பயனுள்ள மீள்சுரம்: வாழிடத்தைக் காக்கும் வெஞ்சினம் கொண்ட குருவி! - அருண்மொழிவர்மன் -
தமிழின் முக்கியமான கதைசொல்லிகளில் ஒருவரான தேவகாந்தன் தனித்துவமான மொழியாலும், தேர்வுசெய்யும் வித்தியாசமான களங்களாலும், தனது புனைவுகளூடாக சம்பவங்களையும் கருத்தியலையும் ஊடுநூலும் பாவுநூலுமாய்க் கலந்துபின்னும் ஆற்றலாலும் அறியப்பட்டவர். காவியங்கள் மீதான அவரது தாடனத்தையும் அவற்றை ஈடுபாட்டோடு கற்றுத் தெளிவதற்கான அவரது முனைப்புகளையும் அவருடனான உரையாடல்களின் வழியே அறிந்திருக்கின்றேன். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக எழுதிவரும் தேவகாந்தன், மிகுந்த தேடலுடன் தொடர்ச்சியாக தத்துவங்களையும், கோட்பாடுகளையும், அபுனைவு நூல்களையும் தொடர்ந்து தேடித்தேடி வாசித்தும் வருபவர்.
தேவகாந்தன் எழுதி இதுவரை 12 நாவல்கள் வெளிவந்திருக்கின்றன, இவற்றில் லங்காபுரம், கதாகாலம், யுத்தத்தின் முதலாம் அதிகாரம், கனவுச் சிறை, கலிங்கு ஆகியன அரசியல் பின்புலத்தினைக் கொண்டு கதைசொல்லும் பிரதிகளாக அமைகின்றன. ஒடுக்குமுறைகள் குறித்தும் அவற்றுக்கு எதிரான போராட்டங்கள் குறித்தும் பேச்சுக்களிலும் எழுத்துகளிலும் மிகவும் அரிதாகவே நேரடியான தனது கருத்துகளைப் பதிவுசெய்திருக்கும் தேவகாந்தனின் நாவல்களில் பெரும்பாலானவை ஒடுக்குமுறைகள் குறித்த கறாரான பார்வைகளையும் பதிவுகளையும் கொண்டவையாக இருப்பது குறிப்படவேண்டியது. இவற்றில் லங்காபுரம், கதாகாலம் ஆகியன முறையே இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் மறுவாசிப்புகளாக அமைகின்றன. யுத்தத்தின் முதலாம் அதிகாரம், கனவுச் சிறை, கலிங்கு ஆகியன ஈழத்தில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான தமிழர்களின் போராட்டங்களைக் கருவாகவும் களமாகவும் கொண்ட Triology ஆகச் சொல்லத்தக்கன. இந்நாவல்களை இவ்வடிவில் எழுதவேண்டும் என்கிற திட்டமிடலும் எழுதுவதற்குத் தான் திட்டமிடவில்லை என்று தேவகாந்தன் குறிப்பிட்டிருக்கின்றார் என்றாலும் இந்த மூன்று நாவல்களும் ஒருமித்து 1800 – 2015 வரையான நீண்ட காலப்பகுதிகள் வரையான மக்களின் கதையைச் சொல்கின்றன.