சுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று!
- வெங்கட் சாமிநாதன் -
அம்பையைப்
பற்றி எண்ணும்போது இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. தன் எண்ணங்கள் படியே
எழுதினார். தன் எண்ணங்கள் படியே வாழவும் முடிந்திருக்கிறது அவரால் என்று.
என்னதான் சமூகத்தில் ஆட்சி செலுத்தும் நம்பிக்கைகளுக்கும் வாழ்க்கை முறைக்கும்
எதிரான சிந்தனைகள் கொண்டிருந்தாலும் அதை வெளிப்படுத்தினாலும், வாழ்க்கை என்னவோ
அச் சிந்தனைகளின் நிர்ணயித்த வழியில் வாழமுடிவதில்லை. பெரும்பாலும் அலையாடப்
படுகிறோம். அந்த அலையாடல்களினிடையில் தான் ஒருவரது வேறுபட்ட பார்வைகளும்
சிந்தனைகளும் வெளிப்படுத்தப் படுகின்றன. நம் திருப்தி அதோடு முடிகின்றது. மற்றபடி
வாழ்க்கை மாறுபட்ட சிந்தனைகளை ஒட்டி மாற்றம் பெறுவதற்கு, சமூகத்தின், பெருவாரியான
மக்களின் பார்வை மாற்றத்திற்குத் தான் காத்திருக்கவேண்டும். இன்று அப்படித்தான்
தோன்றுகிறது. இதைத் தனக்குச் சாத்தியமாக்கிக்கொண்டுள்ள அம்பையை வாழ்த்தவும்
தோன்றுகிறது.
ஆனால் இப்படியெல்லாம் அம்பையை முதலில் பார்த்தபோது இப்படி சிந்தனை கொண்ட ஒரு
ஜீவனை, அதை வாழ்ந்து காட்டும் பிடிவாதம் கொண்ட ஒரு பெண்ணைப் பார்க்கிறோம்
என்றெல்லாம் நினைத்தும் பார்த்ததில்லை. அப்படியெல்லாம் சிந்தனைகள் செல்லவில்லை.
எப்போதோ ஒரு நாள், 1969 அல்லது 1970- ஆக இருக்கவேண்டும். தில்லி கன்னாட்
ப்ளேஸில், சங்கர் மார்க்கெட்டுக்கு எதிராக நடைபாதை ஓரம் நின்றுகொண்டிருந்தோம்.
இந்திரா பார்த்த சாரதி, நான், இன்னம் ஒன்றிரண்டு பேர். யாரென்று நினைவில் இல்லை.
பின் ஒரு பெண். பார்த்த சாரதி சொன்னார் அந்த பெண்ணிடம். " உன் கதையைக் கஸ்தூரி
ரங்கனிடம் கொடுத்து விட்டேன். மற்றபடி அவர் பொறுப்பு" என்றார். அதற்கு அந்தப்
பெண், "சரி. போட்டா சந்தோஷம். பேடாட்டா அது ஒண்ணும் புதுசில்லை. எத்தனையோ பேர்
போட மாட்டேன்னு சொல்லிக் கேட்டாச்சு. அதோட இன்னொருத்தர்," என்று சொல்லி அதை சர்வ
சாதாரணமாக எடுத்துக்கொண்டது என் மனதில் பதிந்தது.
ஆனால் அது தில்லி தமிழ் பத்திரிகை கணையாழியில் பிரசுரமாயிற்று. 'சிறகுகள்
முறியும்" என்னும் ஒரு சற்று நீண்ட கதை. தன்னையும் குழந்தைகளையும் காப்பாற்ற
இயலாத, தன் கஷ்டங்களையும் புரிந்து கொள்ளாத, அன்பும் கனிவும் கூட இல்லாத கணவன்.
இப்படி ஒரு வாழ்க்கை தனக்கு விதிக்கப்பட்டதை நினைந்து நொந்து போகிறாள். அன்பும்
ஆதரவும் அற்ற இந்த தாம்பத்ய வாழ்க்கைக்கு அவசியமோ அர்த்தமோ இருப்பதாக அவளுக்குத்
தோன்றவில்லை. தாம்பத்யம் எந்நிலையிலும் காக்கப்படவேண்டும் என தொன்று தோட்டு
வழங்கும் ஒரு தர்மம், நீதி நூல்கள், பெரியவர்கள், சமூகம் எல்லாம் ஏகோபித்து
சுமத்தியிருக்கும் ஒன்றை மீறிய அல்ல, தூக்கி எறிந்த அல்ல, வெறும்
கேள்விக்குள்ளாக்கிய சமாச்சாரமே கூட இது காறும் அம்பையின் கதைகளை வரவேற்றுப்
பரிசும் அளித்து வந்த பத்திரிகைகளுக்கு ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இருக்கவில்லை.
எனக்கு அது சிறப்பாக எழுதப்பட்ட ஒரு புதிய வாழ்க்கைப் பார்வையாக இருந்தது.
வாழ்க்கைப் பார்வை என்றால் ஏதும் லட்சிய உருவாக்கம் இல்லை. வாழும் வாழ்க்கைமீது,
மதிப்புகள்மீது கேள்விகள் எழுப்புவதாக இருந்தது. அந்தக் கேள்விக்கு ஏதும் பதில்
தரப்படவில்லை. கேள்வி எழுப்பப்பட்டதே சமூகத்தில் ஏற்படும் முதல் சலனம். ஆனால்
அந்தக் கேள்வி கேட்கும் உரிமை மறுக்கப்பட்டது வாழ்க்கையின் ஓட்டத்தை
மறுப்பதாகியது. இந்தக் கேள்வியும் எனக்கு அந்த சமயத்தில் ஒரு புதிய பாதையாக, ஒரு
புதிய குரலாகப் பட்டது. அதாவது சம காலத்தில். பாரதத்தில் வேண்டுமானால் திரௌபதி
கேட்டிருக்கலாம். தன்னையும் தன் சகோதரர்களையும் சூதாட்டத்தில் இழந்த பிறகு,
என்னைப் பணயம் வைப்பதற்கு எங்கிருந்து உங்களுக்கு அதிகாரம் வந்தது? என்று. மகா
பாரதத்தில் கேட்காத கேள்விகளா? புதுமைப் பித்தனின் சாப விமோசனம் கதையில் அகல்யை
சீதையைக் கேட்கிறாள், "ராமனா சொன்னான், உன்னை அக்னிப் பிரவேசம் செய்யச் சொல்லி?
"ஆமாம்", என்று பதில் சொல்ல, அகல்யை மீண்டும் கல்லாகிறாள், கௌதமனின் சாபம்
இல்லாமலேயே.
தில்லியில் நான் அனேகமாக தினம் மாலைப் பொழுதைக் கழிக்கும் இடம் அந்த சாப்ரு ஹவுஸ்
வட்டம் தான். அந்த வட்டத்தை மையமாகக் கொண்ட ஐந்தாறு சாலைகளில் தான் நாடக
அரங்குகளும், நடன அரங்குகளும், ஓவிய சிற்பக் காட்சிகளும், இலக்கிய அரங்குகளும்
நிறைந்திருக்கும். இப்போதைய சந்தர்ப்பத்தில், சாப்ரூ ஹவுஸில்
கே.என்.ராமச்சந்திரன் என்ற என் நண்பர் இருந்தார். க.நா.சு.வுக்கும் எனக்கும் அவர்
அரிய நண்பர். தீவிர இடது சாரி சிந்தனையாளர். மணி என்று அறியப்பட்ட ஓவியர்
சுப்பிரமணியத்தின் மருமகன். சாப்ரூ ஹவுஸில் School for International Studies-ன்
ஆராய்ச்சி மாணவர்களுக்கான தங்கும் விடுதி இருந்தது. அங்கு ஆராய்ச்சி மாணவராக
தங்கி இருந்த ராமச்சந்திரனின் அறைக்கு நான் அடிக்கடி செல்வதுண்டு. ஒரு நாள் அவர்
சொன்னார், "கணையாழியில் சிறகுகள் முறியும் என்று ஒரு கதை வந்திருக்கிறதாமே. அதை
எழுதிய அம்பை, அவரும் ஒரு ஆராய்ச்சி மாணவர், இங்கு தான் பெண்கள் தங்கும்
விடுதியில் இருக்கிறார். சந்திக்கலாமா?", என்றார். அடுத்த ஞாயிற்றுக் கிழமை
வருகிறேன், சாவகாசமாகப் பேசலாம் என்று சொல்லிச் சென்றேன். சந்தித்தோம். அந்த
ஹாஸ்டலின் பொது வரவேற்பரையில். அவருடைய எழுத்து எனக்குப் பிடித்திருந்ததாகவும்,
இனி அவர் பிரசுரத்திற்கு கவலைப் படவேண்டாம். கசட தபற என்று ஒரு மாதப்
பத்திரிகையுடன் எனக்குத் தொடர்புண்டு. இனி தயக்கம் இல்லாமல் நிறைய எழுதலாம் என்று
சொல்லிவிட்டு வந்தேன்.
பின் கதை ஒன்று அவர் எழுதி என்னிடம் கொடுக்க அது எனக்கு பிடித்தும் இருந்தது.
அம்மா ஒரு கொலை செய்தாள் என்ற அந்தக் கதையின் தலைப்பே அதிர்ச்சி தருவதான ஒன்று.
'பெரியவளாகி' நிற்கும் தன் கறுப்புப் பெண்ணை எந்த மாப்பிள்ளை ஏற்றுக் கொள்ளப்
போகிறான்? அவளை எப்படிக் கட்டிக் கொடுக்கப் போகிறோம் என்பது அம்மாவின் பெரும்
கவலையாகிப் போகிறது. "'உனக்கென்னடி இப்படி ஒரு அவசரம்? இப்படி எனக்கு ஒரு பாரமா
வந்து சேந்துட்டியே? எப்படீடி உன்னே கரை சேக்கப் போறேன்?" என்று அம்மா நொந்து
கொள்வது பெண்ணுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. ஆக, ஒரு வீட்டில் ஒரு பெண் என்பவள்
கல்யாணச் சந்தைக்கு தயாராக்கப் படும் ஒரு பொருள். அப்பொருள் சந்தையில் எல்லோரும்
ஏற்றுக்கொள்ளப்படும் பண்டமாக இருக்கவேண்டும். கறுப்பு நிறத்தவளாக இருப்பது ஒரு
பெண் பிறப்பிலேயே இழந்துவிட்ட முதல் தகுதி. இது தான் நடப்புண்மை என்ற போதிலும்
அது இப்படி குரூரமான வார்த்தைகளில் சொல்லப்படுவதில்லை. நம் குரூரங்களையெல்லாம்
பூசி மெழுக நம்மிடம் வார்த்தைகள் தானா இல்லை? போர்த்தி மறைக்க சம்பிரதாயங்களும்
தர்மங்களும் தான் இல்லையா என்ன?
"நாங்கள் வல்லினங்களாக்கும்" என்று உரத்த புதிய பிரகடனங்களோடு வந்த பத்திரிகை
கசடதபற. அதற்கேற்ப புதிய பார்வை கள், புதிய குரல்களுக்கான மேடையாக இருக்கவேண்டும்
அது என்று நான் விருப்பப் பட்டேன். ஆனால் அம்பையின் கதை உடன் பிரசுரம் பெறவில்லை.
ஏதோ ஆசிரியர் குழுக்குள் வாதப் பிரதி வாதங்கள், சர்ச்சைகள் நடப்பதாகத் தெரிந்தது.
இது போல் தான் இந்திரா பார்த்த சாரதியின் 'மழை' மேடையேறிய முதல் தமிழ் நாடகம்
அதன் நாடகப் பிரதியையும் கசட தபறவுக்கு அனுப்பி வைக்கச் செய்தேன். ந.முத்துசாமி
அதற்கு முன் நடையில் சில நாடகங்கள் எழுதியிருந்தாலும், அவை மேடையேறவில்லை.
நடையில் வெளிவந்த ந. முத்துசாமியின் காலம் காலமாக தான் முதன் முறையாக தமிழில் ஒரு
கனமான (serious) நாடக முயற்சி. அதை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து
தில்லியிலிருந்து வந்து கொண்டிருந்த ஒரே நாடக இதழான Enact-ல் வெளிவந்தது. ஆனால்
இங்கு கசடதபறவில் மழையின் பிரசுரத்திலும் தகராறு. மாதங்கள் பலவாயின. "இவன் யார்
தில்லியில் உட்கார்ந்து கொண்டு நம்மை ஆள்வதற்கு?" என்பது போன்ற ஒரு மனோபாவம்
அவர்களிடையே பரவியிருந்ததாகத் தெரிந்தது. பின் நான் வெறுப்புற்று
அப்பத்திரிகையுடன் என் பிணைப்பைத் துண்டித்துக் கொண்ட பிறகு தான் மழை, அம்பையின்
கதை, எல்லாமே பிரசுரமாயின. வேண்டா வெறுப்பாக ஏதோ நிர்ப்பந்தத்தில் பிரசுரமான
அந்தக் கதை இலக்கிய சிந்தனை என்ற அமைப்பின் பரிசு பெற்றது. எனக்கு அதில் மிகுந்த
சந்தோஷம். அதன் பிறகு கசடதபறவினரிடையே அம்பை ஒரு 'சினிமா ஸ்டார்' அந்தஸ்து பெற்று
விட்டார். தன் தமிழில் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய தன் ஆராய்ச்சியின் கள
ஆராய்வுக்காக அம்பை சென்னை சென்றிருந்த போது அவர்களைப் பார்க்கச் சென்றிருந்த
போது, ஏதோ த்ரிஷா அவர்களிடையே குதித்து "என்ன, எப்படி இருக்கீங்க?," என்று
புன்சிரிப்புடன் கேட்டு விட்டது போல, நிலை குலைந்து போய்விட்டார்கள். அந்தக் கதை
பின்னால் அவசியம் ஏற்பட்டால்.
இன்னொரு விவரத்தையும் சொல்ல வேண்டும். 1975-76-ல் என்று நினைக்கிறேன். அம்பையோடு
என் உறவில் ஒரு முறிவு ஏற்பட்டு வருஷங்களாகிவிட்டன. காரணம் எல்லாம் அந்தக் கதை
என்று நான் சற்று முன் சொன்னதன் தொடர்ச்சிதான். அம்பை அப்போது விஷ்ணுவை மணந்து
பம்பாய் சென்றாகிவிட்டது. தில்லியில் இருந்த க.நா.சு வுக்கும் கூட என்னோடு உறவு
கசந்து போயிருந்தது. அப்படிப்பட்ட நிலையில் தான் ஒரு நாள் திடீரென எனக்கு
க.நா.சுவிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது. Authors Guild of India வுக்காக
ஒரு சிறுகதைத் தொகுப்பு, இன்றைய தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பு அவரது பொறுப்பில்
வரவிருக்கிறதென்றும், அதற்கு நான் மூன்று தமிழ் எழுத்தளர்களையும் அவர்கள்
கதைகளையும் தேர்ந்து அவற்றை மொழிபெயர்த்தும் தரவேண்டும் என்றும் சொன்னார். இது
தான் க.நா.சு. இது நாம் மறந்துவிட்ட க.நா.சு. நம்மிடையே இல்லாத குணம். என்
எழுத்தாளர் தேர்வுக்கும், கதைகளின் தேர்வுக்கும், மொழிபெயர்ப்புக்கும் அவர் மாறு
சொல்லவில்லை. சொல்லவேண்டிய அவசியம் இல்லை. நான் தேர்ந்தெடுத்த மூன்று கதைகளில்
ஒன்று அம்பையின் அம்மா ஒரு கொலை செய்தாள். மற்றொன்றையும் சொல்லிவிடலாம். தர்மூ
சிவராமூவின் (பிரமிள்) சந்திப்பு. அப்போது சிவராமூ அழித்தொழிக்க கங்கணம்
கட்டிக்கொண்ட பிரகிருதிகளில் நானும் ஒருவனாகிவிட்டிருந்தேன். இந்த மொழிபெயர்ப்பு
பின்னால் தில்லியிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த மனுஷி என்ற ஆங்கில பெண்ணிய
பத்திரிகையில் வெளிவந்தது. அது எப்படி அப்பத்திரிகைக்கு கிடைத்தது என்பது
எனக்குத் தெரியாது எதற்காகச் சொல்ல வந்தேன் என்றால் அந்தச் சிறுகதை பல இடங்களில்
பரவலான கவனிப்புக்கு அன்றே ஆளானது என்பதைச் சொல்லத் தான்.
அம்மா ஒரு கொலை செய்தாள் என்ற தலைப்புத்தான் திடுக்கிட வைக்குமே தவிர, கதை ஒரு
குடும்பத்தில் நடக்கும் நிகழ்வையும் அது எம்மாதிரியான எதிர்வினைகளைப்
பிறப்பிக்கிறது என்பதையும் தான் சொல்கிறது. இவற்றில் ஏதும் பெண்ணியம் என்று
அடையாளப்படுத்தக்கூடும் அம்சம் எதுவும் இல்லை. ஆனால் இவை பெண் சார்ந்தவை.
இந்நிலைகள் பேசப்படாதவை. மௌனமாக சகித்துக் கொள்ளப்படுபவை. யாரும் கேள்விகள்
எழுப்புவது இல்லை. அம்பையின் எழுத்தில் அவை எடுத்துச் சொல்லப்பட்டன. கேள்விகள்
உள்ளுறைந்தவை. எழுப்பப்படாவிட்டாலும். இவை ஆரம்பங்கள். வரும் நாட்களில்தான் அம்பை
கேள்விகள் கேட்கத் தொடங்குவார் பின் வரும் எழுத்துக்களில். கசடதபற வுடன் என்
உறவைத் துண்டித்துக்கொண்டதும், அ· என்ற பத்திரிகை தோன்றியது. அதில் அம்பையின்
பயங்கள் என்ற நாடகம் வெளிவருகிறது. இதுகாறும் அம்பை நடப்பு வாழ்க்கையின் இயல்பை
சித்தரித்தாரே ஒழிய அதில் காணும் கேள்விகளை முன் வைத்தாரே ஒழிய, தன் பெண்ணிய
பாத்திரம் தன் சுதந்திரத்துடன் எப்படி செயல் படுவாள் என்று சொல்வதில்
முனையவில்லை. பயம் என்ற அந்த நாடகத்தில் தான் அம்பை ஒரு பெண்ணிய எழுத்தாளராக
காட்டிக்கொள்கிறாரோ என்று எனக்குத் தோன்றியது. நாடகத்தில் வரும் பெண்ணின் தேர்வு
இயல்பான தேர்வாகத் தோன்றவில்லை. அம்பை தந்த தேர்வோ என்று தோன்றும். ஆனால் அதில்
சீற்றம் இல்லை. தேர்வில் இருந்தது இரக்கம். பலமற்றவனும் தற்கொலை எண்ணங்களுக்கு
ஆட்பட்டவனுக்கு இரக்கப்பட்டு அவனைத் தேர்ந்து கொள்வது அசாதாரனமான ஒன்று.
அந்நாட்களில் தஞ்சை பிரகாஷ் என்னிடம் மிகவும் அன்னியோன்யம் கொண்ட நண்பர்.
வேடிக்கையும் சுவாரஸ்யமுமான மனிதர்.எழுத்தாளர் என்று தன்னைக் காட்டிக்கொள்ளாமல்
நிறைய எழுதித் தன்னிடமே வைத்துக்கொண்டார் என்பது பின்னர் தான் தெரிய வந்தது. அவர்
தான் புத்தக வெளியீட்டில் இறங்கப் போவதாகவும் அதற்கு என் ஆலோசனைகள் வேண்டும்
என்றார். அந்த சமயத்தில் அவருடையதோ என்னுடையதோ எழுத்துக்கள் எதுவும் புத்தகமாக
வெளிவரவில்லை. அம்பையின் பெயரைச் சொன்னேன். பின் அம்பையிடமும் தன் கதைகளை
பிரகாஷ¤க்கு அனுப்பச் சொன்னேன். அப்படித்தான் அம்பையின் இரண்டாம் கட்ட எழுத்தின்
முதல் சிறுகதைத் தொகுப்பு 'சிறகுகள் முறியும்"(1976) வெளிவந்தது. பிரகாஷ்
என்னுடையதோ அவருடையதோ எழுத்துக்களைப் பற்றிக் கவலைப் படவில்லை. மூன்று
புத்தகங்கள் வெளியிட்டார். அம்பையின் சிறகுகள் முறியும் தவிர கி.ராஜநாராயணனின்
சிறுகதைத் தொகுப்பு ஒன்றும், மூன்றாவது இப்போது என் நினைவில் இல்லை.
இப்போது தான் அம்பையின் தீவிர பெண்ணிய சிந்தனைகள் வெளிவரத் தொடங்கு கின்றன. அதைப்
பெண்ணியம் என்று அடையாளப்படுத்துவதில் அம்பைக்கு ஒப்புதல் இராது. அவர் தன்னைப்
பெண் எழுத்தாளர் என்று அடையாளப்படுத்துவதையே தீவிரமாக வெறுப்பவர். தன்னை
மட்டுமல்ல. வேறு எந்தப் பெண் எழுத்தாளரையும் தான். அவரது சிந்தனைகளும் பெண்ணிய
சிந்தனைகள் என்று லேபிள் ஒட்டுவதில் சம்மதம் இராது தான். ஆண்கள் தம் அதிகாரத்தில்
பெண்களைப் பிரித்து அவர்களுக்கென தனிப்பட்ட நியாயங்களையும் தர்மங்களையும்
உருவாக்கிக்கொடுத்துள்ளதை மறுப்பது, ஒரு ஒதுக்கீட்டை மறுப்பது, தனித்த லேபிளை
ஒட்டிக்கொள்வதாகாது. ஆண்கள் கறுப்பாக இருந்தால் அது பிரச்சினையே இல்லையா?
பெண்களுக்குத் தான் கறுப்பு ஒரு தகுதி இழப்பா? திராவிடக் கழகத்தவர்கள் கூட ஆரிய
மாயையிலிருந்து விடுபட்டதாக சொல்லிக்கொண்டாலும், அவர்கள் கதைகளில் வரும் பெண்கள்
எல்லோரும் செக்கச் சிவந்த அழகிகள் தான். அந்தக்காலத்து பொன்னி, இன்றைய குங்குமம்
இதழ்களில் யாரும் கறுப்பு அழகிகளைக் கண்டதுண்டா? பாரதி தாசன் கூட,
கோவைப் பழமும் சிவக்கும்,
கோதை இதழும் சிவக்கும்,
என்று சிவப்பின் கவர்ச்சியில் தான் தன் கவிதைப் பெருக்கைக் காண்கிறார்.
கண்ணகிக்குச் சிலை எழுப்பினாலும், புதுக் காவியம் எழுதினாலும், கற்பு
பெண்களுக்குத் தான். ஆண்களுக்கு அல்ல. அவர்களுக்கு பெண்கள் conquests. அந்த
எழுபதுகளின் enfant terrible ஆன ஜெயகாந்தன் ஆனந்த விகடனில் 'அக்னிப் பிரவேசம்'
எழுதி தமிழ் நாட்டையே புரட்சிக் கனலில் கொழுந்து விட்டெரியச் செய்தார். எவ்வளவு
மறுப்புகள், கண்டனங்கள் பெண்களிடமிருந்து!. "தலையில் தண்ணீரைக் கொட்டினால் அவள்
புனிதமாகிவிடுவாளா?" என்று கொதித் தெழுகின்றனர் தமிழ் நாட்டு கண்ணகித் தெய்வத்தை
ஆராதித்த பெண்கள். ஜெயகாந்தனும் மகிழ்ந்து போகிறார், தாம் விதைத்த புரட்சி
விதைகள் முளைவிட்டது கண்டது. அம்பையின் கேள்வி, அவள் ஏன் புனிதமாக்கப்
படவேண்டும்? இரண்டு பேர் சமுதாயம் வகுத்த வரம்பை மீறுகிறார்கள். ஆனால் பெண்தான்
புனிதம் இழக்கிறாளா? சம்பந்தப்பட்ட ஆண் தன் புனிதத்தை இழக்கவில்லையா? பின் ஏன்
அதைத் தொடர்ந்து எழுதப்பட்ட நாவலில் தன் புனிதத்தைக் கெடுத்தவனிடமே ஆசை கொண்டு
அலைகிறாள்? இது ஜெயகாந்தனின் ஆண். அந்தப் பெண்ணும் ஜெயகாந்தனின் கற்பனை தான்.
பாவை விளக்கு என்று அதற்குச் சில வருடங்களுக்கு முன் வந்த ஒரு மிகப் பிராபல்யமும்
பத்திரிகைக்கு வணிக வெற்றியும் தந்த ஒரு தொடர் கதை. அதில் ஒரு தொடர் கதை
எழுத்தாளர் தான் கதாநாயகர். அவரை நான்கு பெண்கள் காதலிப்பார்கள். இந்தக் கதையையே
ஒரு பெண் எழுத்தாளர் பாத்திரங்களை மாற்றி எழுதியிருந்தால் என்ன ஆயிருக்கும்?
இவரும் கற்பனைக் கனவுகளில் ஆழ்ந்தவர். Enfant terrible-ம் கற்பனைகளில் ஆழ்ந்தவர்
தான். பெண்களுக்கான இழந்த உரிமையைப் பற்றிப் பேச கற்பனைகள் தேவை இல்லை. அன்றாட
இயல்பு வாழ்க்கையிலேயே அடைக்கப்பட்ட குரலின் தவிப்பே இழந்த உரிமைகளுக்கான உரத்த
குரலும் ஆகும்.
அடக்கப்படும் பெண்களின் உரிமைக் குரல் தமிழ் நாட்டில் மாத்திரம் எல்லை கொண்டதல்ல.
அம்பையின் பிரயாணங்களும் வாசங்களும் அதை நாட்டின், கண்டங்களின் எல்லைகள் தாண்டி
விஸ்தரிக்கின்றன. ஒவ்வொருவரின் வாழ்நிலை மாறுபடலாம். ஆனால் ஆணாதிக்கம், சமூக
ஆதிக்கங்கள் ஒரு தளத்தில் ஒன்றுபடுகின்றன. வசதியான ராஜஸ்தான வீட்டில், பூரண
சுதந்திரம் என்பது பரந்த வீட்டின் ஒரு மூலை சமயலறையோடு முடிவடைகிறது. வங்காள
குடும்பங்களில் ஒரு தலைமுறையில் புடவைத் தலைப்பில் முடிந்து தொங்கும் சாவிக்
கொத்து, அந்த வீட்டு அரசியின் அதிகாரத்தைக் குறிக்கும். அதைப் பற்றி அவள்
கொள்ளும் கர்வமும், மற்ற இளம் பெண்கள் எப்போதும் தம் புடவைத் தலைப்பிற்கு
அச்சாவிக்கொத்து வரும் என்று காத்திருத்தலும் அவர்கள் சுதந்திரம்
குறுக்கப்பட்டுவிட்டதை சகஜமாக ஏற்றுக்கொண்டதையே சொல்லும். தம் பாதுகாப்புக்கு
என்று கட்டப்பட்டிருக்கும் தளைகள், தம்மீது கொண்டுள்ள அன்பின் நீட்சி என்று
மகிழும் பெண்கள், சிலி நாட்டிலிருந்து அகதிகளாக பர்மிங்காமில் வாழும் பெண்கள்,
பயங்கரவாதிகளாகப் பார்க்கப்படும் அவலம், ஒரு கொடுமையிலிருந்து இன்னொரு
கொடுமைக்கான தாவல், சித்தாந்தம் கூட விமோசனம் அளிப்பதல்ல, பலி கேட்கும்
சித்தாந்தமாகத் தான் ஆகிறது. பன்றியின் குதூகல வாழ்வு மரணத்துக்கான
காத்திருப்பாகிறது. பலி ஆடுகூட தலை சிலிர்த்துக் கொள்கிறதே. இந்த உலகம் விரிவது,
1988-ல் வெளி வந்த அம்பையின் இரண்டாவது தொகுப்பு வீட்டின் ஒதுங்கிய மூலையில் ஒரு
சமையலறையில். முதல் தொகுப்பு வெளிவந்து பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு. இதைப்
பற்றி நான் புதி தில்லி Economic Times (4.10.1992) -ல் எழுதியிருந்தேன். அந்தக்
கட்டுரையே பல மொழிகளில் வெளிவந்துள்ள பெண்ணிய குரல்களைப் பற்றிய ஒரு தொகுப்பில்,
Many Ideas, Many Literatures, New Critical Essays (World View Publications,
Delhi)-யிலும் இடம் பெற்றது.
வெகு வருடங்களாகி விட்டன. தொன்னூறுகளின் ஆரம்ப வருடங்கள் ஒன்றில் கதா
நிறுவனத்திற்காக சிறந்த தமிழ்ச் சிறு கதைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு
அம்பையினதாக இருந்தது என அந்நிறுவனத்தின் வெளியீட்டு விழா ஒன்றிற்குப் போனபோது
அங்கு அம்பை இருப்பதைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். 'ஹலோ' என்று
ஒருவருக்கொருவர் முகமன் சொல்லிக்கொண்டோம். பழைய கசப்பில்லை என்றாலும் ஏதும் சினேக
பாவத்தின் இதமும் இல்லை. இருவருக்குமே அது கஷ்டம் தான். பொய்யான இதங்களில்
அர்த்தமில்லை. அதில் எங்கள் இருவருக்குமே நம்பிக்கையும் இல்லை. எழுபதுகளின்
ஆரம்பத்தில் சாப்ரு ஹவுஸில் இருக்கும் போது பரத நாட்டியம் பற்றி என்னுடன் ஒரு
பேட்டி பதிவு செய்திருந்தீர்களே, அது எங்கோ அச்சில் வெளிவந்திருக்கிறது
போலிருக்கிறதே, அதன் ஒரு பிரதி எனக்குத் தரமுடியுமா? என்று அம்பை கேட்க, மறு நாள்
யாத்ரா இதழின் அப்பக்கங்களின் ஸெராக்ஸ் பிரதி எடுத்துக் கொடுத்தேன். 1973-ல்
நடந்த இந்தப் பேட்டி, 1983-ல் ஒரு யாத்ரா இதழில் தான் பிரசுர சாத்தியமாயிற்று.
இப்பேட்டியை மற்ற பேட்டிகளோடு உரையாடல்கள் என்னும் விருட்சம் பதிப்பக
வெளியீட்டுத் தொகுப்பில் பார்க்கலாம்.
அந்தப் பேட்டி பற்றிச் சொல்வது அம்பையின் பெண்ணியம்(?) எத்தகையது, அதன்
பரிமாணங்கள் என்னவென்பதையும் சொன்ன தாகும். தற்செயலாக அம்பையின் நாட்டிய
நிகழ்ச்சி ஒன்று நடக்க விருந்ததென்று பின்னர் தெரிந்தது. என்னில் பரதம் என்ற
நாட்டிய மொழியும் அதன் வெளிப்பாடும் ஒர் உறைந்த நிலையில் இருப்பதன் காரணங்கள்
பற்றி எனக்கு பல கேள்விகள் இருந்தன. அந்தப் பேட்டியில் நாங்கள் சந்தித்துக்
கொள்ளவே இல்லை. இடது சாரிக் கொள்கைகளின் தாக்கம் கொண்டிருந்த அம்பை. அவர்
சார்ந்திருந்த JNU வே இடது சாரிகளின் நாற்றங்காலாகத்தான் இருந்தது. என் நண்பர்
ராமச்சந்திரனையும் சேர்த்து. பெண்ணின் உரிமைகளை மீட்கும் அம்பை, 'அது என்ன எப்போ
பார்த்தாலும் நாயகனுக்காக ஏங்கித் தவிக்கும் நாயகியையே நாட்டியத்தில்
பார்க்கிறோம். ஏன் நாயகிக்காக தவிக்கும் நாயகனைப் பார்க்க முடிவதில்லை. நாயகனின்
சுகத்துக்காகப் படைக்கப்பட்டவள் தான் நாயகி என்பதாலா நாயகியின் ஏக்கம் தான்
நாட்டியத்தில் பேசப்படுகிறதா? நாட்டியத்தில் பேச வேறு விஷயங்கள் இல்லையா?'
என்றெல்லாம் (இந்த பேட்டியில் அல்ல) அம்பையின் கேள்விகள் எழுகின்றன. பாரதி
தாசனின் "துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா, கண்ணே நீ
இன்பம் சேர்க்கமாட்டாயா? என்ற பாட்டு அம்பைக்கு மிகவும் பிடிக்கும் தான். ஆனாலும்
ஒரு கேள்வி உண்டு அவரிடம். அதென்ன, அவள் யாழ் எடுத்து வாசித்து இவருக்கு என்ன
இன்பம் சேர்ப்பது? ஏன் அவளுக்கு துன்பம் நேரும்போது இவ்ர் யாழெடுத்து இன்பம்
சேர்த்தால் என்ன குறைந்து விடும்?" என்பது அம்பையின் கேள்வி. இப்படித்தான்
வாழ்க்கையின் எந்தத் துறையெடுத்தாலும் அங்கு பெறுவது ஆணின் உரிமையாக இருக்கும்.
கொடுப்பது என்பது பெண்ணின் கடமையாக இருக்கும். நம் இலக்கியம் பூராவும் ஆரம்ப
காலத்திலிருந்தே இத்தகைய மனோபாவத்தில் தான் எழுதப் பட்டிருக்கும். ஆண்டாள் பெண்.
அவள் பெருமாளுக்கு தன்னை இழப்பது சரி. ஆனால் திருமங்கை ஆழ்வாருக்கு என்ன
ஆயிற்று?. அவரும் பெண்ணாக தன்னை உருவகித்துக்கொண்டு பெருமாள் மேல் மையல்
கொள்கிறாரே? எங்கும் பெண் ஒரு போகப் பொருள். அவள் ஆணுக்கு இன்பம் தர உருவானவள்
என்பது காலம் காலமாக ஆண்டு வரும் ஒரு நம்பிக்கை. தர்மம். பெருமாளுக்கு ஏன்
தாமரைப் பாதம்? தாமரைப் பாதம் எப்படி இருக்கும்? ஓடி ஆடி அலைந்தால் தானே
புழுதியும் மண்ணும் படியும்? என்று சிந்தனை செல்லும். வீட்டில் சமைக்க பிடி அரிசி
கிடையாது. அடுத்த வீட்டிலிருந்து செல்லம்மாள் கடன் வாங்கி வந்த அரிசியை
குருவிக்கு இரைத்த கதை படித்தால், இதையே மாற்றி, பாரதி கடன் வாங்கி வந்த அரிசியை
செல்லம்மாள் குருவிக்கு வாரி இரைத்து, 'காக்கை குருவி எங்கள் ஜாதி" என்று பாட
ஆரம்பித்திருந்தால், என்னவாகியிருக்கும்? - என்று யோசனை போகிறது. ஆண் செய்தால்
அது கவித்வ வாழ்க்கை. செல்லம்மாள் செய்திருந்தால் பொறுப்பில்லாத்தனமோ
பைத்தியக்காரத்தனமோ ஆகியிருக்கும்.
இதன் பின் இரண்டு தொகுப்புகள் அம்பையினது வெளிவந்துள்ளன. காட்டில் ஒரு மான்
2000-லும் வற்றும் ஏரியின் மீன்கள் 2007-லும். அம்பையின் ஈடுபாடுகளும்,
பயணங்களும், வாழ்க்கையும் அவரை எங்கெங்கெல்லாம் இட்டுச் சென்றுள்ளன, எத்தகைய
பரந்த அனுபவங்களை அவர் கடந்து வந்துள்ளார் என்பது இக்கதைகளில் விரியும். எதுவும்
கற்பனையல்ல. பாத்திரங்களோ சம்பவங்களோ. அம்பை தனக்கென வரித்துக்கொண்ட வாழ்க்கை
(நானும் தாலி கட்டிக்கொள்ளாத கல்யாணமானவள் தான். குழந்தைகள் வேண்டாம் என்று
இருப்பவள்) எத்தகைய சிக்கல்களில் ஆழ்த்தும், அறிமுகமற்ற கூட்டத்தினரிடமிருந்து
கூட கிண்டலையும் கண்டிப்பான வேண்டாத அறிவுரைகளையும் வாரிக்கொட்டுவது ( பயணம்-1 )
கண்டு இரக்கப்படுவதா, சிரிப்பதா? இதையெல்லாம் எப்படி புரிய வைப்பது? அவர்கள்
கெட்டவர்கள் இல்லை. ப்ளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்....என்னும் கதை
எங்கு சென்றாலும், அமெரிக்கா போனாலும் கூட ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவில் சின்ன சின்ன
முருகன், அம்மன் வகையறாக்களாக நிறைய தெய்வங்கள். எடுத்துச் செல்லும் அம்மா,
அந்தச் சின்ன அற்ப ப்ளாஸ்டிக் டப்பாவை வைத்துக்கொண்டு போகுமிடமெல்லாம் ஒரு உலகையே
சிருஷ்டித்துக் கொண்டுவிடுகிறாள். மனம் விரிந்தால் எதுவும் பிரபஞ்சமாக விரியும்.
இது ஒரு வாழ்க்கை நோக்கு. பண்பட்ட மனதின் நாகரீகத்தின் வெளிப்பாடு. தன் அமைதிக்கு
தானே சிருஷ்டித்துக்கொண்ட ஒரு உலகம். பயணம் - 3 என்று ஒரு கதை. அம்மா
மல்லேஸ்வரத்தில் உள்ள கன்னிகாபரமேஸ்வரி ஆலயத்துக்குப் போவாள். அதே சமயம்
மெஜஸ்டிக்கில் இருக்கும் மாரியம்மன் கோயிலுக்கு வேலைக்காரியை அனுப்புவாள். தன்
சார்பில் படையலுக்கான எல்லா தயாரிப்புகளையும் செய்து கொடுத்து அனுப்புவாள்.
இரண்டும் அம்மன்களும் ஒன்று தான். ஆனால் பெயர்களே சொல்வது போல 'ஒன்று அவங்க சாமி.
மற்றது நம்ம அம்மன் கோயில்' இதில் வேலைக்காரி சின்ன பையனைக் கூட்டிச் சென்று
நடந்த ரகளை மிக ரசமானது. வாகனம் என்ற கதையில் நம் அன்றாட இயல்பான வாழ்க்கையிலே
கூட பெண்களுக்கென செய்யப்படும் ஒரு ஒதுக்கீடு, இது தான் அவர்களுக்கு, அதல்ல
அவர்களூக்கு என்ற ஒதுக்கீடு. நடக்கிறது எங்கும் என்றும். ஒரு நூற்றாண்டுக்கு
முன்னேயே மகரிஷி கார்வே தொடங்கிய பள்ளிக்கு சிறுமிகள் சைக்கிளில் வரத்
தொடங்கியாயிற்று. ஆனால் அது சரித்திர விவரம். புரட்சியின் தொடக்கத்துக்கு
அடையாளம். ஆனாலும் நம் வீட்டுச் சிறுமிக்கோ "சைக்கிள் பக்கம் போனே தெரியும் சேதி?
என்று மிரட்டல்கள் அண்ணாவிடமிருந்து. பிரசுரிக்கப் படாத கைப்பிரதி என்ற கதையில்
வரும் திரு என்னும் திருமகளும் சரி, மல்லுக்கட்டு கதையில் வரும் சண்பகமும் சரி,
சிறு வயதிலிருந்தே பழகிய போதிலும், ஒரே ஈடுபாடுகள் கொண்ட போதிலும், தானே விரும்பி
காதலித்து மனைவியாக்கிக் கொண்ட போதிலும் மனைவி தன்னை விடத் திறமையானவள் என்பதை
ஒப்புக்கொள்ள மனம் வருவதில்லை. ஆண் ஆளப் பிறந்தவன் அல்லவா, வலியவன் அல்லவா?
அய்யாவின் காலத்தில் "உன்னை மீறி அவ போயிட்டாடா" என்று அய்யா பாராட்டிய சண்பகம்,
இப்போது தான் பாடும்போது மேடையில் தன்க்குப் பின்னால் இருந்து கொண்டு ஒரு
கனைப்புடன் சமிக்ஞை காட்டும் போது சூடான பால் எடுத்துக் கொடுக்கும் நிலைக்குத்
தள்ளப்படுகிறாள். சங்கீதமோ, இலக்கியமோ, அவள் திறமைகளை இருட்டடிப்புச் செய்து தான்
பிரகாசிக்க வேண்டும் என்று ஆணுக்கு நினைக்கத் தோன்றுகிறது. ஒரு காலத்தில் தேவ்
ஆனந்து - சுரையா(திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டு விடவேண்டுமென்ற நிபந்தனை
தடையாயிற்று), அமிதாப் பச்சன் - ஜெயா பாதுரி, கஜல் பாடும் தம்பதிகள்
(திருமணத்திற்குப் பிறகு மனைவி பாடுவதை நிறுத்தியாயிற்று )- பெயர் நினைவுக்கு வர
மறுக்கிறது. அம்ஜத் அலி கானை மணந்ததும், தன் நாட்டியத்தை ஒதுக்கி நல்ல
மனையாளாகிவிட்ட சுப்பலக்ஷ்மி. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். திருமகளும்
சரி, சண்பகமும் சரி, கணவனின் பொறாமைக்கும் அதிகாரத்துக்கும் அடி பணிய
வேண்டியவர்களாகிறார்கள். எதற்காகச் சொன்னேன் என்றால் இவர்கள் ஏதும் கற்பனையில்
பெண்ணின் ஏற்றத்துக்காக உருவாக்கப் பட்டவர்கள் இல்லை. எனக்குத் தெரிந்த கால
நிரூபணங்களில் சில இவை.
ஒன்றிரண்டு கதைகள் என்னை நெருடத்தான் செய்கின்றன. ஒரு இயக்கம், ஒரு கோப்பு, சில
கண்ணீர்த்துளிகள் கதையில் வரும் குமுத் பென் புவா. தன் சிறு வயதில் விதவையாகி
வந்தவள். இந்த வீட்டில் வளர்ந்து, அடுத்த தலைமுறை குழந்தைகளை வளர்த்து
பெரியவர்களாக்கியவள். தமாலை ஏற்றுக் கொண்டவள். தமாலுக்கு மீன் பிடிக்கும் என்று
முகம் சுணங்காமல் சமைத்துப் போடுபவள். வீட்டில் வளரும் நாயை, 'அர்ஜுன் பேட்டா"
என்று அழைத்து பூஜைப் பிரசாதத்தைக் கொடுப்பவள். இப்படி அவளைப் பற்றிய
சரித்திரத்தைச் சொல்லி, ஒரு கட்டத்தில் மதக் கலவரத்தில் ஊரி பற்றி எரியும் போது,
உடன் வந்த முஸ்லீம்களை உள்ளே வராதே என்று சொல்கிறாள். அப்போது அவள் கண்களைப்
பற்றி இந்த விவரணை தரப்படுகிறது.
"அவை அத்தையின் கண்கள் அல்ல. மங்கி வரும் அந்தியின் வெளிச்சத்தில் தெரு விளக்கின்
மஞ்சள் ஒளியில் அவை ஒர் ஓநாயின் கண்கள் போல் ஒளிர்ந்தன." எவ்வளவு சீக்கிரம்
திடீரென, தன் சிறுவயதிலிருந்து இங்கு வளர்ந்த அத்தை, தங்களை வளர்த்தெடுத்த அத்தை,
அர்ஜுன் பேட்டாவுக்கு பூஜை பிரசாதத்தைக் கொடுக்கும் அத்தை, தமாலுக்கு மீன்
சமைத்துக் கொடுக்கும் அத்தை, ஒரு நொடியில் ஒநாயாகிவிடுகிறாள். இது அத்தையில்
காணும் மாற்றமா? அல்லது அப்படி மாறிவிட்டதாகச் சொல்பவரில் காணும் மாற்றமா? சில
இடங்களில் காணும் நெருடல்களுக்கு இது ஒரு உதாரணம் மாத்திரமே. சண்முகத்தின்
மாற்றத்தையும் (மல்லுக்கட்டு) முத்துக் குமரனின் மாற்றத்தையும்(பிரசுரிக்கப் படாத
கைப்பிரதி) நாம் புரிந்து கொள்கிறோம். கதையிலேயே அதற்கான தடயங்கள் இருக்கின்றன.
ஆனால் புவா வின் மாற்றம் வலுக்கட்டாயமாகக் காணும் மாற்றமாகத் தோன்றுகிறது.
அம்பையின் எழுத்துக்களில் பெண்ணிய உலகம் சித்தாந்தத்தில் உருவாகி தரப்படுபவை
அல்ல. இயல்பான, நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையில் காணும் மனிதர்களும்,
சம்பவங்களும், நாம் பேணும் தர்மங்களும் தான் இவை. நான் ஒரு feminist இல்லை என்று
இந்திரா காந்தி சொல்வார். அவரிடம் அவர் தந்தையிடம் காணப்படாத மனத் திடமும் செயல்
தீரமும் காணப்பட்டன. வீர முழக்கங்கள் தேவை இல்லை. வலிந்த உரத்த குரல்கள் தேவை
இல்லை. வாழ்ந்து வரும் வாழ்க்கை தானே தன் குணத்தை வெளிப்படுத்திக் கொள்ளும்.
அம்பைக்குப் பிறகு இப்போது எழுதி வருபவர்களின் இயல்பான வாழ்க்கைச்
சித்தரிப்பிலேயே பெண்ணிய பார்வை தானே வெளிப்படுத்திக் கொள்ளும். சிவகாமியின்
பழையன கழிதல் நாவலில் கௌண்டர்களின் சாதி அதிகார வெறியை எதிர்க்கும் காத்தமுத்து,
தனக்கென ஒரு அந்தபுரத்தை உருவாக்கி விஸ்தரித்துக்கொள்வதில் ஏதும் தவறு
காண்பதில்லை. பாமாவின் கருக்கு கான்வெண்டில் கழித்த வாழ்க்கையைச் சொல்லும்
சுயசரிதை. இமையத்தின் செடல், பொட்டுக்கட்டப்பட்ட தலித் சிறுமி. ஆனால் அவள் அதை
ஏற்க மறுக்கிறாள். தன் வாழ்க்கையைத் தானே தீர்மானித்துக்கொள்கிறாள்.
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. செடல் கற்பனையல்ல, தான் சந்தித்த ஒரு ஜீவன்
என்கிறார். இமையம் இதற்குப் பெண்ணிய லேபிளோ தலித் லேபிளோ ஒட்டவில்லை.
அம்பை கதைகள் அதிகம் எழுதுவதில்லை. சுமார் 40 வருடங்கள் நீண்ட எழுத்து
வாழ்க்கையில் அவர் எழுதியது அதிகம் இல்லை. தமிழ் பெண் எழுத்தாளர்களின் எழுத்து
பற்றி ஆராயத் தொடங்கிய அவர் இப்போது கதைகள் எழுதுவதை விட பல துறைகளிலும்
வாழ்க்கைத் தடங்களிலும் பெண்கள் சாதனைகளையும் அவர்கள் எதிர்கொண்ட நிலைகள்
பற்றியுமான ஆவணங்கள் உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார். பெரிய சாதனையாளர்களான
பாடகிகள் கூட எளிதில் தம் சிகரத்தை எட்டி விடவில்லை. ஆண்களை விட அவர்கள் நிறைய
தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கிறது. அதன் சில காட்சிகள் தான் மேலே சொன்ன
பிரசுரிக்கப்படாத கைப்பிரதி, மல்லுக்கட்டு போன்ற கதைகளில் நாம் காண்பது. 84
வயதில் எம்.எஸ் சுப்புலக்ஷ்மி பாரத் ரத்னா ஆகியிருக்கலாம். உயர்ந்த சிகரங்களை
எட்டியிருக்கலாம். ஆனால் அது சுலபத்தில் கிட்டியதில்லை. அவருக்கு பக்க வாத்யம்
வாசிப்பது தமக்கு அந்தஸ்து குறைவு என்று பலர் மறுத்த காலம் ஒன்று இருந்தது.
பெண்ணாக பிறந்திருந்தும் சங்கீதம் கற்றுக்கொள்ள குடும்பத்தில் நிறைய எதிர்ப்பு
இருந்ததென்று (எம்.எல் வசந்தகுமாரி என்று ஸ்ருதியில் படித்த நினைவு) தெரிகிறது.
சினிமா உலகில் நடிகைகள் படும் பாடு நமக்குத் தெரிந்தது மிகக் குறைவு. இரண்டு
நடிகர்கள். ஒரு நடிகை. புகழின் உச்சத்தில் இருப்பவர்கள். நடிகை நடிகரில் ஒருவரைத்
திருமணம் செய்துகொள்கிறாள். இருப்பினும் மனம் செய்து கொண்ட இருவரும் ஒன்றாக
உட்கார்ந்திருக்கும் போது, இரண்டாவது நடிகர் அருகில் சென்று, "என்னம்மா
இப்போல்லாம் நம்மைக் கவனிக்க மாட்டே ங்கறயே" என்று சொல்லி அருகில் உட்கார்ந்து
கொள்கிறார். நடிக தம்பதிகளுக்கு உள்ளுக்குள் புழுக்கம். புகார் செய்த நடிகர் போன
பிறகு, "இப்பவும் இவன் என்ன திமிரோட இங்கே வந்து இப்படி பேசுவான்?" என்று
பேசிக்கொள்கிரார்களே தவிர அந்த பெரிய நடிகருக்கு முன்னால் எதுவும் சொல்ல
முடியவில்லை. சினிமா உலகில் பெண்கள் என்றால், நக்ஷத்திரங்களானாலும் அவர்கள்
'available" என்ற நினைப்பு.
அம்பை என்றால் பெண்ணிய சீற்றம் என்று பொருள் அல்ல. ஒரு சாந்தமும் அதில் உண்டு.
தமிழின் பெண்ணிய குரல் என்று சொல்லி வருவனவற்றைக் கேட்டால், பெண்மையை மறுப்பதோ
என்று தோன்றும். சாத்வீகம், சாந்தம், நளினம் எல்லாம் புரட்சிக்கு எதிரானவையோ
என்று தோன்றும்.
"பித்தளைச் சரிகையோடிய பளீர்ப் பச்சை சின்னாளம்பட்டிப் புடவை, அடிக்கடி வரும்
நீலத்தில் சிகப்புக் கரையிட்ட அம்மாவின் பழைய பட்டுப் புடவை, ஓளிர் மஞ்சளில்
கறுப்புக் கட்டம் போட்ட கைத்தறிப் புடவை என்று சில புடவைகள் உண்டு மருதாயிடம்.
விசேஷ நாட்களில் உடுத்த. அவற்றில் ஒன்றை உடுத்திக்கொண்டு, எல்லாப் புடவைகளுக்கும்
பொதுவாக இருந்த கறுப்பில் சிவப்புப் புள்ளியிட்ட ரவிக்கை அணிந்து கொண்டு
ஷெட்டிலிருந்து வெளியே வருவாள். மீனாட்சிக்கு சிவப்பில் மஞ்சள் புள்ளி போட்ட
பாவாடை அல்லது ஊதாவில் பச்சைத் தாரகைகள் போட்ட பாவாடை ஒன்றை இடுப்பில்
கட்டியிருப்பாள், தொப்பிளுக்குக் கீழே. பாவாடைக்கு மேல் உள்ள ரவிக்கை
இடுப்புக்குச் சற்று மேலேயே நிற்கும். ஈரக் கூந்தலுடன், மஞ்சள் பூசிய முகமும்,
பெரிதாகக் குங்குமம் இட்ட நெற்றியுமாய் மருதாயி மீனாட்சியின் கையைப்
பிடித்தபடி..... " என்று வேலைக்காரி கெம்பம்மா மாரியம்மன் கோயிலுக்குப் போகும்
காட்சியை அம்பை சொல்லும் போது படிக்கவே சந்தோஷமாக இருக்கிறது. இப்படி நிறைய நீண்ட
பகுதிகள் உண்டு ஆங்காங்கே. எந்த சித்தாந்த வழிப்பட்ட பெண்ணியவாதியின் எழுத்தில்
இத்தகைய காட்சியைக் காண்கிறோம்?. எல்லா திராவிட கழக, பாட்டாளிப் புரட்சிக்கு
எழுத்தாளர்களின் வரட்சியே நம்மை ஒதுங்கி நகர்ந்து செல்லப் நிர்ப்பந்திக்கும்.
வரட்சியில் தான் சித்தாந்தத்தின் வலு உறைகிறதோ என்னவோ. இசையிலும்,
நாட்டியத்திலும், கவிதைகளிலும் ஈடுபாடுள்ள அம்பையின் எழுத்தில் ஜியா மொய்னுதீன்
டாகரின் பிலாவலும், அடிக்கடி மீரா பஜனைப் பாட்டுக்களும், பீம்சேன் ஜோஷியும்
இடையிடையே வந்து போவது சகஜம்.
தனக்கு மறுக்கப்பட்ட இடத்தைக் கேட்கும் பெண், வாழ்க்கையின் நளினங்களையும்,
அழகுகளையும் வண்ணங்களையும் தன்க்கு மறுத்துக் கொண்டுதான் குரல் கொடுக்கவேண்டும்
என்றிருக்கிறதா என்ன?
15.4.09
vswaminathan.venkat@gmail.com |