தேனீ இணைய இதழின் ஆசிரியர் ஜெமினி கெங்காதரன் ஓராண்டு நினைவேந்தல்! - தகவல் : முருகபூபதி -
மெய்நிகர் இணைப்பு: Join Zoom Meeting:
https://us02web.zoom.us/j/88645005608?pwd=M1J5TS9TR3ZUbzVxZVVMQlcySFBJZz09
Meeting ID: 886 4500 5608 | Passcode: 334900
கொரோனோ பெருந்தொற்று உலகடங்கிலும் உக்கிரத்தாண்டவம் ஆடத் தொடங்கிய காலப்பகுதியில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி தேனீ இணைய இதழின் ஆசிரியர் ஜெமினி கெங்காதரனையும் அது ஜெர்மனியில் காவுகொண்டுவிட்டது. புங்குடுதீவில் 1965 ஆம் ஆண்டு கணேஷ் – மங்கையற்கரசி தம்பதியரின் புதல்வனாகப்பிறந்த ஜெமினி கெங்காதரன் யாழ். இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவர். 1980 களில் அய்ரோப்பாவுக்கு புலம்பெயர்ந்த அவர், 1989 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நண்பர்களுடன் இணைந்து தேனீ என்ற சிற்றிதழை ஆரம்பித்தார். கலை, இலக்கிய, அரசியல், சமூக அக்கறை சார்ந்த படைப்புகளுக்கு குறிப்பிட்ட இதழ் களம் வழங்கியது. அதனையடுத்து அக்கினி என்ற இதழையும் சிறிதுகாலம் நடத்தினார். அதன்பின்னர் தேனீ இணைய இதழை தொடங்கி தினமும் பல வருடங்களாகப் பதிவேற்றினார். தேனீ இணைய இதழை தனிமனிதராக அர்ப்பணிப்போடு வெளியிட்டு, மாற்றுச்சிந்தனைகளுக்கும் சிறந்த களம் வழங்கினார். கலை, இலக்கியம் மற்றும் அரசியல் ஆய்வுத் தொடர்களுக்கும் பயனுள்ள நேர்காணல்களுக்கும் மொழிபெயர்ப்புகளுக்கும் களம் வழங்கி, வாசகர்களிடம் சேர்ப்பித்தவர். அதற்காக எந்த ஊதியமும் பெறாமல் கருத்துக்களையும் எதிர்வினைகளையும் விமர்சனங்களையும் மாத்திரமே ஏற்றுக்கொண்டவர். தேனீயில் வெளிவரும் ஆக்கங்களுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பு என்றவுணர்வுடன் ஊடக தர்மத்தை பின்பற்றி, பாரதூரமான விமர்சனங்கள் வரும்போது அவற்றை உரியவர்களுக்கே அனுப்பி அவர்களின் கவனத்திற்குட்படுத்தி ஊடக தர்மத்தின் கண்ணியத்தையும் காப்பாற்றினார்.