http://www.thamilachi.blogspot.com!
இணைய/மின்னிதழ் அறிமுகம்: 'தமிழச்சியின்
வலைப்பூ'
- தமிழச்சி -
தோழர்களே
நான் தமிழச்சி பேசுகிறேன், எனது 'தைரியமும்.. அதைரியமும்..' என்ற
நூலின் மூலம் உங்களில் சிலர் என்னை அறிந்திருக்கலாம். சாதிய, ஆணாதிக்க கலாசாரக்
கறைகளுக்குள் மூழ்கிக் கிடக்கும் தமிழ்ச்சாதியின் அடிமடியில் கைவைத்து உலுக்கிய
புரட்சியாளர்களில் இருபதாம் நூற்றாண்டு கண்டெடுத்த இணையற்ற சிந்தனையாளர், போராளி
தந்தை பெரியார்.
பெரியாரைக் கடவுள் மறுப்பாளர், பார்ப்பன எதிர்ப்பாளர், என்ற எல்லைகளுக்குள் மட்டுமே
அடக்கிவிட முடியாது. பெண்விடுதலை, இலக்கியம், பண்பாடு போன்ற எண்ணற்ற தளங்களில் தன்
காலத்தையும் தாண்டிச் சிந்தித்தவர் பெரியார். இன்றைய நவீன தமிழ் பெண்ணியர்கள் பேசத்
தயங்கும் கருத்துக்களைக்கூட தமிழகத்தின் ஒவ்வொரு குக்கிராமங்களுக்கும் எடுத்துச்
சென்றவர் பெரியார். கற்பு, காதல், திருமணம், குடும்பம் போன்ற ஆணாதிக்கக்
கற்பிதங்களை போட்டுடைத்ததவர் அவர்.
தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், விவாகரத்துச் சட்டம் போன்றவற்றை
அமுல்படுத்துவதற்கான பெரியாரின் போராட்டங்களைச் சரித்திரம் குறித்து வைத்துள்ளது.
மறுமணம், விதவைத் திருமணம் ஆகியவற்றை வலியுறுத்திய முதல் தமிழ்ச் சிந்தனையாளர்
அவர்தான். கம்பராமாயணத்தையும் கந்தபுராணத்தையும் பயின்று வந்த தமிழ் சமூகத்தில்
அவற்றைத் தீயிட்டுக் கொழுத்தி 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை'யைத் தமிழில் முதன்
முதலாக வெளியிட்டவர் பெரியார்.
இந்த வலைப் பூவில்
அந்தப் பகுத்தறிவுப் பகலவனின் சிந்தனைகளை அடியொற்றிச் செல்வதும் அந்தச் சிந்தனை
வெளிச்சத்தில் என்னை மறுபடியும் மறுபடியும் புதுப்பித்துக்கொள்வதுமே எனது நோக்கம்.
மீள்பிரசுரம்: தமிழச்சி வலைப்பூவிலிருந்து.
பெண்கள் சுதந்திரம்!
(31-05-1930-இல் கள்ளிக் கோட்டையில் நடைப்பெற்ற S.N.D.P யோகம் என்று
சொல்லப்படும் தீயர் மகாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது. 08-06-1930-
இதழில் வெளியானது.)
பெண்கள்
சுதந்திரம் என்பது பற்றி திருமதி. அலர்மேல் மங்கைத் தாயாரம்மாள் அவர்கள் பேசியதை
நீங்கள் எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தீர்கள். பெண்கள்சுதந்திர விஷயத்தில் எனக்க
மிக்க ஆவல் உண்டு. என்னுடைய இயக்கத்தில் அதற்கு நான் முக்கியஸ்தானம்
கொடுத்திருக்கிறேன். என்னுடைய அபிப்பிராயத்தில் ஒரு இந்து என்பவன் தன்னை ஒரு
இந்துமதத்தான் என்று சொல்லிக் கொண்டு பெண்கட்குச் சுதந்திரம் வேண்டுமென்று
சொல்லுவதை ஒருக்காலும் ஒப்புக்கொள்ள முடியாது.
ஏனென்றால் இந்து மதத்தில் பெண்களுக்குச் சுதந்திரம் இல்லையென்பதை நீங்கள் நன்றாய்
உணர வேண்டும். பெண்களுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுக்கப் பிரியப்படுபவர்கள்
அதற்குத் தடையாய் உள்ளதை எதிர்க்கவும் அழிக்கவும் துணிந்தவர்களாயிருந்தால் தான்
அவர்கள் உண்மையான சுதந்திரவாதிகள் ஆவார்களே தவிர மற்றபடி தடைகளை ஆதரித்துக் கொண்டு
சுதந்திரம் பேசுகிறவர்கள் தந்திரவாதிகளே ஆவார்கள் அல்லது மூடர்களே ஆவார்கள்.
இந்துமத தர்மத்தில் பெண்கள் ஈனப் பிறவி கடவுளாலேயே விபச்சாரிகளாகப்
பிறப்பு-விக்கப்பட்டார்கள். சுதந்திரத்துக்கு அருகதையற்றவர்கள். ஒவ்வொரு மனிதனும்
தன்னுடைய தாய் விபச்சாரம் செய்திருப்பாள் என்கின்ற நம்பிக்கையோடு பிராயச்சித்தம்
செய்து கொள்ளக்கூடியவன்.
பெண்கள் கலியாணம் செய்து கொள்ளும் வரையில் தகப்பனுடைய பந்தோபஸ்திலிருக்க வேண்டும்.
கலியாணஞ் செய்து கொண்ட பிறகு புருஷனுடைய பந்தோபஸ்திலிருக்க வேண்டும். இல்லாவிட்டால்
ஒழுக்கவீனர்களாய்ப் போய்விடுவார்கள். பெண்களுக்குச்சொத்து இருக்கக் கூடாது.
அவர்களிடத்தில் புருஷர்கள் உண்மை பேசக்கூடாது. ரகசியம் சொல்லக்கூடாது. இன்னும்
இவைப் போன்ற எத்தனையோ நிபந்தனைகள் தரும சாஸ்திரத்திலும் கலியுகத்துக்கு ஆதாரமான
பராச ஸ்மிருதியிலும் மற்றும் அவைகளை ஆதரிக்கும் இதிகாசப் புராணங்களலும்
சொல்லப்பட்டிருக்கிறது.
இவைகளை (இந்தப் புஸ்தகங்களையும் சாஸ்திரங்களையும்) ஒப்புக் கொள்கின்றவனும் உண்மையாண
சநாதன ஹிந்துவென்று சொல்லிக் கொள்ளுகிற எவனுக்கும் பெண்கள் சுதந்திரத்தைப் பற்றி
பேச உரிமையில்லை என்பதே தான் எனது அபிப்பிராயம்.இந்த விஷயத்தில் திராவிட தர்மமோ சமண
தருமமோ எல்லாம் ஒரேவித யோக்யதை கொண்டதே என்பது எனது அபிப்பிராயம். தெய்வத்தன்மை
பொருந்தியவரென்று சொல்லும் திருவள்ளுவர் என்பவர் கூடத் தம் பெண்சாதியை விபச்சாரியா?
பதிவிரதையா? என்று பரிட்சித்துப் பார்க்க ஆசைப்பட்டு மணலைச் சோறாகச் சமைக்கச்
சொல்லி அந்த அம்மாளும் அது போலவே சமைத்தப் போட்ட பிறகே தான் கலியாணம் செய்து
கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தப்படி பரீச்சை செய்து பார்த்தால்இன்றைய தினம்
உலகத்தில் உள்ள பெண்கள் எல்லாம் இங்கு இருக்கிறபெண்களெல்லாம் விபச்சாரிகள் என்று
தான் நாம் தீர்மானிக்க வேண்டும்.
ஏனெனில் ஒரு சகோதரியாலும் மணலை அரிசிச்சாதமாக சமைக்கவோ- மழைப் பெய்யச்சொல்லவோ-
பச்சை வாழைத்தண்டுவைக் கொண்டு சமையல் செய்யவோ முடியாதென்று சொல்ல
வேண்டியிருக்கிறது. வேறு எந்த காரியத்துக்காகவும் இந்து மதத்தை ஒழிக்காமல்
தாட்சண்யம் பார்ப்பதாயிருந்தாலும் பெண்களுடைய சுதந்திரத்தை உத்தேசித்தாவது
இந்துமதமென்பது அழிய வேண்டியது மிக்க அவசியமாகும்.
இந்து மதப்புராண இதிகாசங்களில் புருஷனை தாசி வீட்டுக்குக் கூட்டிக்
கொண்டுபோனதாகவும் புருஷன் குஷ்டரோகியாய் விட்டதால் அவனைக் கூடையில் சுமந்துகொண்டு
போனதாக நளாயினி முதலிய கதைகள் சொல்லப்படுகின்றது. எவ்வளவு அக்கிரமானதும்
கொடுமையுமான கொள்கை இது என்பதை யோசித்துப் பாருங்கள். என்னுடைய மகள் நளாயினியைப்
போலிருப்பாளானால் கட்டாயம் அவளை நான் விஷம் வைத்துக் கொன்றுவிடுவேனே ஒழிய
குஷ்டரோகியைச் சுமந்து கொண்டு தாசி வீட்டிற்குக் கொண்டு போய் விடும்படி பார்த்துக்
கொண்டிருக்கமாட்டேன். பெண்கள் விபச்சாரிகள் என்பதை ஆதரிக்க எழுதிவைத்த ஆதாரங்களில்
ஒன்றுதான் பாரதம் என்பது எனது அபிப்பிராயம்.
ஏனெனில் பாரதத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான துரவுபதை என்பவள்
தனக்கு5-புருஷன்மார்கள் உண்டு என்றும் அவ்வளவும் போதாமல் 6-வது புருஷன் ஒருவன் மீது
தனக்கு ஆசையிருந்ததென்றும் ஆதலால் தான் விபசாரியென்றும் உலகத்தில் பெண் தன்
புருஷனைத் தவிர வேறு ஆண்களே இல்லாமலிருந்தால் தான் பெண்கள் பதிவிரதையாயிருக்க
முடியுமென்றும் ஒரு உயர்குலப் பெண்ணேத் தன்வாயினால் சொன்னதாக எழுதி
வைக்கப்பட்டிருக்கிறது.
அரிச்சந்திரபுராணத்தில் தன் பெண்ஜாதியை பல சொத்துக்களில் ஒன்றாகக் கருதி
வேறுஎவனுக்கோ விலைக்கு விற்றதாகவும் அவளும் தன்னை ஒரு உண்மையான அடிமையென்பதை
ஒப்புக் கொண்டு வாங்கப்பட்டவனிடம் தொண்டு செய்ததாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.வேறு
புண்ணிய புராணங்களில் அடியார்கட்கு பெண்சாதிமார்களைக் கூட்டிக்கொடுத்ததாகவும்
அந்தப் பெண்களும் அப்புருஷர்களின் வாக்கைத் தட்டக் கூடாது என்று கருதி
அடியார்களிடம் போய்ப் படுத்துக் கொண்டதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.
இராமாயணம் எனகிற இதிகாசத்தில ஒருவன் ஒரு நீதியான சக்ரவர்த்தி 60.000-பெண்ஜாதிகளை
மணந்துகொண்டதாகவும் யாகத்தில் அவர்களைப் பார்ப்பனர்க்குத் தன்னுடைய சொத்துவைப்
போலக் கருதித் தருமமாகக் கொடுத்துவிட்டதாகவும் அவர்களாலேயே பெண்களை நிர்வகிக்க
முடியாமல் திரும்பவும் பணம் வாங்கிக் கொண்டு இராஜாவுக்கே கொடுத்துவிட்டதாகவும்
இம்மாதிரி பண்ட மாற்றுதலுக்குப் பெண்களை உபயோகப்படுத்தினதாகச் சொல்லப்படுகிறது.
இன்னும் நம்முடைய பழைய அரசர்கள் ஒருவராவது ஒரு பெண்சாதியுடன் இருந்ததாகவோ-
பெண்ஜாதிகளைச் சமமாகவோ காண்பதற்கில்லை. அப்படி எங்காவது காணப்படுவதாயிருந்தாலும்
அது ஒருக்காலும் மேற்படி மததர்மங்கட்கு முரணானது என்று தான் சொல்ல வேண்டும்.
இதுவரையிலும் மக்கள் பெண்கள் சுதந்திரம் என்று பேசிக் கொண்டுவந்ததெல்லாம் வெறும்
புரட்டும்- முன்னுக்குப்பின் முரணுமாய் முடிந்திருக்கிறதே தவிர காரியத்தில்
உண்மையாகப் பெண்கள் விடுதலைக்கு மார்க்கம் கூடக் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது
தான் எனது அபிப்பிராயம்.
பெண்கள் விடுதலைக்கு வெளியில் வருபவர்கள் பெண் சம்பந்தமான இந்துமத
தர்மத்தையும்-சாஸ்திரத்தையும்- புராணத்தையும்- இதிகாசத்தையும்- நீதிக்கதையையும்-
ஒதுக்கி வைத்துவிட்டு தான் வரவேண்டும்.அப்படியில்லாமல் மேற் கண்ட அழுக்கு
மூட்டைகளைச் சுமந்து கொண்டு யார் எங்கு போய் பெண்கள் சுதந்திரம் பேசினாலும்
கட்டுப்பாடுள்ள அடிமைப்பிரகாரமாகத் தான் முடியுமே தவிரஅது சிறிதும் விடுதலையை
உண்டாக்காது.
முற்றும் பெண்களை படிக்க வைக்க வேண்டுமென்று சொல்லி எழுத்து வாசனையுண்டாக்கி
அவர்கட்கு அரிச்சந்திர புராணத்மையும்- நளாயினி கதையையும்- இராமாயணத்தையும்-
பாரதத்தையும்- படிக்க வைத்தால் பின்னும் அடிமையாவார்களா? சுதந்திரமடைவார்களா?என்பதை
நீங்களே யோசித்துப் பாருங்கள். இவற்றை எல்லாம் விட கற்பு என்கின்ற ஒருபெரிய கற்பாறை
அயோக்கியத்தனமாய் அவர்கள் தலை மீது வைக்கப்பட்டிருக்கின்ற வரையில் ஒரு நாளும்
பெண்மக்களை உலகம் முன்னேற்றமடையவோ- சுதந்திரமடையவோ-ஒருக்காலும் முடியவே முடியாது.
கற்புக்கு லட்சணம் சொல்கிற போது ஒரு பழமையான தமிழ் நூலில் காணப்படும் ஒரு வார்த்தை
எவ்வளவு கடுமையான அடிமைத்தனத்தை மனதில் வைத்து உண்டாக்கப்பட்டதென்பதைச் சற்று
சிந்தித்துப் பாருங்கள்.
அதாவது யாராவது ஒரு புருஷன் ஒரு பெண்ணைப் பார்த்து அவளைத் தன் மனதில் நினைத்து
விட்டானேயானால் அந்தப் பெண்ணுடைய கற்புக் கெட்டுப் போய் விட்டதாம்.
ஏனெனில் அந்தப் பெண் கற்புடையவளாயிருந்தால் மற்றொரு மனிதன் அவளை மனதில்
நினைத்திருக்க முடியாதாம். எவ்வளவு (அ)நீதி என்பதை நினைத்துப் பாருங்கள். எந்த
நிர்பந்தமானாலும்- எந்த கட்டுப்பாடானாலும்- எந்த தருமமானாலும்- ஆணுக்கும்-
பெண்ணுக்கும்இருவருக்கும் சமமாக இருப்பத்தனால் அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை.
தகவல்:
periyar71@yahoo.com |