பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
இலக்கியம்! |
பகுதி 2 & 3 : சுதந்திரப் போராட்டமும் தமிழ்
எழுத்தாளர்களும்!
- வெங்கட் சாமிநாதன்
கா.சு.வேங்கடரமணி(1892-1952)வுக்கு
லண்டன் டைம்ஸ் லிடரரி சப்ளிமெண்டில் வேலை கிடைத்தது. ஆனால் அவர் லண்டனுக்குச்
செல்வதை அவரது தாயார் விரும்பவில்லை. வேங்கட ரமணியின் முதல் நாவல், தேச பக்தன்
கந்தன், தமிழில் தான் எழுதப்பட்டது. அதன் கதாநாயகன் கந்தன், சீமையில் படித்து
வந்தவன். அவனுடைய காதலுக்கும் கிளர்ந்தெழும் தேசபக்த உணர்வுக்கும் இடையேயான
போராட்டம் தான் நாவலின் கதை. முதலில் காதலும், அரசியலுமாகத் தொடங்கி வளரும் கதை
கடைசியில் தத்துவார்த்த விசாரணையில் முடிகிறது. முதலில் தேசவிடுதலைக்கான
கிளர்ச்சியாக தொடங்கி
பின் மெதுவாக, ஏதும் முரண் இன்றி, வெகு இயல்பாக அது தனி மனிதனின் ஆத்மீக
விடுதலைக்கான ஒன்றாக உருமாறி தத்துவார்த்த உலகிற்கு இட்டுச் செல்வது என்பது அக்கால
பெரிய கீர்த்திமான்களின் விதியாகவே இருந்துள்ளது ஒரு சுவாரஸ்யமான விஷயம். இது
அரவிந்தரிலிருந்தே
தொடர்கிறது. வேங்கட ரமணியின் அடுத்த நாவல் முருகன் ஒர் உழவன்(1927). இதை அவர்
ஆங்கிலத்தில் தான் முதலில் எழுதினார். பின்னர் அவர் தானே அதைத் தமிழிலும்
மொழிபெயர்த்தார். கிராமத்துக்குத் திரும்பிச் செல்வது தான் அதன் மையக் கரு.
காந்தியடிகளுக்குப் பிரியமான விஷயம். வேங்கட ரமணி முழுக்க முழுக்க காந்தீய
சிந்தனைகளால் கவரப்பட்டவர்.
வெ.சாமிநாதன் சர்மா(1895-1978) வெவ்வேறு கால கட்டங்களில் தேசபக்தன் (1917-1920),
நவசக்தி, ஸ்வராஜ், குமரி மலர் போன்ற பத்திரிககளுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார்.
இப்பத்திரிகைகளில் உலக நாடுகள் பலவற்றின் சுதந்திர போராட்டங்கள் பற்றியும், உலக
சரித்திரம் பற்றியும் தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கில் நிறைய எழுதி
வந்தார். காந்தி, மோதிலால் நேரு, திலகர், கார்ல் மார்க்ஸ், முஸ்த·பா கமால் பாஷா
போன்ற
தலைவர்களின் வாழ்க்கைச்சரிதத்தையும் மனித குலத்திற்கு அவர்கள் பங்களிப்பைப்
பற்றியும் விஸ்தாரமாக எழுதினார். ப்ளேட்டோவின் 'குடியரசு'(Republic), ரூஸோவின்
சமுதாய ஒப்பந்தம் (Social Contract) போன்ற நூல்களை மொழிபெயர்த்தார். அவற்றோடு,
எழுச்சியுற்ற புது சீனா, சோவியத் ரஷ்யா, கிரீஸின் புராதன வரலாறு, நாடாளுமன்றம்
மூலம் ஜனநாயக அரசமைப்பு தோன்றிய வரலாறு, ஆசியாவும் உலக சமாதானமும்,
மனித சுதந்திரம் என்ற கருத்தாக்கத்தின் தோற்றம், இப்படி பல்வேறு விஷயங்களைப்பற்றி
விரிவான புத்தகங்கள் எழுதினார். சுமார் கால் நூற்றாண்டுக்காலம், தமிழ் மக்கள் உலக
சரித்திரம்பற்றியும், பல்வேறு நாடுகளில் நிகழ்ந்துள்ள சுதந்திர போராட்டங்கள், சமூக
புரட்சிகள் பின் மாற்றங்கள் பற்றியும், தெரிந்து கொண்டார்கள் என்றால் அது
வெ.சாமிநாத சர்மாவின் அயராத உழைப்பும், உத்வேகமும் தந்த விரிவான வரலாற்றுப்
புத்தகங்களால் தான். அவர் காலத்தில் வாழ்ந்த,அவர் பழகி அறிந்த சுப்ரமண்ய பாரதி
இன்னும் மற்ற எழுத்தாளர்கள், சுதந்திர போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டவர்கள்
பற்றியும் தம் அனுபவங்களையும் எழுதியுள்ளார்.
கவிஞரும் யோகியும், பாண்டிச்சேரியில் அரவிந்தரின் ஆசிரமத்தில் நிறைய வருடங்கள்
இருந்தவருமான, யோகி சுத்தானந்த பாரதியும் அப்படித்தான். லத்தீன், ·ப்ரெஞ்ச்
இரண்டிலும் நல்ல தேர்ச்சி கொண்டிருந்த அவர் தாந்தேயின் Divine Comedy, விக்டர்
ஹ¤யூகோவின் Les Miserable (ஏழை படும் பாடு) போன்ற ஐரோப்பிய இலக்கியங்கள் பலவற்றை
தமிழுக்குத் தந்தார். 25 வருடங்கள் நீண்ட மௌன தவத்திலிருந்து மீண்ட அவர் பாரதி மகா
சக்தி
காவியம் என்னும் தலைப்பில் பாரத தேசத்தின் வரலாற்றையே ஒரு பெரும் காவியமாக
எழுதினார். என் பள்ளிப் பருவத்தில் படித்த சுத்தானந்த பாரதியின்
புத்தகங்களிலிருந்து தான் தமிழ் தேசிய உணர்வையும் தேச பக்த உணர்வையும் பெற்றேன்
என்று சொல்ல வேண்டும். சென்ற நூற்றாண்டின் முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் இளம்
தமிழ் வாசகர்கள் யோகி சுத்தானந்த பாரதியின் நூற்களைப் படிப்பதில் ஒரு பரவசமும்
வெறியும்
கொண்டிருந்தார்கள் என்றும் சொல்லவேண்டும். அவர் ஒரு தவ யோகிதான். இருப்பினும் அவர்
நிறைய எழுதினார். அவர் எழுதிய 250 புத்தகங்களில், 173 புத்தகங்கள் தமிழில்
எழுதியவை.
திரு.வி.க என்றே அறியப்பட்ட திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் பார்க்கப்போனால் ஒரு
தமிழ் அறிஞர், தொழிற்சங்க வாதி. சிங்கார வேலருடன் சேர்ந்து 1918-ல் அவர் நிறுவிய
தொழிற்சங்கம் தான் இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் தொழிற்சங்கம் என்ற பெருமை திரு
வி.க வையே சாரும். அவர் பல முனைகளில் தீவிரமாக செயல்பட்டவர். அவர் பல
பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்தார். அவர் கீழ் பயிற்சி பெற்ற பலர் பின்னாட்களில்
தமிழ்
பத்திரிகைத் துறையிலும், அரசியலிலும் இலக்கியத்திலும் பெரிய சாதனையாளர்களாக
திகழ்ந்தனர். மகாத்மா காந்தி அந்நாட்களில் தென்னாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும்போது
அவருடன் சென்று மகாத்மாவின் சொற்பொழிவுகளை தமிழில் மொழிபெயர்ப்பவராக இருந்தார்
திரு.வி.க. அவர்
மகாத்மா காந்தியின் தலைமையில் கண்ட சமூகம், தார்மீகம் அறம் சார்ந்த அம்சங்களைப்
பற்றி, மகாத்மாவும் மனித வாழ்க்கையும், இந்தியாவும் சுதந்திரமும் போன்ற
புத்தகங்களில் விரிவாக எழுதியுள்ளார். பெண்களின் சுதந்திரத்திரத்திற்கும் அவர்கள்
உரிமைகளுக்கும் அவர் தீவிரமாக வாதாடியவர். அது பற்றியும் அவர் விரிவாக
எழுதியிருக்கிறார்.
ராஜாஜி(1879-1971) தன் அரசியல் வாழ்க்கையில் நேரம் கிடைத்த போதெல்லாம் சிறு கதைகள்,
அரசியல் விமர்சனங்கள், சிறுவர்களுக்கான குட்டிக் கதைகள் என பல வடிவங்களில் எழுதுவது
போக, பத்திரிகளுக்கு ஆசிர்யராகவும் இருந்திருக்கிறார். மொழிபெயர்ப்புகள்
தந்துள்ளார். மார்க்கஸ் அரேலியஸ், ராம க்ரிஷ்ண பரமஹம்ஸர் போன்ற மகான்களின்
உபதேசங்களைத் தொகுத்ததோடு, ராமாயணம், மகா பாரதம் இரண்டு
இதிகாசங்களையும் சிறுவர்களுக்கான எளிய நடையில் ஒரு தார்மீக பார்வையில்
எழுதியுள்ளார். தன் சிறை வாழ்க்கை பற்றிய குறிப்புகளையும் எழுதியிருக்கிறார்.
இருபதுக்களில் திருச்செங்கோடு கிராமத்தில் ஒரு ஆசிரமம் நிறுவி அங்கிருந்து விமோசனம்
என்ற பத்திரிகையையும் வெளியிட்டு வந்தார். அதில் அவர் காந்தியம், விதவை மறுமணம்,
மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு பற்றியெல்லாம் கதைகள் எழுதி வந்தார். ஹன்ஸ்
ஆண்டர்சனின்
சீர்திருத்த நோக்கம் கொண்ட இன்னொரு அவதாரம் என்று சொல்ல வேண்டும் அவரை.
ராஜாஜியிடமும் திரு.வி.க.விடமும் பத்திரிகைத் துறை பயிற்சி பெற்றவர் தான் கல்கி
என்ற பெயரிலேயே பெரும்பாலும் அறியப்பெற்றவரும் தமிழ் நாட்டின் பத்திரிகையாளரிலேயே
ஜாம்பவான் என்று கருதப்படவேண்டியவருமான ரா.கிருஷ்ணமூர்த்தியும்(1899-1953). அவர்
வாழ்ந்த காலத்தில் மிகப்
பிரபலமானவரும் மிகுந்த செல்வாக்கும் கொண்டவருமான கல்கி சுமார் முப்பது வருட காலம்
தமிழ் எழுத்திலும் பத்திரிகை உலகிலும் இணையற்ற ஒரு ஆளுமையாகத் திகழ்ந்தவர்.
1921-லிருந்தே அவர் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக இயங்கியவர். மூன்று முறை,
1922, 1930, 1941 வருடங்களில் அவர் சிறை சென்றார். தமிழில் மிக பிரபலமான பத்திரிகை,
ஆனந்த விகடனில் அவன் ஆசிரியர் பதவியை, மிகுந்த செல்வாக்கும் வசதிகளையும் தந்த
பதவி அது, உதறித்தான் அவர் விரும்பியவாறு 1941-ல் சிறை செல்ல முடிந்தது. சிறை செல்ல
வேண்டுமெனில் ஆசிரியப் பதவியைத் துறக்கத்தான் வேண்டும் என்று ஆனந்த விகடனின்
அதிபராக இருந்த எஸ் எஸ் வாசன், சொல்லவே, அவர் அப்பதவியைத் துறக்கத் தயங்கவில்லை.
மாந்தருக்குள்
ஒரு தெய்வம் என்ற அவரது புத்தகம் காந்தியடிகளின் வாழ்க்கையைச் சித்தரிக்கும். யங்
இந்தியாவிலிருந்து காந்தியின் எழுத்துக்களை தமிழுக்கு மொழிபெயர்த்தார். லாலா லஜபத்
ராயின் வாழ்க்கையைப்பற்றியும், இந்திய தேசீய இயக்கத்தின் வரலாற்றைப் பற்றியும்
எழுதியவர் நம் தாய்நாடு என்ற
தலைப்பில் விவேகானந்தரின் எழுத்துக்களையும் தொகுத்துத் தந்துள்ளார். தியாக பூமி
என்ற அவரது நாவல், தீண்டாமை ஒழிப்பு, மது விலக்கு, ஹரிஜனங்களை கோவிலுக்குள்
அனுமதித்தல், ஹரிஜன முன்னேற்றம், தேசீய விடுதலை போன்ர காந்தீய கொள்கைச் சொல்ல
எழுதப்பட்டது. பின்னர் அது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது ஆனால் அது உடன்
அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. 1945-ல் தான் அத்ததை நீங்கியது. கல்கியின்
நாவல்களிலேயே மக்களிடையே மிகவும் விரும்பப்பட்டதும் பிராபல்யமானதுமான பார்த்திபன்
கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை மிகுந்த தாக்கத்தை
ஏற்படுத்தின. பல்லவர்களும், சோழ் மன்னர்களும் ஆண்ட காலத்திய தமிழ் நாட்டின் மகோன்னத
வரலாற்றைச் சொல்ல வந்த இந்த நாவல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் நாட்டைப் பற்றியும்
மொழியைப் பற்றியும் அவர்களது வரலாற்றின் புகழ் பெற்ற காலங்கள் பற்றியும் அவர்கள்
மூதாதையரின் மகோன்னத சாதனைகளை அறியச் செய்து அது பற்றி அவர்கள் பெருமையும் கர்வமும்
கொள்ள வேண்டும் என்ற நோக்கம், தேசீய விடுதலை போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட
கல்கிக்கு இருந்தது
பகுதி 3: சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள்!
சற்று முன்னர் முப்பதுக்களில் மலர்ந்த ஒரு மறுமலர்ச்சியின் ஆதர்ச புருஷராக வ.ரா.
இருந்தார் என்று சொல்லியிருக்கிறேன். அது அம்மறுமலர்ச்சியின் இலக்கியம் சார்ந்த
அங்கத்தை மனதில் கொண்டாகும். ஈ.கிருஷ்ண அய்யரும் ருக்மிணி அருண்டேலும் தமிழ்
நாட்டின் நீண்ட பாரம்பரியம் கொண்டிருந்த ஒரு நாட்டிய மரபு தேய்ந்து மறைந்து
கொண்டிருந்த காலத்தில் அதை மீட்டெடுத்து புதுப்பித்து வாழ்வு கொடுத்த காரியமும்
இம்மறுமலர்ச்சியின் மற்றொரு அங்கம் தான். தமிழ் நாட்டின் மேடைக் கச்சேரிகளில்
தமிழில் பாடுவதே அரிதாகிக் கொண்டிருந்த காலத்தில் தமிழிசை மரபை நினைவுறுத்தி அதற்கு
உரிய இடத்தைப் பெற்றுத்தர எழுந்த தமிழிசை இயக்கமும் இந்த மறுமலர்ச்சியின் அங்கம்
தான். இவையெல்லாம் தேசம் முழுதும் சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் நாடு பெற்ற
விழிப்புணர்வின் விளைவுகள் தாம். தேசீய விழிப்புணர்வின் விளைவாகவே வங்காளத்தில்
புதிய பாணி ஓவிய முயற்சிகள் தோன்றியது போல. நான் இப்போதைய சந்தர்ப்பத்தில்
இலக்கியத்தோடு நின்றுகொள்கிறேன். தமிழ் நாட்டில் முப்பதுகளில் தோன்றிய இலக்கிய
மறுமலர்ச்சி, தேசீய எழுச்சியும் சுதந்திர உணர்வையும் மக்களிடையே பரப்புவதற்கென்றே,
சுதந்திரப் போராட்ட வீரர்களால் தோற்றுவிக்கப்பட்ட மணிக்கொடி பத்திரிகையைச் சுற்றியே
மலர்ந்தது. முன்னரே சொன்ன வ.ரா. தவிர பி.எஸ்.ராமையா, சி.சு.செல்லப்பா, புதுமைப்
பித்தன் போன்றோரையும் சேர்த்துச் சொல்லவேண்டும். இவர்களில் சி.சு.செல்லப்பாவும்
பி.எஸ்.ராமையாவும் தீவிரமாக சுதந்திரப் போராட்டத்தில் இயங்கியவர்கள். சிறை
சென்றவர்கள். இப்போது 86 வயதாகும் செல்லப்பா ஒருவர் தான் சுதந்திரப் போராட்டத்தில்
தீவிரமாக இருந்த எழுத்தாளர்களில் இப்போதும் நம்மிடையே வாழ்பவர். அவரை இன்னமும்
நம்மிடையே பெற்றிருக்கும் பாக்கியம் நமக்கு. முப்பதுக்களின் சுதந்திர போராட்ட
காலத்ததிய அன்றைய வாழ்க்கையைச் சொல்லும் 1700 பக்கங்களுக்கு விரிந்துள்ள சுதந்திர
தாகம் என்ற மூன்று பாகங்கள் நீளும் ஒரு நாவலை அவர் தன் வாழ்வின் அந்திம காலத்தில்
எழுதியிருக்கிறார். அது ஒரு ஆவணமும் ஆகும். அது உண்மையில் சுமார் ஏழாண்டு
கால(1927-1934) நடப்புகளைத்தான் விவரிக்கிறது. காந்தியின் ஆணையைத் தலைமேற் தன்
கல்லூரிப் படிப்பை பாதியிலேயே துறந்து சத்தியாகிரஹியாகி சிறை சென்ற நடப்புகள் அவை.
இந்த பிரம்மாண்ட நாவல் என்னவோ மதுரையையும் அதைச் சுற்றியும் நிகழும் சம்பவங்களை
மட்டுமே விவரித்தாலும், (செல்லப்பா
சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அதற்கு மேல் இட விஸ்தாரம் பெறவில்லை), அதன் உணர்வுகள்
நாடு முழுதும் கொந்தளித்துக்கொண்டிருந்த சுதந்திரப் போராட்டத்தையே பிரதிபலித்தன.
புதுமைப் பித்தன் (1907-1947) ஒரு தனி பிறவி. அவர் எந்தப் போராட்டத்திலும் தன்னை
ஈடுபடுத்திக்கொண்டவரில்லை. மக்கள் கூட்டம் கூட்டமாக ஈடுபடும் எந்த செயலிலும்
தன்னையும் அதில் ஒருவராக இணைத்துக்கொள்ளும் இயல்பு அவரிடம் இல்லை. அவர் ஒரு தீவிர
தனி நபர் வாதி. தன் தனித்வத்தை அதன் எல்லைவரை இட்டுச் செல்பவர். ஆனால் ஆளும்
ப்ரிட்டீஷ் அரசாங்கம், அதற்கு சேவுகம் செய்வதில் பெருமை கொள்ளும் கருப்பு நிற
அதிகார வர்க்கம், சரிகைத்தலைப்பாகைகள் மீது அவருக்கு இருந்த ஆக்கிரோஷ
வெறுப்பு அத்தனையும் அவருடைய எழுத்துக்களில் வந்து கொட்டும். சந்தர்ப்பம்
இருக்கிறதோ இல்லையோ, தேவை உண்டோ இல்லையோ, எழுதும் போக்கில் ஆங்கில அரசின் குட்டி
தேவதைகளுக்கு எதிரான அவர் தனது சீற்றத்தையும் , கிண்டலையும் போகிற போக்கில்
உதிர்த்துக் கொண்டே
போவார். அவரது எழுத்து முழுதிலுமே இத்தகைய கிண்டலும் வெறுப்பும் தெளித்திருக்கக்
காணலாம். அடிமைப் பட்டுக்கிடந்த இந்தியாவில், தமிழ் நாட்டில் ஒரு சுதந்திர ஜீவி
இருந்தாரென்றால் அது அவர் தான். எந்த அதிகாரத்தையும், அது வெளிநாட்டிலிருந்து
வந்ததோ அல்லது உள்நாட்டிலேயே பிறந்து வந்ததோ, அவர் மதித்ததில்லை.
கடைசியாக அந்நாட்களின் வரலாற்றைப் பதிவு செய்தவர்களைப் பற்றிச் சொல்லவேண்டும்.
எல்லோருக்கும் முதலாக, 'உலகம் சுற்றிய தமிழர்' என்றே அறியப்பட்ட ஏ.கே.செட்டியாரைப்
பற்றி. அவரது உலகப் பயணங்கள் பற்றி அவர் எழுதியது போக, காந்தி பற்றி அவர்
எடுத்துள்ள செய்திப் படம். இது தான் இந்தியாவிலேயே காந்தி பற்றி எவரும் எடுத்துள்ள
முதல் செய்திப் படமும் ஆகும். அந்நாட்களின் சுதந்திர போராட்டச் செய்திகளை, காந்தி
பற்றிய செய்திகளை அரசு செய்திப் படங்களில் பார்க்கும்போது, ஒரு பெரிய திறந்த
வெளியில் நூற்றுக்கணக்கில் சரிவர உடைகூட உடுத்தியிராத ஏழை
ஸ்திரீகள், வயதானவர்கள் உட்பட உட்கார்ந்து கைராட்டினம் சுற்றி நூல்
நூற்றுக்கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்திருக்கிறோமே, அது ஏ.கே.செட்டியார் காந்தி
பற்றிய செய்திப்படத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட காட்சிதான். செட்டியார் தன்
உலகப் பயணத்தில், எங்கெங்கோ தொலைவில் உள்ள நாடுகளில் கூட காந்தியின் பெயர்
எழுப்பும் உத்வேகமும் வரவேற்பும் பற்றி வெகு உற்சாகத்துடன் எழுதுகிறார். இன்னும்
பலர் அந்நாட்களைப் பற்றி எழுதியிருக்கின்றனர். கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
என் சரிதம் என்று எழுதியுள்ள சுயசரிதம்,. அவர் காலத்தில் நடந்த
சுதந்திர போராட்ட நிகழ்வுகளையும், அவரது சரிதத்தையும் சொல்லும். தி.சு.சு.ராஜன்
எழுதியுள்ள புத்தகம் ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் வரை நடை பயணம் சென்ற உப்பு
சத்தியாக்கிரஹ நிகழ்ச்சிகளையே பெரும்பாலும் விவரிக்கும். திரு.வி.க வின் வாழ்க்கைக்
குறிப்புகள் என்னும் சுயசரிதம்,
அறுபது ஆண்டு கால தொழிற்சங்க வரலாற்றையும், சுதந்திர போராட்டமாக விரியும் தேசீய
அரசியலையும் பதிவு செய்துள்ளது. தனது வயதின் தொன்னூறுகளில் இறந்த ம.பொ.சிவஞான
கிராமணியார், சுதந்திர போராட்டத்தில் தீவிர மாக இயங்கியவர் 'விடுதலைப் போரில்
தமிழகம் என்று ஒரு
பிரம்மாண்ட நூலில் தமிழ் நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை மிக விஸ்தாரமாக,
விவரங்கள் செறிந்த வகையில் உணர்ச்சிப் பெருக்கோடு சொல்லிச் செல்கிறார்.
இப்பங்களிப்பைப் பற்றி ம.பொ. சிவஞானம் அவர்கள் அளவுக்கு விஸ்தாரத்திலும் விவரப்
பெருக்கிலும் உணர்வு பூர்வமாகவும் பதிவு செய்துள்ள வரலாற்று நூல் வேறு ஒன்று
தமிழில் இல்லை. சுமார் 1200 பக்கங்களுக்கு விரிந்துள்ள இந்த வரலாறு முழுதும்
ம.பொ.சி
அவர்களால் வாய் மொழியாகவே நினைவிலிருந்து சொல்லச் சொல்ல பதியப்பட்டுள்ளது.
1997-ல் இந்திய சுதந்திரத்தின் 50-ஆண்டு நிறைவை ஒட்டி தில்லியில் மத்திய செயலக
நூலகம் (Central Secretariat Library) நடத்தின் சுதந்திர போராட்டத்தில்
எழுத்தாளர்கள் என்ற கருத்தரங்கில் பேசியது.
(இதற்கு முன்குறிப்புகளாக நான் உரையைத் தொடங்கும்னமுன் சொன்னவற்றையும் இங்கு
சொல்வது அவசியம்: அக்குறிப்புகள் இதோ:)
"இந்த உரையை உங்களுக்குச் சமர்ப்பிக்கும் முன் இவ்வுரை தனக்குள் வகுத்துக்
கொண்டுள்ள எல்லைக் கோட்டின் வட்டத்தைப் பற்றிச் சொல்லவேண்டும். இக்கருத்தரங்கை
ஏற்பாடு செய்துள்ளவர்கள் தந்துள்ள 1900-1947 கால கட்ட வரையறை. அடுத்து
இக்கருத்தரங்கு இலக்கியப் பங்களிப்பை மாத்திரமே கருத்தில் கொண்டுள்ளது. சீரிய
இலக்கிய மாணவர்களுக்கெல்லாம் தெரியும், எந்த பெரிய நிகழ்வைப் பற்றியுமான ஆழமான
சிருஷ்டி கர இலக்கியப் பதிவு அது நிகழ்ந்து முடிந்து அந்நிகழ்வின் தாக்கத்தின் சூடு
ஆறிய பிறகு, எழுத்தாளன் தன்னை அதனிலிருந்து விலக்கி எட்டி நின்று, அந்நிகழ்வின்
உணர்வுகளின் அழுத்தமும், சூடும் தன்னை பாதிக்காது அதன் குணத்தை அறிய முடிகிற போது
தான் சாத்தியமாகிறது.
எனவே, ஒரு வேளை கருத்தரங்கை அமைத்துக் கொடுத்தவர்களின் நோக்கம், அத்தகைய ஆழ்ந்த
சிருஷ்டி பூர்வ பதிவுகளின் இலக்கிய ஆராய்வு அல்ல, மாறாக, போராட்டம் நிகழ்ந்து
கொண்டிருக்கும்போதே அதன் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் எழுத்தாளர்களின் பங்களிப்பைப்
பற்றி பேசுவது என்று தோன்றுகிறது. எனவே இங்கு நான் செய்துள்ளது போராட்ட கால
கட்டத்திலேயே தமிழ் எழுத்தாளர்கள் அதை எப்படி எதிர்கொண்டார்கள், என்ன பதிவு
செய்தார்கள், அது போராட்டத்திற்கே எத்தகைய பங்களிப்பைச் செய்தது என்பதேயாகும்.
இத்தகைய அவ்வப்போதைய கால கட்டத்தின் ஆவேச உற்சாகங்களையும் உணர்ச்சிப் பெருக்கையும்
மீறி, எவை இன்று ஆழந்த இலக்கியங்களாக காலத்தை மீறி வாழ்கின்றன எவை சீரிய இலக்கிய
சாதனைகளாகியுள்ளன என்று கணிப்பதல்ல..
மேலும், இலக்கியத்திற்கு அப்பால் மற்ற துறைகளில், வாழ்வுத் தளங்களில், தொடர்பு சாதன
வடிவங்களில் போராட்டத்திற்கு உதவியவர்கள், அவர்களின் சாதனைகளைப் பற்றிப் பேசவில்லை.
நாடக மேடையில், திரைப்படத் துறையில் ஈடுபட்டிருந்தவர்கள், பாடலாசிரியர்கள்,
பாடகர்கள், பொம்மலாட்டக்காரர்கள், பிச்சைக்காரர்கள், தெருப்பாடகர்கள் போன்றோரையும்
விட்டு விட்டேன். ஆமாம், பிச்சைக்காரர்களும், தெருப்பாடகர்களும் தான்.
கற்பனை செய்து பாருங்கள். ஒரு பத்து வயது சிறுமி, எண்ணையற்ற பிசுக்கேறிய தலையும்,
அழுக்குச் சட்டை பாவாடையுமாக ஓடும் ரயிலில் ஒவ்வொரு பெட்டியாக இறங்கி ஏறி
வருகிறாள். அடித்தொண்டையைக் கிழித்துக்கொண்டு உச்ச ஸ்தாயியில், பாடிக்கொண்டே பெட்டி
பெட்டியாக நகர்ந்து
கொண்டே,
பண்டித மோதிலால் நேருவை பறி கொடுத்தோமே,
பறிகொடுதோமே, பரிதவித்தோமே....
மோதிலால் நேரு மட்டுமல்ல, திலகரை பறிகொடுத்ததும், கஸ்தூரிபாவின் தியாகங்களும்
அவளுக்குப் பிச்சையெடுக்க உதவும் பாட்டுக்களாக மட்டுமல்ல அவள் அலறல், ரயில்
பயணிகளின் உள்ளத்தையும் தொடும். ஒரு நாள் பயணத்தில் தமிழ் நாட்டின் ஒரு
கோடியிலிருந்து மறு கோடி வரை
அவள் பயணம் செய்துவிடுவாள். எத்தனையோ ஆயிரம் பயணிகளுக்கு அவள் கதறல் போய்ச் சேரும்.
அவள் சற்று தூரத்தில் இறங்கி விட்டால் மற்றொரு சிறுமி அவள் இடத்தில் தோன்றுவாள்..
ஆங்கில அரசின் கரங்கள் திரைப்படங்களை, நாடகங்களை, புத்தகங்களை, பொதுக் கூட்டங்களை,
புத்தகங்களை, பாரதியின் கவிதைகளை தடை செய்துவிட முடியும். ராஜாஜியை, மகாத்மா
காந்தியை கைது செய்து சிறையில் அடைத்து விட முடியும். ஆனால் அந்த சூரியன்
அஸ்தமிக்காத பகாசுர அரசு, தன் தொண்டை கிழிய கத்திப் பாடும் இந்த பிச்சைக்கார
சிறுவர் சிறுமியரை அந்த அரசின்
அதிகாரத்தை அறியாது மீறும், பணியாத இக்குரல்களை, அரசுக்கு எதிராக ஆயிரக் கணக்கான
பயணிகளின் உணர்ச்சிகளைக் கொந்தளிக்கச் செய்யும் இந்த அழுக்குச் சட்டைப் பாவாடைகளை
என்ன செய்ய இயலும்? இவர்களும் சுதந்திரப் போராட்டதிற்குப் பங்களித்தவர்கள் தான்.
காலத்தின் கதியில் நாம் மறந்து விட்ட, மறக்கப்பட்டுவிட்ட இப் பங்களிப்புகள் எல்லாம்
உடனுக்குடன் பாதிப்பை ஏறுபடுத்தியவை. வெடிமருந்தைப் போல பயங்கர
விளைவுகளையும் ஏற்படுத்தியவை. காட்டுத் தீயைப் போல படர்ந்து பரவும் குணத்தவை. ரயில்
பெட்டிகளில் பாடிப் பிச்சையெடுக்கும் இச்சிறுமிகளுக்குக் கிடைத்துள்ளவர்கள்
தயாராகக் காத்திருப்பவர்கள் (captive audience)- இருந்த இடத்தில் ந்கராது
கேட்பவர்கள். மனது நெகிழ்வதற்குக் காத்திருப்பவர்கள். அரசியல் வாதிகளும்,
எழுத்தாளர்களும் மக்கள் மனதில் பாதிப்பைக் காண் தம் திறைமையெல்லாம் திரட்டி
சாகஸங்கள்
செய்யவேண்டும். இனி என் உரை..
தமிழ் இலக்கியத்துள் நிகழ்ந்துள்ள.....
வெங்கட் சாமிநாதன்/23.8.07
vswaminathan.venkat@gmail.com
vswaminathan.venkat@gmail.com |
|
©
காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|