இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2008 இதழ் 99  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!
நினைவுகளின் தடத்தில் (5 & 6)!


- வெங்கட் சாமிநாதன் -

வெங்கட் சாமிநாதன்எப்போதோ யாரோ எழுப்ப கண்விழித்தபோது, ஒரு ஹரிகேன் விளக்கும் கையுமாக, அம்பி வாத்தியாருடன் மாமா நின்று கொண்டிருந்தார்.  "எழுந்திருடா, வா போகலாம், அம்மா வந்திருக்கா" என்றார். கோபம் இல்லை அவர் முகத்தில். குரலில் சீற்றம் இல்லை. வெகு சாதாரண பாவத்தில் பொழுது விடிந்து விட்டதைச் சொல்லி எழுப்பும் பாவனையில் சொன்னார். அம்பி வாத்தியார் தான் திட்ட ஆரம்பித்தார். 'அறிவு இருக்காடா உனக்கு? ஏன் சினிமா பாத்துத் தான் ஆகணுமோ? ராஜாவைப் பாத்தியா? அவன் ஒன்னைப் போலவா
இருக்கான்?  புத்தி வேணும்டா? வீட்டை விட்டு ஓடறதுக்கு நேரம் பாத்தே பாரு, அம்மா ஊருலேருந்து வந்திருக்கப்போ. மாமாவப் பத்தி
என்ன நினைச்சுப்பா? கொஞ்சமாவது நினைச்சுப் பாத்தியா? அம்மா ஊரிலேருந்து வந்ததும் வராததுமா அழுதுண்டு உக்காந்திருக்கா? போ.
போய் சினிமாவுக்கு காசு குடுக்கலேன்னு ஒடினேன்னு சொல்லு உங்கம்மா கிட்ட" அவர் நிறுத்தவில்லை. திட்டிக்கொண்டே வந்தார்.
இடையில் "எல்லாம் நீங்க கொடுக்கற இடம் சார், அதான் இப்ப்டி கெட்டுப் போறான். நானா இருந்த வச்சு நாலு சாத்தற சாத்திலே,
சினிமான்னு மூச்சு விடமாட்டான்." என்று மாமாவைப் பாத்தும் சொல்லிக்கொண்டே வந்தார். என்னைத் திட்டுவதற்கு அவர் உரிமை
எடுத்துக் கொள்வார். மற்ற சமயங்களில் அவர் செல்லமாக கிண்டலும் செய்வார். பள்ளிக்கூடத்தில் அவர் எங்களுக்கு சொல்லிக்கொடுக்க
வரும்போது மற்றவர்கள் சிரிக்க கிண்டலும் செய்வார். 'சரிப்பா அம்பி, விடு போறும். அப்பறம் இதுக்கு வேறே கோவிச்சுண்டு நாளைக்கு
வேறே என்கேயாவது ஓடினான்னா நான் எங்கேன்னு போய் தேடுவேன். அவன் அம்மா வந்திருக்கா? நல்லபடியா போகணும்" என்று
மெல்லிய குரலில் தன் வேதனையைச் சொல்லி வந்தார். அம்மா ஊரிலிருந்து வந்திருக்கிறாள் என்று எனக்குத் தெரிந்தது அப்போது தான். அம்மா ஒன்றும் சொல்ல மாட்டாள் என்றாலும், அவள் ஊரிலிருந்து வந்திருக்கும் போது, என்னை பாட்டியும் மாமாவும் ஏதோ
குழந்தையைக் கொடுமைப்படுத்தித் தான் நான் வீட்டை விட்டே ஓடிவிட்டேனோ என்று நினைத்துவிடுவாளோ என்ற பயம் இருவருக்குமே இருந்திருக்கும். அந்த வேதனையில் மாமாவால் என்னைத் திட்டக் கூட முடியவில்லை என்று நான் அதைப் பற்றியெல்லாம் பின்னர் நினைத்துப் பார்க்கும்போது தோன்றும். ஆனால் நடு ராத்திரியில் எங்கெங்கோ தேடி கடைசியில் பார்க்கில் அகப்பட்டது அவர்களுக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கும். ஆனால் அது வரை அவர்கள் எத்தனை வேதனைக்குள்ளாகியிருப்பார்கள் என்றெல்லாம் எனக்கு அப்போது நினைத்துப் பார்க்கமுடியவில்லை. என் துக்கம் எனக்கு. என்னால் சினிமா பார்க்க முடியவில்லை. அன்றுதான் கடைசி நாள். அது போய்விட்டது. இனி அது வருமா என்ன? வீட்டை விட்டு ஓடியும் பிரயோஜனமில்லாது போய்விட்டது. மாமாகிட்டவும் அம்பி வாத்தியார் கிட்டவும் திரும்பவும் மாட்டிக்கொண்டாய் விட்டது. இப்போ ஒன்றும் செய்ய முடியாது. அம்மாவும் ஊரிலேயிருந்து வந்திருக்கிறாள். அவளும் திட்டுவாள். இப்போது வழி நெடுக அம்பி வாத்தியார் திட்டிக்கொண்டு வருகிறார்.

நடராஜன் என்று பெயர் இருந்தாலும் அவரை எல்லோரும் 'அம்பி' என்று தான் அழைப்பார்கள். பள்ளிக்கூடத்திலும் மற்ற
வாத்தியார்களும் பையன்களும் அவரை 'அம்பி வாத்தியார்' என்று தான் குறிப்பிடுவார்கள். ஆனால் அவரை மாமாவைத் தவிர வேறு
யாரும் 'அம்பி' என்று அழைத்து நான் கேட்டதாக நினைவு இல்லை. நாங்கள் இருந்த தெருவில் சில வீடுகள் தள்ளி அவர் வீடு இருந்தது.
நல்ல தாட்டியான சரீரம். நல்ல உயரம். மாமாவுக்கு உதவியாக இருப்பார் எப்போதும். ஏதும் உதவி தேவையானால், மாமா அவரைத்
தான் கூப்பிடுவார். அவருக்கு மாமா 'ஸார்' தான்.

எல்லோரும் விழித்துக் கொண்டு இருந்தார்கள். நான் அகப்படுகிறேனோ என்னவோ, எங்கே போனேனோ என்று அவர்களுக்கு கவலை இருந்திருக்கும். அம்மாவும் பாட்டியும் ஆளுக்கு ஆள் மஞ்சள் துணியில் காசு முடிந்து ஸ்வாமிக்கு வேண்டிக் கொண்டிருப்பார்கள். 'நல்ல படியா பிள்ளை திரும்பி வரணுமே, பகவான் தான் காப்பாத்தணும். இப்படி ஒரு புள்ளே கஷ்டப்படுத்துமோ'.

வீடு வங்ததும், 'பார்க்கிலே படுத்துண்டு இருந்திருக்கான். நடு ராத்திரிலே வேறே எங்கே போவான். நல்லபடியா வந்து சேந்துட்டான்.
ஒண்ணும் சொல்லாதேங்கோ. நிம்மதியா தூங்குங்கோ இனிமே. நாளைக்குப் பாத்துக்கலாம், சார் நான் வரேன்" என்று சொல்லிக்கொண்டு அம்பி வாத்தியார் தன் வீ ட்டுக்குத் திரும்பினார். "ஏண்டா இப்படி படுத்தறே? கதி கலங்க வச்சிட்டயே" என்று பாட்டிதான் வேதனையோடு சொன்னாள். "வா, வந்து கொஞ்சமாவது சாப்பிட்டு படுத்துக்கோ, உனக்காக யாருமே சாப்படாம கொட்டு கொட்டுனு முழிச்சிண்டுருக்கா" வேறு யாரும் எதுவும் சொல்லவில்லை. இரவு வெகு நேரம் ஆகிவிட்டது.

அப்போது தீராத என் துக்கங்கள் எனக்கு. எனக்கென்று பெரிய ஆசைகள் ஏது இல்லையென்றாலும், ரொம்பவும் அடக்கமான பையன் என்று எல்லோரும் சொன்னாலும், சில சமயங்களில் எனக்கும் கூட சில ஏக்கங்கள் வந்து மாமாவை ரொம்பவும் கஷ்டப் படுத்தியிருக்கிறேன் என்பது பின்னாட்களில் எனக்கு உறைத்தது.

மாமாவின் வாழ்க்கை ரொம்பவும் வேதனைகள் நிறைந்தது. சில சாதாரண, இயல்பான எதிர்பார்ப்புகள் கூட அவருக்கு
நிறைவேறியதில்லை. வறுமை. பொறுப்புக்களை நிறைய தன் சக்திக்கு மீறி தன் மீது சுமத்திக் கொண்டார். அவரால் ஓரளவுக்கு மேலே
அப்பொறுப்புக்களை சமாளிக்க முடிந்ததில்லை. அவர் இயல்பில் மிக சாதுவான மனிதர். வெளியே யாரோடும் அவர் சத்தமிட்டுப்
பேசியோ, முரண்டு பிடித்தோ, சண்டை யிட்டோ பார்த்ததில்லை நான். ஆனால், வீட்டில் அவருக்கு வேதனை மிகும்போது அசாத்திய
கோபம் வரும். முன் கோபி. பின்னால் வருந்துவார். அவர் கோபம் வந்துவிட்டால் அந்தக் கணங்களில் அவர் தான் என்ன செய்கிறோம்
என்பதே அவருக்கே தெரியாது போய்விடும்.

எங்கள் தெரு 'ட' வடிவில் இருக்கும். அந்த 'ட'வின் இரு கோடுகளின் சந்திப்பில் எங்கள் வீடு இருந்தது. தெருவின் ஒரு கோடி
பெரியகுளம், வத்தலக்குண்டு போகும் மெயின் ரோடில் போய்ச் சேரும். இன்னொரு கோடியில் ஒரு பிள்ளையார் கோயில். சின்ன ஒரே
ஒரு அறையே கர்ப்பக்கிரஹமாகக் கொண்ட கோயில். அதில் பிள்ளையாருக்குத் தான் இடம் இருந்தது. அது எப்படி எங்கள் பராமரிப்பில் வந்தது என்று எனக்குத் தெரியாது. சாவி எங்களிடம் இருக்கும். தினம் கோவில் கம்பிக் கதவைத் திறந்து, ஒரு குடம் தண்ணீர் பிள்ளையார் மீது கொட்டி அவரைக் குளுப்பாட்டி, விளக்கேற்றி வரவேண்டும். இது தினம் மாலை நடக்கும்.

ஒரு நாள் மாலை மாமா, '"போடா, கோவிலைத் திறந்து ஸ்வாமிக்கு விளக்கேத்திட்டு வாடா," என்று சொன்னார்: பித்தளைக் குடம்
ஒன்று சின்னதாக நான் தூக்கக்கூடியது. அதில் தண்ணீர் நிரப்பிக்கொண்டேன். ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெய். இடைகழிச் சுவற்றில் எனக்கு எட்டும் உயரத்தில் தான் கோவில் சாவியும் தீப்பெட்டியும் இருக்கும். ஒரு கையில் தண்ணீர் நிரப்பிய குடம். மற்றொரு கையில் எண்ணெய்க்கிண்ணம். எண்ணெய்க் கிண்ணக்கையோடு உயர இருந்த சாவியையும் தீப்பெட்டியைம் எடுத்தேன். என் சாமர்த்தியம் எனக்கு உதவவில்லை. கிண்ணம் சாய்ந்து எண்ணெய் கீழே சிந்தியது. அதை மாமா பார்த்துவிட்டார். 'ஒரு காரியம் உனக்கு ஒழுங்கா செய்யத் தெரியுமாடா கழுதே" என்று சத்தமிட்டுக் கொண்டே வந்தவர், கிட்ட வந்தது தான் தெரியும். அடி விழுந்தது. சரமாரியாக அடித்துக் கொண்டே இருந்தார். குடத்தைக் கீழே வைத்தவன் அடி தாங்காமல் கீழே விழுந்தேன். அப்படியும் அவர் கோபம் அடங்கவில்லை. காலால் உதைத்தார். அடி விழுவதும் நிற்கவில்லை. இதற்குள் என் அலறலையும் மாமாவின் கூச்சலையும் கேட்டு புறக்கடையில் இருந்த பாட்டி ஓடி வந்தாள். மாமாவைப் பார்த்து சத்தம் போட்டாள், "ஏண்டா இப்படி அவனைப்போட்டுக் கொல்றே. இப்படியாடா ராக்ஷசன் மாதிரி. ஒன்னுக்கொன்னு எதாவது ஆயிட்டதுன்னுடா என்னடா பண்றது" என்ரு பாட்டியும் சத்தம் போட ஆரம்பித்தாள். "உனக்கொண்ணும் தெரியாது. நீ பேசாம இரு. நீ செல்லம் கொடுத்துக் கொடுத்துதான் அவன் ஒண்ணுக்கும் இல்லாமே போயிண்டு இருக்கான்." என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது எனக்கு அடி விழுவது நின்றது. 'சரி போறது போ" எண்ணெய் என்ன கொஞச்ம் போறத்தானே சிந்தியிருக்கு. போடா, வேறே எண்ணெய் விட்டுத் தரேன். போய் விளக்கேத்திட்டு வா, போ" என்று பாட்டி அந்த இடத்தை விட்டு என்னை விரட்டினாள்.

எனக்கு அன்று விழுந்த அடி மாதிரி அங்கு மாமாவோடு இருந்த பன்னிரெண்டு வருஷங்களில் என்றும் விழுந்ததில்லை. மாமா முன்
கோபக் காரர் தான். ஆனால் வெகு சீக்கிரம் அவர் கோபம் அடங்கிவிடும். கொஞசம் சத்தம் போடுவார். இரண்டு அடி கொடுப்பார். பின் சரியாகிவிடும். ஆனால் அன்று, கொஞ்சம் எண்ணெய் சிந்தியதற்கு நான் பட்ட அடியும் உதையும் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. "என்னடா அப்படி ஆயிடுத்துன்னு இப்படி போட்டு கொல்றே. செங்கல் தரையிலெ கொஞ்சம் எண்ணெய் சிந்தினாக் கூட அது வழிஞ்சி பரவிடும். ஏதோ வீசை எண்ணெய் போயிட்டாப்பலே. படாத இடத்திலே பட்டா என்ன ஆகும்" என்று பாட்டி திருபத் திரும்ப மாமாவைத் திட்டிக்கொண்டே இருந்தாள். மாமாவோ, "நீ பேசாமே இரேன்.உனக்கொண்ணும் தெரியாது போ" என்று தான் அவர் பதில்
சொல்லிக்கொண்டிருந்தார்,.

மறு நாள் காலை மாமா பேப்பர் வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தார். சின்ன மாமா எஸ் எஸ் எல் ஸி பரி¨க்ஷ எழுதிய ரிசல்ட்
வந்திருந்தது. அம்பி வாத்தியார் வந்து கொண்டிருந்தார். வீட்டுப் படி ஏறிக்கொண்டே, 'என்ன சார், பேப்பர் பாத்தேளா, சாமா நம்பரைக்
காணோமே, நான் தான் சரியாப் பாக்கலையா, உங்க பேப்பர்லே இருக்கா" என்று கேட்டுக் கொண்டே படி ஏறினார். அவர் சாமா என்று
சொன்னது என் சின்ன மாமாவை. சின்ன மாமாவின் பெயரும் சுவாமிநாதன்.


"எந்த பேப்பரைப் பாத்து என்ன? போயிடுத்து. போயிடும்னு நேத்திக்கே எனக்குத் தெரிஞ்சுடுத்து" என்று வெகு தீனக்குரலில் சுரத்தின்றி
மாமாவிடமிருந்து பதில் வந்தது. "நேத்திக்கே தெரியுமா? " என்று ஒன்றும் புரியாத திகைப்பில் கேட்டார், அம்பி வாத்தியார்.

- நினைவுகளின் தடத்தில் (6)

சிறுவயதில் நடந்த விஷயங்கள், சந்தித்த நண்பர்கள் இப்படி பலவற்றில் ஒரு சில மிக பசுமையாக, ஏதோ கண்முன் நேற்று நடந்து போல் நினைவில் இருக்கின்றன. பல மறந்து விடுகின்றன. நேற்று நடந்த விஷயங்கள் எவ்வளவு தான் நினைவைக் கிளறிப் பார்த்தாலும் ஞாபகத்திற்கு வருவதில்லை. பின் எப்போதாவது வேறு சிந்தனையில் இருக்கும் போது, தேடாத இந்த நினவுகள் மனதில் பளிச்சிடும். மனித மனது எப்படித்தான் செயல்படுகிறது, அல்லது செயல்பட மறுக்கிறது என்பது ஒரு புரியாத புதிர். ரஸ்ஸல் வேடிக்கையகச் சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது. அவர் சொன்னார்; மனவியல் அறிஞர்கள் (psychologists) மனது என்ற ஒன்று கிடையாது என்று வெகு தீர்மானமாகச் சொல்கிறார்கள். அதேசமயம் பௌதீகவியல் (physicists) அறிஞர்களும் தம் தரப்புக்கு பொருள் (matter) என்று ஏதும் கிடையாது என்று. இந்த விஞ்ஞானிகள் எதைப் பற்றி வாழ்நாள் முழுதும் ஆராயகிறார்களோ, அதுவே இல்லை என்றால்..... எதை ஆராய தம் வாழ்நாளைச் செலவிட்டார்கள் என்று கேட்க நமக்குத் தோன்றும். இப்படி மனோவியல் அறிஞர்களும் பௌதீக
விஞ்ஞானிகளும் சொல்வது தையல்காரர்கள் இந்த ஊரில் யாருமே உடை அணிவதில்லை, நிர்வாணமாகத்தால் செல்கிறார்கள் என்றும்,
செறுப்புத் தைக்கிறவர்கள், எல்லோரும் வெறுங்காலோடு தான் நடந்து செல்கிறார்கள் என்று சொல்வது போல இருக்கிறது என்று
வேடிக்கையாகக் கூறுவார். வேடிக்கை தான் ஆனால் அது உண்மையும் கூட. அது பற்றிப் பின்னர். இப்போதைக்கு மனது என்ற புதிர் பற்றி.

எதற்காகச் சொல்லவந்தேன் என்றால், எது இக்காலத்தில் நம் அரசியலின், சமூகத்தின் குரல் வளையைப் பிடித்து பயமுறுத்திக்
கொண்டிருக்கிறதோ, எது எல்லோர் பிரக்ஞையையும் முழுதாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறதோ, அது என் சிறுவயதுப் பிராயத்தில்
இருந்ததில்லை. அது ஒரு பெரிய விஷயமாகவே இருந்ததில்லை. எங்கள் நண்பர் குழு ஒன்றில் ஒருவர் எல்லோரையும் நோக்கி ஒரு
கேள்வி கேட்டார். "உங்கள் குழந்தை படிக்கும் பள்ளிக்கூடத்தில், வகுப்பில் ஒரு தாசியின் குழந்தையும் சேர்க்கப்பட்டால் என்ன
செய்வீர்கள்? " அப்போது நான் சொன்னேன், "குழந்தைகள் எல்லாமே குழந்தைகள் தானே?" என்று. அப்போது உடனே எனக்கு மனதில்
பட்ட பதிலைச் சொன்னேன். யோசிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏதும் ஆராய்ச்சிக்கான விஷயமும் இல்லை. பிறகு ஒரு நாள் கழித்துத்தான் எனக்கு அது என் சிறுபிராய அனுபவத்தில் நடந்ததைச் சொல்லியிருக்கலாம் என்று.

எங்கள் வகுப்பில், என் ஞாபகத்தில் அது ஏழாவது படிக்கும் போது என்று சொல்லவேண்டும். இரண்டே இரண்டு பெண்கள் தான்
இருந்தார்கள். அவர்கள் தனியாக ஒரு பெஞ்சில் உட்கார்வார்கள். வகுப்பில் சுமார் 30 பையன்கள் இருக்கலாம். நான் ஒரு பெஞ்சில்,
கடைசி என்று சொல்லும் படிக்கு பின் வரிசையில் ஒன்றில். எங்கள் பெஞ்சில் நாலு பேர். அவர்களில் ஒருவன் அங்கண்ணன் என்று
பெயர் என்று ஞாபகம். நல்ல உயரம். கறுப்பு. அவன் ஒரு தலித், இன்றைய சொல்லாடலில். என் வகுப்பிற்கு வாத்தியார் என் மாமா
தான். அவர் தான் ஹெட்மாஸ்டரும். நாங்களை அவன் தலித் என்று அறிந்து கொண்டது, பெயரை ஊரை அல்ல்து இது போல பல
விவரங்களை அறிந்து கொண்டது போலத் தான். அதற்கும் மேல் உள்ள அர்த்தங்கள் எங்களுக்குச் சொல்லப்படவுமில்லை. நாங்கள்
அறிந்து கொண்டதுமில்லை. யாரும் அவனை தலித் என்று சொல்லி வித்தியாசமாக நடத்தியது கிடையாது. நல்ல உயரம் என்பதும்,
அடிக்கடி ஒவ்வொரு வகுப்பிலும் அவன் இரண்டு வருடங்களாவது தங்கி விடுவான் என்பதும் தான் முக்கிய தகவல்கள். அப்படி ஒரு
வருடத்திற்கு மேல் அதே வகுப்பில் தொடர்வது என்பது பல மாணவர்களுக்கு சகஜமான விஷயம். அங்கண்ணன் கொஞ்சம் அதிகம் ஒரே வகுப்பில் தங்கி விடுவான்,. அவ்வளவே.

ஒரு முஸ்லீம் மாணவனும் எங்களுடன் படித்தான். அப்துல் வஹாப் என்று பெயர். அவனுடைய வீடு பள்ளிக்குப் போகும் வழியில்
நீண்ட தெருவின் மத்தியில் இருக்கும். அப்துல் வஹாபின் அப்பா வீட்டின் முன் ஒரு கட்டிலில் உட்கார்ந்திருப்பார். நல்ல பாரியான
உடம்பு. துருக்கிக்காரர் மாதிரி பின்னால் ஒரு குஞ்சம் தொங்கும் தொப்பி ஒன்றை எப்போதுன் அணிந்திருப்பார். அவர் லேவா தேவி
செய்து வந்தார். முஸ்லீம்கள்கடனுக்கு பணம் கொடுத்து வட்டி வாங்கிப் பிழைப்பது ஹராம் என்று இஸ்லாத்தில் நம்பப்படுகிறது. ஆனால் நான் சிறு வயதில் பார்த்த முதல் முஸ்லீமின் தொழிலே அதாகத்தான் இருந்தது. நிலக்கோட்டையில் நான் அதிகம்
முஸ்லீம்களைப்பார்த்ததில்லை. ஆனால் மெயின் ரோடை விட்டு உள்ளே தள்ளிச் செல்லும் ஒரு சந்தின் நடுவில் பள்ளி வாசல்
இருந்தது. ஏதோ ஒரு முஸ்லீம் பண்டிகையின் போது தெருவில் புலிவேஷம் ஆடுவதை நான் பார்த்திருக்கிறேன். வேறு எந்தத்
திருவிழாவிலும் புலிவேஷம் ஆடி நான் பார்த்ததில்லை. ஒரு சமயம் நாங்கள் விளையாடிக்கொண்டிருந்த போது அப்துல் வஹாப்
என்னைத் துரத்த நான் ஓட, ஒரு மண்மேட்டின் அருகே அவன் என்னைப் பிடித்து விடுவான் போலிருக்க நான் சட்டென அந்த மேட்டைச் சுற்றி வளைந்து ஓடினேன். அவன் கால் சருக்கி குப்புற விழுந்து அவன் முன் பற்கள் உடைந்து ரத்தம் கொட்ட விழுந்து கிடந்தான். நான் பயந்து விட்டேன். நான் தான் தள்ளி விட்டேன் என்று சொல்வார்கள், மாமா அன்று என்னைத் துவைத்து எடுத்துவிடுவார் என்று பயந்து கிடந்தேன். ஆனால் ஆச்சரியம், அப்படி ஒன்றும் நடக்கவில்லை. மாமாவும் பயந்து தான் இருந்தார். அப்துல் வஹாபின் அப்பா வந்து என்ன ரகளை நடக்கப் போகிறதோ என்று. பின்னால் எனக்குச் சொன்னார்கள். வாத்தியார் வீட்டுப் பிள்ளைதானே. ஏதோ விளையாட்டிலே இப்படி ஆகிப் போயிருச்சி. சரி விடுங்க" என்று சொன்னாராம். இன்னொரு பையன் பழனிச்சாமி. 'சாமிநாதா, நான் எட்டாம்புக்கு மேலே படிக்கப் போறதில்லே. எங்க ஐயா சொல்லிட்டாரு" என்று மிக சந்தோஷமாகச் சொல்வான். ஏன் என்று கேட்டதற்கு, "அதுக்கு மேலே படிக்கிறதுக்கு ரொம்ப மூளை வேணுமாம். பத்தாம்புக்கு போனாலே ஒவ்வொத்தருக்கு படிச்சுப் படிச்சு மூளையே கெட்டுப் போயிருமாம்" என்று சொல்வான்.

நான் முக்கியமாகச் சொல்ல வந்தது எங்கள் வகுப்புப் பெண்களைப் பற்றி. ஒருத்தி பெயர் சௌந்திரம் என்று நினைக்கிறேன். எங்கள்
பள்ளிக்கூட மானேஜர், அல்லது கரஸ்பாண்டண்ட்டின் பெண். சௌராஷ்டிரர். மதுரை ஆர்.வி.மில்லின் நூல் ஏஜென்சி. அவர்கள் எங்கள் பள்ளியை நடத்தும் ஒரு குடும்பத்தின் மூன்று சகோதரர்களில் ஒருவர். மாறி மாறி அவர்கள் பள்ளிக்கு மானேஜராக இருப்பார்கள். நான் இருந்த காலத்தில் அந்த குடும்பம் தான் நிலக் கோட்டையிலேயே பணக்கார குடும்பம். அவர்கள் வசித்த தனித்தனி வீடு ஒவ்வொன்றும் பெரிய மாளிகை என்று சொல்லவேண்டும். அந்தப் பணக்கார சௌந்திரத்தோடு ஒட்டி உட்கார்ந்திருந்த இன்னொரு பெண் பெயர் ராம திலகம். மிக அழகானவள். கருப்பு நிறம் தான். என்றாலும் கருப்பு என்று குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கறுப்பு இல்லை. ஆனால் அழகி. அவள் ஒரு தாசி குடும்பத்தைச் சேர்ந்தவள். அப்படியென்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியாது. வகுப்பில் அவர்கள் இருவரே இருந்ததால், இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் இருவரும் வகுப்புத் தோழிகள். அவ்வளவே. மேலும், தாசி என்றால், ஏதோ ஒரு குலம், அல்லது உத்யோகம், என்பதற்கு மேல் அந்த பெயர் எங்களுக்கு எந்த அர்த்தத்தையும் கொடுத்ததில்லை. இந்த விவரமும் எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியாது. எனக்குத் தெரியும். ஏனெனில் அவள் 'ட' வடிவத்தில் இருக்கும் எங்கள் தெரு என்று சொன்னேனே, எங்கள் வீடு அந்த 'ட' வின் இருகோடுகளின் சந்திப்பில் இருந்தது. ராமதிலகம் வத்தலக்குண்டு போகும் ரோடைத் தொடும் கோட்டின் நடுவே குளத்தை நோக்கி இருக்கும் வீட்டில் இருந்தாள். அவள் அம்மாவோ, பாட்டியோ ஒரு கிழவியோடு. அதற்கு அடுத்த வீட்டில் ஒரு இளம் பெண். அவ்வப்போது டூரிங் சினிமா நான் சொன்ன பேட்டையில் முகாமிட்டால், அதன் முதலாளி, அங்கு தான் தங்குவார். கழுத்தில் கையில் தங்க செயின். மல் வேஷ்டி. கறுப்பு தான், ஆனால் ஆணழகன் என்று சொல்லவேண்டும். என் மாமா கூட வீட்டில் யாருடனோ பேசும் போது அவரைப் பற்றி, "நல்ல மனிதர் தான். மரியாதை தெரிந்தவர். ஆனால், என்னவோ இப்படி ஒரு பலஹீனம்.." என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்

ராம திலகம் இருந்த எங்கள் தெருவின் நீட்சியில் அவள் வீடு நடுவில் இருந்தது என்றேன். அதன் இரு பக்கங்களிலும் முதலில் இரண்டு வீடுகளில் இரண்டு முஸ்லீம் குடும்பங்கள் இருந்தன. அவற்றில் முதல் வீட்டின் முன் ஆடு ஒன்று கட்டியிருக்கும். பின் ராமதிலகம் வீடு. பின் ஒரு இளம் பெண் இருந்த வீடும். அதற்கு அடுத்த வீட்டில் ரெவென்யூ இன்ஸ்பெக்டர். அதற்கு அடுத்த வீட்டில் அடிக்கடி யார் யாரோ வாடகைக்கு வந்து போவார்கள்.

எங்கள் தெருவின் பெயர், வெங்கடேஸ்வர அல்லது வெங்கடேச புர அக்கிரஹாரம். எது என்று நிச்சயமாக ஞாபகமில்லை. அந்த பெயர்
வீண் தான். ஒரு சமயம் ஒரு தகரத் துண்டில் தெருப் பெயர் எழுதி சுவற்றில் ஆணி அடித்துச் சென்றார்கள். ஆனால் அந்தத் தெருப்
பெயரை யாரும் எங்கும் உபயோகித்தது கிடையாது. பெயரை எழுதி, ஹெட்மாஸ்டர், நிலக்கோட்டை என்று எழுதினால் தபால் வந்து
சேர்ந்து விடும். நிலக்கோட்டையில் வீட்டு எண், தெருப் பெயர் என்பதெற்கெல்லாம் ஏதும் அர்த்தம் கிடையாது. எங்கள் வீட்டின் எதிரே ஒரு சாரியில் ஒரு பெரிய வீடு காம்பௌண்டு சுவர் அடைக்க இருக்கும். அது எப்போதும் எங்கள் ஊருக்கு மாற்றலாகி வரும் சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கு என்று தீர்மானமாகிய வீடு. ஸ்ரீ ராமவிலாஸ் சர்வீஸோ அல்லது கொடைக்கானல் மோட்டார் யூனியன் (ஜெயராஜ் நாடார் என்பவர் நடத்தி வந்தது) பஸ்ஸோ, சர்க்கிள் இன்ஸ்பெக்டர் டூர் போகிறார் என்றால் அவர் வீட்டுக்கு முன்னால் வந்து பஸ் நின்று காத்திருக்கும். டிவிஎஸ் வண்டி வராது. அவர் வீட்டு வேலைக்கு என்று ஒரு ஏட்டையாவோ, கான்ஸ்டபிளோ இருப்பார். அவர் தினம் காலையில் ஷ¥வை பாலிஷ் செய்து கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். தினம் ஒரு பஸ் காலையில் அவர் வீட்டின் முன் வந்து நிற்கும். பஸ்ஸின் மேலேயிருந்து இரண்டு குடங்கள் வந்திறங்கும். அவை நிலக்கோட்டையிலிருந்து 22 மைல் தூரத்திலிருக்கும்
பெரிய குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து வந்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வீட்டில் கொடுக்கும். அந்த வீட்டு காம்பவுண்டை அடுத்து ஒரு வெட்ட வெளி. அதன் ஒரு ஓரத்தில் ஒரு குடிசை. அதில் நாகு என்று அழைக்கப்பட்ட வற்றிய உடம்பும் ஏழ்மையின் வடிவே ஆன ஒரு ஸ்திரி. அவள் புருஷன் நல்ல தாட்டியான மனிதன். அவன் குடிசைக்கு வரும்போதெல்லாம் சண்டை தான், கூச்சல் தான். ஆனால் அவன் எப்போதாவது தான் காட்சியளிப்பான். நாகு தான் எந்நேரமும் ஏதோ செய்து கொண்டே இருப்பாள். அத்தோடு யாரையாவது வைது
கொண்டும் இருப்பாள். அவள் ஆடு வளர்த்தாள். ஊரெல்லாம் சுற்றி சாணி பொறுக்கி வரட்டி தட்டி பிழைத்து வந்தாள். அவள்
குடிசையைச் சுற்றி இருக்கும் சிதைந்து கிடக்கும் நீளக் குட்டிச் சுவரில் எப்போது வரட்டிகள் காய்ந்து கிடக்கும். அவள் குடிசைக்கு எதிரே, எங்கள் தெருவின் மறு சாரியில் நடுவே ஒரு பாழடைந்த வீடு இருக்கும். அதில்தான் அவள் வரட்டிகள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்.

இதற்கு எதிர்த்த சாரியில் ஒரு பெரிய வீடு. அது நான் முன் சொன்ன எஸ்.ஆர். ராமய்யர் என்னும் எங்கள் பள்ளிக்கூடத்தை ஸ்தாபித்து
நிர்வகித்து வந்த சௌராஷ்டிர குடும்பத்தின் மூத்த சகோதரர் வாங்கிப் போட்டிருந்த வீடு. அந்த வீட்டில் எப்போதாவது தான் ஒரு பெரிய
அதிகாரி வாடகைக்கு வந்து தங்குவார். ஒரு சமயம் ஒரு சப் கலெக்டர் வாடகைக்கு இருந்தார். அவர் ஒரு வில் வண்டியில் தான்
பயணம் செய்வார். பசு மாடு, வில்வண்டிக்கான மாடு எல்லாம் அந்த வீட்டின் ஒரு பக்கத்தில் இருந்த கொட்டகையில் கட்டியிருக்கும்.
அதற்கு அடுத்த ஒரு சின்ன வீட்டில் தான் நடராஜன் என்னும் அம்பி வாத்தியார் இருந்தார், ஒரு வயோதிக அப்பா அம்மாவோடு, இரண்டு
தம்பிகளோடும். அவர் வாங்கிய 19 ரூபாய் சம்பளத்தில் எப்படி காலம் தள்ளினாரோ என்று இப்போது நான் திகைக்கிறேன். அடுத்து ஒரு
பெரிய வீடு. இன்ஸ்பெக்டர் ஆ·ப் ஸ்கூல்ஸ் இருந்த வீடு. அடுத்து ஒரு வாத்தியார் வீடு. ஒரு சமயம் நாராயண அய்யர் என்று ஒரு
வாத்தியார் இருந்தார். பின் வெட்ட வெளி. பின் நாகு பயன் படுத்திய பாழடைந்த வீடு. அந்த வீட்டில் சில சமயங்களில் பகல்
வேஷக்காரர்கள் வந்து தங்குவதுண்டு. தினம் ஒரு வேஷம் போட்டுக்கொண்டு வருவார்கள். அவ்வப்போது ஏதாவது கேட்பார்கள். அல்லது கடைசியில் ஊர் விட்டுப் போகும் போது அவர்களுக்கு ஏதோ கொடுப்பார்கள். அந்த நாற்பதுக்களுக்குப் பிறகு நான் வேறு எங்கும் இப்படியான பகல்வேஷக்காரர்கள் என்று கேட்டதுமில்லை. பார்த்ததுமில்லை. அதை அடுத்து மறுபடியும் ஒரு வாத்தியார் வீடு. ரங்கநாதன் என்றோ அல்லது ரங்கசாமி என்றோ பெயர். எனக்கு ஆறாம் வகுப்பு வாத்தியாராக இருந்தார். அது தவிர அவர் பாட்டும்
சொல்லிக்கொடுப்பார். ஊரின் மற்றொரு கோடியில் வெகுதூரத்திலிருந்த பெருமாள் கோவில் பாட்டராச்சாரியார் குடும்பமோ என்னவோ இரண்டு சிறுமிகள் வந்து பாட்டுச் சொல்லிக்கொண்டார்கள். அத்தெருவின் நடுவே ரோட்டைப் பார்த்தவாறு பிள்ளையார் கோவில்.  தெருவின் மறுகோடியிலிருந்த நாங்களும் பிள்ளையாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்போம்.

vswaminathan.venkat@gmail.com

© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner