடுத்த பணத்தை பிரித்து வைத்திருந்த இளைஞர்களில் ஏற்பட்ட சில்லறைச் சந்தேகங்களும் சூட்டில் முடிந்தன . நகர , தரைக்கடினரின் நடமாட்டமும் வேறு அதிகமாக இருந்தன . ஒரு சிக்கலான நிலமை . தோழமை மேலும் சிதறி .... அமைப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தன . நேற்றைய நண்பர் இன்று எதிரி .
'மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் ' என்ற அவசியத்தை உணர்ந்த பிரதான அமைப்பு தாம் நிகழ்த்திய பல செயல்களுக்கு உரிமை கோரி பிரசுரம் அடித்து வினியோகித்தது . ஈழக்கடினரும் "தேடப்படுகிறார்கள் ' என்ற பட்டியலுடன் பல இளைஞர்களின் பெயர்களுடன் கூடிய புகைப்படங்களை , பெரிய போஸ்டர்களை நகர்களில் ஒட்டின . '' சொந்தமக்களே விடுதலையை எழுதுபவர் . அது வெளியிலிருந்து கிடைப்பதில்லை . வெளி அரசியலின் ஊடுருவல்கள்( நலன்கள் ) , ஈழவரசின் ஏதேச்சாதிகாரம் ...இவற்றின் மத்தியில் பாலஸ்தீனர்களின் அனுபவம் எமக்குத் தேவை '' என்று துண்டுப்பிரசுரம் வெளியிட்ட இவர்களின் கருத்து...எல்லாமே சரி தான் ! . ஆனால் , புதியவர்களாக உருவெடுத்தவர்கள் எப்படி அந்த இலக்கை அடையப் போகிறார்கள் ? . மக்களுக்கு அவர்களை ஏற்பதா , தொழுவதா ..? எனத் தெரியவில்லை . எங்களுக்காக போராட வெளிக்கிட்டு விட்டார்கள் ''என்ற மரியாதை இருக்கவே செய்தது .