மன அழுத்த மேலாண்மை – 4 : குடும்பம் மன
அழுத்தத்தை உண்டாக்கும் ஓர் காரணி
- டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு
கலைக்கல்லூரி,கோவை) -
உங்கள்
குடும்பம் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். நீங்கள் குடும்ப பிரச்சனைகளில்
மன அழுத்தம் கொண்டிருக்கிறீர்களா இல்லையா என்பதை கண்டறிய பின்வருவனவற்றில் ஏதாவது
ஒன்று உங்களிடம் காணப்படுகிறதா என்று ஆராயுங்கள்.
• வீட்டில் இருப்பதை விட அதிக நேரம் பணியில் செலவிடுதல்
• கணவனிடமோ அல்லது மனைவியிடமோ அதிகமாக வாதம் புரிதல்
• பாலியல் விஷயங்களில் இருந்து பின்வாங்கிச் செல்லுதல்
• மது, போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல்
• மனக் கவலை, மனச்சோர்வு
• மிதமிஞ்சிய கோபம்
• தகாத உறவில் ஈடுபடுதல்
இவைகளில் ஏதாவது ஒன்று உங்களிடம் காணப்பட்டால் குடும்பம் மன அழுத்தம் தரும்
விஷயமாக மாறிவிட்டது என்பதை அறிதல் வேண்டும்.
இத்தகைய பிரச்சனைகள் உங்களை எங்கே அழைத்துச் செல்லும் தெரியுமா? விவாகரத்து,
மனைவி அல்லது கணவனை துன்புறுத்துதல், குழந்தைகளை துன்புறுத்துதல் போன்ற தீய
விளைவுகளை நோக்கி இந்தப் பிரச்சனைகள் உங்களை அழைத்துச் செல்லும்.
உங்களுக்கு உள்ள பணப்பிரச்சனை பல சமயங்களில் உங்கள் குடும்ப பிரச்சனையாக மாறி
உங்களை வாட்டி வதைக்க வாய்ப்புள்ளது. அப்படியானால் பணம் உள்ளவர்களுக்கு
பணப்பிரச்சனை இருக்காது, அவர்களுக்கு பணத்தால் எந்த மனப்பிரச்சனையும் இருக்காது
என்று அர்த்தமல்ல. பணக்காரர்களுக்கும் நிதிநிலையில் பல மாற்றங்கள் ஏற்படும். எனவே
ஒருவரின் நிதிநிலையில் ஏற்படும் பெரிய அல்லது சிறிய மாற்றங்கள் குடும்பத்தில் மன
அழுத்தத்தை ஏற்படுத்தும்.
ஒரிடத்திலிருந்து உங்கள் குடும்பத்தை இடம் பெயரச் செய்வது குடும்பத்தில் உள்ள
அனைவருக்குமே மிகப்பெரிய அளவில் மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. புதிய இடம்,
புதிதாக தேட வேண்டிய கடைகள், பள்ளிகள், கல்லூரிகள், புதிதாக நண்பர்களை தேடிப்
பிடிக்க வேண்டியது. இவையாவும் உங்களுக்கு மன அழுத்தததை உண்டாக்குகிறது.
குழந்தைகள் எந்த அளவுக்கு உங்களுக்கு மன மகிழ்ச்சியை அளிக்கிறார்களோ அதைப் போன்று
நான்கு மடங்கு மன அழுத்தத்தை உங்களுக்கு ஏற்படுத்துவார்கள். குழந்தைகள் மன
ரீதியாக மிக வேகமாக மாற்றடைந்து கொண்டே வருவார்கள். உடல் ரீதியாக மிக வேகமாக
வளர்ச்சியடைந்து கொண்டே வருவார்கள். குழந்தைகள் ஆரம்ப கால கட்டத்தில்
பெற்றோர்களிடம் மிகவும் அன்புள்ளவர்களாக இருப்பார்கள். வாலிப வயதில் தந்தையுடன்
பேசுவதை நிறுத்திக் கொள்வார்கள். பெற்றோருடனான பாசத்தை குறைத்துக் கொள்வார்கள்.
பின்னர் 20 வயதுக்கு மேல் மீண்டும் பழைய அன்பை பெற்றோருடன் புதுப்பித்துக்
கொள்வார்கள். இவையாவும் பெற்றோர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை உண்டாக்கும்.
உங்கள் குடும்பத்தினால் உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தினை குறைத்துக் கொள்ள
பின்வரும் வழிகளை நீஙகள் கடைபிடிக்கலாம்.
உங்கள் கணவன் அல்லது மனைவியுடன் உள்ள பிரச்சனை பற்றி வெளிப்படையாக விவாதிக்க
வேண்டும். 8 மணி நேரம் வேலைக்குச் செல்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு
முக்கியமானது உங்கள் கணவன் அல்லது மனைவியுடன் அரை மணி நேரம் குடும்ப விஷயங்களை
ஆலோசிப்பது.
பணப்பிரச்சனையிலிருந்து தப்பித்து அதனால் ஏற்படும் மனப்பிரச்சனையிலிருந்து
தப்பித்துக் கொள்ள சரியான பண நிர்வாக முறையினைத் தெரிந்து கடைபிடியுங்கள்.
குழந்தைகளின் இயல்பை நன்கு அறிந்து அவர்களை எங்ஙனம் வளர்ப்பது என்பதை அறிய உங்கள்
சுற்று வட்டாரத்தில் இருக்கும் பிற பெற்றோர்களை கூர்ந்து சில மாதங்கள் கவனித்து
வரவேண்டும். பல பெற்றோர்களிடம் குழந்தை வளர்ப்பில் உள்ள குறைகளையும், சில
பெற்றோர்களிடம் குழந்தை வளர்ப்பு நுணுக்கங்களையும் கற்று கொள்ளலாம். அவைகள்
உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும்.
குடும்பத்தினால் பெரும் மனக்கஷ்டம் என்று நீங்கள் உணர்ந்தால், உங்கள்
குடும்பத்தினரை 10 நாட்கள் மொத்தமாக ஊருக்கு அனுப்பிவிட்டு தனித்திருந்து
பாருங்கள். அப்போது வெறுமையும் தனிமையும் உங்களை தவிக்க வைக்கும்.
குடும்பம் நமக்கு குதூகலத்தையும் கொடுக்கும். மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும்.
நாம் குடும்பத்தை எப்படி கையாள்கிறோம் என்பதைப் பொறுத்தே நமக்கு மன மகிழ்ச்சி
கிடைக்கும்.
* * *
குழந்தை வளர்ப்பின் முரண்பாடுகள்
எதார்த்தத்திற்கு புறம்பான எதிர்பார்ப்புகள் மற்றும் உயர்ந்த நிலைக்கு கொண்டுபோக
வேண்டும் என்பதற்காக நாம் கொடுக்கும் உபத்திரங்கள் ஆகியவை குழந்தைகளின்
எதிர்காலத்தையே பாதிக்கும் அளவுக்கு மன அழுத்தததை உண்டாக்கும் சக்தி படைத்தவை.
பெற்றோர் தாங்கள் சொல்லும்படி குழந்தைகள் கேட்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதை
குழந்தைகளால் நிறைவேற்றி வைக்க முடிவதில்லை. அதனால் பெற்றோருக்கும்
குழந்தைகளுக்கும் ஏற்படும் முரண்பாடு குழந்தைகளின் மன அழுத்தத்தில் முடிகிறது.
குழந்தைகள் யார் சொல்வதையும் கேட்டு தன்னை வளர்த்துக் கொள்வதில்லை. எதையும்
கற்றுக் கொள்வதில்லை. மாறாக பெற்றோர் எப்படி நடந்து கொள்கிறார்கள், சுற்றுப்
புறத்தில் உள்ள மற்றவர்கள் எங்ஙனம் நடந்து கொள்கிறார்கள் என்பதை கண்ணும்
கருத்துமாக பார்த்தே குழந்தைகள் தங்கள் நடத்தைகளை வளர்த்துக் கொள்கிறார்கள்.
பெற்றோர்களாகிய நாம் தவறாக நடந்து கொண்டு குழந்தைகளைச் சரியாக நடந்து கொள்ளச்
சொன்னால் குழந்தைகள் நம்மைப்போல் தவறாகவே நடந்து கொள்வார்கள்.
குழந்தை வளர்ப்பில் நாம் கொண்டிருக்கும் முரண்பாடும் குழந்தைகளிடையே மன
அழுத்தத்தைத் தோற்றுவிக்கும். குழந்தை தவறு செய்யும் நேரத்தில் தாய் அடித்து
கண்டிக்கிறார் என வைத்துக் கொள்வோம். அதே நேரம் அடிபட்டு அழுதுகொண்டிருக்கும்
குழந்தையை பார்க்கும் தந்தை அரவணைத்துக் கொள்கிறார். இப்போது நான் செய்த தவறுக்கு
அம்மா தண்டனை தருகிறார். அப்பா அரவணைக்கிறார். அப்படியானால் நான் செய்தது தவறா?
சரியா? இனிமேல் இது போல் நான் செய்யலாமா? செய்யக் கூடாதா? என்ற மனக்குழப்பம்
குழந்தையின் மனதில் ஏற்படும்.
எனக்கு மிட்டாய் வேண்டும் என்று கேட்டால் தந்தை வாங்கித் தருவதில்லை. ஆனால்
அடம்பிடித்தால் வாங்கிக் கொடுத்து விடுகிறார். அப்படியானால் சாதாரணமாக கேட்டால்
கேட்டது கிடைக்காது. அடம்பிடித்தால் மட்டுமே கேட்டது கிடைக்கும் என்ற எண்ணம்
குழந்தைகளிடம் ஏற்படும். மிட்டாய் வாங்கிக் கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்து
விட்டால், அவ்வாறே இருக்காமல் ஏன் அடம்பிடித்தால் மட்டும் நம் முடிவை மாற்றிக்
கொள்கிறோம்?
மேற்சொன்னவை யாவும் சில உதாரணங்களே. இவைகளைப் போன்று எண்ணற்ற காரியங்களைச்
செய்யும் பெற்றோர்களே முரண்பாடுகளின் மொத்த உருவங்களாகத் திகழ்கின்றனர்.
இம்முரண்பாடுகள் குழந்தைகளின் மனதில் மன அழுத்தத்தை உண்டாக்குகின்றன.
தேவையில்லாத, நேரம் காலம் தெரியாத அதிகாரங்கள், மிரட்டல்கள் மற்றும் திணிப்புகள்
குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும். குடும்பத்தில் நிலவும் பதட்டம்
குழந்தைகளிடமும் பதட்டத்தை உண்டாக்கும்.
இவைகளில் இருந்து மன அழுத்தம் இல்லாமல் குழந்தைகளைக் காக்க பின்வரும் வழிமுறைகளை
கடைபிடிக்க வேண்டும்.
பெற்றோர் தங்கள் நடத்தைகளை சரிபடுத்திக் கொள்வது மிகவும் அவசியம் நாம்
சொல்வதற்கும் நாம் நடந்து கொள்வதற்கும் வித்தியாசம் ஏதும் இல்லாமல் பார்த்துக்
கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு விளையாட்டு, படிப்பு போன்றவற்றில் ஏற்படும் சிறு சிறு தோல்விகளை
பெரிதுபடுத்தாமல் முயற்சி செய்ய மட்டுமே ஊக்கம் கொடுக்க வேண்டும். வெற்றியே
குறிக்கோள் என்பதை வலியுறுத்தக்கூடாது.
குழந்தைகளுக்கு ஈடுபாடு உள்ள விசயங்களில் மட்டுமே அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
கல்லூரி மாணவர்களின் மன அழுத்தம்
கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான பிரச்சனை என்னென்ன
என்று உங்களுக்கு தெரியுமா?
• பள்ளி சூழ்நிலை வேறு, கல்லூரி சூழ்நிலை வேறு. எனவே புதிய கல்லூரி சூழ்நிலைக்கு
ஏற்றவாறு தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
• தனித்து இயங்க கற்றுக் கொள்ளுதல்
• தனக்கென்று ஓர் தனித்தன்மையை உருவாக்கிக் கொள்ளுதல்.
• கல்லூரி படிப்புக்கு பின்னர் ஓர் வேலையைத் தேடிக் கொள்ள தேவையான தகுதிகளை
வளர்த்துக் கொள்ளுதல்.
மேலே நீங்கள் படித்தவைகள் தான் ஓர் கல்லூரி மாணவரின் முக்கிய பிரச்சனைகள் ஆகும்.
நன்றாகப் படிப்பது என்பது இப்பட்டியலில் இடம்பெறவில்லை என்பதை கருத்தில்
கொள்ளுங்கள்.
நன்றாக படிப்பது மாணவர்களுக்கு என்றுமே ஓர் பிரச்சனை இல்லை. மேற்சொன்ன திறமைகளை
ஒரு மாணவர் வளர்த்துக் கொள்ள முடியாமல் போகும்போது அவருக்கு மன அழுத்தம்
உண்டாகிறது. அம்மன அழுத்தமே ஒரு மாணவரை நன்றாக படிக்க இயலாமல் ஆக்கி விடுகிறது.
எனவே மேற்கண்ட பிரச்சனைகளில் இருந்து ஒரு மாணவர் விடுபட்டாலே அதிக மதிப்பெண்
எடுக்கும் வகையில் அவரால் நன்றாக படிக்க முடியும். மாணவர் ஒருவர் அவசியமான
திறமைகளை வளர்த்துக் கொள்வது எவ்வாறு என்பதைக் காண்போம்.
கல்லூரியின் புதிய சூழ்நிலைக்கு ஒத்துபோவது சந்திக்க வேண்டிய பல மாற்றங்களை
சார்ந்து உள்ளது. எனவே புதிய பல மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முயற்சி செய்யும் போது
மேலும் பல மாற்றங்களை நாமே ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. உதாரணமாக கல்லூரியில்
சேர்ந்த உடனேயே பகுதி நேர வேலை ஒன்றிலும் சேரக் கூடாது. அது சிக்கலை மேலும்
சிக்கலாக்கும் செய்கை. அவ்வாறு கல்லூரியில் சேர்ந்தவுடன் பணமும் சம்பாதிக்கும்
நோக்கத்தில் பகுதி நேர வேலையிலும் சார்ந்தவர்கள் படிப்பை முதல் ஆறு மாதத்திலேயே
நிறுத்தி விடுகிறார்கள். எனவே புதிய சூழ்நிலைகளை சமாளித்து அதற்கு ஏற்ப தன்னை
மாற்றிக் கொண்டு பின்னர் மேலும் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.
அதுவரை பொறுமை காக்க வேண்டும்.
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் முடிந்த அளவு நல்ல நண்பர்களை ஏற்படுத்திக்
கொள்வது அவர்களுக்கு தேவையான விவரங்களை பெற உதவும். எப்போதும் தன் பெற்றோர்
சொல்படியே கேட்டு நடப்பது கல்லூரி மாணவர்களுக்கு உகந்தது அல்ல. நல்ல பல
நண்பர்களோடு நட்பு கொண்டு அவர்களின் நடத்தையை கூர்ந்து நோக்கி தனித்தியங்கும்
திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.
வகுப்பு தோழர்களைப் பார்த்து பொறாமை அடையாமல் அவர்களின் திறமைகளை அங்கீகரித்து
தானும் அத்திறமைகளை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்வது, படிப்பை தவிர ஏராளமான பல
விஷயங்களை ஒரே நேரத்தில் கற்றுக் கொள்ள முயலாமல் ஒவ்வொன்றாக கற்றுக் கொள்ள
முயற்சி செய்வது, (உதாரணமாக கம்யூட்டர் கற்றுக் கொண்டபின் யோகா, யோகா கற்றுக்
கொண்ட பின் நீச்சல் என ஒன்றை முடித்த பின் மற்றொன்றை ஆரம்பிப்பது).
தாழ்வு மனப்பான்மை, வெட்கம் ஆகியவைகளை ஆராய்வது, அவற்றை போக்கிக் கொள்ள முயற்சி
செய்வது, கல்லூரியின் நல்ல அம்சங்களின் மீது அதிக நாட்டத்தை செலுத்துவது போன்ற
விஷயங்கள் மாணவர்கள் தங்கள் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ள உதவும்.* * *
saireader@gmail.com
கடந்தவை
மன அழுத்த மேலாண்மை – 1
- டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை
உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக் கல்லூரி,கோவை)
- ..உள்ளே
மன அழுத்த மேலாண்மை – 2 : மன
அழுத்தத்தினால் ஏற்படும் உடலியல் .... டாக்டர். B. செல்வராஜ்
..உள்ளே
|