டேவிட் ஐயா வாழ்வும் மரணமும் - வ.ந.கிரிதரன் -
இன்று (ஏப்ரில் 24) டேவிட் ஐயா (எஸ்.ஏ. டேவிட் ஐயா) அவர்களின் பிறந்ததினம். அவரது பிறந்த தினத்தையொட்டி 'டேவிட் ஐயா வாழ்வும் மரணமும் (1924 - 2015) ' என்னும் தலைப்பில் காணொளியொன்று உருவாகியுள்ளது. 2012இல் உருவான காணொளி. இரு பகுதிகளைக் கொண்டது. சமூக, அரசியற் செயற்பாட்டாளர் அசோக் (யோகன் கண்ணமுத்து) அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் உருவான காணொளியை இயக்கியவர் டி. அருள் எழிலன். காணொளிக்காக டேவிட் ஐயாவை நேர்காணல் செய்தவர் எழுத்தாளர் சயந்தன்.
இது பற்றி எழுத்தாளர் சயந்தன் தனது முகநூற் பதிவில் குறிப்பிட்டிருப்பது:
"பிரான்சில் வாழும் அசோக் யோகன் சொல்லி 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போது சென்னையில் வசித்த டேவிட் அய்யாவை முடிந்த அளவு காட்சிப்படுத்தினேன். அவரது நீண்ட வாழ்வை விடியோவாக பதிவு செய்தேன். பல்வேறு சூழல் காரணமாக அவரது பிறந்த நாளையொட்டி (ஏப்ரல் 24) இப்போது அதனை வெளியிடுகிறோம். சாலமோன் டேவிட் அருளானந்தம் என்னும் டேவிட் அய்யா ஒரு இயக்கமாக, சிந்தனையாக, தனிமனிதனாக வரலாறாகவும் கனவாகவும் வாழ்ந்தவர்.அவர் வாழ்வும் மரணமும் ஒரு அனுபவம் ஒரு செய்தி ஈழத் தமிழர் அரசியல் வரலாற்றிலும் போராட்ட வரலாற்றிலும் மின்னி மறையும் மேகம் போல சில செய்திகளையும் வாழ்வையும் விட்டு சென்றிருக்கிறார். 1924-ஆம் ஆண்டு பிறந்து 2015-ஆம் ஆண்டு மறைந்த டேவிட் அய்யாவின் வாழ்க்கை எங்கிருந்து துவங்கி எப்படி முடிந்தது என்பதை ஒரு தடமாக ஆவணப்படுத்துகிறது இந்த பதிவு."
கட்டடக்கலைஞராக, நகர அமைப்பு நிபுணராக இலங்கை மற்றும் பிற நாடுகள் பலவற்றில் பணியாற்றிய டேவிட் ஐயாவை அவரை இலங்கையில் நடைபெற்ற அகிம்சை ரீதியிலான தமிழர் விடுதலைப்போராட்டம் தன் பக்கம் ஈர்த்தது. அதே சமயம் எழுபதுகளில் அவர் காந்தியத் தத்துவத்திலும் ஈடுபாடு காட்டினார். அதன் விளைவாக உருவானதே காந்திய அமைப்பு. அவ்விதம் ஆரம்பிக்கப்பட்ட காந்திய அமைப்பு பின்னர் இலங்கைத் தமிழர் ஆயுதப்போராட்டத்திலுமோர் அங்கமாக மாறியது காலத்தின் கோலம்.