கிளிம் வாழ்வின் மூன்றாம் தொகுதி: -தமிழ் இலக்கிய உலகை, முன்னிறுத்தி (2) - ஜோதிகுமார் -
2
விவசாயிகள், தொழிலாளிகள், புரட்சிகள், பாதுகாப்பரண்கள் - இவை,அனைத்துமே கிளிம்மின் வாழ்நிலைக்கு ஒவ்வாததாக இருக்கின்றன. போதாதற்கு, ஒரு வகையில், இவற்றின் ஒட்டு மொத்த பிம்பமாய் அல்லது உருவகமாய் திகழ முற்படும் மார்க்சிஸ்டுகள் பொறுத்தும், அவன் தன் அந்தரங்கத்தில், ஏளனமும் ஒரு வகை வெறுப்பும் கலந்த உணர்வினைக் கொண்டவனாய் இருக்கின்றான். ஒரு பாத்திரம், மார்க்சிஸ்டுகள், பொறுத்த தன் கருத்தைக் கூறும்:
“அவர்களிடம் நீ அறத்தைப் பற்றியோ அல்லது வாய்மைகள் பொறுத்தோ கதைப்பது என்பது உனது நேரத்தை வீணடிக்கும் செயல்தான். அறம் என்ற, அப்படியான ஒன்று அவர்களிடம் இல்லவே இல்லை. அப்படியே இருந்தாலும் கூட, அது ‘அவர்களது’ அறங்களாக அல்லது அவர்களது‘வாய்மைகளாக’ மாத்திரமே இருக்கின்றது. அவர்கள் நம்புகிறார்கள்: உ;ன்னை விட, என்னை விட அவர்களிடம் அதிகளவில், உண்மையான மனித நேயம் இருப்பதாக… ஒரு, ‘தனி மனிதனைப்’ பற்றி; அதாவது ஒரு தனி ;நபரை’ பொறுத்து அவர்களிடம் நீ கதைப்பது என்பது உதவாத ஒரு விடயமாகிறது. நேரத்தை வீணடிப்பது. “மனிதன்”– அது பிற்பாடு என்கிறார்கள் அவர்கள். முதலில், சுயமான முளைத்தலுக்காய், மண் பண்படுத்தப்படட்டும். பின்னரே ‘மனிதன்’! நீ கூறும், ‘மனிதன்’ என்பவன் யார்? அவன் எங்கிருக்கிறான் என்று கேட்கிறார்கள். கூறுகிறார்கள்: இருப்பது எல்லாம் வெற்று அடிமைகள். மண்டியிட்டு, அல்லது நன்றாய், நீட்டிசா~;டாங்கமாய் வணங்கத் தெரிந்த அடிமைகள்… அவ்வளவே…”