பெரியாரும் தமிழும் திராவிடமும்! சூழ்ச்சியால் மொழிவாரியாகச் சிதறுண்ட தென்னாடு. இன்றும் சூழ்ச்சி தொடர்கிறது தமிழ்நாட்டைப் பிரிக்க! - நந்திவர்மப்பல்லவன் -
பெரியாரைப் பொறுத்த அளவில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவையெல்லாம் தமிழ்தான். 'திராவிட மொழிகள்' என்னும் கட்டுரையில் (பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் தொகுதி 2 , பக்கம் 768) பெரியார் கூறுவதைச் சிறிது பார்ப்போம்.
அவர் எழுதிய மொழியாராச்சி (1948) நூலில் இடம் பெற்றுள்ள பகுதி இது. அப்பொழுது தென்னாடு தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, கேரளா என்று மொழிவாரியாகப் பிரிக்கப்படாத காலகட்டம். அப்போது இவ்விதம் தென்னாடு மொழிவாரியாகப் பிரிப்பதைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார். இவ்விதம் பிரிப்பது ஆரியரின் சூழ்ச்சி என்று அவர் திடமாக நம்பினார். கருதினார். கன்னடம், தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிகள் அனைத்துமே தமிழ்தான். வெவ்வேறு இடங்களில் பேசப்படுவதால் , வடமொழியின் ஊடுருவலால் தமிழ் இவ்விதம் இடத்துக்கிடம் பேசப்படுகிறது என்று அவர் கருதினார்.
மொழிவாரியாகப் பிரிக்கப்படாமல் இருப்பதற்காக தென் மாநிலங்கள் அனைத்தையும் ஒரு குடையில் கொண்டு வர வேண்டுமெனறு அவர் கருதினார். அதற்காக திராவிட மொழியென்பது தமிழ்தான். தெலுங்கு, கன்னடம் , மலையாளம் அனைத்தும் திராவிட மொழியான தமிழ்தான். திராவிடம் என்று அழைப்பதன் மூலம் ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய் அனைத்து மாநிலங்களையும் தமிழகத்துடன் இணைக்க முடியும். இதன் மூலம் ஆரியரின் மொழிவாரி மாநிலப் பிரிவினைத் தவிர்க்க முடியும் என்று அவர் திடமாகக் கருதினார். இதை மக்கள் மத்தியில் எடுத்துரைப்பதற்காக அவர் பல கட்டுரைகள் எழுதினார். உதாரணத்துக்குத் 'திராவிட மொழிகள்' என்னும் கட்டுரை பின்வருமாறு ஆரம்பிக்கின்றது:
" தமிழன், தெலுங்கன், கன்னடியன், மலையாளி இவர்கள் பேசுவதெல்லாம் தமிழ்தான். இவர்கள் பேசுவது வெவ்வேறு மொழியென்று கூறுபவன் தமிழ் மகனல்லன். தமிழை அறியாதவன். ஆரியத்திற்குச் சோரம் போனவன். நம்மைக் காட்டிக்கொடுத்து ஆரிய ஆதிக்கத்திற்கு ஆக்கந்தேட முயற்சிப்பவன். இவை நான்கும் வேறு வேறு மொழியென்று கூறுபவர்கள் தமிழர் என்று தம்மை நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். கருதிக்கொண்டிருக்கின்றார்கள் என்று கூறலாமே தவிர - இவர்களைத் தமிழறிந்தவர்கள் என்று நாம் ஒப்புக்கொள்ள முடியாது.''