'விக்கிபீடியா: கட்டற்ற கலைக்களஞ்சியம்'
[இம்முறை பதிவுகள் வாசகர்களுக்காக 'விக்கிபீடியா: கட்டற்ற கலைக்களஞ்சியம்' இணையத் தளத்தினை அறிமுகம் செய்கின்றோம். இதன் இணையத்தள முகவரி: http://ta.wikipedia.org/wiki/ மேற்படி கலைக்களஞ்சியத்தினை உருவாக்குவதில் ஆர்வமுள்ள அனைவரும் பங்கு பற்றலாம். உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் அனைவரும் இணைவதன் மூலம் இதன் எல்லைகளை மேலும் விரிவாக்கலாம். விக்கிபீடியாவின் இணையத் தளத்திலிருந்து கீழ்வரும் அறிமுகம் பகுதியினைப் பிரசுரிக்கின்றோம்.- ஆசிரியர்-]
விக்கிபீடியா என்பது எவரும் தொகுக்கக்கூடிய, இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய உள்ளடக்கங்களைக் கொண்ட ஒரு பன்மொழிக் கலைக் களஞ்சியத் திட்டமாகும். 2001-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் வழி இதுவரை, பல மொழிகளிலுமாகச் சேர்த்து, 16,00,000-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. தமிழில் இம்முயற்சி 2003ல் தொடங்கியது. இங்கு நீங்களும் உங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் புதிதாக கட்டுரைகள் எழுதலாம்; ஏற்கனவே உள்ள பக்கங்களை திருத்தி எழுதலாம். விவரங்கள் அறிய புதுப் பயனர்களுக்கான விக்கிபீடியா அறிமுகப் பக்கத்தை பார்க்கவும். கட்டுரை எழுதி பயிற்சி செய்ய மணல்தொட்டிக்கு செல்லுங்கள். விக்கிபீடியா, அதன் வாசகர்களால் ஒருமித்து எழுதப்படுகின்ற ஓர் இலவச கலைக்களஞ்சியம் ஆகும். "நீங்கள்" உட்பட எவரும், ஒவ்வொரு விக்கிபீடியா கட்டுரைப் பக்கத்திலும் காணப்படும் "தொகு" இணைப்பைச் சொடுக்குவதன் மூலம், இப்பொழுதே எந்தக் கட்டுரையையும் தொகுக்க முடியும்.
விக்கிபீடியாவில் உலாவுதல்
விக்கிபீடியாவின் தமிழ்ப் பதிப்பு 2003ல் தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனினும், ஆங்கிலத்திலும் ஏனைய பல மொழிகளிலும், பல்வேறு துறைகளையும் சார்ந்த ஏராளமான தகவல்களை, விக்கிபீடியா எற்கெனவே கொண்டுள்ளது. நீங்கள் தெரிவு செய்த மொழியில் அதன் முதற் பக்கம் சென்று, விருப்பமான விடயமொன்றைத் தெரிந்து ஆராயுங்கள். ஒவ்வொரு பக்கத்தின் இடப்பகுதியிலும் தேடல் பெட்டியொன்றும் உள்ளது.
நீங்கள் ஏதாவதொன்றை வாசித்து, அது உங்களுக்குப் பிடித்திருந்தால், அந்தக் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் ஒரு குறிப்பை ஏன் விட்டுச் செல்லக் கூடாது? முதலில் ஒவ்வொரு பக்கத்தின் மேலும் காணப்படும் "உரையாடல்" இணைப்பைத் தெரிந்து பேச்சுப் பக்கம் செல்லுங்கள்; பின்னர் அப்பக்கத்தின் மேல் காணப்படும் , தொகு இணைப்பைத் தெரியுங்கள். உங்களிடமிருந்து கொஞ்சம் பாராட்டுகள் கிடைப்பதை நாங்கள் எப்போதும் விரும்புகிறோம்.
ஏதாவதொரு விடயம் இங்கே காணப்படாவிட்டால் அல்லது நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் ஒரு விடயத்தைக் கண்டுபிடிப்பதில் பிரச்சினையிருந்தால், உசாத்துணைப் பகுதியில் எங்களை கேளுங்கள்; அல்லது, கோரப்பட்ட கட்டுரைகள் பட்டியலில் தேவையான விடயத்தை சேர்த்து விடுங்கள்.
தொகுத்தல்
ஒவ்வொருவரும் விக்கிபீடியாவிலுள்ள பக்கங்களைத் தொகுக்கமுடியும் (இந்தப் பக்கத்தையும் கூட). ஏதாவதொரு பக்கத்துக்குத் திருத்தம் தேவை என நீங்கள் கருதினால், அப் பக்கத்தின் மேற்பகுதியில் காணப்படும் தொகு இணைப்பைத் சொடுக்குங்கள்.சிறப்புத் தகுதிகள் எதுவும் உங்களுக்குத் தேவையில்லை; புகுபதிகை செய்யவேண்டியது கூட இல்லை.
நீங்கள் உதவுவதற்கு சுலபமான வழி, மற்ற கலைக்களஞ்சியங்களைப் பயன்படுத்துவது போல் விக்கிபீடியாவைப் பயன்படுத்துவதுதான். ஆனால், ஏதாவது பிரச்சினையோ, எழுத்துப் பிழையோ அல்லது தெளிவற்ற வாக்கியங்களையோ கண்டால், அதனைத் திருத்துங்கள். ஒரு பக்கத்தை முன்னேற்றுவதற்கு, ஏதாவது வழியிருப்பதாக உங்களுக்குத் தெரிந்தால், பயமின்றித் திருத்துங்கள். பிழை விட்டுவிடக்கூடும் என்பதுபற்றி அதிகம் கவலைப்படாதீர்கள். ஏதாவது சிறு பிழையேற்பட்டால், நீங்களோ வேறு யாருமோ எளிதாக பின்னர் சரி செய்துவிட முடியும். உங்களுக்கு சிலவேளை கொஞ்சம் பயமாக இருக்கக் கூடும்! இந்த முறைமை இன்னும் ஏன் செயல்படக் கூடியதாக உள்ளது என்பது பற்றிய விளக்கத்துக்கு பொது ஆட்சேபங்களுக்கான பதில்கள் பகுதியைப் பார்க்கவும். விக்கிபீடியா, ஏற்கெனவே ஏராளமான கட்டுரைகளைக்( கடைசியாக எண்ணப்பட்ட பொழுது-2,518 கட்டுரைகள்) கொண்டிருந்தாலும்கூட, உங்களை போன்றவர்கள் எழுதும் புதிய கட்டுரைகளுடன், இது தொடர்ச்சியாக விரிவாக்கப்பட்டு வருகிறது. நீங்கள் புதிய கட்டுரையொன்றைத் தொடங்க முடியும், அல்லது ஏற்கெனவேயிருக்கும் கட்டுரையொன்றில் முற்றிலும் புதிய பகுதியொன்றை ஆரம்பிக்க முடியும். இருக்கும் கட்டுரைகளில் குழப்பமாகி விடக்கூடுமென்று பயந்தால், நீங்கள், உங்கள் மனதில் உள்ளவற்றைப் பயிற்சித் தொகுப்பு செய்து பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள, மணல் தொட்டிக்குச் செல்லுங்கள்.
நீங்கள் பார்க்க விரும்பக்கூடிய சில கொள்கைகளும், வழிகாட்டல்களும் எங்களிடம் உண்டு. குறிப்பாக, நடுநிலை நோக்குக் கொள்கை, கட்டுரைகள் பக்கச்சார்பின்றியிருக்க வேண்டியதையும், ஒரு விடயத்தில், பல்வேறுபட்ட நோக்குகளை நேர்மையுடனும், அனுதாபத்துடனும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டியதையும் கருதும். விக்கிபீடியாவுக்கான எல்லாப் பங்களிப்புகளும், இலவச ஆவணப்படுத்தல் அனுமதி (GFDL) முறையின் கீழ் வெளியிடப்படுகின்றன. விக்கிபீடியா எக்காலத்திலும் இலவசமாக விநியோகிக்கத்தக்கதாக இருப்பதை GFDL உறுதிசெய்கிறது. (மேலதிக தகவல்களுக்கு பதிப்புரிமைகள் பகுதியைப் பார்க்கவும்). புது பங்களிப்பாளர்களிக்கான சில எளிய வழி காட்டல்கள்
நன்றி: http://ta.wikipedia.org/wiki