ஊடகவியலாளர் இராசநாயகம் பாரதி நினைவுகள் ! புகலிடப் படைப்பாளிகளுக்கு சிறந்த களம் வழங்கியவரை இழந்தோம்! - முருகபூபதி -
கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி எனது வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தியும் ஒரு படமும் வந்திருந்தது. அனுப்பியவர் மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும், ஊடகவியலாளருமான நண்பர் தெய்வீகன். இலங்கையில் சில தமிழ் ஊடகங்களில் பணியாற்றியவரான இராசநாயகம் பாரதி, திடீரென உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக படத்துடன் அந்தச்செய்தி கூறியது. தற்போது இலங்கையில் நிற்கும் நண்பர் தெய்வீகனை தொடர்புகொண்டு, பாரதியின் சுக நலன் விசாரித்து, பாரதி விரைவில் நலம்பெறவேண்டுமென பிரார்த்தித்தேன். எமது பிரார்த்தனைகள் சில வேளைகளில் இந்த விதியின் செவிகளுக்கு எட்டுவதில்லைப்போலும் !? கடந்த 09 ஆம் திகதி ( இரண்டு வாரங்கள் கழித்து ) பாரதி மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தி வருகிறது. மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கவேண்டியவரின் உயிரை காலன், இரக்கமின்றி பறித்துவிட்டானே என்ற கோபம்தான் எழுகிறது.
கவியரசு கண்ணதாசன், 1981 இல் அமெரிக்கா – சிக்காகோவில் திடீரென மறைந்தபோது, கவிஞர் வாலி சொன்ன கூற்றுத்தான் தற்போது நினைவுக்கு வருகிறது. வாலி இவ்வாறு சொன்னார்: “ எழுதப்படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருத்தன். அழகிய கவிதைப் புத்தகத்தை கிழித்துப்போட்டுவிட்டான். “
1997 ஆம் ஆண்டு கொழும்பு – மட்டக்குளியாவில் தினக்குரல் நாளிதழும் வார இதழும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே எனக்கு பாரதியின் அறிமுகமும் தொடர்பாடலும் கிடைத்தது. அதற்கு முன்னர், பாரதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான ஈழமுரசு, முரசொலி பத்திரிகைகளில் பணியாற்றிய காலப்பகுதியில் நான் அவுஸ்திரேலியா வாசியாகிவிட்டேன். அக்காலப்பகுதி இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் போர் மேகங்களினால் சூழ்ந்திருந்தது.