புள்ளும் , புலவனும்!
- வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் இரண்டு: இருப்பும், இரவு வானும்!
1. எனது வேலை பற்றி ....
அடுத்த மூன்று வாரங்களும் 'பல்கணி'யில் மாறி, மாறி அடை காத்துக்
கொண்டிருந்த புறாக்களின் மேலேயே என் கவனம் அடிக்கடி சென்று
கொண்டிருந்தது. அண்மைக் காலமாகவே நான் சுயமாகவே தொழில் செய்து
கொண்டிருந்ததால் புறாக்களைக் கவனிப்பதும் என் அன்றாட
நிகழ்வுகளிலொன்றாகி விட்டிருந்தது. நான் ஒரு தகவல் தொழில் நுட்பத்
துறையில் ஆலோசகராக பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையில் தொழில்
செய்பவன். நிரந்தரமாக ஒரு நிறுவனத்திற்கு வேலை செய்வது எனக்குப்
பிடிக்காததொரு விடயம். எனது கூட்டுத்தாபனத்தினூடாக ஒப்பந்த
அடிப்படையில் என் சேவையினை வழங்குவது ஊதிய விடயத்திலும் எனக்கு மிகவும்
பயனுள்ளதாகவிருந்தது. மிகவும் குறைந்த காலகட்டத்தில்
அதிகளவு உழைக்கக் கூடியதாகவிருந்தது. அடிக்கடி நிறுவனங்கள் மாறுவதால்
குறுகிய காலத்தில் தகவல் தொழில் நுட்பத்தின் பலவேறு பிரிவுகளிலும்
என் ஆற்றலை, அறிவினை வளர்க்கக் கூடியதாகவிருந்தது. ஓரிடத்தில்
'விண்டோஸ் பிளட்பார்ம்'மில் வேலை செய்தால் இன்னுமோரிடத்தில் 'யூனிக்ஸ்
பிளாட்பார்ம்'மில் வேலை செய்யக் கூடியதாகவிருந்தது. பெரும்பாலும்
சுயமாகவே என் பணிக்குரிய துறைகளில் என் அறிவினை அதிகரிப்பதற்கு
இணையமும், இத்துறைகளில் பணி புரியும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களின்
உதவியும் உதவின. இவ்விதமாக வேலை செய்து , வேலை செய்து
'மைக்ரோ சாப்ட்டின்' 'ஐ.ஐ.எஸ் வெப் சேர்வரில் வெப் அப்ளிகேஷனை தேவையான
சாப்ட்வெயர்களுடன்' நிறுவுவது தொடக்கம் 'ஐ.பி.எம்'மின் எஐஎக்ஸ்
யூனிக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்ட்த்தில் ஐ.பி.எம்'மின் வெப் ஸ்பெயர்
அப்ளிகேஷன் சேர்வர் மூலம் ஜாவா மொழி மூலம் உருவாக்கப்பட்ட வெப்
அப்ளிகேஷன்களை' நிறுவுவது வரை என் அறிவினை , ஆற்றலை வளர்த்திருந்தேன்.
எனவே மேற்படி துறைகளில் அவ்வப்போது ஒப்பந்த
அடிப்படையில் வேலைகள் கிடைத்த வண்ணமேயிருந்தன. அவ்விதம் கிடைக்காத
காலகட்டங்களில் நிரந்தரமாகவே எனக்கிருந்த
வாடிக்கையாளர்களுக்கு என் சேவையினை வழங்குவதில் கவனம் செலுத்துவேன்.
அத்தகைய சமயங்களில் மிகவும் அதிகமான நேரத்தினை என்
குழந்தைகளுடன் செலவு செய்வதிலும், பல்வேறு நூல்களை வாசிப்பதிலும்
செலவிடுவேன். நான் வாழ்க்கையினை மிகவும் இலகுவாக எடுக்குமொரு
பேர்வழி. ஆபத்தான காரியங்களில் துணிந்து இறங்குவதில் பின் நிற்காதவன்.
மணிக்கு சுமார் அறுபதினாயிரம் மைல்களுக்கும் அதிகமான வேகத்தில்,
வெளியினூடு விரைந்து கொண்டிருக்குமொரு கிரகத்தில் இருந்து கொண்டு
அஞ்சுவதிலென்ன அர்த்தமுண்டு என்பதென் எண்ணம்.
2. எனது வாசிப்பு பற்றி...
வாசிப்பைப் பொறுத்தவரையில் எனக்கு எல்லா வகையான பிரிவுகளிலும்
வாசிக்கப் பிடிக்கும். கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், குறுங்கதைகள்,
நெடுங்கதைகள், கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள் , அறிவியற் கட்டுரைகள்,
நூல்களென எல்லாப் பிரிவுகளிலும் வாசிக்கப் பிடிக்கும். ஆனால்
அத்தகைய படைப்புகள் எதுவாகவிருந்தாலும் அவற்றில் விரவிக் கிடக்கும்
அவற்றைப் படைத்த ஆசிரியர்களின் ஆழ்ந்த, தெளிந்த அறிவும், அனுபவச்
செழுமையுமே என்னை மிகவும் அதிகமாகக் கவர்ந்தன. நம்மை சுற்றியுள்ள
இயற்கையைப் பற்றி, விரிந்து கொண்டிருக்கும் பெருவெளி பற்றி, வான்
பற்றி, சுடர் பற்றி வாசிப்பதும், சிந்திப்பதும், தனிமையில் அவற்றை
இரசிப்பதும் எனக்கு மிகவும் பிடித்தமான விடயங்கள். இவற்றைப் பற்றிய
ஆழ்ந்த,
சிந்தையினைத் தட்டியெழுப்பும் அறிவியல் நூல்களை வாசிப்பதும் எனக்கு
மிகவும் பிடிக்கும்.
3. விரியும் சிந்தையில் விரியும் இயற்கை ...
இயற்கையின் அற்புதங்களான ஏனைய உயிர்களின் வாழ்க்கை வட்டங்கள், அவற்றின்
எளிமையான இருப்பு , குறிப்பாக பறவைகளின் வாழ்க்கை,
இவற்றை அவதானிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான பொழுது போக்குகளிலொன்று.
இதனால் என் வாழ்க்கையில் தற்செயலாக எதிர்ப்பட்ட இந்தப்
புறாக்கள் எனக்கு மிகவும் இன்பத்தைத் தந்த அதே சமயத்தில் , அவற்றின்
மீதான பந்தத்தினால் மிகுந்த பொறுப்புணர்ச்சியினையும், துயரினையும்
கூடவே தந்தன. எவ்விதமாவது இந்தப் புறாக்களின் முட்டைகள் பொரித்து,
சுயமாக அந்தக் குஞ்சுகள் பறப்பதுவரையில் அவற்றிற்கு ஒன்றுமே ஆகி
விடக்கூடாதென்று மனதில் புதிதாகவொரு கவலையேற்பட்டு என் நெஞ்சினை
அவ்வப்போது வாட்டியெடுக்கத் தொடங்கியது. நாளும் பொழுதுமாக
அந்தப் புறாக்களிரண்டும் தமது முட்டைகளை எவ்வளவு பொறுப்புடன் அடை
காக்கின்றன! இவ்விதமாக உயிரினங்களையெல்லாம் சுயமாகவே
தம்மிருப்பை உறுதி செய்யும் வகையில் , அதற்கேற்ற வகையிலான அறிவினைக்
கொடுத்து உருவாக்கிய சக்தி எது? இவ்விதமான சமயங்களில் சில
வேளைகளில் என் புலன்களினூடு விரியும் இந்தக் காட்சிகளெல்லாமே
உண்மையானவைதானா என்றும் வினாக்கள் எழாமலில்லை. இவ்விதமாக என்
கண் முன்னால் விரியும் இந்தக் காட்சிகள், வரலாற்று நிகழ்வுகள், போர்
மேகங்கள், அழிவுகள், துயரங்கள், இன்பங்கள் .. இவை எல்லாமே என்
சிந்தையை இயக்கும் மின்னலைகளின் சித்து விளையாட்டா? விரிந்திருக்கும்
காட்சிகளிலிருந்து வருவதாகக் கருதும் மின்காந்த அலைகளெல்லாம்
என்னுள்ளிருக்கும் மின்னலைகளின் சித்து விளையாட்டேதானா? இயக்கங்கள்
அனைத்தும், நிகழ்வுகள் அனைத்தும் எல்லாமே என் எண்ணத்தின் சித்து
விளையாட்டேதானா? எனக்கும் அப்பால் விரிந்திருக்கும் இருப்பை நான் உறுதி
செய்வதெப்படி? இதோ இந்தப் புறாக்களிரண்டு இந்த 'பலகணி'யின்
மூலையில் முட்டையிட்டு அடை காக்கின்றனவே அவை கூட என் எண்ணத்தின்
இன்னுமொரு செயற்பாடா? இது பற்றி என் நண்பனொருவனுடன்
ஒரு முறை உரையாடியபோது கூறினான்: "நீ தேவையில்லாமல் அதிகமாக
யோசிக்கிறாய்? கனக்க யோசிக்காதை. சிம்பிளாக வாழ்க்கை எடுத்துக்
கொள். இல்லாவிட்டால் மண்டையிலை நட்டு கழன்று விடும்". அதற்கு நான்
கூறினேன் " சிந்தனைத் தெளிவில்லாமல் யோசித்தால் நீ சொல்லுறது
மாதிரி நடக்கலாம். ஆனால் இது அப்படியான சிந்தனையில்லை. அறிவுத் தேடல்.
எல்லாக் கோணங்களிலும் சிந்திப்பதும், வாசிப்பதும் இருப்பைப் பற்றிய
தெளிவுக்கு நல்லதுதானே"
4. இரவு வானும் நானும் ...
இரவு நேரத்துடனேயே கவிந்து விட்டது. பெண் புறா 'பலகணி'யில் அடை
காத்துக் கொண்டிருக்கின்றது. ஆண் அருகிலுள்ள மரத்திலெங்காவது தூங்கிக்
கொண்டிருக்குமோ? இவ்விதமான சமயங்களில் இரவு வானை 'பல்கணியில்'
இருந்தவாறு இரசிப்பது, அது பற்றிச் சிந்திப்பது எனக்கு மிகவும்
பிடித்ததொரு பொழுதுபோக்கு. ஆனால் புறாக்களின் என் வாழ்க்கை மீதான
எதிர்பாராத தலையீடு என் அந்தப் பொழுதுபோக்குக்குத் தடை
போட்டுவிட்டது. ஜன்னலினருகில் நாற்காலியினை இழுத்துப் போட்டு விட்டு,
இரவு வானை நோக்குவதில் கவனம் குவிகின்றது. வழக்கம்போல் விரியும்
சிந்தனையும், அதன் விளைவான தெளிவும், புரிவதற்கான முயற்சியும்
ஒருவிதமான இன்பத்தை என் நெஞ்சினிலேற்படுத்துகின்றன.
இரவு வான்!
விரிந்து,பரந்து, இருண்டு இரவு
வான் முடிவிலியாய் முடிவற்றுத்
தெரியும்; விரியும்; புரியுமா ?
பார்வைப் புலனின் புலப்படுத்துதல்
இரவு வானின் இருப்பின்
உண்மையையா ?
இருண்டிருக்கும் இந்த வான்
இயம்புவதிலேதும் இரகசியம்
தானுண்டோ ? நெஞ்சேயறி.
காண்பதெல்லாம் காட்சிப்
பிழையென்று காட்டுமோவிந்த
இரவு வான்.
ஒளிர்சுடரொவ்வொன்றும்
ஒளிவருடப் பிரிவினில்
ஒளிரும்; ஒரு கதை பகரும்;
விரியும் விசும்பும் விடை சொல்லி
விரியும்; காலத்தின் பதிவுகளைக்
காட்டிடுமொரு காலக் கண்ணாடியா
இந்த இரவு வான் ?
முடிந்தவற்றை, மடிந்தவற்றைக்
காவிவரும் ஒளிச்சுடர்கள்.
புராதனத்துப் படிமங்கள் தாங்கி நிற்குமேயிந்த
இரவு வான்;
சுடர்கோடியிருந்தும்
இருண்டிருக்கும் இரவு வான்;
அழிவு, தோற்றம், வளர்ச்சி பல
புலப்படுத்தும் இரவு வான்.
நத்துகள் கத்திடுமொரு
நள்ளிரவில்
நிலாகண்டு, அதன் வனப்பில்
நெஞ்சிழந்து, நெகிழ்ந்து
கிடக்கையிலும், வெளிபோல்
உள்ளுமொரு இரவு வானாய்
இருக்குமிந்த நெஞ்சும்
காலத்தினடுக்குகளைச்
சுமந்தபடி சாட்சியாக
[ தொடரும் ]
அத்தியாயம் ஒன்று: மாடப்புறா ...
உள்ளே
ngiri2704@rogers.com |