அதிபர் பொ. கனகசபாபதி கனடாவில் நினைவுகூரப்பட்டார். - குரு அரவிந்தன் -
மகாஜனக் கல்லூரி முன்நாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்த 10 வது ஆண்டு நினைவுநாள் கனடாவில் ரொறன்ரோவில் உள்ள மல்வேன் பூங்காவில் 4-9- 2024 அன்று நினைவு கூரப்பட்டது. பொதுவாக ஒருவர் மறைந்த தினம் என்றால் அது ஒரு சோகசம்பவமாக இருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான், அவர் புகுந்த மண்ணில் தமிழ் இனத்திற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி அதிபரின் பிறந்த தினத்திலன்று ஒவ்வொரு வருடமும் இங்குள்ள நண்பர்கள், பழைய மாணவர்கள், மற்றும் குடும்பத்தினரால் நினைவு கூரப்படுகின்றது.
இங்குள்ள நண்பர்களும், பழைய மாணவர்களும் இணைந்து அவரது நினைவாக, உள்ளுராட்சி மன்றத்தின் உதவியுடன் மல்வேன் பொதுப் பூங்காவில் ஒரு மரத்தை நட்டு, அதன் கீழ் ஒரு இருக்கையையும் வைத்திருக்கிறார்கள். இருக்கையிலும், நினைவு மரத்தின் கீழும் அவரைப் பற்றிய விபரங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. பூங்காவுக்கு வரும் அத்தனை பேரும் அதை வாசித்துச் செல்லும்போது, நினைவுத்தூபி போல, தமிழர்கள் கனடாவில் வாழ்ந்த அடையாளத்தையும், அவர்கள் ஆற்றிய சேவையையும் அது காட்டி நிற்கின்றது. புலம் பெயர்ந்த தமிழர் ஒருவருக்குக் கிடைத்த பெருமையாக இது கருதப்படுகின்றது.
மகாஜனக்கல்லூரிக் கீதத்துடன் நிகழ்வு ஆரம்பமானதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. முதலில் பழைய மாணவர் சங்கத் தலைவர் ஆசிரியர் திரு. புவனச்சந்திரன் அவர்களின் உரை இடம் பெற்றது. அவர் தனது உரையில் பழைய மாணவர் சங்கத்தை கனடாவில் ஆரம்பித்து வைக்கக் காரணமாக இருந்த பெருமை மதிப்புக்குரிய திரு. பொ. கனகசபாபதி அவர்களையே சேரும். அவர் மகாஜனாவில் கற்பித்த காலத்தில் நானும் அங்கு ஆசிரியராக இருந்தேன். கனடாவில் ‘அதிபர்’ என்று அழைத்தால், தனது சிறந்த பண்புகளால் எல்லோரையும் கவர்ந்த இவரைத்தான் குறிப்பிடுவதாக எல்லோரும் புரிந்து கொள்வார்கள். இவர் புலம்பெயர்ந்த எங்களுக்கு வழிகாட்டியாக இருந்து ஆற்றிய சேவையால், தமிழ் இனம் இன்று தலைநிமிர்ந்து நிற்கின்றது’ என்று தனது உரையில் குறிப்பிட்டார்.