மன அழுத்த மேலாண்மை – 5 :
பணியினால் உண்டாகும் மன அழுத்தம்
- டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு
கலைக்கல்லூரி,கோவை) -
உங்கள்
வாழ்க்கையின் வெற்றி நீங்கள் என்ன வேலையில் இருக்கிறீர்கள் என்பதை வைத்தே
அளவிடப்படுகிறது. எனவே நம் வேலை நம் வாழ்வில் முக்கிய பங்காற்றுகிறது. உங்கள்
மனநலமும் உங்கள் வேலையைப் பொறுத்தே அமையும் என்று சொல்லாம்.
நாம் செய்யும்
வேலை இறைவனுக்குச் செய்யும் தொண்டு என்று நினைத்து கடமையாற்றும் மனப்பாங்கு
நிலவிய காலம் ஒன்று இருந்தது. இம்மனப்பாங்கு நிலவிய சமயத்தில் அறிவியல்
முன்னேற்றம் இவ்வளவு இல்லை. தொழிற்சாலைகளிலும், நிறுவனங்களிலும் பணிபுரிந்தவர்கள்
கூட்டு மனப்பான்மையோடு ஓர் குடும்பமாக ஒருமையுணர்வுடன் பணியாற்றினர். யாராவது ஒரு
தொழிலாளிக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடன் பணிபுரிபவர் உதவி செய்து அவரும்
வாழ்வில் உயர காரணமாக இருப்பார். தற்போதய நவீன காலத்தில் அந்த உதவும் மனப்பான்மை
குறைந்து வருகிறது என்று சொல்லலாம். ஒவ்வொருவருமே தங்கள் தனித்திறமையை
வெளிப்படுத்தி முன்னேற வேண்டியுள்ளது. போட்டியும் கடுமையாக உள்ளது. சற்றே
அசந்தாலும் அடுத்தவர் நம்மை அமுக்கிவிட்டு முன்னேறிச் சென்று விடுவார் என்ற
எண்ணம் எல்லோர் மனதிலும் ஏற்பட்டுவிட்டது. அதன் காரணமாகத் தான் இன்றைய இளம்
பணியாளர்கள் குறைந்தது ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உழைக்கிறார்கள்.
பல கம்யூட்டர்
நிறுவங்களில் அதிக சம்பளம் பெறும் இளைஞர்களுக்கு ஒரு வேலையை முடிக்கும் முன்பே
அடுத்த பணி ஆயத்தமாக உள்ளது. 20 நாட்களில் முடிக்க வேண்டிய பணியை 5 அல்லது 10
நாட்களுக்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் பலர் பணியாற்றிக் கொண்டு
இருக்கிறார்கள்.
இவர்களின்
வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையே சமநிலை இல்லை. வேலையே வாழ்க்கையை விட மேலான
இடத்தில் இருக்கிறது. இதனால் என்ன நடக்கிறது தெரியுமா? பல இளைஞர்களும் இளம்
பெண்களும் வேலையை விட்டு விட்டு சொல்லாமல் கொள்ளாமல் தன் ஊருக்கு
ஓடிவிடுகிறார்கள். ஊரில் போய் சம்பளம் இல்லாமல் இருக்க முடியாது என்னும் ஏழ்மை
நிலையில் உள்ளவர்கள் பலர் வேறு வழியின்றி மிகக் கடுமையான மன அழுத்தத்துடன்
பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். முப்பது வருடத்திற்கு முன்பு பணியில்
சேர்ந்து தற்போது ஓய்வு பெரும் பலரும் உடல் ரீதியாக ஓய்வு பெருபவர்க்கான எந்த
அறிகுறியும் இல்லாமல் இளமையோடு ஓய்வு பெற்றுச் செல்கிறார்கள். ஆனால் கடும் மன
உளைச்சலிலும் மன அழுத்தத்திலும் பணியாற்றிக் கொண்டிருக்கும் அவர்களின் மகனோ மகளோ
இதைப் போன்றே ஓய்வு பெறுவார்களா என்பது சந்தேகத்துக்கு உரிய விஷயமே!
கடும்
விதிமுறைகள், பணியாற்றும் இடம், உடன் பணிபுரிபவர்கள், பணியின் தன்மை, பெறும்
சம்பளம், பணியில் உள்ள ஈடுபாடு, அந்த வேலைக்கு சமுதாயத்தில் உள்ள மதிப்பும்
மரியாதையும், உயரதிகாரிகளின் நடவடிக்கைகள், பணிபுரியும் மொத்த நேரம் என வேலையின்
பல விஷயங்கள் நமக்கு மன அழுத்தத்தை உண்டாக்கிக் கொண்டு இருக்கின்றன.
என்னென்ன வேலைகள்
அதிக மன அழுத்தத்தை உண்டாக்குகின்றன? எவை குறைவான மன அழுத்தத்தை உண்டாக்குகின்றன
என ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில் கேஷியர், மின் துறை பணிகள், சமையல்
வேலை ஆகியவையே மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்குகின்றன என அறியப்பட்டது. அதைப்போல்
கட்டிடம் கட்டும் வேலை, காட்டிலாகா பணிகள், பல் மருத்துவம் போன்ற
சிகிச்சையளிக்கும் பணிகள் ஆகியவை குறைவான மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன என்று
தெரியவந்துள்ளது.
வேலையின் காரணமாக
உலகில் உள்ள எல்லா பணியாளர்களும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். எனவே
பணியினால் மன அழுத்தம் ஏற்பட்டு அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என
அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
பொதுவாக மன
அழுத்தத்தால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், உடல் பருமன் சர்க்கரை
நோய், அல்சர் போன்ற நோய்கள் பணியில் ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாகவும்
ஏற்படுகின்றன.
மாரடைப்பு எப்போது
ஏற்படுகிறது தெரியுமா? பணிபுரியும் பலருக்கும் திங்கட்கிழமை அதிகாலையில் தான்
மாரடைப்பு பெரும்பான்மையாக ஏற்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ஓய்வுக்குப் பிறகு நாளை
பணிக்கு போக வேண்டுமே என்ற எண்ணத்துடன் உறங்கப்போகும் செயல் அதிகாரிகள் பலரும்
மிகுந்த மன அழுத்தத்தினால் திங்கட்கிழமை அதிகாலையில் மாரடைப்புக்கு
உள்ளாகிறார்கள். இதிலிருந்து வேலை எத்தகைய மன அழுத்தத்தை ஏறடுத்துகிறது, அதனால்
ஏற்படும் உடல் நோய்களின் தீவிரம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
தன்னம்பிக்கைக்
குறைவு, அதிக மனப் பதட்டம், குறைவான பணி திருப்தி போன்றவை பணியில் மன அழுத்தம்
ஏற்பட்டால் உண்டாகும் மன பாதிப்புகள். இதன் காரணமாக தொழிலாளர்கள் ஏனோ தானோ என்று
பணியாற்றுவர்கள். அடிக்கடி விடுமுறை எடுத்துக் கொள்வார்கள். பல சமயங்களில் மன
அழுத்தத்திற்கு உள்ளான தொழிலாளர்கள் மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி
விடுகிறார்கள்.
உங்கள் பணி
உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். யாருக்கு
எப்படியோ உங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையும் திங்கட்கிழமை அதிகாலையும் ஒரே
மாதிரியாகத்தான் இருக்க வேண்டும்.
******
பணிக்கு அடிமையான
மனநிலை
ஒருமுறை ஒருவர்
குடித்துப் பார்க்கிறார். போதை மிகவும் இன்பத்தைக் கொடுக்கிறது. அதை அனுபவிக்கும்
அவர் மனம் தொடர்ந்து குடிப்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும். நாளடைவில்
எப்போதும் போதையிலெயே இருக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்.
போதைக்கு அடிமையாகி விட்டால் இனி மதுவின்றி ஒரு அனுவும் அசையாது என்ற மனநிலை
அவரிடம் ஏற்பட்டுவிடும்.
போதைக்கு பலர்
அடிமையாகி இருப்பது போல சிலர் தாங்கள் செய்யும் வேலைக்கு அடிமையாகி எப்போதும்
வேலை, வேலை என்று மன உளைச்சலுடன் இருக்கிறார்கள்.
-
இரண்டு மூன்று
நாட்கள் விடுமுறை விட்டால் இவ்விடுமுறையை எப்படி கழிக்கப் போகிறோமோ என்ற எண்ணம்
ஏற்படுதல்,
-
வாரக் கடைசி
விடுமுறைகளிலும் கூட வேலை சம்பந்தமாக ஏதாவது செய்துகொண்டே இருப்பது,
-
வெவ்வேறு
இடங்களுக்கு மாற்றம் செய்தாலும் மனமகிழ்ச்சியுடன் பணியாற்றுவது,
-
வேலை நேரம்
அடிக்கடி மாறினாலும், பணி நேரத்தை அதிகப்படுத்தினாலும் குறையொன்றும் சொல்லாமல்
ஏற்றுக் கொள்வது,
-
அன்றாடம்
என்னென்ன வேலைகள் இருக்கின்றன என பட்டியலிட்டு எல்லா வேலைகளையும்
முடித்துவிடுவது,
-
தனியாக அமர்ந்து
சாப்பிடும்போது எதையாவது படித்துக் கொண்டோ அல்லது டி.வி பார்த்துக்கொண்டோ
சாப்பிடுவது,
-
எவ்வளவு நேரம்
கழித்துப் படுத்தாலும் அடுத்த நாள் காலையில் எபோதும் போல் எழுந்து வேலைக்குச்
செல்வது,
-
என்னால் எந்த
வேலையும் செய்யாமல் இருக்க முடியாது, ஏதாவது வேலை இருந்து கொண்டே இருக்க
வேண்டும் என்று நினைப்பது,
இவையாவும் ஒருவர்
வேலைக்கு அடிமையாகி விட்டார் என்பதை எடுத்துச் சொல்லும் காரணிகள் ஆகும்.
உங்கள் மனதில்
உள்ள வேறு பல விஷயங்கள் ஏற்படுத்தும் மன அழுத்தத்தைப் போக்கவே நீங்கள்
உங்களையுமறியாமல் வேலை, வேலை என்று வேலைக்கு அடிமையாகி இருக்கிறீர்கள். உதாரணமாக
குடும்பப் பிரச்சனை அதிகம் உள்ள ஒருவர் விட்டுக்கே செல்லாமல் எப்போதும்
பணியிடத்திலேயே பணி புரிந்து கொண்டு தன் நேரத்தை கழித்துக் கொண்டு இருக்கலாம்.
தன் சொந்த பிரச்சனையிலிருந்து தப்பிக்க பணியில் கவனம் செலுத்தப் போய் பின்னர்
பணியினால் ஏற்படும் மன அழுத்ததிற்க்கு உட்பட நேரிடும்.
நீங்கள் இதைப்
போன்று வேலைக்கு அடிமையாகி எப்போதும் பணிபுரிந்து கொண்டே இருப்பவராக இருந்தால்
உங்கள் வாழ்க்கை முறையை அவசியம் மாற்றி உங்கள் மனம் வேலைக்கு அடிமையாகி
இருப்பதிலிருந்து விடுபட வேண்டும். அதற்கு பின்வரும் வழிமுறைகள் உதவும்:
-
குறிப்பிட்ட மணி
நேர வேலைக்குப் பிறகு உங்கள் பணியை நிறுத்திக்கொள்வது என திட்டமிட்டுக்
கொள்ளுங்கள். அதற்குப் பிறகு நடைப்பயிற்சி செய்வது, புத்தகம் படிப்பது என
ஏதாவது ஒரு புதிய விஷயத்தில் ஈடுபடுவது என திட்டம் வைத்துக் கொள்ளுங்கள் இதன்
மூலம் தொடர்ந்து வேலையிலேயே மூழ்கியிருப்பதை தவிர்க்க முடியும்.
-
நீங்கள்
பணிபுரியும் இடத்தில் நல்ல நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் அவ்வப்போது
உங்கள் நண்பர்களோடு உரையாடுவது என உங்களுக்கு நீங்களே நிர்ப்பந்தம்
ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
-
உங்கள்
விழிப்புணர்வை அவ்வப்போது விரிவாகிக் கொள்ளுங்கள். உதாரணமாக வேலையில்
மூழ்கியிருக்கும்போது அரைமணிக்கொரு முறை உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று
ஓரிரண்டு நிமிடங்கள் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு பின் வேலையைத்
தொடங்குங்கள்.
-
உங்கள் பணியில்
எல்லாவற்றையும் நீங்களே செய்ய வேண்டும் என்ற நினைப்பை விட்டு விட்டு கூடுமானவரை
பணிகளை பிறருக்கு பிரித்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். நாம் செய்தால் தான் மன
நிறைவாக இருக்கும் என்ற எண்ணைத்தை விட்டுவிடுங்கள்.
ஒருவர் வேலை
என்னும் போதைக்கு அடிமையாகி எப்போதும் வேலை, வேலை என அலைந்து கொண்டிருப்பது
அவருக்கு இன்பத்தைக் கொடுக்கும். ஆனால் அவர் குடும்பத்திற்கென நேரம் ஒதுக்காததால்
ஏராளமான வேலைகள் தேங்கி குடும்ப நலம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விடும். எனவே
குடும்பத்திற்கென ஓரிருநாள்கள் ஒதுக்க வேண்டும். அந்நாளில் அலுவலகப் பணிகளைத்
தொடக் கூடாது. இவ்வாறு செய்வது உங்கள் குடும்ப நலனை அதிகரிக்குக். அதனால் மன
அழுத்தம் பெருமளவு குறைய வாய்ப்புண்டு.
வேலைக்கு நீங்கள்
அடிமையாகாதீர்கள்
வேலையை
உங்களுக்கு அடிமையாக்குங்கள்
*****
செயலினால்
விளையும் மன அழுத்தம்
ஒரு வங்கியில்
பணிபுரியும் மேலாளரைப் பார்த்திருக்கிறீர்களா? ஏ.சி அறை, மேஜையின் மீது
கம்யூட்டர், இரண்டு மூன்று தொலைபேசிகள், பெல் அடித்தால் உடனே வரும் உதவியாளர் என
சகல வசதிகளோடும் குறைந்த அளவு வேலைகளை கவனித்துக் கொண்டு இருப்பார். அதே
சமயத்தில் வங்கியில் பணிபுரியும் பிற அலுவலர்களைப் பார்த்திருக்கிறீர்களா?
எப்போதும் கையில் ஒரு பேனாவுடன் வாடிக்கையாளருடன் உறவாடிக் கொண்டு சற்றே
பதட்டத்துடன் காணப்படுவார்கள். இவர்கள் இரண்டு பேரில் யார் அதிக மன
அழுத்தத்திற்கு உட்பட்டு அதனால் பாதிக்கப்படுவர்? உங்கள் விடையை மனதில்
வைத்துக்கொண்டு மேற் கொண்டு படியுங்கள்!
மனோதத்துவ நிபுணர்
ஒருவர் ஓர் ஆய்வு செய்தார். A, B
என இரண்டு அறைகளை சோதனைக்கூடத்தில் அமைத்தார். இரண்டு அறைகளும் கண்ணாடி சுவரினால்
பிரிக்கப்பட்டிருந்தன. எனவே A
அறையிலிருந்து
B அறையில்
நடப்பவற்றை தெளிவாகக் பார்க்க முடியும். B
அறையின் தரைத்தளம்
கம்பிகளால் ஆக்கப்பட்டிருந்தது எனவே B
அறைக்கு மின்சாரம் பாய்ச்சலாம். A
அறையில் விளக்கு ஒன்றும், அழுத்தக் கூடிய வகையில் கம்பி ஒன்றும் இருக்கும்.
கம்பியை அழுத்தினால் B
அறையில்
பாய்ச்சப்படும் மின்சாரத்தை நிறுத்திவிடலாம்.
இப்போது A
அறையில் ஓர் குரங்கையும் B
அறையில் ஓர்
குரங்கையும் சோதனையாளர் விட்டார். A
அறையில் விளக்கை
எரிய விட்டு அதைத் தொடர்ந்து B
அறைக்கு
மின்சாரத்தை பாய்ச்சினார் சோதனையாளர். மின்சாரம் தாக்கிய B
அறையில் உள்ள
குரங்கு துடிதுடித்தது. இதை A
அறையில் உள்ள குரங்கு கண்ணாடி சுவர் வழியாக பார்த்துக் கொண்டிருந்தது. நேரம்
செல்லச்செல்ல விளக்கு எரியும் போதுதான் மின்சாரம் B
அறை குரங்கிற்கு
பாய்ச்சப்படுகிறது என்பதையும், விளக்கு எரிந்தவுடன் தன் அறையில் உள்ள கம்பியை
அழுத்தினால் B
அறைக்கு
பாய்ச்சப்படும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்பதையும் A
அறை குரங்கு
தானாகவே புரிந்து கொண்டது.
அதற்குப் பின்னர்
B குரங்கை
துன்பத்திலிருது காப்பாற்ற நினைத்த A
அறை குரங்கு
விளக்கு எரிந்தவுடன் கம்பியை அழுத்திவிடும். உடனே B
அறையில் மின்சாரம்
நின்று B
குரங்கு தப்பித்துக்கொள்ளும். நேரம் செல்லச்செல்ல A
அறை குரங்கு
கம்பியின் அருகில் தயாராக இருக்கும். விளக்கு எரிந்தவுடன் உடனே கம்பியை
அழுத்திவிடும். சில சமயம் ஆர்வம் அதிகமாக விளக்கு எரியாதபோது கூட கம்பியை
அழுத்திவிடும்.
குறிப்பிட்ட கால
சோதனைக்கு பிறகு இரண்டு குரங்குகளையும் சோதனை செய்தவர் பரிசோதித்துப் பார்த்தார்.
அப்போது அவருக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அது என்னவெனில் மின்
அதிர்ச்சி கொடுக்கப்பட்ட B
அறை குரங்கு நல்ல
உடல் நலத்துடன் இருந்தது. ஆனால் விளக்கு எரிந்தவுடன் கம்பியை அழுத்தி மின்சாரத்தை
நிறுத்தி B
அறை குரங்கை காப்பாற்றிய A
அறைக் குரங்குக்கு
அல்சர் நோய் உருவாகி இருந்தது.
இந்த அல்சர்
முற்றிலும் மன அழுத்தத்தின் விளைவாகவே ஏற்பட்டதாகும்.
வங்கி மேலாளாளரைப்
போல் ஒரு நிறுவனத்தை கட்டுப்படுத்தும் பணியில் உள்ளவர்கள், பலரை வைத்து வேலை
வாங்கும் பதவியில் இருப்பவர்கள், திட்டமிட்டு செயல்படுத்தும் பொறுப்பில்
உள்ளவர்கள் என உயர்பதவியில் இருக்கும் பலரும் A
அறைக் குரங்ககைப்
போல் கடும் மன அழுத்தத்திற்கு உட்படுகிறார்கள் இவ்வகை மன அழுத்தத்தை “செயல்விளை
மன அழுத்தம்”
என மனோதத்துவ
நிபுணர்கள் அழைக்கின்றனர்.
நீங்கள் ஒரு செயலை
எங்கனம் அணுகுகிறீர்கள் என்பதே மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. செயல்
எப்படிப்பட்டது என்பது முக்கியமல்ல. மிக கடினமான செயளைக் கூட சரியான அணுகுறையோடு
செய்யும்போது துளியளவு கூட மன அழுத்தமின்றி செய்து முடித்து விடலாம். அதைப்போலவே
மிக மிக எளிமையான செயல்கூட தவறான மனநிலையையும், அணுகுமுறையையும் கொண்டு அணுகும்
போது பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடும்.
செயல்விளை மன
அழுத்தம் உங்களுக்கு ஏற்படாமல் இருக்க பின்வரும் வழிகளை கையாளலாம்.
-
முடிவுகளை பற்றி
கவலைப்படாமல் செயலை செய்தல்
-
செயல்களுக்கிடையே அவ்வப்போது சிறு ஓய்வு எடுத்துக்கொள்ளல்
-
அதே துறையில்
உள்ள நண்பர்களுடன் அவ்வப்போது நம் செயல்பாடுகளை தெரிவித்து நாம் சரியான
திசையில் தான் சென்று கொண்டிருக்கிறோமா என்று சரிபார்த்துக் கொள்ளல்.
-
செய்யும்
முறைகளை தெரிந்து கொள்ள சற்றே நேரம் ஒதுக்கி, விதிமுறைகளை அறிந்து கொண்டு
பின்னர் வேலையைத் தொடங்குவது.
மேற்கண்ட வழிகளை
பின்பற்றி செயல்விளை மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளலாம்.
உணர்ச்சிகளால்
உண்டாகும் மன அழுத்தமும் உண்ர்ச்சியறிவும்
கோபமடைவது
அனைவருக்கும் எளிது. ஆனால் அக்கோபத்தை உணர்வது எல்லோருக்கும் இயலாத காரியம்.
-
எனக்கு எபோதும்
கோபம் வருகிறது?
-
ஏன் கோபம்
வருகிறது?
-
கோபம் வந்தால்
எவ்வளவு நேரம் நீடிக்கிறது?
-
எப்போது என்
கோபம் என்னை விட்டு நீங்குகிறது?
-
கோபம் வருவதற்கு
முன் நான் என்ன செயலைச் செய்தேன்?
-
கோபம் நான் எந்த
செயலை செய்தவுடன் முடிந்து போனது?
என்பது
போன்ற கேள்விகளுக்கு யார் ஒருவரால் விடையளிக்க முடிகிறதோ அவரே சிறந்த கோபக்காரர்
ஆவார். அதற்கு மாறாக கோபம் வந்தவுடன் தாறுமாறாக தன் கோபத்தை வெளிப்படுத்தி
வெறிபித்தவர் போல நடந்து கொள்ளும் ஒருவரை கோபக்காரர் என்று கூற இயலாது. அவர்
அவ்வப்போது தனக்கு ஏற்படும் உணர்ச்சிகளின் அடிப்படையில் தன் வாழ்க்கையை அமைத்துக்
கொண்டுள்ளவர் எனலாம். இவ்வாறு உணர்ச்சிகளின் அடிப்படையில் தன் வாழ்க்கையை
வாழ்பவரால் தன் வாழ்க்கையிலும் வெற்றி பெற இயலாது, பிறருக்கும் நன்மை செய்ய
முடியாது. மேலும் உணர்ச்சிகளின் அடிப்படையில் வாழ்பவர்களுக்கு மன அழுத்தம்
மிகுதியாக ஏற்படும்.
உணர்ச்சிகள்
பற்றிய விழிப்புணர்வு நம் மன அழுத்தத்தைக் குறைக்க தேவையான காரணிகளில் தலையாயது
ஆகும்.
நான் இப்போது என்ன
மனநிலையில் இருக்கிறேன்? எனக்கு என்ன விதமான உணர்ச்சி இப்போது ஏற்பட்டுள்ளது
என்று அறிந்துகொள்ளும் திறன் நம் உணர்ச்சிகளை நம் கட்டுப்பாடுக்குள் வைத்திருக்க
நமக்கு உதவும்.
சில நேரங்களில்
சில விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது பொருத்தமான இருக்கும். ஆனால் எல்லா
சமயங்களிலும் நமக்கு எற்படும் எல்லா உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவது பெரும்
பகையை நமக்கு உண்டாக்கும்.
உங்கள் நண்பரிடமோ
அல்லது உறவினரிடமோ உங்களுக்கு சிறு சங்கடம் அல்லது கோபம் ஏற்படுகிறது. அதை
நீங்கள் உடனே வெளிப்படுத்தினால் உங்கள் நட்போ, உறவோ முறிந்து விடும். ஏற்பட்ட
சங்கடத்தை சில நாட்கள் கழித்து சரியான சமயத்தில் சரியான விதத்தில்
வெளிப்படுத்தினால் உங்கள் இருவரிடையே உள்ள உறவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல்
உங்கள் நண்பரோ அல்லது உறவினரோ உண்மை நிலையை புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கும்.
சில சமயங்களில் உங்களுக்கு ஏற்பட்ட சங்கடத்தை வெளிப்படுத்தாமல் அமுக்கிவிட
வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது உங்களுக்கு ஏற்பட்ட சஙக்டத்தை உங்கள்
மனதிற்குள்ளேயே அமுக்கி விடுவது தான் புத்திசாலித்தனமாகும்.
இவ்வாறு
வெளிப்படுத்த வேண்டிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தியும், அமுக்க வேண்டிய உணர்ச்சிகளை
அமுக்கியும் உணர்ச்சிகளைக் கையாளும் திறமையையே உணர்ச்சியறிவு என்கிறோம்.
உணர்ச்சியறிவு
உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும். கோபம், பயம், மகிழ்ச்சி, வெறுப்பு, விருப்பு,
அலுப்பு போன்ற உணர்ச்சிகளினாலேயே நாம் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறோம்.
இவ்வுணர்ச்சிகளை உணர்ச்சியறிவு மூலம் தேர்ந்தெடுத்து வெளிப்படுத்துவதனால் மன
அழுத்தமின்றி வாழ வழி ஏற்படும்.
நம் உணர்ச்சிகளை
நாம் அறிந்து அவற்றைக் கையாள்வது ஒரு நாணயத்தின் ஒரு பகுதி. நாணயத்தின் இரண்டாவது
பகுதி அடுத்தவர் உணர்ச்சிகளை அறிந்து அவர்களைக் கையாள்வது ஆகும். முகபாவனை
மற்றும் உடற்குறிப்புகள் மூலம் பிறர் நமக்கு அவர்களின் உணர்ச்சிகளை
வெளிப்படுத்துவார்கள். அப்போது மிக நுட்பமாக கூர்ந்து கவனித்து அவர்களின்
உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டால் அதற்கேற்ப நாம் எதிர்வினை புரிய ஏதுவாக அமையும்.
அடைத்து
வைக்கப்பட்ட வெள்ளம் அணை திறந்ததும் கட்டுக்கடங்காமல் காட்டாறு போல் ஓடுவதைப்
போல் நம் உணர்ச்சிகளை எப்போது பார்த்தாலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்காமல்,
ஜீவனுள்ள ஓர் நதி என்றும் ஒரே மாதிரியாய், அமைதியாய் ஓடிக் கொண்டிருப்பதைப் போல்
ஒழுங்கமைத்து நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதே வெற்றிக்கு அடிப்படையாகும்.
எனவே உணர்ச்சிகளை
உடனே உதறித் தள்ளி விடாமல் ஆராய்வது, ஆராய்ந்து அவசியப்பட்டால்
வெளிப்படுத்தியும், அவசியமில்லையேல் அடக்கியும் தேர்ந்தெடுத்து
வெளிப்படுத்துங்கள். மனamuttu@rogers.com
அழுத்தத்தை மறந்து வாழுங்கள்.
saireader@gmail.com
கடந்தவை
மன அழுத்த மேலாண்மை – 1
- டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை
உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக் கல்லூரி,கோவை)
- ..உள்ளே
மன அழுத்த மேலாண்மை – 2 : மன
அழுத்தத்தினால் ஏற்படும் உடலியல் .... டாக்டர். B. செல்வராஜ்
..உள்ளே
ம்ன அழுத்த மேலாண்மை – 3 :
உடல்-மன
தொடர்பும், நோய்
எதிர்ப்பு சக்தியும்
....உள்ளே
மன அழுத்த மேலாண்மை – 4 : குடும்பம் மன
அழுத்தத்தை உண்டாக்கும் ஓர் காரணி....உள்ளே
|