வானவில் திட்டம்
தாய்மைக்கும் பெண்மைக்கும் எமது சமூகத்தில் உதாரணம் தேடத் தேவையில்லை. ஆனால் என்னைப் பாதித்த விடயத்தை சொல்கிறேன். எனக்கு கிடைத்த தகவல்களின்படி இறுதிக்கட்ட போரில் பலர் சரண்அடையும் போது திப்பு சுல்தான் போன்று இறுதிவரையும் போரிட்டு இறந்த முக்கிய தளபதி சூசையாவார். சூசையின் மனைவி; கடைசி நேரத்தில் முள்ளிவாய்க்காலில் “நீங்கள் நடத்திய பயிற்சியில் நான் எனது மகனை இழந்தேன். ஆனாலும் உங்களை விட்டுப் போகவில்லை. இப்பொழுது இருக்கும் ஒரு குழந்தையையும் நான் இழக்கத் தயாரில்லை. நான் கடல்வழியாகத் தப்பி கடற்படையினரிடம் சரணடைவதை நீங்கள் தடுக்க முடியாது” என கூறிவிட்டு முள்ளிவாய்காலில் இருந்து அந்த போராளித் தாய் வள்ளத்தில் வெளியேறினாள். கடந்த வைகாசி மாதம் நான் இலங்கை சென்று திரும்பிய பின்னர் பெண்கள் அதிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த இளம் பெண்களைப் பற்றிய கட்டுரை எழுதினேன். அதனைப்படித்த பலர் என்னைத் தொடர்பு கொண்டு தமது கவலையைத் தெரிவித்தார்கள். வெளிநாடுகளில் இருக்கும் நாம் கவலை அடைவதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை சமூகத்தின் மூலவேர் பெண்கள்தான். பலருக்கு இதை நான் அதிகம் விளக்கத் தேவையில்லை.