(முகநூல் அஞ்சலி) காலம் சென்ற மாஸ்டர் சிவலிங்கம் சில மனப்பதிவுகள் ! - பேராசிரியர் சி.மெளனகுரு -
மாஸ்ட்ர் சிவலிங்கம் காலமானார் எனும் செய்தியை முக நூலில் நேற்றுப் பார்த்தேன், அவசியம் சென்று பிரியாவிடை கூறவேண்டிய மனிதர் அவர், செல்லும் நிலையில்் நான் இல்லை , அவரது இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளாமை மிகுந்த வருத்தமே. பழுத்த ஓலைகள் விழுகின்றன, காலத்தின் நியதி அது.
மாஸ்டர் என்ற சொல் ஒருகாலத்தில் மட்டக்களப்பில் சிவலிங்கம் அவர்களையே குறிக்கும் சொல்லாக இருந்தது. இத்தனைக்கும் அவர் ஓர் பாடசாலை மாஸ்டர் அல்ல. பாடசாலையில் படிப்பிக்காத அவருக்கு பல்நூற்றுக் கணக்கான மாணவர்கள் இருந்தனர். மாஸட்ராக அல்ல மாமாவாக அவர் குழந்தைகளின் உளத்தில் கொலு வீற்றிருந்தார். அவரது மறைவு இயற்கையானது. அவர் தனது 89 ஆவது முது வயதில் காலமானார். இருந்திருந்தால் அடுத்த ஆண்டில் அவரது 90 வயதைக் கொண்டாடியிருப்போம்.
மாஸ்டர் சிவலிங்கம் அவர்களை அனைவரும் ஒரு கதைசொல்லியாக அதிலும் சிறுவர்களுக்கான கதைசொல்லியாக மாத்திரமே பார்க்கிறார்கள். முக நூலில் அப்படியொரு பிம்பமே உருவாகி இருந்தது. நான் அறிந்த மாஸ்டர் சிவலிங்கம் இன்னும் வித்தியாசமானவர். அவருடனான முதல் சந்திப்பு பசுமையாக ஞாபகம் இருக்கிறது. அப்போது நான் வந்தாறுமூலை மத்தியகல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறேன். காற் சட்டை போடும் . வயது 13. எட்டாம் வகுப்பு அன்று . பாடசாலை பாரதிவிழா கொண்டாடுகிறது. அத்ற்கு அவர்கள் அன்றைய மட்டக்களப்பின் பிரபல பேச்சாளர்களான பிரபலமான செ, இராசதுரை, கமலநாதன் ( அவர் வித்துவான் ஆகாதகாலம் அது) எஸ் பொன்னுதுரை ஆகியோரையும் அவர்களுடன் சிவலிங்கத்தையும் அழைத்திருந்தனர். , முன்னவர் இருவரும் தமிழரசுககட்சி மேடைகளில் விளாசித் தள்ளி மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். எஸ் பொன்னுத்துரை இன்னொரு விதத்தில் பிரபலமானவர். அவர்கள் அனைவரும் சிவலிங்கத்திலும் வயது கூடியவர்கள். சிவலிங்கத்தை மட்டக்களப்பு அதிகம் அறியாத காலம் அது. சிவலிங்கம் அப்போதுதான் தமிழ்நாட்டு வாசம் முடித்து மட்டக்களப்பு திரும்பியிருந்தார். தமிழ்நாடு சென்று வருவது என்பது அன்று பெரிய விடயம். சிவலிங்கம் தனது பேச்சில் தனது தமிழ் நாட்டு அனுபவங்களைச் சுவையாக கூறினார். அவர் அப்போது ஒரு மிமிக்கிறிக் கலைஞராக வளர ஆரம்பித்த காலம் அது. அவர் அன்றைய முதலமைச்சர் காமராஜர்போல , திராவிடக் க்ழக தலைவர் ஈ வே ரா போல, திராவிட முன்னேற்ரக்கழக தலைவர் அண்ணாதுரைபோல , கருணாநிதிபோல. சினிமா நடிகர் என் எஸ் கிருஸ்ணன் போல , சிவாஜி கணேசன் போல தனது குரலை மாற்றி மாற்றி செய்து அவர்கள் பேசுவதுபோல பேசிக் காட்டினார். சிறுவர்களாகிய எங்களுக்கு ஒரே ஆச்சரியம். குசி சந்தோசம் கைதட்டல் பெரு வியப்பு.