அனைத்துலகப் பெண்கள் நாள் - 2025 - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
அனைத்துலக மகளிர் தினத்திற்காய்த் துணிவுடன் போராடி, அளப்பரிய தியாகங்களை மேற்கொண்ட அனைத்துப் பெண்களையும் இவ்வேளை நினைவுகூர்ந்து தலைசாய்த்து வணங்குகின்றேன்.
இந்த 2025ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் ‘‘ எல்லா பெண்களுக்கும் உரிமைகள், சமுத்துவம், அதிகாரம் அளிப்பதை விரைவில் செயல்படுத்துவதாகும்.’ இது பாலினச் சமத்துவத்திற்காகச் சேர்ந்து துரிதமாகச் செயற்படலாம் என்பதை உணர்த்துகிறது. ஒருவர் சாதனையாளராக நிலைநிறுத்தி இருப்பதற்கு அதாவது ஒரு பெண்ணின் வெற்றிக்கு யாரோ ஒருவரின் உதவிக் குரல் அவருக்குப் பக்கபலமாக ஒலித்துக் கொண்டுதான் இருந்திருக்கிறது. அத்தகைய சந்தர்ப்பம் வீட்டில் இருந்துதான் உருவாகியிருக்கிறது. குடும்பத்திலுள்ள தாயாக இருக்கலாம், தந்தையாக இருக்கலாம், சகோதரியாக இருக்கலாம், சகோதரனாக இருக்கலாம், துணைவருடைய உதவியோ அல்லது மகனுடைய உந்துதல்தான் நிட்சயமாக இருந்திருக்கும்.
அந்தவகையில் ஆண் பெண் சமத்துவத்தை உணந்து நாம் செயற்பட்டு இந்நாளை முன்னெடுப்பது பொருத்தமானது என் நம்புகின்றேன். பெண்களுக்கு ஏற்படும் வன்மங்கள், அநீதிகளுக்கு எதிராக கண்டனத்தை நாம் வழங்கவேண்டும். அது பெண்ணாக மட்டுமன்றி யாராக இருந்தாலும் பரவாயில்லை அதற்குக் குரல் கொடுக்கவேண்டும்.
பெண்கள் தினத்தைக் கொண்டாடும் இத்தினதில் நாம் பெண்களாகப் பிறந்ததை எண்ணிப் பெருமிதத்தோடு இருக்கின்றோம்.
‘மங்கையராயப் பிறப்பதற்கே நல்ல மாதவம்
செய்திடல் வேண்டுமம்மா’
என்ற கவிமணி சொன்ன கூற்றுக்கு இணங்க நாம் எல்லோரும் பெருமிதமடைய வேண்டும். பெண் என்பவள் பொறுமையின் சிகரம் என்று கூறுவார்கள். ஒரு தாய் எவ்வளவு பொறுமையைக் கடைப்பிடிக்கிறாள் என்பதை நாம் குறிப்பாக அவதானிக்க முடிகின்றது. ஒவ்வொரு பெண்ணும் அந்தத்தாய்மை நிலையை அடையும்போது அது தானாகவே உருவாகி விடுகின்றது. எனவே இளையவர்களுக்கு பொறுமையில்லை என்று கூறவதைவிட அவர்கள் அந்த நிலைக்கு வரும்போது அவர்களிடம் இவை இயல்பாகவே வந்துவிடும். இந்த வேளையில் ஒவ்வொரு பெண்ணுக்கும்; மகளிர்தின வாழ்த்துக்களைக் கூற விரும்புகின்றேன்.