மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் – (5 & 6 )
- வெங்கட் சாமிநாதன்
அத்தியாயம் 5
தமிழ்
சினிமாவின் சுமார் 80 வருட சரித்திரத்தில், அது தந்துள்ள சினிமா குப்பை
குவியலில் சினிமா என்று சொல்லக்கூடியது ஒன்று கூட இல்லை யென்றும்,
ஐம்பது வருடங்களுக்கு முன் நான் பார்த்த பழைய படங்களின் சில
காட்சிகளைச் சுட்டிக் காட்டி, இம்மாதிரியான காட்சிகள் நம் ஒவ்வொருவர்
வாழ்க்கையிலும் அன்றாடம் நிகழ்ந்த போதிலும், அவற்றுடனே நாம் வாழ்ந்து
வந்த போதிலும், அத்த்கைய காட்சிகளை நம் தமிழ் சினிமாவில்
காண்பதற்கில்லை என்று நான் சொன்னதும், அன்பர்க்ள் சிலருக்கு
வருத்தமும், சிலருக்கு கோபமும், இன்னம் சிலருக்கு ஏதோ நான் தமிழனை,
தமிழ் சினிமாவைத் தாழ்த்திக் கேவலப் படுத்துவதற்கே எழுதுவது போலும்,
அவர்கள் தமிழ் ரத்தம் கொதிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ் ரசனைக்கேற்ற
படங்கள் தான் என்று அவர்கள் உரத்துச் சொல்கிறார்கள். வேறொரு இணையத்தில்
ஒரு பட்டியலையே கொடுத்து இவையெல்லாம் சிறந்த படங்கள் என்று என் முன்
வைத்திருக்கிறார்கள். அந்தப் பட்டியல் இதோ:
1. சந்தியா ராகம்
2. வீடு
3. உன்னைப் போல் ஒருவன்
4. உதிரிப் பூக்கள்
5. முள்ளும் மலரும்
6. உச்சி வெயில்
7. சில நேரங்களில் சில மனிதர்கள்
8. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
9. அவள் அப்படித்தான்
10. அழியாத கோலங்கள்
11. கண் சிவந்தால் மண் சிவக்கும்
12. மெட்டி
13. ராஜ பார்வை
14. மகா நதி
15. குணா
16. அந்த நாள்
17. முதல் மரியாதை
18. ஹே ராம்
19. ஒருத்தி
20. நாயகன்
21. மொழி
22. சுப்பிரமணியபுரம்
23. சென்னை 28
24. ஆயுத எழுத்து
25. வெயில்
26. புதுப்பேட்டை
27. பருத்திவீரன்
28. அஞ்சாதே
29. நண்பா நண்பா
30. இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள்
31. சங்க நாதம்
32. அக்ரஹாரத்தில் கழுதை
33. விருமாண்டி
இவையெல்லாம் நல்ல தமிழ் படங்கள் இல்லையா என்று கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த படங்களின் பட்டியல், 32 Best Tamil Movies – Best Arthouse films
– 10 Hot – ல் கொடுக்கப்பட்டுள்ளது போக இன்னும் சில
சேர்க்கப்பட்டுள்ளன, அன்பர்களால். கேட்க வேண்டிய கேள்விதான். இந்தப்
பட்டியலும் சர்ச்சைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று தான்.
இப்பட்டியலுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்தே ஆகவேண்டும். முதலில்
எனக்குத் தோன்றுவது கவனமாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலில்,
மோகமுள், பாரதி, பெரியார் ஆகிய ஞான ராஜசேகரனின் பட்ங்களோ, கிராமத்து
மண் வாசனையைத் தன் பட்ங்களில் கொணர்ந்தவராக, ஸ்டுடியோவை விட்டு
கிராத்துக்குக் காமிராவை எடுத்துச் சென்ற பெருமை படைத்தவராகப்
பாராட்டப்படும் பாரதி ராஜாவின் படங்களோ ஏன் இடம் பெறவில்லை என்று
எனக்கு யோசிக்கத் தோன்றுகிறது. இவர்களை ஒதுக்கும் என் காரணங்களும்
பார்வையும் வேறு. ஆனால் மேற்கண்ட பட்டியலைத் தயாரிக்க ஐம்பது
வருடங்கள், உன்னைப் போல் ஒருவனைத் தொட (1963 அல்ல்து 1964 என்று
நினைக்கிறேன் ,) பின்னோக்கிச் சென்றவருக்கு ஞான ராஜ சேகரனையும் பாரதி
ராஜாவையும் சேர்க்கத் தோன்றவில்லையே, ஏன்?
இப்பட்டியலில் காணும் பல் படங்கள் வித்தியாசமானவை, வழக்கமான தமிழ்ப்
படங்களிலிருந்து விலகி வேறு தடத்தில் பயணிக்கவேண்டும் என்ற எண்ணமும்
முயற்சியும் காணும் படங்கள் தான் என்பது எனக்குத் தெரியும். அனேகம்
படங்கள் வேறு தடத்தில் பயணிப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற
எண்ணமும் செயபாடுமே கொண்ட படங்களும் உண்டு. உதாரணமாக, கமல ஹாஸனின்
படங்கள் அத்தனையும். இனி வரப் போவனவற்றையும் சேர்த்து. அவரது ஆளுமை தன்
படங்களில் தானே மையமாகவும் தன்னைச் சுற்றியே உலகம் இயங்குவதாகவும்
காட்டிக்கொள்ளும் ஆசை கொண்ட ஆளுமை அவரது. ஒவ்வொரு படமும்
முந்தைய்திலிருந்து வித்தியாசமாக முயற்சிக்கப்பட்டதாகக்
காட்டிக்கொள்ளலாம். காட்டிக்கொள்ளலாம் தான். அவ்வளவே மையம், அவரே தான்.
இதெல்லாம் போக, ஒரு படம் அசாதாரண வெற்றி பெற என்னென்ன மசாலாக்கள்
இருக்கவேண்டும் என்பது சினிமா உலகில் இப்போதைய கால கட்டத்தில்
தீர்மானமாகியுள்ளதோ அவையெல்லாம் கொண்ட ஒரு தயாரிப்பைத் தான் அவரது
வித்தியாசமான படங்களும் தரும். இதையே மணிரத்தினத்திற்கும் சொல்ல
வேண்டும். இவையெல்லாம் சினிமாவே அல்ல.இவை எதுவும் சினிமா என்ற கலை
சார்ந்தவை அல்ல. சினிமா என்ற சூதாட்டமாகிப்போன வியாபாரம் சார்ந்தவை.
கமலஹாஸன் நல்ல நடிப்புத் திறமையுள்ளவர் என்பதை நான் ஒப்புக்
கொள்கிறேன். அவரிடம் திறமை மட்டுமே உண்டு. அந்தத் திறமையை அவர் என்றும்
ஒரு கலையாக பரிணமிக்க விட்டதில்லை. அவரது திறமையெல்லாம் தன்னைப்
பூதாகாரமாக முன்னிறுத்திக் கொள்வதற்கும், அதை முதலீடாக வைத்து,
சந்தைக்கான மசாலாக்களையும் சேர்த்து வியாபாரம் செய்யும் வணிகர் தான்
அவர். லாவகமாக உடல் வளைத்து ஆடத் தெரிந்தால், ரிக்கார்ட் டான்ஸ் ஆட்
தேர்ந்துகொள்வது போன்றதே, கமலஹாஸனின் நடிப்புத் திறமை பெற்ற வடிகால்.
இந்த வணிகத்தில் அவர் கணக்குகள் தவறாகி நஷ்டம் ஏற்பட்டால் அது ஒரு
கலைஞனின் புதிய பாதைத் தேர்வில் எதிர்ப்படும் தோல்வி அல்ல. பங்குச்
சந்தைக்காரனின் கணக்குகள் தோற்கும் சமாசாரமே அது. இது அவருக்கு
மட்டுமலல, சினிமா வர்த்தகம் ஒரு சூதாட்டமாகி இதில் தம் அதிர்ஷ்டத்தைச்
சோதிக்க வந்தவர்கள் எல்லோருக்கும் நேர்வது தான். மணி ரத்னத்துக்கும்,
ரஜனி காந்துக்கும், சங்கருக்கும், நேர்வது தான். எஸ் எஸ் வாசனுக்கும்
நேர்ந்தது தான். இயக்குனர் சிகரத்துக்கும் நேர்ந்தது தான். இது கலைத்
தோல்வி அல்ல. பங்குச் சந்தையில் சூதாடிக் கிடைத்த தோல்வி. இதில்
சாமர்த்தியமாக தான் தப்பித்துக் கொண்டு தயாரிப்பாளர் தலையில் விழச்
செய்வதில் தான் நம் உலக நாயகர்கள சூப்ப்ர் ஸ்டார்கள, இளைய தளபதிகள்
இத்யாதிகள கவனமாக இருப்பார்கள்.
ஆனால் உண்மையிலேயே இந்த வணிகப் பாதையின் சூதாட்டத்திலிருந்து விலகி
சீரிய முயற்சிகள் சில செய்து பார்க்கவேண்டும் என்று துணிந்தவர்கள் என
முதலில் ஜெயகாந்தனைச் சொல்வேன். பின் அதைத் தொடர்ந்தவர்கள் என பாலு
மகேந்திராவையும், மகேந்திரனையும் ஞான ராஜசேகரனையும் சொல்வேன்.
இவர்களைப் பற்றி பேசலாம்.
அறுபதுகளின் ஆரம்பத்தில் ஜெயகாந்தனிடம் இருந்த வேகமும் போராட்ட மனமும்
உன்னைப் போல் ஒருவனை உருவாக்கச் செய்தது. ரூ. 80,000 மட்டுமே
அந்தப்படத்தைத் தயாரிக்க செலவாகியது என்று சொல்லப்பட்டது. அந்தப்
பணமும் ஜெயகாந்தனிடம் மிகுந்த நம்ப்க்கை கொண்டிருந்த ரசிக நண்பர்கள்
உதவியது என்றும் சொல்லப்பட்டது. (இது அறுபதுகளின் 80,000 ரூபாய்
என்றாலும் இன்றைய பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் இது மிக
சல்லிசாகத் தயாரிக்கப்பட்டது தான்). ஆனாலும் அது ஒரு landmark என்று
சொல்லக்கூடிய அந்தஸ்து பெற்றது தான். சினிமாவா இல்லையா என்பதெல்லாம்
பின்னர் வாதித்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள். ஏன் அது ஒரு landmark?
ஜெயகாந்தன் தன் முதல் படத்தில் முயன்றது, தன் கதை ஒன்றை ப்டமாக்கியது
தான். அதை அவர் நேராக, மற்ற எந்த சாய்வுகளுக்கும் இடம் கொடாமல் செய்தது
முதன் முறையாக தமிழ் சினிமாவில் நடந்த நிகழ்வு. அதுவரை தமிழ்
சினிமாவில் சந்தைக்குத் தயாராக்க எந்தெந்த மசாலாக்கள் சேர்க்க வேண்டும்
என்று மரபு இருந்ததோ அதையெல்லாம் பற்றிய சிந்தனை எதுவுமில்லாமல், ஒரு
நேரிய முயற்சி செய்தார். அதில் அவர் கதை சலன்ம் பெற்றது. அவ்வளவே.
தமிழ் சினிமாவின் அது வரைத்திய பாதையை முற்றிலுமாக ஒதுக்கி புதிய
பாதையில் முதல் அடிவைப்பு என்று சொல்ல வேண்டும். முதல் அடி வைப்பு. ஒரே
அடிவைப்பு அன்றைய தினம். இது அறுபதுகளின் ஆரம்பத்தில். இதை நான் முதன்
முதலாக 1950 மார்ச் ஏப்ரலில் சம்பல்பூர் விஜய லக்ஷ்மி டாக்கீஸில்
பார்த்த வங்கப் படத்தில் நிகழ்ந்திருந்தது. எந்த வித ஆரவாரமும்,
இல்லாது. முதல் அடி வைப்பு, சோதனை முயற்சி என்ற கோலாகல டமாரம் ஏதும்
இல்லாமலே.ஏனெனில் அது தான் வங்கப் படங்களின் வழமையாக இருந்தது. அந்தப்
படத்தை இப்போது யாரும் நினைவு கொள்வதில்லை, நாம் உன்னைப் போல் ஒருவனை
ஒரு புரட்சி கர முயற்சியாக நினைவு கொள்வது போல. இதிலிருந்து ஜெயகாந்தன்
தன் அடுத்த அடி எடுத்து வைக்கவில்லை என்பது முக்கியமான விஷயம். அவரது
படம் ஏதும் மகத்தான வணிக வெற்றி அல்ல. இருப்பினும், ஜெயகாந்தன் அந்த
பாதையில் தொட்ர்ந்து விடக்கூடாது என்பதில அன்றைய சினிமாப் பெருந்தலைகள்
முனைந்திருந்ததாக செய்திகள் வந்தன. இது எவ்வளவு தூரம் உணமை என்பது
தெரியாது. அது உண்மையல்ல என்று இருந்தாலும், ஜெயகாந்தனே பின்னர் தான்
முதல்டி எடுத்து வைத்த் பாதையில் தொடர முடியவில்லை. நாகேஷை வர
ஆரம்பித்தார். லக்ஷ்மி கதாநாயகியானார். கண்ணீரையும் கதறலையும் வசனப்
பெருக்கத்தையுமே உணர்ச்சிச் சித்திரம் என்று பெயர் சூட்டி
மெய்சிலிர்த்துப் போகும் தமிழ்மரபில் பெயர் வாங்கியவரான பீம் சிங் சில
நேரங்களில் சில மனிதர்கள் படத்துக்கு இயக்குனரானார். அந்தக் கதையே ஒரு
ரகம் தான். பொதுவாகவே தன் கருத்துக்களையே பாத்திரங்களாக்கும்
சிறப்புக்குரியவர் ஜெயகாந்தன். அந்த விதத்தில் இந்த நாவலும்
ஜெயகாந்தனுக்கே உரிய புரட்சிகர கருத்துக்களையே பாத்திரங்களாகக்
கொண்டது. இம்மாதிரியான ஒரு ஜோடியை ஜெயகாந்தனின் சிந்தனையிலும்
கற்பனையிலும் தான் பார்க்கமுடியும். ஒரு தொடர்கதை எழுத்தாளனை, நாலு
பெண்கள் காதலிக்கிறார்கள் என்றால் அதை அகிலனினுக்கே உரிய கற்பனையிலும்
அவர் எழுதும் தொடர்கதையிலும் தான் பார்க்கமுடியும் என்பது போல.. பின்
தமிழ் சினிமாவில் ஜெயகாந்தன் போன்ற ஒரு போராளியே அதிக நாள் இருக்க
முடியவில்லை. உன்னைப் போல் ஒருவன் எடுத்து வைத்த முதல் அடிக்குப் பின்
அடுத்த வந்த அடிகள் பின்னோக்கியவை தான்., முதல் அடியே சினிமா இல்லை,
இனி வரப்போகும் சினிமாவுக்கான முதல் அடி தான். என்னும் போது மற்றவை
பற்றி என்ன சொல்ல? 1950-ல் நான் பார்த்த முதல் வங்காளிப்படம் முதல் அடி
வைப்பு அல்ல. அது நிலைத்துவிட்ட பாரம்பரியத்தின் தொடர்ச்சியின்
ஒன்றுடன் நான் பெற்ற அறிமுகம். அது நிலைத்த பாரம்பரியமானதால் தான்
அடுத்த சில வருடங்களில் அங்கு ஒரு ரித்விக் காடக்கையும், சத்யஜித்
ரேயையும் அடுத்த வளர்ச்சிக்கட்டங்களாகக் காணமுடிந்தது.
கழிசடைகளை எல்லாம் கழித்துச் சுத்தப்படுத்திய வெற்றிடத்தில் வைத்த
முதல் காலடி வைப்பே நமக்கு அறுபதுகளில். அதுவும் பின்னர் ஒரே படத்துடன்
முடிந்த கதையாகிவிட்ட் பிறகு.....? என்ன நடப்பது சாத்தியம்?. இங்கு
ஆட்சி செலுத்திய சினிமா கலாச்சாரமே எந்த எளிய முயற்சியையும்
ஒன்றுமில்லமல் ஆக்கிவிடும் அசுர சக்தி கொண்ட வ்ணிக கலாசாரமாக
இருக்கிறது.
****************
அத்தியாயம் – 6
ஞான
ராஜசேகரனைப் பற்றிப் பேசலாம். மற்றவர்கள் நினைவில் வைத்துக் கொள்ளாத,
எடுத்துச் சொல்லாத பெயர். ஆரமப் கால ஞான ராஜ சேகரனை எனக்குத்
தெரியுமாதலால் சொல்கிறேன். 1974-75 களில் அவருடன் பழக்கம் ஏற்படத்
தொடங்கியதால் சொல்கிறேன். தமிழ் சினிமாவைக் கேலி செய்வது அவரது மனம்
மகிழும் பொழுது போக்கு. மிக ஆரோக்கியமான், கேலி அது. தமிழ் சினிமாவே
எத்தகைய கேலிக்கூத்து என்பதை அவர் அறிந்துவைத்திருந்தார். அந்நாட்களில்
அவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் தி. ஜானகிராமன். அவரது மோகமுள்
நாவலை படமாக்க வேண்டும் என்பது அந்நாட்களிலிருந்தே அவரது கனவாக இருந்து
வந்தது. பிறகு அவரும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி, கேரள அரசில் சேர்ந்த்
பிறகும் அவரது கனவு மறையவில்லை. நானும் அவரும் மோகமுள் படமெடுக்க
யாரிடமோ அந்த நாவல் விற்கப்பட்டுவிட்ட்தென் கேள்விப்பட்டு, நான் சென்னை
வந்திருந்த போது சிட்டியையும், ஜானகிராமனது புத்திரர்களையும் தேடிச்
சென்றோம். இது நடந்தது எண்பதுக்களின் பின் பாதியில். பின் இந்த சிக்கல்
ஒருவாறாக தீர்ந்தது என்று அறிந்தது நானும் ஞான ராஜசேகரனும் தில்லியில்
உள்ள கேரள ஹவுஸில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து ஜானகிராமனின் நாவலை
வைத்துக்கொண்டே அவரது வார்த்தைகளைக் கொண்டே திரைக்கதையின்
வரைகோட்டையும் தீர்மானித்தோம். கதை நிகழுமிடங்கள் ஜானகிராமன்
குறிப்பிட்டிருக்கும் கும்பகோணம் தெருக்களே. அன்று நாங்கள்
தீர்மானித்திருந்த படத்தின் ஆரம்ப்ம், நாவலின் கடைசிக் கட்டமான
பாபுவின் வடநாட்டுப் பிரயாணம், சங்கீதம் கற்க. அவனுக்கு வழியனுப்பும்
காட்சி. ரயில் புறப்படுகிறது. அதே ரயில் பெட்டியில் பாபு
உட்கார்ந்திருக்கும் காட்சி தொட்ர்ந்து கதையின் ஆரம்பமும் ஆகிறது. அது
பாபு கும்பகோணத்துக்கு வரும் காட்சி. படத்தின் கடைசி காட்சி, முதல்
காட்சி யான வடநாட்டுப் பிரயாணத் தொடக்கம், விரைந்து செல்லும் ரயில்
பெட்டியில் பாபு. கேரளா ஹவுஸில் எழுதிச் சென்ற வரைகோடு மறக்கப்
பட்டுவிட்டது. அதற்கு அவருக்கு உரிமை உண்டு. அவர் ஜானகிராமனுக்கும்
அவரது நீண்ட நாள் லட்சியக் க்னவுக்கும் திரைப்படத்தில் சாட்சியம்
தந்திருக்க முடியுமானால். கடைசியில் கண்டது, தோற்றத்தில் தான்
ஜானகிராமன். ஆனால் பாத்திரங்களும், கண்ட காட்சிகளும் ஜானகிராமனாக
இல்லை.
திரையிடப்பட்ட மோகமுள் எனக்கு நிறைந்த எதிர்பார்ப்புகளையும்
ஏமாற்றத்தையும் தான் கொடுத்தது. இதைப் பற்றி எழுதுவது சிறிது சிரமமான
காரியம் தான். நான் எழுதும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் கொள்ளும்
அர்த்த்ம ஒன்றாக இருக்கும். வாசிப்பவர்களில் பெருமபாலோர் அதை வேறு
விதமாக அர்த்தப் படுத்திக் கொள்வார்கள். அழகு, உணர்ச்சி, சோகம்,
துக்கம், கவிதை, என்பதற்கெல்லாம் நான் கொள்ளும் பொருள் ஒன்றாக்வும் அது
பெருமாலானவர்களால் அதன் அர்த்தம் அதீதமாக ஆபாசம் என்று சொல்லும்
அளவுக்கு மீகப் படுத்தப்படும்.
தி.ஜானகிராமனின் எழுத்தில், மோகமுள் நாவ்லில், பின்னர் அதை ப்டமாகக
வேண்டும் என்ற் நீண்ட நாள் ஆசையில் ஞான ராஜசேகரன் ஆழ்ந்திருந்ததில்
எனக்கு சிறிதும் சந்தேகமில்லை. அதை மிகச் சிறப்பாக ஜானகிராமன் எழுதிய
இயல்பிலேயே படமாக்க வேண்டும் என்றும் அவர் ஆசைப்பட்டார். அதிலும்
எனக்கு சந்தேகமில்லை. ஆனால், ய்தார்த்தம், இயல்பு, என்று அவர்
நினைத்துக்கொண்டு பாத்திரங்களை இயக்கியதும், காட்சிகளை அமைத்ததும்
படத்தில் பார்க்கும் போது அவ்வளவு ஒன்றும் இயல்பாகவோ உயிர்ப்புடனோ
இல்லை என்பது சோகம். இதை எப்படி விளக்குவது என்பது தெரியவில்லை.
ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு பாபு சாதகம் செய்கிறான்.
அதை நாம் பார்க்கிறோம். பாடுகிறான். கேட்கிறோம். அவன்
செய்துகொண்டிருப்பதை நாம் பார்வையாளர்கள் எப்படியோ மறைந்து நின்று
கொண்டு பார்க்கிறோம் என்ற நினைப்பு நமக்கு வருவதில்லை. பாபுவை ஆற்றி
இறங்கி நில்.காமிராவைப் பார். பாடு என்று சொல்ல அவன் செய்வதாகவே
நடிப்பதாகவே தான் நாம் உணர்கிறோம். கவிதையப் பற்றி தொ.மு. பாஸ்கரத்
தொண்டை மான் சொல்வார். கவிதைக்கும் கவிதையாகாத் செய்யுளுக்கும் உள்ள
வித்தியாசம், மின்னோட்டம் உள்ள செல்லுக்கும் மின்னோட்டம் செத்துவிட்ட
செல்லுக்கும் உள்ள வித்தியாசம் தான். இரண்டுமே பார்ப்பதற்கு ஒன்றே
போலத் தான் இருக்கும். ஒன்றில் உயிர் உண்டு மற்றது செத்தது. இது
இரண்டும் ஒன்றே போலத் தோன்றும் காட்சியைப் பற்றி. ஆனால், ராஜசேகரனே
ஜானகிராமனின் வார்த்தைகளை வைத்துக்கொண்டு அப்த்தமான காட்சி
அமைத்திருக்கும் விவகாரங்கள் வேறு தனி. கடைசியில் பாபுவின் ஆசையைத்
தீர்த்த ஜமுனா, அவனைக் கேட்கிறாள், “பாபு, இதுக்குத்தானா இவ்வளவு
நாளா......” ஜானகிராமனின் எழுத்துக்கும் ராஜசேகரனின் பட்த்தில் காணும்
காட்சிக்கும், உள்ள ஒற்றுமை, ஜமுனாவின் அந்த்க் கேள்வி தான்.
காட்சியிலோ, ஜமுனாவும், பாபுவும் அந்தக் காட்சிக்கு உயிர்
கொடுத்திருப்பதிலோ அல்ல. ராஜசேகரனின் காட்சிப்படுத்தல் விகாரமானது.
இத்தோடு ஜானகிராமன் எழுதாத காட்சிகளை ஆபாசமாக புகுத்திய விவகாரங்களும்
தனி. மோகமுள்ளை படமாக்கவேண்டும் என்ற கனவு, அந்த கால கட்டத்தில்
சினிமாவின் மசாலாக்களை அறவே ஒதுக்கிய மனம், இதற்கெல்லாம் நாம் அவரை
பாராட்டலாம். ஒரு நல்ல சினிமா கனவு கண்டவர்.
ஆனால் இதன் பிறகு, அவரது பாரதியும், பெரியாரும் இன்னமும் படிப்படியாக
கீழ்நோக்கிய பயணத்தையே சொல்கின்றன. ராஜசேகரனின் பாரதி, பாரதி இல்லை.
ராஜ சேகரனின் பாரதி, பத்து பேர் முன்னிலையில் தன் மனைவியை அவமானப்
படுத்துகிறவர் அணைக்கிறவன் முதுகில் பூணூல் இருக்கிறதா என்று
தடவிப்பார்க்கிறவர். ஓடுகிற ரயில் வண்டியில் நின்றுகொண்டு ஆவேசமாக
பாடுகிறவர். அவரது பாரதி ஒரு கிறுக்கன், மற்றவர்கள் மனத்தை நோக
அடிப்பவன். மாலையில் வீடு திரும்பாது கடற்கரையில் தனித்து கஞ்சா
போதியில் உட்கார்ந்திருக்கும் பாரதியை யதுகிரி அம்மாள
எழுதியிருக்கிறார். அது ஒரு பாரதி. ஆனால் ராஜ்சேகரனின் பாரதி,
எஸ்.வி.சுப்பையாவின் பாரதியே அபத்தம். அதை இன்னும் அபத்தமாக்கியது.
பாரதியில் மிக நன்றாக ஒரு பாத்திரைத்தை உருவாக்கிக்கொடுத்திருப்பது
தமிழ் சினிமா அந்நாட்களில் ஒரு கவர்ச்சிக் கன்னியாக ரசிகர்களுக்கு
ஆக்கிக் கொடுத்திருந்த தேவயானி தான். செல்லம்மா வை திருப்ப சினிமாவில்
உயிப்பித்துக்கொடுத்து விட்டு அவர் திரும்ப தமிழ் சினிமாவின்
கவர்ச்சிக்க்ன்னியாகச் சென்றார். அவரால் இது சாத்தியமாகியிருப்பது
கண்டு எனக்கு ஆச்சரியம் தான். எவரையும் தமிழ் சினிமாவால், தமிழ் சினிமா
மேதைகளால், தமிழ் சினிமா ரசிகர்களால் கெடுத்து விடமுடியும் என்ற உணமை
எனக்குத் தெரிந்தது. மராத்தி நாடகங்களும் நான் பார்த்திருக்கிறேன்.
சிவாஜி ராவ் ஷிண்டேயை மராத்தி நாடகக்காராகக் கூட இல்லை, த்மிழ்
நாடகக்காரனாக, எஸ்.வி. சுப்பையாவின் இன்னொரு பதிப்பாக ஆக்கிக்
காட்டியிருக்கிறது ராஜசேகரனின் பாரதி. அந்த பாரதியில் ராஜசேகரன் தமிழ்
அரசிய்ல் சாயத்தையும் கூட ஏற்றியிருக்கிறார். முதுகைத் தடவி பூணூல்
இருக்கிறதா என்று பார்க்கும் ஒரு பாரதியை உருவாக்கி. திராவிட
கழகங்களுக்கு இருக்கவேண்டிய அக்கறை பாரதிக்கு ஏன்? அது ஏன் என்று
பெரியார் படத்தை தயாரிக்க திட்டமிடலிலிருந்து அது உருவாக்கிய வரை வந்து
விட்ட் ஞான சேகரன் தருவார். மோகமுள் பற்றி பல வருடங்கள் கனவு கண்ட
தி.ஜானகிராமன் ரசிகர் என்ற புள்ளியிலிருந்து பெரியார் பட ஞான ராஜசேகரன்
வெகுதூரம் பயணம் செய்துவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். பெரியார் பட
ராஜசேகரன், ஒரு சினிமா இயக்குனர், மாத்திரமல்ல. ஒரு திராவிட கழக
பிரசாரகராகவும் வளர்ந்திருக் கிறார். இது ஒரு பிரசார படம் தான். சினிமா
இல்லை. ஒரு திமுக பிரமுகராவும் அரசின் கருணைக்குப்பாத்திரராகவும்
ஆகியுள்ளார். ஒரு கலைஞனின் பயணம் அல்ல இது. வணிக வெற்றி, பிராபல்யம்,
அரசின் தயவு என்று ஒருவர் தேடிச்சென்றால் அத்ற்கு மாறுசொல்ல நாம் யார்?
ஆனால் சினிமாவை ஒரு கலையாக, பார்க்க வந்த ஒருவனுக்கு பெரியார் ஒரு
சினிமா இல்லை, அது ஓர் இரவு, பராசக்தி போன்றவை போல ஒரு உரத்த கொள்கைப்
பிரசார படம் என்று சொல்வதற்கு உரிமை உண்டு. ஒரு பிரசார படத்தில்
எல்லாமே உரத்து சொல்லப்படும். மற்றவற்றை நிராகரிக்க அவை கொச்சைப்
படுத்தப் படும். ஒரு ஒற்றைப் பரிமாண வாதமே படம் முழுதிலும் நிரவிக்
காணப்படும். அந்தப் படம் அந்த காரிய நிறைவேற்றலில் கிடைத்த
வெற்றிக்குச் சான்று தான் அத்ற்குக் கிடைத்த அரசுச் சலுகைகள்.
பாரதி ராஜாவுக்கு உரிய ஒரு பாராட்டு, கிராமத்துக் கதையைச் சொல்ல சென்னை
ஸ்டுடியோவை விட்டு கிராமத்துக்கு காமிராவை எடுத்துச் சென்ற
நேர்மைக்கும் இயல்பான சிந்தனைக்கும். அது ஒன்று தான் சட்டென
பளிச்சிட்டுத் தெரியும், ஒரு மாற்றம். அதுவும் சொல்லிக் காட்டப்படும்
மாற்றம். ஆனாலும், கிராமத்துக்கு எடுத்துச் சென்றாரே ஒழிய, அதில் நாம்
நடிகர்கள் கிராமத்து மக்களாக நம்முன் உயிர்ப்புடன் நடமாடவில்லை.
வாழ்வில்லை. திரும்பவும் நடிக்கத் தான் செய்தார்கள். கிராமத்து
வாழ்வின் ஜீவனை அவர்கள் உணரவுமில்லை. நமக்கு உணர்த்தவுமில்லை. இயல்பாக
இருத்தல் என்பது மிகக் கடினமான விஷயம். அது ஒருவருக்குக் கிடைப்பது
என்பது அபூர்வம் தான். நடித்துவிடலாம். உரத்து, அல்லது வசனம் பேசி, கை
கால்களை, கண்களை அதீதமாகப் பயன்படுத்தி, என்னவோ செய்துவிடலாம். நடிகர்
திலகமும் சரி, வந்துட்டான்யா சாம்பார் சாதம் என்று சிவாஜி ரசிகர்களால்
கேலி செய்யப் பட்ட ஜெமினி கணேசனும் சரி, அலலது தன் நல்ல மனிதன்
இமேஜிலேயே தமிழ் சினிமாவில் அசாதாரண வெற்றி பெற்று விட்ட
எம்.ஜி.ஆரானாலும் சரி, இவர்கள் இடையே நீளும் எல்லைக்கொட்டிலே நாம்
காணும் அத்தனை நடிகர்களும் தம் கருத்தில் எது நடிப்பு என்றும் எப்படி
நடித்தால் ரசிகர்கள்களைக் கவரலாம் என்றும் கருதுகிறார்களோ அப்படி
எத்தனையோ ரகங்களை நாம் பார்த்து வருகிறோம். தம்மால் முடிந்த வரை
மசாலாக் களைக் குறைத்து முடிந்த வரையில் அடங்கிய குரலில் பாரதி ராஜா
தந்த முதல் மரியாதை படத்தில் சிவாஜிக்கு அவருடைய நடிப்பு கோமாளித்
தனங்களை மறுத்தது, அவருக்கு தன் சிறப்பான ஆளுமையையே மறுத்தது
மட்டுமல்லாமல், தன் ரசிகர்களையும் ஏமாற்றிவிட்டதாகவே சிவாஜிக்கு மனம்
வெறுத்துப் போயிருந்திருக்கிறது. “ என் கிட்டே சரியாவே வேலை வாங்கத்
தெரியலைய்யா அந்த ஆளுக்கு” என்பது சிவாஜி பாரதி ராஜாவைப் பற்றிச்
சொன்ன்தாக வந்த செய்தி. அதாவது சிவாஜியை பார்த்து எல்லா
தயாரிப்பாளர்களும் சொல்வார்களே, “அண்ணே உங்க்ளுக்குன்னே எழுதியிருக்கிற
காரக்டரண்ணே. உங்களைத் தவிர வேறே யாரும் செய்திரமுடியாது
பாத்துக்கிடுங்க,” என்று சிவாஜிக்குப் பூச்சூட்டி மகிழ வைக்கும்,
வயிற்றை எக்கிக் கொண்டு கத்த வேண்டிய எட்டு பக்க “ஓடினாள் ஓடினாள்” ரக
வசனத்துக்கும், விழி பிதுங்கும் கண் உருடடலுக்கும்” வாய்ப்பில்லாது
போய்விட்டது அவருக்கு வருத்தம். இபபடியே மஞ்சள் தண்ணியை ஊத்தி,
தலையாட்ட வைக்கப் படும் பலி ஆடுகளாகவே, நம் தமிழ் சினிமாக் காரர்கள்
எல்லோருமே வளர்க்கப் பட்டிருக்கிறார்கள். இந்த மாதிரி நவ ரச
உருட்டலையும் மீசை முறுக்கல்களையும் பார்த்து பேரறிஞர் அண்ணாவே
“மார்லன் ப்ராண்டோ வே நம்ம சிவாஜியிடமிருந்து நடிப்புக்
கற்றுக்கொள்ளவேண்டும்” என்று சொன்னதான பிரசாரம் இன்னம் கள் குடித்த
மயக்கத்தைக் கூட்டும். பேரறிஞர் அண்ணா யாரைத்தான் பாராட்டவில்லை?
பிரசார எழுத்தும் அடுக்குத் தொடருமாகவே வாழ்ந்தவர் அவர்.
குறிப்புணர்த்துதல் தான் கலை, சொல்லாமல் சொல்வது தான் கலை என்பதை
பிரசாரகர்கள் என்றுமே அறியமாட்டார்கள். உடைந்து சிதிலமாகிக் கிடக்கும்
கதவு காற்றில் அசைய அது எழுப்பும் கிறீச்சொலி போதும், சுற்றி எல்லாம்
நாசமடைந்து மனித ஜீவனின் அடையாளமே இல்லாது போய்விட்ட பயங்க்ரத்தைச்
சொல்ல, என்பது நம் சினிமாக காரர்கள் யாரும் புரிந்து கொள்ளாததும்,
புரிந்து கொள்ள விரும்பாததும், காரணம் அப்படிப் பட்ட ரசனையை
வளர்த்தாயிற்று, ஒரு முக்கால் நூற்றாண்டு காலமாக. அந்த சூழலிலிருந்து
வெளி வர முயற்சிக்கும் பாரதி ராஜா, வழ்மையாகி விட்ட தமிழ் சினிமா கதை
சொல்லும் சட்டகம் இருக்கிறதே ( the naaraative structure of a tamil
film). அதை மீறாமல் ஒரு கிராமத்துக் கதையைச் சொல்ல முயலும் போது,
சங்கடங்களை எதிர்கொள்ளத் தான் வேண்டும். தான் அறிந்து சிலவும் அறியாமல்
பலவும், அந்த சட்டகம் தன்னைத் தொடர்வதை பாரதி ராஜா அறிய மாட்டார்.
திரும்பவும் அதே வாசகத்தைத் தான் நான் சொல்ல வேண்டியிருகிறது. தமிழ்
சினிமாவில் காலம் காலமாகச் சேர்ந்திருக்கும் கசடுகளையெல்லாம் நீக்கும்
முயற்சி தான். அதில் அவர் நீக்கும் கசடுகளும் உண்டு. கசடு என்று
நினைக்காத கசடுகளும் உண்டு. பாட்டும், கிராமம் போலச் செய்தலும், கிராம
மனிதர்கள போலச் செய்தலும். ’ குடிசைகள் இருக்கா இல்லியா பாரு, சட்டை
போடாமல் துண்டைத் தானே தோளிலே போட்டிருக்காங்க பாரு, கிராமம் மாதிரி
இருக்கா இல்லியா? என்று கேட்டுப் பயன் இல்லை. ஒரு காரை வீடானாலும்
கிராமம் என்ற நம்பகத் தன்மை ஏற்படவேண்டும். பாரதி ராஜாவாலும் ஒரு
அச்ட்டுத் தனமும் அதீத நாடகத் தனமும் இல்லாது இருக்க முடியவில்லை.
வசனம் பேசாமல், கண்களை உருட்டாமல், உணர்வைச் சொல்லும், மிக ஆழமாகவே
சொல்லிவிட முடியும் எனப்தை தமிழ் சினிமாவில் யாராவது உணர்ந்ததுண்டோ.
கிராமம் போல ஒன்றைக் காட்ட முடியுமே தவிர கிராமத்து ஜீவனை உணரச்
செய்யமுடியுமோ, முடிந்திருக்கிறதோ? பாரதி ராஜா முழுவதையும் நான்
இப்படித் தான் பார்க்க வேண்டியிருக்கிறது.
(தொடரும்).
vswaminathan.venkat@gmail.com |