- வ.ந.கிரிதரன் -
இலக்கியத்தில் ஜனரஞ்சக இலக்கியம் அல்லது வெகுசன இலக்கியம் எனக் கூறப்படும் பிரிவுக்கும் முக்கியத்துவமுண்டு. ஒருவரின் வாசிப்பு அனுபவமென்பது எடுத்த எடுப்பிலேயே தீவிர இலக்கிய வாசிப்புக்குத் தாவி விடுவதில்லை. ஒரு குழந்தை எவ்விதம் தவழ்ந்து, எழுந்து, தத்தித் தத்தி நடை பயின்று வளர்கின்றதோ அது போல் தான் வாசகரொருவரின் வாசிப்பனுவமும் இருந்து விடுகிறது. கருவிலிருக்கும்போதே ஒரு குழந்தை தாயிடம் கதை கேட்க ஆரம்பித்து விடுகிறது. அதன்பின் தாயானவள் அம்புலி காட்டிப் பாற்சோறு ஊட்டும்போது கதை கேட்கிறது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தை இலக்கியம், சிறுவர் இலக்கியம், சனரஞ்சக இலக்கியம், தீவிர இலக்கியமென அந்தக் குழந்தையானது தனது வளர்ச்சியுடன் வாசிப்பனுவத்தையும் பெருக்கிக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு படைப்பாளியுமே தன் சொந்த அனுபவத்தையொருமுறை நனவிடை தோய்ந்து பார்ந்தால் இதனுண்மை புலப்பட்டு விடும். இலக்கியத்தில் பல்வேறு பிரிவுகளுள்ளதுபோல் வாசகர்களிலும் பலவேறு பிரிவினர் இருக்கிறார்கள். எல்லோருடைய இலக்கியப் பசிக்கும் தீனி தேவை. அவரவர் நிலைக்கேற்ப ஒவ்வொருவரும் தங்களது இலக்கியப் பசியினை ஆற்றிக் கொள்கின்றார்கள். என் சொந்த அனுபவத்தை எடுத்துக் கொண்டால் ஒரு காலத்தில் என் வாசிப்பனுவம் எவ்விதம் வெகுசன இலக்கியத்தினூடு பின்னிப் பிணைந்து வளர்ந்து வந்ததென்பதை 'பிள்ளைப் பிராயத்திலே..' என்னுமிக் கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ளலாம். இக்கட்டுரையினை என் வலைப்பூ அல்லது
வலைப்பதிவுக்காக எழுதியிருந்தேன். இக்கட்டுரை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழ் இலக்கிய உலகை ஆட்சி செய்து கொண்டிருந்த வெகுசன இலக்கியவாதிகள் பற்றியதொரு குறுக்குவெட்டாகவுமிருக்கும். அவர்களை நினவை கூர்ந்ததாகவுமிருக்கும். என்னைப் பொறுத்தவரையில் வெகுசன இலக்கியமென்பது என் பால்யகாலத்து அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்ததொன்று. ஒரு சிலர் வெகுசன இலக்கியமென்றாலே அதனைப் பற்றி கதைப்பதென்றாலே ஏதோ ஓரிலுக்கு என்பது போல் நடந்து கொள்கின்றார்கள். 'காப்கா', 'போர்ஹே', 'கார்சியா' என்று கதைப்பதன் மூலம் தங்களை உயர்த்திக் கொள்ளலாமென எண்ணுவது போல் நடந்து கொள்கின்றார்கள். இவர்களில் பலர் வெகுசன இலக்கியத்தினூடுதான் நிச்சயமாக வளர்ச்சியடைந்திருப்பார்கள். அவர்களது பால்யகாலத்தின் வாசிப்பனுவமென்பது பெரும்பாலும் வெகுசன இலக்கிய வாசிப்பனுவமாகத்தான் அநேகமாக இருந்திருக்கும். சில விதிவிலக்குகளுமுண்டு. எல்லோரும் சுந்தரராமசாமியைப் போல் எடுத்த எடுப்பிலேயே தீவிர இலக்கிய வாசிப்புக்குத் (?) தாவி விடுவதில்லை. என் பாலயகாலத்து அனுபவத்தையும், அன்றைய வாசிப்பனுவததையும் பிரதிபலிக்கும் என் வலைப்பதிவில் வெளிவந்த 'பிள்ளைப் பிராயத்திலே...' கட்டுரை கீழே.
அப்பொழுது நான் வவுனியாவில் என் பெற்றோருடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். வவுனியா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தேன். என் அம்மாவும் அங்குதான் ஆசிரியையாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்பொழுதுதான் நான் எழுத்துலகில் மெல்ல மெல்ல காலடி வைத்துக் கொண்டிருந்தேன். எனது 'பொங்கல்' பற்றிய சிறுவர் கவிதையொன்றினை 'பொங்கலோ பொங்கல்' என்னும் தலைப்பில் சுதந்திரன் தனது பொங்கல் மலரில் பிரசுரித்திருந்தது (இறுதியில் அச்சிறுவர் கவிதையினை நீங்கள் வாசித்து மகிழுங்கள்). உயர்வகுப்பு மாணவர்களுக்காக ஈழநாடு வாரமலர் நடாத்திய 'தீபாவளி இனித்தது' என்னும் கட்டுரைப் போட்டிக்காக ஆறாம் வகுப்பு மாணவனாக நான் இனிக்க இனிக்க எழுதி அனுப்பிய கட்டுரையினைப் பிரசுரிக்கா விட்டாலும் பாராட்டி என்னைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தது ஈழநாடு. ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம், தினமணிக் கதிர், அம்புலிமாமா, பொம்மை, பேசும்படம், தினமணி, ராணி, ராணுமுத்து, மற்றும் ஈழத்துப் பத்திரிகைகளான சுதந்திரன், ஈழநாடு, அந்தனிசிலின் 'தீப்பொறி' என்று வீடு முழுவதும் பத்திரிகை, சஞ்சிகைகளால் அப்பா நிறைத்து வைத்திருந்தார். அனைத்துச் சஞ்சிகைகளினதும் தீபாவாளி மலர்களையெல்லாம் அப்பா வாங்கியிருந்தார். அவை தவிர பொன்மலர், பால்கன், வேதாள மயாத்மாவின் இந்திரஜால் காமிக்ஸ் எனப் பல்வேறு 'காமிக்ஸ்' வெளியீடுகளையும் அப்பா மறந்திருக்கவில்லை. ஆழநடுக்காட்டிலிருந்துகொண்டு அற்புதங்கள் புரியும் வேதாள மயாத்மாவின் சித்திரக் கதைகள் அன்றைய காலகட்டத்தில் எனக்குப் பிடித்தவையாக விளங்கின. இவை தவிர ராஜாஜியின் 'வியாசர் விருந்து' (மகாபாரதம்), 'சக்கரவர்த்தித் திருமகன்' (இராமாயணம்), சேக்கிழாரின் பெரியபுராணம், பாரதியார் கவிதைகள் என மேலும் பல நூல்கள்.
நான் அம்புலிமாமாக் கதைகளிலிருந்து அன்றைய ஜனரஞ்கக எழுத்தாளச் சிற்பிகளின் படைப்புகளுக்குள் என்னை மெல்ல மெல்ல மூழ்கடிக்கத்த தொடங்கியிருந்தேன். அப்பொழுது கல்கியில் தொடராக வெளி வந்து கொண்டிருந்த பொன்னியின் செல்வனின் முதற்பகுதியின் இடைப்பகுதியிலுள்ள ஓர் அத்தியாயத்தின் மூலம் தொடர்கதைகளை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அந்த அத்தியாயத்தில் சம்புவரையரின் மகனான கந்தமாறன் முதுகில் குத்தப்பட்டு விடுகின்றான். நண்பனான வந்தியத்தேவந்தான் அதனைச் செய்ததாக அவன் சந்தேகமடைகின்றான். அத்தியாயத்திற்கு அத்தியாயம் ஆர்வத்தைத் தூண்டும் மர்ம முடிச்சுகளுடனும், நகைச்சுவையுடனும் கல்கி பொன்னியின் செல்வனைப் படைத்திருந்தார். அந்நாவலில் வரும் வந்தியத்தேவன் பாத்திரம், பூங்குழலி, பாத்திரம், ஆழ்வார்க்கடியான் பாத்திரம், குந்தவை பாத்திரம், வானதி பாத்திரம் இவை எல்லாமே நன்கு வாசிப்பவர்கள் மனதை விட்டகலா
வண்ணம் படைக்கப்பட்டிருந்தன. சம்புவரையரின் அரண்மனையில் நடக்கும் முக்கியமானதோர் அரசியல் ஆலோசனைக் கூட்டத்தினை நள்ளிரவில் மறைந்திருந்து அவதானித்துக் கொண்டிருக்கும் வந்தியத்தேவன், அச்சமயம் மதில்மேலாக எட்டிப்பார்த்து அவற்றைக் கவனிக்கும் ஆழ்வார்க்கடியான், 'அலை கடலும் ஓய்ந்திருக்க, அகக் கடல்தான் பொங்குவதேன' எனப் பாடிக்கொண்டே ஓடத்தை ஓட்டிச் செல்லும் பூங்குழலி, நிதானமும், அறிவும் நிறைந்த குந்தவைப் பிராட்டியார், எதற்கெடுத்தாலும் பயந்து மயங்கும் கொடும்பாளூர் இளவரசி வானதியென இன்றும் கூட மறக்க முடியாத வகையிலான பாத்திரங்கள். நாவலில் வரும் சம்பவங்களைக் கூடச் சுவையாகக் கல்கி விபரித்திருப்பார். ஒரு முறை குடந்தை சோதிடரிடம் குந்தவைப் பிராட்டியாரும் கொடும்பாளூர் இளவரசியும் சோதிடம் கேட்கச் சென்றிருப்பார்கள். அப்பொழுது குந்தவைப் பிராட்டியாருக்குச் சோதிடம் பார்க்கும் சோதிடர் அவளது வருங்காலக் கணவன்பற்றிக் குறிப்பிடும்போது 'கூரையைப் பிய்த்துக் கொண்டும் வருவான்' எனக் குறிப்பிடுவார். அச்சமயம் வழக்கம்போல் ஏதோவொரு சிக்கலுக்குள் மாட்டிகொண்டு வரும் வாணர்குலத்து இளவரசன் வந்தியத்தேவ்ன் அரக்கப் பரக்கப் புயலென சோதிடரின் குடிசைக்குள் நுழைவான். அப்பொழுது சோதிடர் கூறியதையும் அவனது வரவினையும் ஒப்பிட்டு நோக்கி ஆராயும் குந்தவை பிராட்டியாரின் இதழ்களில் மெல்லியதொறு முறுவல் படரும். ஓவியர் வினு அதற்கொரு அழகான ஓவியம் வரைந்திருப்பார். எம்மிதழ்களிலும்புன்னகையினைத்
தோற்றுவிக்கும் சம்பவம். இதுபோல் பற்பல சம்பவங்களை அழகாகப் பின்னி அந்நாவலைக் கல்கி படைத்திருந்தார்.
'பொன்னியின் செல்வனை'த்தவிர அப்பொழுது நான் விரும்பி வாசித்த ஏனைய படைப்புகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்: பி.வி.ஆரின் 'மணக்கோலம்', 'கூந்தலிலே ஒரு மலர்', ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்', நா.பார்த்தசாரதியின் 'குறிஞ்சி மலர்', 'பொன் விலங்கு', 'நித்திலவல்லி', 'பாண்டிமாதேவி' அகிலனின் 'வேங்கையின் மைந்தன்', 'கயல்விழி', சாண்டியல்யனின் 'ராஜமுத்திரை', ஜெகசிற்பியனின் 'கிளிஞ்சல் கோபுரம்', 'காணக்கிடைக்காத தங்கம்', 'ஜீவகீதம்', 'சொர்க்கத்தின் நிழல்', 'நந்திவர்மன் காதலி', 'மதுராந்தகி'. கலைஞரின் 'ரோமரிப் பாண்டியன்'. உமாசந்திரனின் 'முள்ளும் மலரும்' இன்னுமொரு மறக்க முடியாத படைப்பு. அதே உமாசந்திரன் ஆனந்த விகடனில் தொடராக எழுதி வெளிவந்த இன்னுமொரு நல்லதொரு நாவல் 'முழு நிலா'. அதில்வரும் உப்பிலி நல்லதொரு பாத்திரம். கோபுலுவின் ஓவியங்களுடன் அழகான தொடராக வெளிவந்து கொண்டிருந்த அந்நாவல் என் தந்தையாருக்கு மிகவும் பிடித்தவைகளிலொன்று. இவற்றுடன் ஜெயகாந்தனின் படைப்புகளையும் மறந்திட முடியாது. 'ஆடும் நாற்காழிகள் ஆடுகின்றன்', 'கோகிலா என்ன செய்து விட்டாள்', 'உன்னைப்போல் ஒருவன்', 'யாருக்காக அழுதான்', 'அக்கினிப் பிரவேசம்', 'ஒரு வீடு பூட்டிக் கிடந்தது' , 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்', 'ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்' என ஆனந்த விகடனில் ஜெயகாந்தனின் முழுநாவல்களும், சிறுகதைகளும் (முத்திரைக் கதைகளாகவும்), தொடர்கதைகளும் பிரசுரமாகிக் கொண்டிருந்த சமயமது. அதே சமயம் தினமணிக் கதிரில் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' தொடராக வெளிவந்து கொண்டிருந்தது. ஜெயகாந்தனின் 'ஒரு பிடி சோறு' சிறுகதைத் தொகுப்பிலிருந்து 'ஒரு பிடி சோறு', 'பிணக்கு', 'மவுண்ட் ரோடு மைக்கல்', 'டிரெடில்', 'ராசா வந்திட்டாரு' போன்ற கதைகளை தினமணிக் கதிர் மீள்பிரசுரம் செய்திருந்தது.
அப்பொழுது தினமணிக்கதிரில் வெளிவந்த தொடர்கதைகளில் ஞாபகத்திலுள்ள இன்னுமொரு தொடர்கதை லட்சுமி சுப்ரமணியத்தின் 'பொன் மாலைப் பொழுது'. சோமு என்னுமொரு நடுத்தர வயதுள்ள ஒருவரின் கடந்தகால அனுபவங்களை காதலையுள்ளடக்கி விபரிக்கும் கதையென்று எண்ணுகின்றேன். ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளிவந்திருந்தது. மணியன் அப்பொழுது மிகவும் புகழ்பெற்ற ஜனரஞ்சக எழுத்தாளர். 'இதய வீணை' , 'நெஞசோடு நெஞ்சம்', 'நீரோடை', 'உன்னை ஒன்று கேட்பேன்', 'உண்மை சொல்ல வேண்டும்', 'காதலித்தால் போதுமா' எனப் பல தொடர்களை ஆனந்த விகடன் வெளியிட்டது ஓவியர் மாயாவின் சித்திரங்களுடன். ஆனால் ஏனைய
எழுத்தாளர்களைப் போல் இவரது படைப்புகள் இன்றுவரை நின்று பிடிக்கவில்லை. வெளிவந்த காலத்தில் பரபரப்பூட்டியதோடு சரி. மணியனின் பயணக்கட்டுரைத் தொடரான 'இதயம் பேசுகிறது' அக்காலகட்டத்தில் புகழ்பெற்றிருந்ததொரு தொடர். ஒவ்வொரு பயணத்தின்போதும் ஊறுகாய் போன்ற தாயக உணவுவகைகளை எண்ணி ஏங்கும் அவரது அனுபவங்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம். அவரைப் போல் இன்னுமொரு அன்று அதிகமாக எழுதி இன்று மறக்கப்பட்டுவிட்ட இன்னுமொரு எழுத்தாளர் பி.எம்.கண்ணன். கலைமகளில் வெளிவந்த படைப்புகளில் இன்னும் ஞாபகத்திலுள்ள தொடர்கதைகள் முக்கோணக் காதலை மையமாக வைத்துப் புனையப்பட்ட 'கடலும் மலையும்'. இந்நாவல் கலைமகள் நாவல் போட்டியொன்றில் முதற் பரிசு பெற்ற நாவல். பாவை பார்வதி
எழுதியது. அந்நாவலில் வரும் சூரி என்னும் பாத்திரப் படைப்பு இன்னும் ஞாபகத்திலுள்ளது. கடலும் மலையும் போன்ற இரு ஆளுமைகளைக் கொண்ட ஆண்களிருவரில் ஒருவரை நாயகி தேர்ந்தெடுப்பது பற்றிய முக்கோணக் காதற்கதை. கலைமகளில் தொடராக இன்னுமொரு நாவல் கல்பனா எழுதி வெளிவந்து கொண்டிருந்தது. 'யுகசந்தி' என்பது அதன் பெயர். ஆற்று வெள்ளப் பெருக்குடன் ஆரம்பமாகும் நாவல் என்பதைத்தவிர தற்போது வேறெதுவும் ஞாபகத்திலில்லை. இன்னுமொரு கலைமகள் நாவல் கே.பி.நீலமணியின் 'புல்லின் இதழ்கள்'. இசையை மையமாக வைத்துப் பின்னப்பட்ட, அப்பொழுது வாசிக்கும்போது மனதை வெகுவாகக் கவர்ந்த
நாவலென்பதைத் தவிர வேறுதுவும் ஞாபகத்திலில்லை. கலைமகளில் வெளிவந்த ஏனைய நாவல்களாக மாயாவியின் 'மூடுபனி', கமலா சடகோபனின் 'கதவு', ர,சு.நல்லபெருமாளின் 'எண்ணங்கள் மாறலாம்' போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஸ்ரீவேணுகோபலனின் 'நீ நான் நிலா' அப்பொழுது கதிரில் தொடராக வெளிவந்த இன்னுமொரு நாவல். இதுவும் நாயகன், பல பெண்களென விரியுமொரு காதற்கதை. அப்பொழுது தினமணிக்கதிர் இலவச இணைப்பாக வெளிவந்த ஸ்ரீ. வேணுகோபாலனின் 'நடு வழியில் ஒரு ரெயில்' இப்பொழுது வாசித்தாலும் சுவையூட்டுமொரு குறுநாவல். அதில்வரும் அப்பாவி நாயகன், பதினாறு வயதினிலே சப்பாணியையொத்தவன், அவனை விட்டுப் பிரிந்து இன்னுமொருவனுடன் வாழும் அழகேயுருவான மனைவி வசுந்தரா, இப்பாத்திரங்களை உள்ளடக்கிய கதை. நடுவழியில் நின்று விட்ட ரெயிலை 'அப்பாவி' நாயகன் தன் சொந்த அனுவங்களனடிப்படையில் இயங்கச் செய்து பயணிகளைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறான்; அந்த ரெயிலில் பயணிக்கும் அவனது முன்னாள் அழகிய மனைவி 'நீங்கள் எவ்வ்வளவூ பெரியவர்' என்று கூறுவதைக் கேட்டு அந்த அப்பாவி பெருமிதமுறுவதாக முடிவடையும் குறுநாவலது. இன்றும் என் சிந்தையில் ஞாபகமிருப்பதொன்றே அதன் வெற்றி.
கு.அழகிரிசாமியின் 'தீராத விளையாட்டு' கல்கியில் தொடராக வெளிவந்த நாவல். கல்பனாவின் ஓவியங்களுடன் தொடராக வந்து பலரின்
உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நாவலிது. இதுவுமொரு காதற்கதை. அம்மாவைப் போல் அழகேயுருவான நாயகன். அழகேயுருவான காதலி. ஊரில் நிலபுலன்களைக் கவனிக்கப் பிரயாணம் செய்யும் நாயகன், அழகற்ற பெண்ணொருத்தியை (நிர்மலா) கொள்கை கருதித் திருமணம் செய்து, அது தோல்வியுற்று காதலித்த முன்னாள் காதலியைக் கைப்பற்ற முடியாமல், 'நீ நான் நிலா'வில் வருவதைப் போல் அவளின் தங்கையை மீண்டும் மணப்பதாக முடியும் கதை. இதில்வரும் நிர்மலா பாத்திரம் ஏனோ அகிலனின் சித்திரப்பாவையில் வரும் சுந்தரி பாத்திரத்தை நினைவூட்டும். மேற்படி மூன்று நாவல்களிலும் ('நீ நான் நிலா', 'சித்திரப்பாவை', 'தீராத விளையாட்டு') கதைப் பின்னலில் ஒரு சில ஒற்றுமைகளிருப்பதால் ஒன்றை நினைத்ததும் உடனேயே மற்றவையும் உடனடியாக ஞாபகத்தில் வந்து
விடுகின்றன.
இவற்றுடன் மீ.ப.சோமுவையும் மறந்து விட முடியாது. அன்றைய காலகட்டத்தில் அவரது அழகான வர்ணனைகளுடன் கூடிய தமிழில் வெளிவந்த 'கடல் கண்ட கனவு', 'நந்தவனம்', 'ரவிசந்திரிகா' ஆகியவற்றையும் குறிப்பிடத்தான் வேண்டும். உண்மையில் மேற்படி நாவல்கள் எமக்கு முற்பட்ட தலைமுறையில் வெளிவந்திருந்தாலும் எம் கைகளில் வாசிக்கக் கிடைத்தன. கொத்தமங்கலம் சுப்புவின் 'பொன்னி வனத்துப் பூங்குயில்' தொடரில் (கல்கியில் வெளிவந்தது) வரும் பொன்னியின் செல்வன் பூங்குழலியையொத்த நாயகியின் குறும்புச் சேட்டைகளும் அந்த வயதில் எமக்குச் சிரிப்பை வரவழைத்தன. ஜெகசிற்பியனின் சமூக மற்றும் சரித்திரக் கதைகளைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். அவற்றில் 'கிளிஞ்சல் கோபுரத்தில்' வரும் சபலசித்தமும், பொறுப்புணர்வும் மிக்க கதாநாயகனுக்காகக்
காலமெல்லாம் காத்திருக்கக் போவதாகக் கூறும் நாயகி சுகுணாவை எண்ணி அச்சமயத்தில் சிறிது கவலைப்பட்டதுமுண்டு. சரித்திரக் நாவல்களில் ஜெகசிற்பியன் பாவிக்கும் அழகிய வர்ணனைகளும் என்னைக் கவர்ந்ததுண்டு. குறிப்பாக 'நந்திவர்மன் காதலி', 'பத்தினிக் கோட்டம்' ஆகிய இரு சரித்திர நாவல்களும் பிடித்தவை. நா.பா.வின் சரித்திர நாவல்களில் வருவதைப் போல் இறுதியில் சோக முடிவினை ஜெகசிற்பியனின் நாவல்களிலும் எதிர்பார்க்கலாம். அன்றைய காலகட்டத்தில் அம்மா பாடசாலையிலிருந்து மு.வ.வின் அனைத்து நாவல்களையும் கொண்டு வந்து வாசிப்பதுண்டு. அச்சமயங்களில் அவற்றை நானும் எடுத்து வாசிப்பதுண்டு. இந்த வகையில் 'கரித்துண்டு' போன்ற நாவல்களைக் குறிப்பிடலாம். ஆனால் அந்தப் பருவத்தில் மு.வ.வின் 'வேண்டா' போன்ற தூய தமிழச் சொற்கள் எம்வாசிப்பின் ஆர்வத்தை அவ்வப்போது தடைசெய்வதுண்டு.
அப்பொழுதெல்லாம் கல்கி, விகடனில் வரும் தொடர்கதைகளெல்லாம் மிகவும் நீண்டவையாக, குறைந்தது மூன்று பாகங்களையாவது உள்ளடக்கியதாக இருக்கும். கல்கியின் மகன் கி.ராஜேந்திரன் அச்சமயத்தில் பல நீண்ட தொடர்கதைகளைக் கல்கியில் எழுதியுள்ளார். அவற்றில் அவரது 'போர்முனை' எம்மைப் பெரிதும் கவர்ந்த நாவல். அதில் வரும் விதவைப் பாத்திரமான நாயகி தாரா மனதில் நிலைக்கக் கூடியதொரு பாத்திரம். கல்கியின் மகள் ஆனந்தியின் 'மலைச்சாரல் மாதவி' இன்னுமொரு நினைவில் நிற்கும் நாவல். இவர்களைத் தவிர கோமகளின் 'இனிக்கும் நினைவுகள்', செல்வநாயகியின் 'குடைராட்டினம்' (இவையெல்லாம் கல்கியில் வெளிவந்த தொடர்கள்), சிவசங்கரியின் 'எதற்காக', இந்துமதியின் 'தரையில் இறங்கும் விமானங்கள்', இந்திரா பார்த்தசாரதியின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன', விந்தனின் 'பாலும் பாவையும்' , அநுத்தம்மாவின் 'கேட்டவரம்', பானுமதி ராமகிருஷ்ணாவின் 'மாமியார் கதைகள்', சேவற்கொடியோனின் 'பேசும் பொற் சித்திரமே' ('பேசும் பொற் சித்திரமே' கணவன் மனைவியின் மீது சந்தேகம் கொள்வதை மையமாக வைத்துப் பின்னப்பட்டிருந்தது. நாயகியின் பெயர் பானுமதி என்று ஞாபகம்), தி.ஜானகிராமனின் 'அன்பே ஆரமுதே', மலர்மஞ்சம், செம்பருத்தி (மலர்மஞ்சமும், செம்பருத்தியும் அந்நாவல்களில் வெளிப்பட்ட நெஞ்சையள்ளும் வர்ணனைகளுக்காக அச்சமயத்தில் பிடித்திருந்தன.), பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி சீதாப்பாட்டித் தொடர்கள், சாவியின் 'வாஷிங்கடனில் திருமணம்', அறிஞர் அண்ணாவின் 'பார்வதி பி.ஏ', 'ரங்கோன் ராதா', கலைஞரின் வெள்ளிக்கிழமை ... எனக் கூறிக்கொண்டே போகலாம். சும்மாயிருந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டி கதையாக 'வாஷிங்டனில் திருமணம்' தந்த வெற்றியின் நம்பிக்கையால் கதிரில் சாவி இராமயணக் கதாபாத்திரங்களை வைத்து 'டில்லியில் சுயம்பவரம்' என்றொரு தொடர் எழுதி வாசகர்களின் பலத்த எதிர்ப்பினையடுத்துப் பாதியிலேயே நிறுத்தி விட்டதும் ஞாபகம் வருகிறது. மாயாவியின் 'வாடாமலர்'. மாயாவியின் 'வாடாமலர்' நாவலில் அத்தியாயங்கள் ஒவ்வொன்றறையும் மலரொன்றின் பெயரை வைத்தே ஆசிரியர் ஆரம்பித்திருப்பார்.
அன்றைய
காலகட்டத்தில் வெளிவந்த சுஜாதாவின் சிறுகதைகளில் ஆனந்தவிகடனில்
வெளிவந்த 'பாலம்' இன்னும் ஞாபகமிருக்கிறது. அக்காலகட்டத்தில்
ஆனந்தவிகடன் மாவட்ட மலர்கள் நடாத்திப் போட்டிகளை அறிவித்திருந்தது.
அவ்விதமானதொரு மாவட்டமலரில்தான் (தஞ்சை) கவிஞர் மேத்தா சிறந்த
சிறுகதைக்குரிய பரிசினைப் பெற்றிருந்ததாக ஞாபகம். கல்கியும் ஒரு
சிறுகதைப் போட்டி நடாத்தியிருந்தது. அதில் இந்திரா பார்த்தசாரதியின்
'இவள் என் மனைவி' முதற்பரிசினைப் பெற்றிருந்தது. ஸ்ரீ வேணுகோபாலனின்
சிறுகதை இரண்டாவது பரிசினைப் பெற்றிருக்க வேண்டும். ஆனந்த விகடன்
அக்காலகட்டத்தில் நான்கு அல்லது ஐந்து அத்தியாயங்களை உள்ளடக்கிய மாத
நாவல்களைப் பிரசுரித்து வந்தது. எம்.வெங்கட்ராமனின் 'தேவி
மகாத்மியம்' அவ்விதம் வெளியான நாவல்களிலொன்று.
இதே சமயம் என்னைக் கவர்ந்த சில சித்திரக் கதைகளையும் குறிப்பிடத்தான்
வேண்டும். அவற்றில் முக்கியமானது ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த
நாடோடியின் 'கிங்கரனும் சங்கரனும்'. எழுத்தாளர் சங்கரன் எவ்விதம்
காலனை சந்திக்கின்றார், எவ்விதம் அவரது உயிரை எடுக்க வரும்
கிங்கரர்களுடனெல்லாம் உறவாடுகின்றாரென்பதையெல்லாம் விபரிக்கும்
சித்திரத் தொடர்கதை. சுவை மிக்க நகைச்சுவைச் சித்திரக்கதை. அன்றைய
வயதில் என்னைக் கவர்ந்த இன்னுமொரு முக்கியமானவர் வாண்டுமாமா. என்
காலத்துப் படைப்பாளிகளெவரும் வாண்டுமாமாவை அவ்வளவு எளிதாக மறந்துவிட
முடியாது. மிகவும் எளிமையாக, அழகாக, அழகான
கண்ணையள்ளும் சித்திரங்களுடன் இவரது படைப்புகள் வெளிவரும். கல்கியில்
சிறுவர்களுக்காகவென்று ஒரு பகுதி 'சிறுவர் விருந்து'
என்னும் பெயரில் வெளிவரும். அதனைப் படிப்பதென்றால் அந்த வயதில்
எனக்குப் பெருவிருப்பு. இவரது சித்திரக்கதைகள் சில கல்கியில்
தொடராக வெளிவந்தன. அவற்றிலொன்று 'ஓநாய்க்கோட்டை'. ஓவியர் வினுவின்
அழகான சித்திரங்களுடன் வெளிவந்த அச்சித்திரக்கதையை நானும் என்
சகோதரிமாரும், தம்பியும் போட்டிபோட்டுக் கொண்டு வாசிப்போம்.
அதில்வரும் தூமகேது என்றொரு பாத்திரம் அப்பொழுது எமக்கெல்லாம்
பெரிதும் கிலியூட்டிய பாத்திரம். அம்புலிமாமா , கண்ணன், 'வெற்றிமணி',
'கண்மணி' இவற்றையும் குறிப்பிடாமல் விடமுடியாது. இதே சமயம் மர்மக்
கதைகளையுயும் நான் விழுந்து விழுந்து வாசிக்க ஆரம்பித்தேன்.
தமிழ்வாணனின் சங்கர்லால், தமிழ்வாணன் துப்பறியும் கதைகள், சுஜாதாவின்
'நைலான கையிறு' போன்ற கதைகள், மேதாவி , சிரஞ்சீவி போன்றோரின்
மர்மநாவல்கள்'கத்தி முனையில் இரத்தம்',
'அழகியின் கொலை' போன்ற 'பாக்கற் சைஸ்' துப்பறியும் நாவல்கள்
(இவற்றைக் களவாக வாங்கி வாசிப்பேன். அட்டைகளில் அழகிகள்
அன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில் ஆபாசமான தோற்றங்களுடன்
காணப்படுவதால்தான் இந்த பாதுகாப்பேற்பாடு). அன்றைய
வயதில் என்னைக் கவர்ந்த இன்னுமொரு மர்மக்கதை எழுத்தாளர் நாஞ்சில்
பி.டி.சாமி. ராணியில் அவரது தொடர்கதைகள் வெளிவந்தன.
நான் வாசித்த இவரது ஒரேயொரு தொடர்கதை ராணியில் வெளிவந்த
சிவப்புச்சேலை'. இரண்டாவது அத்தியாயத்திலிருந்தே வாசித்தேன்.
மாடியிலிருந்து விழுந்து விடும் நாயகின் மரணத்தை மர்மமாக வைத்துப்
பின்னப்பட்ட கதை. இவரது இன்னுமொரு ராணியில் வெளிவந்த தொடர்கதை
'அழகியின் ஆவி'. ஆச்சியின் வீட்டிலுள்ள பரணில் கண்டெடுக்கப்பட்ட ராணி
இதழ்கள் சிலவற்றில் ஒரு சில அத்தியாயங்களை வாசித்துவிட்டு வெறியுடன்
பல நாட்கள் ஏனையஅத்தியாயங்களுக்காகவும் அலைந்து திரிந்து
இறுதியில் ஏமாற்றத்துடன் 'சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்' கதையாக
மறந்து விட்ட கதையிது. என் பால்யகாலத்து நிறைவேறாத ஆசைகளிலொன்று இது.
இன்னுமொன்று சாண்டிலயனின் 'கடல்புறா' (இன்று நிறைவேறி விட்டது. ஆனால்
அன்று..?). அடுத்தது கோவி.மணிசேகரனின் 'ராஜசிம்மன் காதலி'.
தினத்தந்தியில் ஒரு சில அத்தியாயங்களை வாசித்து விட்டு 'அழகியின்
ஆவி'யைப் போல் தேடிச் சோர்ந்து இறுதியில் கைவிட்ட முயற்சி.
இப்பொழுதும் கூட அவ்வப்போது நூலகங்களில் கோவியாரின் நூல்களைப்
பார்க்கும்போது கண் இலேசாகத் தேடிப்பார்க்கும்.
மேற்படி நூல்களில் பெரும்பாலானவற்றை நான் கரைத்துக் குடித்தது எனது
பத்துக்கும் பதினாறுக்கும் இடைப்பட்ட பிராயத்தில்தான். இப்பொழுதும்
இவற்றிலேதாவது நூல்களைக் கண்டால் வாங்கிச் சேகரித்து விடுவேன். ஆனால்
இன்று வாசித்தால் ஒருசில பக்கங்களுக்குமேல் தொடர்ச்சியாக வாசிக்க
முடியாது. ஆனால் அன்றைய என் பால்ய காலத்ததுப் பருவத்தில் என்னை
ஆட்டிப் படைத்தவை இவையென்ற வரலாறு இவற்றுக்கு உண்டென்பதால் என்
வாழ்க்கைச் சரிதத்தில் தவிர்க்க முடியாததோர் அங்கமாக ஆகிப்போனவை இவை.
இவற்றை இன்று என்னால் அன்று போல் வாசிக்க முடியாவிட்டாலும் இவற்றை
எண்ணியதும் அல்லது
பார்த்ததுமே என் நெஞ்சில் என் பெற்றோருடன், சகோதர சகோதரருடன், அன்றைய
நண்பர்களுடன் எந்தவிதக் கவலைகளுமில்லாமல்
சிட்டுக்குருவிகளாகச் சிறகடித்த பால்யகாலத்தின் பதிவுகள், 'அழியாத
கோலங்கள்' ஞாபகம் வந்துவிடுவதால் இவற்றை என்னால்
ஒதுக்க முடியாது. ஒவ்வொரு படைப்புக்கும் அது வெகுசன
படைப்பாகவிருக்கட்டும் அல்லது சிறுவர் இலக்கியமாகவிருக்கட்டும்
எதுவென்றாலும் தீவிர இலக்கியத்தைப் போல் அவற்றிற்கும் ஒரு
முக்கியத்துவமுண்டு. அவற்றைத் தாண்டித்தான் நாம் அனைவருமே
அடுத்தகட்ட வாசிப்புக்கு எம்மைத் தயார்படுத்துகின்றோம். இவையெல்லாம்
வளர்ச்சியில் தவிர்க்க முடியாத பருவங்கள்; படிக்கட்டுகள்.
*சுதந்திரனில்; வெளிவந்த என் முதற் சிறுவர் கவிதை கீழே.
பொங்கலோ பொங்கல்!
பொங்கல் பொங்கல் பொங்கலாம்.
புது வருடப் பொங்கலாம்.
எங்கும் எங்கும் சிறுவர்கள்
எலிவாணம் கொளுத்தி மகிழ்வார்கள்.
உலகைக் காக்கும் கதிரோனுக்கு
உலகைக் காக்கும் உழவர்கள்
பொங்கல் பொங்கிப் படைத்திடுவர்
பொங்கலென்னும் திருநாளில்.
மேற்படி சிறுவர் கவிதை முதன் முதலில் அச்சில் வெளிவந்த என் கவிதை.
சாதாரண சிறுவர் கவிதையாய்ப் பலருக்குத் தென்படலாம். ஆனால் என்
எழுத்துலக அனுபவத்தில் இதற்கு மிக முக முக்கியத்துவமுண்டு. இதனைப்
பிரசுரித்ததன்மூலம் என் எழுத்துலக ஆர்வத்தை மேலும் ஊதிச் சுவாலை
விட்டுப் பெருக வைத்தது சுதந்திரன். அதன் பின் அன்றைய என்
காலகட்டத்தில் ஈழநாடு 'சிறுவர் மலர்' என் ஆக்கங்கள்
பலவற்றைப் பிரசுரித்து மேலும் மேலும் என் எழுத்தார்வத்தை வளர்க்க
உதவியது. 'வெற்றிமணி'யில் ஒருசில படைப்புகளே வெளிவந்தன. சிரித்திரன்
இதழின் கண்மணியிலும் ஒருசில படைப்புகள் வெளிவந்தன. ஆயினும் ஈழநாடு
பத்திரிகையின் 'மாணவர் உலகம்' தான் அன்றைய என் எழுத்தார்வத்துக்குப்
பெரிதும் தீனி போட்டதெனலாம். என் முதற் சிறுகதை வெளிவந்தது
'சிரித்திரன்' சஞ்சிகையில். அப்பொழுதுநான் யாழ் இந்துக் கல்லூரியில்
உயர்தர வகுப்பு மாணவனாகப் பயின்று கொண்டிருந்தேன். வயது
பதினேழுதான். அறிஞர் அ.ந.கந்தசாமி ஞாபகார்த்தமாகச் சிரித்திரன்
நடாத்திய சிறுகதைப் போட்டியில் பாராட்டுப் பெற்றதொரு சிறுகதையாக
'சலனங்கள்' அன்று வெளிவந்தது. ஆசிரியையான என் அம்மாவின்
பால்யகாலத்துத் தோழிகளிலொருவரான அன்றைய யாழ் இந்து மகளிர்
கல்லூரியின் அதிபராக விளங்கிய செல்வி.இராமநாதன் அவர்கள் அக்கதையை
வாசித்துவிட்டுப் பாராட்டி மேலும் எழுதும்படி ஊக்குவித்தது அன்றைய
காலகட்டத்தில் என் மறக்க முடியாத அனுபவங்களிலொன்று. நான் யாழ்
இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் நான்
அதிகமாக விரும்பி வாசிப்பவையென கலைக்கதிர் சஞ்சிகை, தமிழகத்திலிருந்து
வெளிவந்த விஞ்ஞான நூல்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
தமிழகத்திலிருந்து அப்பொழுது 'ஹிக்கின்ஸ்பாதம்ஸ்' என்று
நினைக்கின்றேன் மிக அதிக அளவில் பல விஞ்ஞான மொழிபெயர்ப்பு நூல்களை
சித்திரங்களுடன் வெளியிட்டுக் கொண்டிருந்தது. யாழ் நூலகத்திலிருந்து
அவற்றையெடுத்து வாசிப்பேன். 'பெளதிகத்தின் வரலாறு', 'நீங்களும்
விஞ்ஞானியாகலாம்' போன்ற நூல்கள். முதன் முதலாக ஐன்ஸ்டைனின் சார்பியற்
தத்துவம் பற்றிய குறிப்பினைப் படித்தது மேற்படி 'பெளதிகத்தின்
வரலாறு' நூலிலிருந்துதான். அதில் நூலாசிரியர் நேரத்தின் சார்பியற்
தன்மை, வேகத்துடன் எவ்விதம் நேரம், நீளம், பொருண்மை போன்றவை
மாறுதலடைகின்றன என்பவை பற்றியெல்லாம் மிகச் சுவையாக
விளக்கமளித்திருப்பார். மார்க்சிம் கோர்க்கியின் புகழ்பெற்ற நாவலான
'தாய்' நாவலை முதன்முதலில் வாசித்தது இக்காலகட்டத்தில்தான். ஆயினும்
அதிக அளவில் மார்க்சிய நூல்களை, நாவல்களை வாசிக்க ஆரம்பித்தது என்
பல்கலைக்கழகக் காலகட்டத்தில்தான்.
ngiri2704@rogers.com