இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவம்பர் 2009 இதழ் 119  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நினைவுகளின் தடத்தில் ..
நினைவுகளின் தடத்தில் (37)

- வெங்கட் சாமிநாதன் -


வெங்கட் சாமிநாதன்பாட்டியை ரயிலேற்றி விட்டேன் தான். அது எனக்குத் தெரியும். ஆனால் 'இதோ விடிஞ்சுடும்' என்று ரெண்டு மணிக்கோ மூணு மணிக்கோ எழுப்பிவிட்டு பாட்டியையும் என்னோடு அனுப்பி வைத்தது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அப்படி ஒண்ணும் விடியற நேரம் இல்லை என்று தெரிந்ததும் ரொம்பவும் கவலைப்பட்டிருப்பார்கள். சௌக்கியமா வழியில் பயப்படாமல் கும்பகோணம் நேரத்திற்குப் போய்ச்சேர்ந்தோமா, பாட்டி ரயில் ஏறினாளா என்பது எப்படி அவர்களுக்குத் தெரியவரும்? நான் இனி வெள்ளிக்கிழமை சாயந்திரம் தான் ஊருக்கு வருவேன். அதுவரைக்கும், என்ன நடந்தது என்று எப்படித் தெரிந்து கொள்வது? எவ்வளவு கவலைப் பட்டார்களோ தெரியாது. நான் வாரக் கடைசியில் ஊருக்குப் போனபோது என்னை யாரும் ஏதும் கேட்கவில்லை. எங்கிருந்தும் செய்தி ஏதும் வராதபோது, எல்லாம் நல்லபடியாகத் தான் நடந்திருக்கும் என்று நினைத்து மனம் சமாதானம் அடைந்திருப்பார்கள். பின்னர் கவலையும் மறக்கப்பட்டிருக்கும்.

இந்த மாதிரி அனுபவம், ஆனால் யாரையும் கவலைப் படுத்தாத அனுபவம் நிகழ்ந்தது, மறுபடியும் பாட்டி சம்பந்தப் பட்டது தான். இன்னொன்றும் உண்டு. பாட்டியைத் தேடி அடுத்தடுத்து ஒவ்வொரு கிராமமாக அலைந்தது. எதற்காக என்னை அனுப்பினார்கள், என்ன சொல்லி அனுப்பினார்கள் என்பதெல்லாம் இப்போது மறந்து விட்டது. பாட்டிக்கு உறவினர்கள் கும்பகோணத்திலிருந்து உமையாள்புரம் வரையில், உள்ள ஒவ்வொரு ஊரிலும் இருந்தார்கள். எல்லாம் அடுத்தடுத்து இரண்டு அல்லது மூன்று மைல் தொலைவில் இருந்தன அந்த ஊர்கள் எல்லாம். காலையில் உடையாளூரிலிருந்து கிளம்பினேன். இன்னொரு வழியாக, எல்லாம் வயல்கள் ஊடே வரப்பு வழியாகத் தான், பட்டீஸ்வரம் வழியாகப் போனால் நான்கு மைல் தான் இருக்கும். சுமாமி மலை போய்ச் சேர்ந்து விடலாம். கும்பகோணம் போய் அங்கிருந்தும் போகலாம். அப்படி போனால் ஏழரை அல்லது எட்டு மைல் தூரம் நடக்க வேண்டிவந்துவிடும். சுவாமி மலை தாத்தா உயிருடன் இருந்த வரை பாட்டி இருந்த ஊர். இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முந்திய கதை அது. அங்கிருந்து தான் மாமா கும்பகோணம் காலேஜுக்குப் படிக்கப் போய் வந்தார். அதிக தூரம் இல்லை அதிகம் மூன்று மைல் தூரம் தான். நல்ல வண்டிப் பாதை அந்த நாட்களில் இருந்தது. ஆனால் நான் போன போது அங்கு பாட்டிக்கு யார் எந்த உறவினர் இருந்தார்கள் என்பது இப்போது ஞாபகமில்லை. என் அத்தை ஒருத்தி, ஜெயம் அத்தைக்கு மூத்தவள், சுவாமி மலையில் சன்னதித் தெருவில் இருந்தாள். பாட்டி அங்கு போக மாட்டாள். ஆனால் அத்தையிடம் கேட்டால், பாட்டி போயிருக்கக் கூடும் உறவுக்காரர் வீட்டின் அடையாளம் சொல்வாள். அத்தை வீட்டுக்குப் போனேன். "என்னடா, ரொம்ப அபூர்வமா இருக்கே. என்ன விஷயம்? என்று அத்தை ஆச்சரியத்துடன் விசாரித்தாள். அது ஆச்சரியமோ கிண்டலோ, கோபமோ, எதுவாக இருந்தாலும் அது நியாயமானது தான். என்னுடைய நினைவில் அந்த அத்தையின் வீட்டுக்கு இரண்டே இரண்டு தடவை தான் போயிருக்கிறேன். போய் அங்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் இருந்ததில்லை. "நிலக்கோட்டையிலேர்ந்து பாட்டி இங்கே வந்திருக்காளான்னு பாக்க வந்தேன்." என்று பதில் சொன்னேன். "இங்கே என்னத்துக்குடா ஒன் நிலக்கோட்டைப் பாட்டி வரா. இரு. போய் பாத்துட்டு வரச் சொல்றேன்." என்று சொல்லி தன் பெண்ணை அனுப்பினாள். அவள் கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தாள். "அங்கே வரலயாம். இங்கே வந்தா உமையாள் புரத்துக்குத் தான் போவாள். அங்கே இருப்பாள்" ன்னு சொல்லச் சொன்னா" என்று செய்தியைச் சொன்னாள். " சரி அத்தே, நான் உமையாள் புரம் போய் பாக்கறேன்." என்று சொல்லிக் கிளம்பினேன். "ஏண்டா உடனே கிளம்பிட்டே?" என்று அத்தை கேட்டாலும், இருக்கச் சொல்லி வற்புறுத்தவில்லை.

சுவாமி மலையிலிருந்து உமையாள் புரம் கிட்டத் தட்ட ஐந்து மைல் தூரம் இருக்கும். நல்ல ரோடு. இரண்டு புறமும் மரங்கள், நெல் வயல்கள். ஜனங்கள் நடமாட்டம் இருந்து கொண்டிருக்கும். சிரமமாக இராது. மனதுக்கு சந்தோஷமாகவே இருக்கும். வெயில் நேரம் தான் என்றாலும், மரங்கள் அடர்ந்த அந்த ரோடில் வெயில் அவ்வளவாகத் தெரியாது. உமையாள் புரம் போய்ச் சேர்ந்த போது மணி 11 1 இருக்கலாம். அங்கு இருந்தது பாட்டியின் ஒன்று விட்ட சகோதரி ஒருத்தி, அவளும் விதவை தான், பாட்டிக்கு மூத்தவள். அவளுடைய ஒரு மகன், மூத்தவர், நாராயணஸ்வாமி என்று பெயர் (ஆனால் 'அப்பு' என்று சொல்லித் தான் கூப்பிடுவார்கள்) ஜெம்ஷெட்பூரில் இருந்தார். இன்னொரு மகன் இளையவர், அப்போது அதே சுவாமி மலை ரோடில் அடுத்து இருந்த பாபுராஜபுரத்தில் கணக்குப் பிள்ளையாக இருந்தார். பாட்டி எப்போது நிலக்கோட்டையை விட்டு தஞ்சை பக்கம் வந்தாலும் இந்த பெரிய பாட்டியைப் பார்க்காமல் இருக்க மாட்டாள். பாட்டிக்கு இருந்த ஒரே அன்னியோன்னிய உறவு அந்த ஒண்ணுவிட்ட அக்கா (பெரிய பாட்டி) தான். அவளுடைய பிள்ளைகள் தான். நிலக் கோட்டையில் மாமாவோடு பேச்சு எழுந்தால் இந்த உறவுகளைப் பற்றித் தான் பெரும்பாலும் பேச்சு வரும். நான் போனபோது அந்தப் பாட்டி வீட்டில் இல்லை. யார் வீட்டுக்கோ எதற்கோ போயிருந்தாள். வீட்டில் இருந்தது வெங்கடராமன் என்பவர். அவரும் மாமாவுக்கு ஏதோ ஒன்று விட்ட உறவு. என்ன என்பது எனக்கு சரியாக இப்போது நினைவில் இல்லை. அவர் அம்பாசமுத்திரத்தில் ஒரு மில்லில், ஏ. எ·ப். அண்ட் ஹார்வி மில் என்று நினைக்கிறேன், ஏதோ வேலையில் இருந்தார். பாட்டியும் மாமாவும் பழைய ஊர்க் கதைகள் பேசும் போது இவர் பெயரும் அடிபடும். ஆனால் அதில் ஏதோ ஒரு கசப்பின் தொனி இருக்கும். அவர் தான் எனக்கு பாட்டி பற்றி விவரம் சொன்னார். " இங்கே இப்போ இல்லியேப்பா. நேத்திக்கே இருட்டறதுக்கு முன்னாலே போகணும்னு சொல்லிட்டுக் கிளம்பிட்டா. கும்மோணம் போணும்னு தான் சொல்லிட்டு கிளம்பினா. ஆனா பாபுராஜ புரத்திலயே இறங்கிண்டு, வண்டிக்காரனைத் திருப்பி அனுப்பிச்சுட்டா. நீ பாபுராஜபுரம் குழந்தையாத்திலே போய்ப் பார், அங்கே தான் இருப்பா" என்று சொன்னார். குழந்தை என்று அவர் சொன்னது, பாபுராஜபுரத்தில் கணக்குப் பிள்ளையாக இருக்கும் இளையவரை. ரொம்ப தமாஷான மனிதர். சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். நாங்கள் எல்லாம் அவரைக் "குழந்தை மாமா" என்று தான் கூப்பிடுவோம்.

பின் என்ன? நடந்தேன் பாபுராஜபுரத்திற்கு. அது ஒன்றும் அதிக தூரம் இல்லை. உமையாள்புரம், பாபுராஜபுரம் எல்லாம் ஒன்றும் பெரிய ஊர்கள் இல்லை. ஒன்றிரண்டு தெருக்களே உள்ள ஊர்கள் அவை. உடையாளூர் போல பிரதான சாலையிலிருந்து உள்ளே வெகு தூரம் நடக்கவேண்டிய அவசியமும் இல்லை. ஊர்களை ஒட்டியே சாலையும். குழந்தை மாமா வீட்டுக்குப் போனேன். மாமி தான் இருந்தாள். மாமா ஏதோ வேலையாக வெளியூர் போயிருக்கிறாராம். பாட்டியைத் தேடி வந்தேன் என்றேன். உமையாள்புரம் போயிருந்தேன். இங்கே வந்திருப்பதாகச் சொன்னார்கள் என்றேன். "ஆமாண்டா பாட்டி நேத்திக்கு வந்தா. ஆனா இன்னிக்குக் காலம்பற காப்பி சாப்பிட்டுட்டு "நான் போறேன். 'உங்க ரண்டு பேரையும் பாக்கத்தான் வந்தேன் பாத்தாச்சு, கிளம்பறேன்னு' கும்மோணம் புறப்பட்டுப் போயிட்டாளே. ராத்திரி ரொம்ப நாழி பேசிண்டிருந்தா. காலம்பற தான் மாமா வண்டிக்குச் சொல்லி கும்மோணத்திலே கொண்டு விடச் சொல்லி அனுப்பினா." என்றாள். எனக்கு ரொம்பவும் ஏமாற்றமா இருந்தது. ரொம்பவும் களைப்பாவும் இருந்தது முகத்தில் தெரிந்தது போலிருக்கு. "உள்ளே வாடா, இந்த வெயில்லே நீ எப்போ கும்மோணம் போறது? எல்லா மெதுவாப் போயிக்கலாம். ஏதாவது சாப்டயா இல்லையா? எப்போ கிளம்பினே. இந்த மாதிரி வெயில்லே அலைஞ்சா உடம்பு என்னத்துக்குடா ஆகும்... என்று சரமாரியா கேள்வி கேட்பதும், நான் பதில் சொல்வதற்கு முன்னால் நான் சொன்னதா தானே யூகித்துக்கொண்டு, தானே அதுக்கு பதிலா இன்னொரு கேள்வி கேட்பதுமா....." உள்ளே போனேன். "போய் கால அலம்பிண்டு வா. ஒரே புழுதியா இருக்கு. வா வந்து ஊஞ்சல்லே உக்காந்துக்கோ.." என்று சொல்லிக்கொண்டே உள்ளே போனாள். எனக்கு அந்த உபசாரமெல்லாம் வேண்டித்தான் இருந்தது. நான் விடிகாலையில் ஊரிலிருந்து புறப்பட்டு ஊர் ஊராக அலைந்த கதை எல்லாம் சொன்னேன். மாமிக்குச் சிரிப்பாவும் இருந்தது. வேதனையாகவும் இருந்தது. " அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம். என்ன சாப்டறே சொல்லு. சாப்டுட்டு கொஞ்ச நாழி படுத்துக்கோ. அப்பறம் சாயந்திரமா கும்மோணம் போய்க்கலாம்" என்று சொல்லி உள்ளே போனாள். "மோர் சாதமா சாப்டறேன். அது போறும் மாமி, வேறே ஒண்ணும் வேணும்போலே இருக்கலே" என்றேன். உடனே இலை போட்டாள். சாப்பிட்டேன். சாப்பிட்டுவிட்டு திண்ணையில் போய் படுத்துக் கொண்டேன். களைப்பாத் தான் இருந்தது. வெளியில் நல்ல வெயில். மாமி வந்தாள். "ஏதாவது புஸ்தகம் இருந்த கொடுங்களேன்," என்று கேட்டேன். "புஸ்தகமா? தெரியலையேப்பா, சரி ஏதாவது இருக்கா பாக்கறேன்." என்று சொல்லி விட்டு உள்ளே போனவள் கொஞ்ச நாழிக்கப்புறம் ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்து தந்தாள். "இதாம்பா இருக்கு. வேறே ஒண்ணும் இல்லே," என்றாள். அதைப் பிரித்தால், அது மாமாவுக்கு ரெவென்யூ டிபார்ட்மெண்டிலே கொடுத்த நில வரி சம்பந்தமான ஏதோ ஒன்று. மாமி என் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள். நான் எதுவும் சொன்னால் ஏமாற்றமாக இருக்கும். "சரி மாமி, படிச்சிண்டே தூக்கம் வந்தா ஒரு தூக்கம் போடறேன். வெயில் தாழ கிளம்பிப் போறேன்" என்று சொன்னேன். மாமி உள்ளே போனாள். நான் புத்தகத்தை தலைக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு தெருவைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நல்ல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. தெருவில் நடமாட்டம் இல்லை.

நாலு மணி வாக்கில் கும்பகோணம் புறப்பட்டிருக்க வேண்டும். டபீர் நடுத்தெருவில் ஒரு வீடு எனக்குத் தெரியும்.. அங்கு தான் பாட்டி போயிருப்பாள். அவர்கள் யார், என்ன உறவு என்பது எனக்குத் தெரியாது. அங்கு ஒரு முறை நான் போயிருக்கிறேன். அந்த வீட்டில் பாட்டியைப் பார்க்கப் போன நினைவு எனக்கு இருக்கிறது. ஆனால் பாபுராஜ புரத்திலிருந்து கிளம்பி என்ன செய்தேன் என்பது நினைவுக்கு வர மறுக்கிறது. ஆனால் என் நினைவில் பதிவாகியிருப்பது, நான் அந்த டபீர் தெரு வீட்டிற்குச் சென்று பார்த்தது ஒரு காலை நேரம். பாட்டி ரயில்வே ஸ்டேஷனுக்குப் போக ஒரு மாட்டு வண்டி பிடித்து வரச் சொன்னாள். நான் மாட்டு வண்டிக்காக அலைந்தேன். ஏன் அலைந்தேன் என்பது தெரியவில்லை. ஏனெனில் வழியில் ஒரு இடத்தில் நின்றுகொண்டிருந்த வண்டியைப் பார்த்துதும் கேட்டேன். "ஸ்டேஷனுக்குப் போகணும் டபீர் தெருவிலேயிருந்து. வரியா" என்று. "டபீர் தெருக் கோடிலேயே வண்டி நிக்குமே, அங்கியே பிடிச்சிருக்கலாக்காமே. இவ்வளவு தூரம் என்னத்துக்கு வந்தே? என்று அவன் சிரித்துக் கொண்டே கேட்டான். "அங்கே வண்டி இல்லாமத்தான் தேடி வந்தேன்" என்று சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கிறது. ஆனால் அது காலை வேளை. பாபுராஜ புரத்திலிருந்து நான் கிளம்பியது சாயந்திரம் நாலு மணிக்கு.

ஆக என்ன நடந்தது என்பது சரிவர நினைவில் இல்லை. ஆனால் அன்று பாட்டியைத் தேடிக்கொண்டு ஒரு ஊர் விட்டு இன்னொரு ஊர் என்று நடந்து அலைந்தது நினைவில் இருக்கிறது. அது எப்போதாவது நினைவுக்கு வரும். கிட்டத்தட்ட '22 - 24 மைல் அன்று நடந்தோமே!' என்று அது போன்ற நீண்ட தூர நடை நேரும்போதெல்லாம் மனதில் எண்ணங்கள் ஓடும். 1950-களில் ஹிராகுட்டில் இருந்த போது, சம்பல்பூருக்கு சினிமா பார்க்க நண்பர்களும் சைக்கிளும் ஜமா சேராது போய், தனியாக போக நேர்ந்தால், இரண்டாவது ஆட்டத்திற்குப் பிறகு பஸ் கிடைக்காது. 9 மைல் தூரம் நடந்தே வருவேன். ஹிராகுட் திரும்பும் போது இரவு மணி இரண்டாகியிருக்கும். சில சம்யங்களில் சம்பல்பூரிலேயே ராத்திரி எங்காவது தூங்கிவிட்டு விடிந்ததும் காலையில் எழுந்து ஹிராகுட்டிற்கோ புர்லாவுக்கோ நடப்பேன். காலையில் அலுவலகத்திற்குப் போக வேண்டுமே. தில்லியில் இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை வரும் உலகத் திரைப்பட விழாவின் போதெல்லாம், அலுவலகத்திற்கு போகமாட்டேன். தினம் நாலு படம் பார்த்தே ஆகவேண்டும். பழைய தில்லி எல்லையில் இருக்கும் டிலைட் சினிமாவில் கடைசி 10 மணி இரவுக் காட்சி படம் பார்த்துவிட்டு அங்கிருந்து கரோல் பாகில் நான் தங்கியிருந்த அறைக்கு நடந்துதான் திரும்ப வேண்டியிருக்கும். ஐந்து அல்லது ஆறு மைல் தூரம். பதினாலு நாட்களும் இந்த மாதிரியான அசுர நடைப் பயணம் நிகழும். இதற்கான பயிற்சியைத் தான் பாட்டி எனக்கு அந்நாட்களில் கொடுத்தாளோ என்னவோ. அது என்னவாக இருந்தாலும், அந்த நினைவுகள் எழும்போதெல்லாம் அந்த நினைவுகளோடு பாட்டியும் வருவாள். அது சுகமாக இருக்கும். அந்த நடைகள் மாத்திரமல்ல, நடையோடு வரும் அந்த நினைவுகளும் சுகமாகத்தான் இருக்கின்றன. - 25.1.09

நினைவுகளின் தடத்தில் - (38)

வெங்கட் சாமிநாதன்கும்பகோண வாசம் அப்போதும் பிடித்திருந்தது. இப்போது அது பற்றி நினைத்துப் பார்க்கும்போதும் பிடித்துத் தான் இருந்ததாகத் தோன்றுகிறது. அந்த வளரும் வயதில் ஒவ்வொரு இடமும், எதிர் நிற்கும் புதிய அனுபவங்களும், சுவாரஸ்யமாகத் தான் இருந்தன. அதிலும் கும்பகோணத்தில் என் இஷ்டத்துக்கு நாட்களைக் கழிக்கும் தனிக்கட்டையாக சுதந்திரத்தோடு இருந்தது பிடித்திருந்தது. இப்போது அது பற்றி எழுதும்போது சில வேடிக்கையான சம்பவங்களும் ஞாபகத்துக்கு வருகின்றன.

ஒரு நாள் பாட்டி இரண்டு நாட்கள் முன் நடந்த ஒரு சம்பவம் பற்றிச் சொன்னாள். ராத்திரி நேரத்தில் அங்கு திருடன் வருகிறான் என்று. பின் வேடிக்கையான ஒரு திருட்டு பற்றியும் சொன்னாள். இரண்டு மூன்று வீடுகள் தள்ளி ஒரு வீட்டில் வைத்திருந்த பெரிய பித்தளைச் சாமான்கள் நிறைய களவு போய்விட்டதாம். மகாமகக் குளம் மேற்குத் தெரு முடியும் இடத்தில், வடக்குத் தெரு ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு ஹோட்டல் இருந்தது. அந்த ஹோட்டல் காரரின் பாத்திரங்கள்ளாம் களவு போனது. அந்த ஹோட்டல் எப்போதும் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் ஒரே ஒரு தடவை தான் அந்த ஹோட்டலுக்கு ஒரு நாள் இரவு பசிக்கு ஏதாவது சாப்பிடவேண்டும் என்று போயிருக்கிறேன். காசு ஏது? ஒரு தடவை பரிட்சைக்குத் தயாராக முதல் நாள் சாயந்திரமே நான் உடையாளூரை விட்டுக் கிளம்பி கும்பகோணம் வந்தேன். வந்தால், பாட்டி இல்லை. கிராமத்துக்குப் போயிருக்கிறாள். மறு நாள் காலைதான் வருவாள். நான் கிராமத்திலிருந்து நேரே பள்ளிக்கூடம் போய்விட்டு மறு நாள் திங்கட்கிழமை சாயந்திரம் தான் பாட்டி வீட்டுக்கு வருவேன், அதனால் திங்கட் கிழமை காலை வந்தால் போதும் என்று எண்ணி பாட்டி கிராமத்துக்குப் போயிருக்கிறாள். பாட்டி பேரில் தப்பில்லை. நான் தான் வழக்கத்துக்கு மாறாக வந்து சேர்ந்தேன். பாட்டி வீட்டில் குடியிருக்கும் கபிஸ்தலத்து மாமி, "பாட்டி இல்லியேப்பா, நாளைக்குத்தானே வருவோ" என்றாள். "நாளைக்குப் பரிட்சை, அதனால் தான் வந்தேன்" என்று அவர்களுக்குப் பதில் சொன்னேனே தவிர என்ன செய்வது என்று தெரியவில்லை. யோசித்தேன். பரிட்சை நடந்து முடிந்துவிட்ட பாடங்கள் சம்பந்தப்பட்ட நோட்புக், புஸ்தகங்களை பழைய பேப்பர் கடையில் போட்டால் ஏதோ காசு கிடைக்கும். ஒரு தோசைக்காவது ஆகும். அப்படித்தான் அந்த ஒரு நாள் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்து ஒரு ஊத்தப்பம் சாப்பிட்டேன். மறு நாள் காலை பாட்டி வந்துவிட்டாள். "என்னடா இது? இப்படிப் பண்ணிட்டே. என் கிட்டே முன்னாலேயே சொல்லப்படாதோ, நான் ஒரு நா முன்னாலேயே வந்திருப்பேனோல்யோ, ராத்திரி ஏதாவது சாப்பிட்டியா இல்லியா?" என்று ரொம்ப கவலைப்பட்டு விட்டாள் பாட்டி. தன்னை நம்பி வந்துள்ள பிள்ளையை ஒரு ராத்திரி பட்டினி போட்டு விட்டோமே என்ற ஆதங்கம் பாட்டிக்கு. அங்கு இருந்த இரண்டு வருடங்களில் அந்த ஹோட்டலுக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம் ஒரு நாள் ஏற்பட்டது இப்படித்தான் என்று சொல்ல வந்தது,. காசு வாங்கித் தான் சாப்பாடு போட்டாள் என்றாலும் பாட்டியின் ஆதங்கமும் அதில் ஒட்டிக்கொண்டு வந்துவிட்டது.

அந்த பாத்திரத் திருட்டு பற்றியே கொஞ்ச நாட்கள் அக்கம் பக்கத்துப் பெண்களிடையே பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது. எனக்கு இது தெரிய வந்தது பாட்டியும், வீட்டில் குடியிருக்கும் அம்மாளும் அடிக்கடி இது பற்றிப் பேசுவது எங்கள் காதிலும் விழுந்தது. 'என்னடிம்மா பண்றது, ஜாக்கிரதையா இரு. அவ்வளவு தான் சொல்லலாம், அப்புறம் பகவான் விட்ட வழி," என்று பாட்டி முடிப்பாள் அந்தப் பேச்சை. நான் திண்ணையில் தான் படுத்துக் கொள்வேன். சில நாட்கள் பாட்டியின் பையனும் திண்ணையில் படுத்துக் கொள்வான். சில நாட்கள் தான். எப்போதும் இல்லை. பாட்டியின் தொணதொணப்பு தாங்கவில்லை யென்றால் படுக்கையைச் சுருட்டிக்கொண்டு திண்ணைக்கு வந்து விடுவான். திண்ணை வாசல் பக்கம் திறந்து தான் இருக்கும். இரவு நேரம் கழியக் கழிய, வெப்பம் குறைந்து கொஞ்சம் காற்றோட்டமும் சேர்ந்து கொண்டால், தூக்கம் சுகமாக இருக்கும்.

ஒரு நாள் பாதி ராத்திரி திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த என்னை, பாட்டி வந்து எழுப்பினாள். "எழுந்திருடா. உள்ளே வந்து படுத்துக்கோ. யாராத்திலோ திருடன் வந்துட்டான். தெருவெல்லாம் ஒரே சத்தமா இருக்கு. உனக்கு காதிலே விழலயா. உள்ளே வந்து படுத்துக்கோ" என்றாள். சொல்லும்போதே அவள் குரலில் பீதி தெரிந்தது. "பயப்படாதேங்கோ பாட்டி. இங்கே திண்ணையிலே திருடனுக்கு என்ன கிடைக்கும்? ஒண்ணும் பயமில்லே. நீங்க வாசக்கதவை நன்னா தாப்பாப் போட்டுண்டு படுத்துக்குங்கோ". பாட்டி கேட்பதாக இல்லை. என்னைப் பத்திரமா பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அவள் மீது சுமந்திருப்பதாக நினைத்தாள். ஆனாலும் திண்ணையில் படுத்திருக்கும் சுகம் எனக்கல்லவா தெரியும். ஆனால் பாட்டியை புரிய வைப்பது கஷ்டமாகத்தான் இருந்தது. மனமின்றி தயக்கத்துடன் தான் பாட்டி உள்ளே போனாள். ஏதாவது ஒண்ணுக்கொண்ணு ஆயிடுத்துன்னா அப்பாவுக்கு பாட்டின்னா பதில் சொல்லியாகணும். 'சின்ன வயசு. பயந்தெரியறதா பாரேன்!' என்று அலுத்துக்கொண்டிருப்பாள்

பாட்டி வாசல் கதவை உட்புறமாகத் தாட்பாள் போட்டுக்கொண்டு உள்ளே போய்விட்டாள். பாட்டி எழுப்பி விட்டதால், தூக்கம் வரவில்லை. சும்மாவே படுத்திருந்தேன். கண்ணை மூடிக்கொண்டு படுத்திருந்தால் சிறிது நேரத்தில் தூக்கம் வந்து விடும். ஆனால், ஏனோ வரவில்லை. தூரத்தில் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. ஒரே கூச்சலாகத் தான் காதில் விழுந்து கொண்டிருந்தது. திருடனைப் பிடித்து விட்டார்களோ, இல்லை துரத்துகிறார்களோ, இல்லை தேடிகொண்டு ஒருவருக்கொருவர் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்களோ, சரியாகத் தெரியவில்லை. எப்படியும் இருக்கலாம். கூச்சல் காதில் விழுந்து கொண்டே இருந்ததால், தூக்கம் வரவில்லை. ஒரு கட்டத்தில் கூச்சல் வெகு உரக்க, கிட்டத்திலிருந்து கேட்பது போல் இருந்தது. வெகு அருகாமையில் கேட்பது போலிருக்கவே, படுக்கையை விட்டு எழுந்து தெருவுக்கு வந்து எட்டிப் பார்த்தேன்.

தெருவின் வடக்குக் கோடியில் ஒரு கூட்டம் கூடியிருந்தது. சலசலப்பு. திண்ணையில் நான் படுத்திருந்த ஜமக்காளத்தையும் தலையணையையும் தவிர வேறு ஒன்றுமில்லை. அது அப்படியே கிடக்கட்டும், அதை யார் எடுத்துக்கொண்டு போகப் போகிறார்கள் என்று, தெருவுக்கு வந்து கூட்டம் கூடியிருந்த இடத்துக்குப் போனேன். சுமார் இருபது பேர் இருப்பார்கள். ஒரு நாலைந்து பேர் ஒருவனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார்கள். நாலைந்து பேர் சூழ்ந்து கொண்டாலும் ஒன்றிரண்டு பேர் தான் அடிப்பார்கள். முதுகில் மொத்து விழும். தலை நிமிர்ந்தானானால், கன்னத்தில் அறை விழும். 'அய்யா அடிக்காதீங்கய்யா, எனக்கு ஒண்ணும் தெரியாதையா?" என்று அடிபட்டவன் சத்தமிட்டுக்கொண்டிருந்தான். அடித்த ஒன்றிரண்டு பேர் ஆளுக்கு இரண்டு மொத்து மொத்தியபிறகு நின்று விடுவார்கள். "எவண்டா நான் திருடினேன்னு ஒப்புக்குவான்? என்று இன்னம் இரண்டு பேர் தம் முறை வந்தது என்று அவனைக் காலால் உதைப்பார்கள். முகத்தில் அறைவார்கள். அடித்தவர்கள் முகத்தில் தான் சீற்றமும், கைகளில் பதட்டமும் காணப்பட்டதே தவிர, அடிபட்டவன் அவ்வப்போது எழுந்து நிற்க முயற்சிப்பான். "சார், சார், நான் சொல்றதைக் கேளுங்க சார்....நான் பயந்துட்டு ஒடினேன் சார்..." என்று சொல்ல வந்தவனை சொல்ல விடவில்லை. ""அட நீங்க ஒண்ணு, அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான், சார்., போட்டுத் தள்ளுங்க அவனை, அப்பத்தான் புத்தி வரும்" என்று தள்ளி நிற்பவர்கள் தள்ளி நின்றே தூண்டி விட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு செட் களைத்த பிறகு, இன்னொரு செட் தன் முறை வந்து அடிக்கத் தொடங்குவது போல அங்கு சாத்துபடி நடந்து கொண்டிருந்தது. இதில் அடி வாங்கியும் , சளைக்காத, களைத்துப் போகாத ஆசாமியாக இருந்தான் அடி வாங்கிக் கொண்டிருந்தவன். சில சமயம் அவனால் அடிப்பவர்களையும் அடியையும் மீறி எழுந்து நிற்க முடிந்தது. அவன் இத்தனை பேரால் இவ்வளவு நேரம் அடி வாங்கியவன் போலவே தோன்றவில்லை. நல்ல திடகாத்திரமான, உடற்பயிற்சி செய்து விண்ணென்று தசை நரம்புகள் புடைக்க வளர்த்துக் காப்பாற்றிக் கொண்டு வரும் சரீரம் அது. அவனைச் சுற்றி இருந்தவர்கள் தான் இரண்டு மூன்று பேராக முறை வைத்து அடித்தார்களே தவிர அவன் எதிர்த்து நின்றால் அவர்கள் யாரும் அவனிடம் ஒரு அடி வாங்கி எழுந்து நிற்க முடியுமா என்பது சந்தேகம் என்று தான் எனக்குத் தோன்றிற்று. எனினும் அவன் ஏன் அடி வாங்கிக் கொண்டிருந்தான்? ஏன் ஒருவரைக் கூட ஒரு முறை கூட அவன் திருப்பி அடிக்கவில்லை? ஒரு வேளை குற்ற உணர்வு எதிர்த்து நிற்கும் தைரியத்தைக் கொடுக்கவில்லையோ! அல்லது சுற்றி வளைத்துக் கொண்டவர்கள் யாரையும் ஒரு அடி திருப்பி அடித்துவிட்டால், எல்லோரும் சேர்ந்து இன்னம் ஆக்கிரோஷத்தோடு அடிக்கத் தொடங்கிவிடுவார்கள் என்ற பயமோ? தெரியவில்லை.

"கொஞ்சம் சொலறதைக் கேளுங்க சார். நான் திருடனில்லை சார். சார் சார் அடிக்காதீங்க சார். நான் பாட்டுக்கு நடந்துட்டு இருந்தவனை கூச்சல் போட்டு துரத்த ஆரம்பிச்சா என்ன சார் பண்ணுவேன், சார், சார். " அவன் சொல்வதை யார் கேட்டார்கள்? பத்து பேருக்கு ஒருத்தன் அகப்பட்டுக்கொண்டால், அடிப்பதில் ஒரு ருசி இருக்கும் போல. மறுபடியும் அவன் அடிகளைத் தாங்கிக்கொண்டு எழுந்து நின்றான். அடிக்க வீசும் கைகளைத் தடுத்தாலும் நாலுக்கு இரண்டு அடி விழத்தான் செய்தது. ஒரு சமயத்தில் கூட்டத்தில் யாரையோ பார்த்துத் திகைத்து, "இருங்க சார் அடிக்காதீங்க சார், இவன் எங்க ஊர்க்காரன் மாதிரி இருக்கு. இவன் எங்க ஊர்க்காரன் தான் சார். இவனைக் கேளுங்க சார். நான் திருடனான்னு. நல்ல வேளையா இவன் வந்து இங்கே நிக்கிறான்" என்று தள்ளி நிற்கும் ஒருவனைக் கைகாட்டினான். "டேய் சம்முகம் சொல்லுடா. என்னைப் போட்டு அடிக்கறதைப் பாத்துட்டே நிக்கிறயே" சார் இவன் எங்க ஊர்க்காரன் சார். " என்று சொல்ல, கூட்டம் அவனைப் பார்த்து, "இவனைத் தெரியமா உனக்கு. உங்க ஊர்க்காரந்தானா இவன்?" என்று கேட்க, " ஆமாங்க, எங்க ஊர் தான். அங்கியே அவன் கில்லாடி தாங்க. இங்கியும் அவன் வேலையைக் காட்டறான் போல," என்று அந்த ஆளும் சொல்லவே, "பாத்துக்க, உங்க ஊர்க்காரன் என்ன சொல்றான்னு," மறுபடியும் மண்டகப் படி தொடர்ந்தது. கில்லாடி என்று என்ன அர்த்தத்தில் சொன்னானோ அந்த ஆள், அது இந்த சந்தர்ப்பத்தில் கூட்டத்துக்கு சாதகமாகவே அர்த்தமாகியது.

இதற்குள் ஒரு போலீஸ்காரன் தலை தட்டுப் படவே, "அடிக்கறதை நிறுத்துங்கப்பா, போலீஸ் வருது, ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு போகட்டும்." என்று போலீஸ் வருகையைக் கண்ட ஒருவர் சொல்லவே, சிலர் அவர் சொன்ன திசையைப் பார்த்தனர். அப்படியும் அடி நிற்கவில்லை. இது வரை சான்ஸ் கிடைக்காது தள்ளி நின்ற ஓரிருவர் தம் பங்குக்கு மண்டகப்படி செய்தனர். கூட்டத்தில் இருட்டில் யார் அடித்தார் என்று என்ன தெரியப்போகிறது. தானும் இரண்டு சாத்து சாத்தின திருப்தி. "என்னய்யா, என்ன ரகளை இங்கே?" என்ன இவந்தானா? கொஞச நாள் முன்னே இங்கே திருட்டுப் போச்சே" என்று சொல்லிக்கொண்டே விலகி நின்றவர்களூடே புகுந்து அடிபட்டுக் கொண்டிருந்தவனைப் பார்த்து, "நடறா ஸ்டேஷனுக்கு, அங்கே உன்னை விசாரிக்கலாம்" என்று சொல்லிக்கொண்டே அவர் பங்குக்கு அதிகார தோரணையுடன் கன்னத்திலும் இரண்டு அறையும் முதுகில் இரண்டுகுத்தும் விழுந்தன.

போலீஸ்காரன் அவனைப் பிடித்து இழுத்துக்கொண்டே போக, ஏழெட்டுப் பேர் கொண்ட ஒரு சிறு கூட்டம் உடன் சென்றது. அதில் நானும் இருந்தேன். எனக்கும் என்னதான் பார்க்கலாமே என்று தோன்றிற்று. கேட்பதற்கு யார்? நான் யாருக்கு பதில் சொல்ல வேண்டும்? இந்த மாதிரி அனுபவம் என் வயதுப் பையன்கள் யாருக்குக் கிடைத்திருக்கும். இல்லை கிராமத்தில் யாருக்குக் கிடைத்திருக்கும்? இது சுவாரஸ்யமாகவே இருந்தது. நானும் அக்கூடத்தோடு சென்றேன். வழியெல்லாம் அகப்பட்டவனின் புலம்பல் தான் தொடர்ந்தது. "சார், என்னை விட்ருங்க சார். நான் வேலை செஞ்சு பிழைக்கவன் சார். என் பிழைப்பு போயிடும் சார்" என்று சொல்லிக் கொண்டே இருந்தான். அடி விழுவது தான் நின்றிருந்ததே தவிர அவன் சொல்வதை யாரும் கேட்பதாக இல்லை. போலீஸ் ஸ்டேஷன் அதிக தூரத்தில் இல்லை. அந்த ரோடோடேயே நேராகப் போனால், காமராஜ் கறிகாய் மார்க்கெட்டுக்குப் பக்கத்தில், சக்கரபாணி ஸ்வாமி தெப்பக்குளத்திற்கு எதிரே இருந்தது போலீஸ் ஸ்டேஷன்.

ஸ்டேஷன் வந்ததும், "யாருய்யா இந்த ஆளை முதல்லே பார்த்தது? அவங்க மாத்திரம் கூட வாங்க. மத்தவங்கள்ளாம் வெளீலே நில்லுங்க. ஸ்டேஷனுக்குள்ளே கூட்டம் போடக்கூடாது." என்று மூணு நாலு பேரை மாத்திரம் சாட்சிகள் என்று அடையாளம் சொல்லிக் கொண்டவர்களை மாத்திரம் உள்ளே போனார்கள். என்னையும் சேர்த்து மற்றவர்கள் வெளியே நின்று கொண்டிருந்தோம்.

ஆளாளுக்கு அவரவர்க்குத் தெரிந்ததைக் கதையாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். உள்ளே மறுபடியும் அலறல் சத்தம். அடி விழுகிறது போலும். ஒரு பெரிய சாகஸ காரியம் செய்துவிட்டதான தோரணை இருந்தது. நான் அதற்கு நேர்முக சாட்சி என்ற உற்சாகம் எனக்கு. ஒன்றிரண்டு பேர் போலீஸ் ஸ்டேஷனுக்குள் என்னதான் நடக்கிறது என்று பார்க்க நுழைந்தனர். கொஞ்சம் உள்ளே சென்று தள்ளி நின்றாலே என்ன நடக்கிறது என்று தெரியும். இப்படி சிலர் போவதும் பின்னர் அவர்கள் வெளியே வருவதும், இன்னம் சிலர் உள்ளே போவதுமாக இருந்தனர். நள்ளிரவானதால், யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் நான் வெளியே தான் நின்று கொண்டிருந்தேன்.

ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். உள்ளே சாட்சியாகப் போனவர்கள் வெளியே வந்தார்கள். "திருடன் இல்லை. ஆனா பய கில்லாடி தான். இதுக்குன்னு உடம்பை வளத்து வச்சிருக்கானே அதைச் சொல்லுங்க"

எல்லோருக்கும் திகைப்பாயிருந்தது. ஆனா கில்லாடின்னு சொன்னா, பய ஏதோ தப்பு பண்ணியிருக்கான் அது நிச்சியம்..

"திருடன் இல்லியா? என்னங்க சொல்றீங்க? பின்னே அதை இங்க வந்து சொல்வானேன், அங்கியே சொல்லியிருக்கலாமில்லியா? என்னத்துக்கு இவ்வளவு அடியும் உதையும் பட்டுக்கிட்டு..... "

"அவனை யார் சொல்லவிட்டா. நம்ம தான் போட்டு துவைச்சிட்டிருந்தோமே. ஒத்தன் அடிச்சா பின்ன என்ன விஷயம்னு தெரியாம எல்லாரும்தான் போட்டு துவைச்சி எடுத்திட்டுருந்தோமே"

"சொன்னாலும் யார் அவனை நம்பறது? சுத்து வட்டாரத்திலே திருட்டுப் போயிருக்கு. இவனோ நடு ராத்திரிலே ஓடறான். சந்தேகம் வரத்தான் செய்யும்? பின் என்னத்துக்கு ஒடறான் பயந்துட்டு?"

அதுங்க... சமாச்சாரமே வேறே. பொம்பிளை சமாச்சாரமுங்க. ராஜா டாக்கீஸ் கிட்டே ஒரு பார்பர் ஷாப்லெ பய வேலைக்கிருக்கான். பய இளவட்டமா, பஸ்கி தண்டால் எடுத்து உடம்பை வளத்து வச்சிருக்கானா.. அது சும்மா இருக்க விடுமா? இதிலே வேடிக்கை என்னன்னா, முதலாளி பொண்டாட்டியே இவனக் கண்டு மயங்கிட்டா. இந்த சமாசாரம் ரொம்ப நாளா நடந்தூட்டு இருக்கு. முதலாளி சினிமா ரண்டாம் ஆட்டத்துக்கு போயிட்டது தெரிஞ்சதும் மைனர் ஜல்ஸா பண்றதுக்கு கிளம்பிட்டார்".

"பய பெரிய கில்லாடிதான்".

அது சரி. ஆனா, ஒரு நா ஆப்டுக்கிட்டா இந்த மாதிரி அடின்னா வாங்க வேண்டிருக்கு. சினிமா விட்டு சனங்க வர்ர சத்தம் கேட்டு இவன் படலைத் திறந்து அவசரம் அவசரமா வெளீலே வந்திருக்கான். ஒரு வாரமா திருடு போனதைப் பத்தியே பேச்சா இருந்திருக்கா. இவனை இந்த நேரத்திலே கொல்லைப் பக்கமா பாத்ததும், "திருட்டு ராஸ்கல் யார்ரா டேய், பிடிடா அவனை'ன்னு கத்திட்டு துரத்திருக்காங்க. இவனும் ஓட்டம் பிடிச்சிருக்கான். முதலாளி ஆளுங்க பாத்திருப்பாங்களோ, இல்லை வர்ர கூட்டத்திலே முதலாளி தானோ'ன்னு ஓடிருக்கான் பய. ஆப்டுக்கிட்டான். எவ்வளவு தூரம் ஓட முடியும்?

"ஸ்டேஷன்லே வேறே அவனுக்கு சாத்துப்படி நடந்திருக்கு. கக்கிட்டான் பய. சொல்லிடாதீங்க சார். வேளீலே தெரிஞ்சா என் வேலை போயிடும். நான் பிழைக்க வந்தவன்" ன்னு கெஞ்சினான்.

சரி போ. தொலைன்னு விட்ருவாங்க. இவனை ஸ்டேஷன்லே வச்சிட்டு என்ன செய்யறது? காலைலே எதுக்கும் ஒரு தடவை விசாரிச்சிட்டு விட்டுடுவாங்க" என்று அவர் கதையைச் சொல்லி முடித்தார். பாவமாகவும் இருந்தது. ஆனாலும் அவனுக்கு ஏதோ ஒரு வழியில் தண்டனையும் கடவுள் கொடுத்த மாதிரியும் இருந்தது. இவ்வளவு சுவாரஸ்யமான விஷயத்தை நாங்கள் கேட்பதோடு கதை முடியுமா என்ன? நாளைக்கு அவன் முதலாளிகிட்டே இதைச் சொல்வதில் இன்னும் நிறைய சுவாரஸ்யம் இருப்பதை யாராவது கண்டிருப்பார்கள்.

திரும்பி வந்து படுத்துக் கொண்டேன். மணி என்னவாயிருக்குமோ தெரியாது. விடிய இன்னும் அதிக நேரம் இருக்காது. அதற்குள் தூங்க முடிந்த நேரம் தூங்க வேண்டும். நான் திண்ணணை யில் இல்லாததை யாராவது பார்த்திருப்பார்களா? "எங்கேடா போனே? என்று பாட்டி காலையில் கேட்டால் என்ன சொல்வது?

12.3.09
vswaminathan.venkat@gmail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்