நினைவுகளின் தடத்தில் - (27 & 28)
- வெங்கட் சாமிநாதன் -
எனக்கு அப்போது அதன் தீவிரம் தெரியவில்லை. அத்திம்பேர் அது பற்றிப் பேசிய
விவரங்களிலிருந்தும், பேசிய தோரணையிலிருந்தும்,
ஏதோ ஒரு ஊரை விட்டு இன்னொரு ஊருக்கு வந்த பாவனையில் தான் நான் அதை எடுத்துக்
கொண்டேன்.அப்படித்தான் என் மனதில்
அது இறங்கியது. அத்தை சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். அவ்வப்போது என்னைக் கேலி
செய்து கொண்டும் இருந்தாள். அவள் கேலி
பண்ணும்போது அப்பாவும் அம்மாவும் சந்தோஷமாகச் சத்தமிட்டுச் சிரித்தனர். என்
வெட்கப்பட்ட முகம் அவர்களை இன்னமும்
சத்தமிட்டுக் கொண்டாட வைத்தது. ஏதோ புதிதாக ஏதோ ஊரிலிருந்து வந்த உறவினர்கள், நான்
புதிதாகப் பார்த்து உறவையும் தெரிந்து
கொள்ளும் உறவினர்கள் என்று தான் அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது.
அந்த நாட்களில், 1947 ஆரம்ப மாதங்களில், அவருக்கு வயது 30-35 இருக்க வேண்டும்.
லாகூரில் இருந்தவர் என்றால்
தேவங்குடியிலிருந்து நேராக லாகூரில் வேலை கிடைத்துச் சென்றவரில்லை. எங்கெங்கோ
அலைந்து திரிந்து, கடைசியாக லாகூர்
சென்றடைந்திருக்க வேண்டும். அவர் நல்ல சாஸ்திரோக்தமான, தெய்வ நம்பிக்கையுள்ள, தன்
ஆசாரங்களை விட்டு விடாத மனிதர்.
லாகூர் முஸ்லீம்கள் பெரும்பான்மை கொண்ட ஊர். அதோடு இந்து முஸ்லீம் அரசியல் பகைமை
தீவிரமாகிக்கொண்டு வந்த காலம். இனி
உங்களைக் காப்பாற்ற முடியாது என்று அவரது முஸ்லீம் வீட்டுச் சொந்தக் காரர்
கைவிரித்து விட்ட நிலைமை. அந்த காலத்தில் 25,000
ரூபாய் பாங்கிலிருந்து சேர்த்து வைத்ததை எடுக்கமுடியாது குடும்பத்தோடு ஓடி வந்தவர்
என்றால், அது பெரிய பணம், பெரிய இழப்பு.
அந்த அளவு சேர்க்க எவ்வளவு வருடங்கள் ஆகியிருக்கும் அவருக்கு, எத்தனை வருடங்களாக
அந்த வட இந்தியக் கோடியில் அவர்
இருந்திருக்கிறார், ஆசாரம் மிகுந்த ஒரு தஞ்சை கிராமக் குடும்பம். அப்போது அவர்
லாகூரில் தன் வாழ்க்கை பற்றிச் சொன்னதிலிருந்து
அவரது லாகூர் நாட்கள் மிக சந்தோஷமாகத் தான் கழிந்திருக்கின்றன, கலவரங்கள்
தீவிரமடைந்த கட்டம் வரை. லாகூர் அவருக்கு மிகப்
பிடித்தமான இடமாகத் தான் இருந்திருக்கிறது. காலை நேரத்தில் மிகப் பெரிய அகலமான
வாய்க்கால் கரையோரமாக நடந்து செல்லும்
வழக்கம் தந்த சந்தோஷத்தை மிகவும் அனுபவித்துச் சொல்வார் அவர். சங்கீதத்தில் மிக
ஈடுபாடு கொண்டவர். நல்ல ருசியான தஞ்சை
ஜில்லா சாப்பாட்டில் பிரியம் கொண்டவர். அவரே நன்றாக சமைப்பார். அக்காலத்தில் லாகூர்
மிகப் பெரிய நகரம். திரைப்பட மையமும்
கூட. பின்னாட்களில் லாகூரைப் பற்றி என் நண்பர்கள் சொல்லிச் சொல்லி மாய்ந்து
போவார்கள். அடிக்கடி லாகூரின் அனார்க்கலி பஜார்
அவர்கள் பேச்சுக்களில் அடிபடும். இங்கு தில்லியில் என் அருமை நண்பர், ஷாந்தி ஸாகர்
டண்டனுக்கு லாகூர் நண்பர்கள் மிகவும்
ஆப்தமானவர்கள். நாங்கள் இருவரும் கூட்டாக ·பில்ம் சொஸைடி திரையிடும் படங்களுக்குப்
போகாத நாட்கள் எல்லாம் அந்நாட்களில்
கன்னாட் ப்ளேஸின் மையத்தில் இருந்த கா·பி போர்ட் நடத்திக்கொண்டிருந்த கா·பி ஹவுஸில்
தன் லாகூர் நண்பர்களுடன் அரட்டை
அடிக்க உட்கார்ந்து விடுவார். அவர் என்னவோ கராச்சியிலிருந்து வந்தவர் தான். ஆனால்
லாகூர் என்றால் ஒரு கவர்ச்சி. யாராவது புது
நண்பரைப் பற்றிப் பேசினால், "வோ பி லாஹ¥ரியா ஹை" (அவரும் லாகூர் காரர் தான்)
என்பார். அதைச் சொல்லும்போது அந்தக்
குரலில், முகத்தில் அவரது உற்சாகம் ததும்பும். அவர்கள் பேசிக்கொள்வதெல்லாம் லாகூர்
வாசிகள் பேசும் பஞ்சாபியில் தான். அதில்
பேசுவதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம். நானும் அவர்கள் லாஹ¥ரியா பேச்சை உற்சாகத்தோடு
ரசித்துக் கொண்டிருப்பேன். இந்த
மயக்கத்தை நான் சந்தித்த எல்லா மூத்த வயதுப் பஞ்சாபிகளிடமும் பார்த்திருக்கிறேன்.
எல்லா லாகூர் பெருமைகளையும்
சொல்லிவிட்டுக் கடைசியாக, "ஓ புத்தரூ, தேனு கி பத்தா, ஜின்னே லாகூர் நஹி வேக்யா வோ
ஜம்யா நஹி" என்று சொல்லிக் கட
கடவென்று சிரிப்பு அலை வெடிக்கும் சத்தமாக. 'மகனே, உனக்கென்ன தெரியும்! ஒருத்தன்
லாகூரைப் பார்க்கவில்லை யென்றால், அவன்
பிறக்கவேயில்லை" என்று அர்த்தம் அவர் கலாட்டாவுக்கு. பிறக்கவேயில்லை என்றால்,
பிரந்தும் ஒரு புண்ணியமுமில்லை என்று அதற்கு
இன்னமும் ஒரு பாஷ்யம் சொல்ல வேண்டுm. இந்தப் பஞ்சாபிகளுக்கு சந்தோஷம் தலைக்கேறி
விட்டால் அவர்களது அன்பும் பாசமும்,
வயதை அறியாது. செல்லம் மிகும். எல்லாருமே வயதை மீறி 'புத்தரு' ஆகி விடுவார்கள்.
அல்லது பச்சை பச்சையான வசவுகள் வந்து
விழும். எல்லாமே அன்பின் அடையாளங்கள் தான்.
தான் ஒட்ட முடியாது ஒதுங்கியே இருக்க நிர்ப்பந்திகும் சூழலில் இருந்த
அத்திம்பேருக்கே அது மிக சந்தோஷமான நாட்களாக
இருந்திருக்கிறது. அவர் அவ்வப்போது சொன்ன சம்பாஷணைத் துணுக்குகளிலிருந்து நான்
தெரிந்து கொண்டது, அல்லது இப்போது என்
நினைவில் தங்கியிருப்பது எல்லாம், அவர் ஒரு சினிமா தியேட்டரிலோ, அல்லது ஒரு சினிமா
வினியோகஸ்தரிடமோ அலுவலகப்
பொறுப்பில் இருந்தவர் என்பது தான். முஸ்லீம் கலாச்சாரச் சூழலில் இந்தத் தஞ்சைக்
கிராம வைதீக மனது எப்படி சமாளித்தது என்பது
நான் கேட்கவும் இல்லை. அவர் சொல்லவும் இல்லை. இருந்தாலும் அவர் தன் தஞ்சை கிராம
வைதீக ஆளுமையையும் விட்டுக்
கொடுக்காமல் அந்த முஸ்லீம் கலாச்சாரச் சூழலில் சந்தோஷமாகத் தான்
வாழ்ந்திருக்கிறார். ஆனால் அவ்வளவையும் சேர்த்த பணம்,
வாழ்ந்த ஞாபகங்கள் என்று அத்தனையையும் விட்டு விட்டு திரும்ப அந்த நினைவுகளைக்
கூடத் திரும்பப் பார்க்கமுடியாது என்று
அடியோடு அழித்துவிட்டு வருவதென்றால் மிகப் பெரிய சோகம் தான். அவர் ஒரு விதத்தில்
அதிர்ஷ்டக்காரர். அவரை உடனே ஊருக்குத்
திரும்பச் சொன்ன முஸ்லீம் நல்ல வழியே காட்டியிருக்கிறார். ஒழுங்காக, உயிர் சேதம்,
உடல் சேதமின்றி அவரால்
வந்துவிடமுடிந்திருக்கிறது. கொஞ்ச நாட்கள் தாமதித்திருந்தால் அவர் நடை பயணமாகத்தான்
லாகூரிலிருந்து கிளம்பியிருக்க முடியும்.
கூட்டத்தோடு கூட்டமாக, ஆயிரக் கணக்கில் வீடு, நிலம், பணம், ஏன் சில
சந்தர்ப்பங்களில், சிலர் தம் குழந்தைகளை, வயதானவர்களை,
உறவினர்களை இழந்தும் கூட வந்திருக்கின்றனர். பாகிஸ்தான் பிரிவினைக்கு இரண்டு
வருஷங்களுக்குப் பிறகு நான் ஹிராகுட் அணைத்
திட்டத்தில் வேலைக்குச் சேர்ந்த 1950 மார்ச்சில் அங்கு வேலையில்
சேர்ந்திருந்தவர்கள் அனேகர், பஞ்சாபிகள். பாகிஸ்தானிலிருந்து
அகதிகளாக வந்தவர்கள். சக்கர் அணைக்கட்டில் வேலை பார்த்தவர்களும் உண்டு. கேவல் கிஷன்
என்று ஒரு எக்ஸிக்யூடிவ் எஞ்சினியர்
இருந்தார். அவர் தனி மனிதர். 40 வயதிருக்கும். அவரைப் பற்றிக் கதைகள் சொல்வார்கள்.
அவரும் கலவரத்தின் போது தப்பி ஓடி
வந்தவர். அவர் குடும்பமே அவர் கண் முன்னாலே வெட்டிக் கொல்லப்பட்டதைக் கண்டவர்.
இப்படி ஒவ்வொருவரும் சொல்ல ஒரு கதை
உண்டும். குழந்தை குட்டிகளோடு நடைப் பயணமாக தில்லி வந்து புராணா கிலா (பழைய கோட்டை)
யில் அகதிகளாக இருந்தது. ரயில்
வண்டிகளில் உள்ளேயும், வண்டிகளின் மேலேயும் அடைத்து நெருங்கி உட்கார்ந்து வரும்
காட்சிகளை நான் பின்னர் செய்திப் படங்களில்
பார்த்தேன். இன்னும் சில செய்திகள், காட்சிகள் ரத்தம் உறைய வைக்கும்.
பாகிஸ்தானிலிருந்து தப்பி வரும் அகதிக் கூட்டங்களைச்
சுமந்து வரும் ரயில் அம்ரித்சரை அடையும் போது அந்த ரயில் பெட்டிகளில் மக்களின்
வெட்டுண்ட மனித உடல்கள் தான் ரத்தக்
கிளறியில் சிதறிக் கிடக்குமாம். ரயில் பெட்டிகளின் வெளியே உருது வில் ' மர்னா ஹம்சே
சீக்கோ" (சாகணுமா, நாங்க
சொல்லிகொடுப்போம்) என்று எழுதப் பட்டிருக்குமாம். இந்தக் காட்சிகள் தான் இங்கும்
அம்மாதிரியான கொலைகளும், இங்கிருக்கும்
முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு விரட்டி அடிப்பதும் நடந்தது என்றார்கள். உயிருக்குப்
பயந்த முஸ்லீம்களை, நேரு அரசு தில்லி புராணா
கிலாவில் அடைக்கலம் கொடுத்திருக்கிறது என்று கேட்டு, மக்கள் வெகுண்டு எழுந்தார்கள்
என்றும் செய்திகள் வந்தன. வாழ்க்கை சின்னா
பின்னமாகிவிட்ட வேதனையில் பல லக்ஷக்கணக்கில் குடி பெயர்ந்த அந்த மக்கள் கூட்டத்தின்
சோகத்தை, அதன் உக்கிரத்தை, நம்மால்
சிந்தனையில் கூட அனுபவித்து உணர இயலாது. ஆனால் அந்த நிர்க்கதியிலும் கூட அந்த
லக்ஷங்களில் ஒருவர் கூட பிச்சையெடுத்து
நான் பார்த்ததில்லை. வாழ்க்கையில் எந்த சோதனையும் தலை நிமிர்ந்து சந்தித்தவர்கள்
அவர்கள்.
என் அத்திம்பேர் தன் துக்கங்களை, தன் வேதனையை தன்னுள்ளேயே புதைத்துக்கொண்டவர்.
அப்படி ஒன்றும் கீதாசார்யன் சொன்ன
'ஸ்திதப் ப்ரக்ஞன்' இல்லை அவர். அவர் சுபாவம் அது. சத்தமாக வாய் திறந்து
சிரித்தவரில்லை. அசாத்தியமான கிண்டல் அவருக்கு
வரப்பிரசாதம் போன்று வந்தது. ஆனால் அவர் சிரிக்க மாட்டார். மெல்லிய ஒரு நமுட்டுச்
சிரிப்பு அவர் உதட்டில் தவழும். ஆனால் அது
கிண்டலுக்கு ஆளான பிராணியின் கண்களில் படாது. அது போலத் தான், ஒரு நாள் கூட அவரோ
அத்தையோ தம் இழப்புக்களைப் பற்றி
மனம் வெம்பி, தொண்டை அடைக்கப் பேசியதில்லை. நான் அவர்களது இழப்புக்களின் சோகத்தின்
ரூபத்தை, பின்னர் தான் கொஞ்சம்
கொஞ்சமாக, நான் சந்தித்த மனிதர்களிடமிருந்தும், படிப்பிலிருந்தும் தெரிந்து
கொண்டேன். உடையாளூருக்கு அவர் அத்தையோடும்
மகனோடும் வந்தபோது அவர் மனத்தில் இருந்தது, அவர்களை தன் பிறந்த ஊரான தேவங்குடியில்
விட்டு விட்டு சென்னை சென்று
ஏதாவது வேலை தேடவேண்டும் என்பதே.
"ஏண்டா நீ போய்ட்டு வாயேண்டா அத்தையோட தேவங்குடிக்கு, போறையா?" என்றார் என்னிடம்.
தேவங்குடி எங்கேயிருக்கு, அங்கு
யாரை எனக்குத் தெரியும். நான் திகைத்து மௌனமாக யிருந்தேன். அப்பாவும் அம்மாவும்
சேர்ந்து கொண்டார்கள். "கூடப் போய்ட்டு
வாடா. அத்தைக்குத் துணையா. இதிலே என்ன பெரிசா யோஜனை? புது இடம் பாத்த மாதிரியும்
இருக்கும்" என்று அவர்களும்
சொல்லவே, சரி என்றேன். "அப்ப்ப்பா... வாயத் தொறந்து 'சரி'ன்னு ஒரு வார்த்தை
சொல்றதுக்கு இவ்வளவு கஷ்டப்படறானே, ஏண்டா
என்னோட வரப் பிடிக்கலையா, பிடிக்கலைன்னா சொல்லீடுடாப்பா" என்று அத்தையும் கேலி
செய்ய ஆரம்பித்து விட்டாள். "பொண்ணாப்
பெத்திருந்தேன்னா, கூடக் கூட ஒட்டீண்டு விடமாடான். பிள்ளையான்னா பெத்திண்டிருக்கே,
அதான் அவனுக்கு சுவாரஸ்யப்படலே" என்று
அம்மா சொல்லவே, வீடே அதிரும்படி எல்லோரும் கொல்லென்று சிரிக்கத் தொடங்கினார்கள்.
இருந்த இடத்தை விட்டு சேர்த்துவைத்த
பணத்தை இழந்து, ஆயிரம் மைல்கள் ஓடி வந்தவர்களின் வேதனையின் சுவடே அங்கிருக்கவில்லை.
கடைசியில், 'இந்தப் பிள்ளையாண்டானை நம்பி பிரயோஜனமில்லை' என்று எண்ணினார்களோ
என்னவோ, அத்திம்ப்பேரும் தேவங்குடிக்கு
வந்தார். நானும் போனேன். தேவங்குடிக்குப் போக முதலில் உடையாளூரிலிருந்து
வலங்கிமானுக்கு மாட்டு வண்டியில் போகணும். கப்பி
ரோடு தான். வண்டித் தடம் பார்த்து தானாக மாடு போகும். தடம் மாறும் சாத்தியமே இல்லை.
அங்கிருந்து மன்னார் குடிக்கு பஸ்ஸில்
போய், மன்னார் குடியிலிருந்து ஒரு மாட்டு வண்டி வைத்துக்கொண்டு தான் தேவங்குடி
போகமுடியும். திரும்பவும் கப்பி ரோடுதான்.
மன்னார் குடியிலிருந்து அதிக தூரம் இல்லை. தேவங்குடி எதிரும் புதிருமான இரண்டு
சாரிகளில் மொத்தம் பதினைந்து பதினாறு வீடுகளே
கொண்ட ஒரு மிகச் சிறிய கிராமம். அத்திம்பேரின் தம்பி அங்கு இருந்தார். அந்த
கிராமத்துக் கணக்குப் பிள்ளையாக இருந்தார். அந்த
கிராமத்துக் கணக்குப் பிள்ளையாக இருந்தால் என்ன வருமானம் வரும்? எப்படி அவர் ஜீவனம்
நடந்தது? அதெல்லாம் இப்போது தான்
யோசனை செய்யத் தோன்றுகிறதே ஒழிய அப்போது இந்த நினைப்பெல்லாம் இருக்கவில்லை. அங்கு
கழித்த இரண்டு நாட்கள் மிக
சந்தோஷமாக, நன்றாக சாப்பிட்டு அவரது இரண்டு குழந்தைகளோடு விளையாடிக் கழிந்தது.
பின்னர் தான் அந்த தேவங்குடி கிராமம்,
எனக்கு மிகவும் பிடித்த தி.ஜானகிராமனின் பூர்வீகம் என்றி தெரிந்தது. புண்ணிய பூமி
தான். Stafford-on-Avon-ஐ நம் எல்லோருக்கும்
தெரியும். நம்மில் அக்கறை உள்ளவர்கள் இங்கிலாந்து சென்றால், ஷேக்ஸ்பியர் பிறந்த
ஊராக்கும் என்று அந்த ஊரைப் போய்ப் பார்க்க
தனி பிரயத்தனம் எடுத்துக் கொள்வோம். அந்த ஊரும் இன்னமும் ஷேக்ஸ்பியரின் பிறந்த
இடமாக பாதுக்கக்கப்ப்ட்டு வரும். நம்மில்
எத்தனை பேருக்கு தி ஜானகிராமனைப் பற்றி இத்தகைய நினைப்புகள் வரும்?
தேவங்குடியைப்பற்றி தமிழ் சமூகம் கவலைப்படும்?
நினைவுகளின் தடத்தில் - (28)
வெங்கட் சாமிநாதன்
ஜெயா அத்தையை தேவங்குடி கிராமத்தில் விட்டு விட்டு நான் உடையாளூர் திரும்பி
வந்தேன். அந்த நாலைந்து நாட்கள் எவ்வளவு
மகிச்சியில் கழிந்தன என்பது இப்போது நினைக்கவும் மனதுக்கு ரம்மியமாக இருக்கிறது
தான். ஜெயா என்று ஒரு அத்தை எனக்கு
இருக்கிறாள் என்று நான் தெரிந்து கொண்டதே அப்போது தான். ஜெயா அத்தையின் கேலிக்கும்
சிரிப்புக்கும் ஆளாகியதும் உடனிருந்த
அந்த நாலைந்து நாட்கள் தான். அதன் பிறகு நான் ஜெயா அத்தையை பார்க்கவில்லை.
அத்திம்பேர் வேலை தேடி சென்னைக்குச்
சென்றார். வேலை கிடைத்து அத்தையையும் மகன் மணியையும் அழைத்துக் கொண்டாரா என்பது
தெரியாது. அது பற்றி எந்த விவரமும்
இல்லை. இரண்டு வருடங்களுக்குப் பின் நான் ஒரிஸ்ஸா போய் ஹிராகுட்டில் வேலைக்குச்
சேர்ந்து முதல் ஆண்டு முடிந்து
எடுத்துக்கொண்ட விடுமுறையில் உடையாளூருக்கு வரும் போது, சென்னையில் அவர் தம்புச்
செட்டித் தெருவில் ஏதோ ஒரு
கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். இடையில் இந்த இரண்டு வருட காலத்தில்
எவ்வளவோ எதிர்பாராத பல சம்பவங்கள்
நடந்துவிட்டிருந்தன. மிகவும் கொடூரமானது ஜெயா அத்தை உயிரோடு இல்லை என்பதுதான்.
ரொம்ப சின்ன வயது. நிலக்கோட்டை மாமி
போலத் தான். இருபத்து ஏழு அல்லது இருபத்து எட்டு வயதுக்குள், என்னிடம் மிகப்
பிரியமாக இருந்தவர்கள் இல்லையென்றாகிவிட்டனர்.
ஜெயா அத்தை எப்போதும் எல்லோருடனும் மிக இனிமையாகப் பேசி சிரித்த முகத்துடன்
விளையாட்டாகவே இருந்த ஒரு ஜீவனுக்கு ஏன்
இத்தனை குறுகிய ஆயுளைக் கடவுள் கொடுத்தார்? இருவரையுமே நான் விட்டு வந்ததும் மறு
முறை நான் பார்க்கக் கொடுத்து
வைக்கவில்லை. அவர்கள் என்றென்றைக்குமாக பிரிந்து விட்டனர். உடையாளூர்
வந்ததிலிருந்து தான் நான் அறிந்த தங்கையும் என் கண்
முன்னாலேயே உயிர் பிரியப் பார்த்தேன். அவளை நான் தெரிந்து கொண்டதும், அவளுடனும்
நான் பழகியதும் ஒரு சில மாதங்களே தான்
இருக்கும்.
என்ன நடந்தாலும் நம் அன்றாடக் காரியங்கள் வழக்கம் போல் தொடர்வது, நடப்பது
நிற்பதில்லை. காலையில் எழுந்ததும் எட்டு
மணிக்குள் பள்ளிக்குப் போக கும்பகோணத்துக்குக் கிளம்பி விடுவேன். திரும்ப ஊருக்கு
வரும்பொழுது கிட்டத் தட்ட இருட்டி விடும்
என்று தான் சொல்ல வேண்டும். ஐந்து ஐந்தரை மணிக்கெல்லாம் பள்ளிக்கூடத்தை விட்டுக்
கிளம்பிவிடுவேன். வெளியூர்களிலிருந்து
வரும் மாணவர்கள், விளையாட்டு மைதானத்துக்குப் போக வேண்டியதில்லை என்பது பொதுவான
விதி. அவர்கள் ஸ்கூல் பாடங்கள்
முடிந்ததும் வீடு திரும்பலாம் என்று சலுகை தரப்பட்டிருந்தது. ஆனால் எனக்கு காலையில்
பள்ளிக்கூடம் போவதற்கும் சரி, பின்
பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்புவதற்கும் சரி, நேரம் கொஞ்சம் அதிகமாகும். வீட்டை
விட்டுக் கிளம்பி நேரே பள்ளிக்கூடத்திற்குப்
போவதோ, பின் பள்ளியை விட்டு நேரே வீட்டுக்குத் திரும்புவதோ என் சுபாவத்தில் என்றுமே
இருந்ததில்லை. நிலக்கோட்டையிலிருந்த
காலத்திலிருந்தே. ஒவ்வொரு தடவையும் பள்ளிக்குப் போகும் வழியும் பின் வீடு
திரும்பும் வழியும் ஒன்றாக இராது. சின்ன ஊர் தான்
என்றாலும், நிலக்கோட்டையிலேயே கூட ஒரு நாள் போன வழியில் மறுநாள் போகவும் மாட்டேன்.
வீடு திரும்பவும் மாட்டேன். வீம்பு
என்றில்லை. ஊர் சுத்துவது என்பதில்லை. பல வழிகள் இருக்கும் போது, புதிய இடங்கள்
பார்க்க இருக்கும் போது ஏன் அலுப்புத் தட்டாது
ஒரே பாதையில் போக வேண்டும்? இப்படி ஒன்றும் திட்டமிட்டுச் செய்வதில்லை.
அப்படித்தான் இயல்பில் நேர்ந்தது.
இல்லையெனில், போலீஸ் ஸ்டேஷனுக்குப் பின்னால் இருந்த பரந்த மைதானத்தில் மற்றக்
கைதிகளோடு, புதிதாக வந்த கைதி, எங்கள்
மூன்றாம் க்ளாஸ் வாத்தியார் ஜெயராஜையும் ஒரு போலீஸ் காரன் ஏதோ சொல்லி வேலை வாங்கிக்
கொண்டிருந்ததைப் பார்த்தேன்
என்பதை எப்படி க்ளாஸில் இருந்த என் சினேகிதர்களுக்குச் சொல்லி அவர்களை வாய் பிளக்க
வைக்கமுடியும்? வீடு வந்து
மாமாவிடமும் சொன்னேன். அவர் முகம் வேதனையில் கருத்தது. பின்னால் என்னைக் கோபித்துக்
கொண்டார் ."நீ ஏண்டா அங்கேல்லாம்
சுத்தறே? பள்ளிக்கூடம் விட்டா நேரா வரமாட்டியா?" என்று. புதிதாகத் திறந்த
தகரக்கடையிலும், இரும்புப் பட்டறையில் பார்த்த
மாதிரியே ஒரு துருத்தியை வைத்துக் கொண்டு காற்றடித்துக்கொண்டிருந்தது எல்லாம்
எப்படிப் பார்ப்பது? மதுரையிலும் அதே கதைதான்.
காமாட்சி புர அக்ரஹாரத்திலிருந்து ஸ்கூலுக்குக் கிளம்பினால் சிம்மக் கல் போவதற்குள்
வழியில் இருந்தது ஒரு பெயிண்டிங் ஷாப்.
எல்லாவித பெயிண்டிங் வேலைகளும் செய்து தரும் ஒரு கடை. அங்கு ஒருத்தன் படம் வரைந்து
கொண்டிருப்பான். சிம்மக்கல் ரவி
வர்மா அவன். எண்ணை வர்ணங்களில் சித்திரங்களும் வரைந்து தருவான். நிறைய ப்ரஷ்களும்
முழுச் சித்திரங்களும் பாதி வரைந்த
படங்களுமாகத் தரையில் சுவரோரமாக சாத்தி வைக்கப்பட்டிருக்கும். நான் அந்த வழியாகக்
கடக்கும்போது அவன் வரைந்து
கொண்டிருந்தால் நான் அங்கேயே கடையோரமாக நின்று பார்த்துக் கொண்டிருப்பேன். அவன்
என்னை ஒன்றும் சொல்ல மாட்டான். "என்ன
தம்பி, ஆசையா இருக்கா? உனக்கு வரையத் தெரியுமா?" என்று லேசாகச் சிரித்துக் கொண்டே
பேசுவான். "பென்சிலாலே தான் படம்
போடுவேன். பாத்து காப்பி பண்ணுவேன்." என்று ஒரு நாள் சொன்னேன். " அது போதும்.
அப்படியே பழகிட்டு வா" என்றான். எனக்கு
ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஒரு பெரிய ஆர்ட்டிஸ்டிடம் செர்டி·பிகேட் வாங்கிவிட்ட
சந்தோஷம். என் க்ளாஸில் வேறு யாருக்கும்
கிடைக்காதது எனக்குக் கிடைத்து விட்டதே.
என் வகுப்பில் கே.டி.கே தங்கமணியை யாருக்குத் தெரியும்? அவர் வீடே எனக்குத்
தெரியுமே! மோஹன் குமாரமங்கலத்தை,
பி.ராமமூர்த்தியை, சசி வர்ணத் தேவரை யாருக்குத் தெரியும்? அவர்கள் பேசும்
கூட்டத்திற்கு யார் போயிருக்கிறார்கள்? என் க்ளாஸில்?
மாமி வீட்டில் தான் யாருக்கு இதில் அக்கறை? யார் அருணா ஆச·ப் அலி பேசுவதைக் கேட்க
தல்லா குளம் ஓடுவார்கள்? யாருக்கு
நவராத்திரி என்றால் ஒன்பது நாட்களும் மதுரையில் உள்ள கோவில்களுக்கெல்லாம் போய்
அலங்காரங்களைப் பார்க்க வேண்டும் என்று
தோன்றும்? அதிகம் போனால் அழகர் வைகை ஆற்றில் இறங்குவதைப் பார்க்கப் போவார்கள்.
ஒரு நாள் தேவி டாக்கீஸ் என்று நினைக்கிறேன். பருத்திக் காரத்தெருவோ என்னவோ. சரியாக
ஞாபகமில்லை. அங்கு தேவி பால
வினோத நாடக சபா என்றும் ஒரு போர்டு இருந்தது. சினிமாக் கொட்டகையில் ஏன் நாடக சபா
என்று போர்டு வைத்திருக்கிறார்கள் என்று
யோசனை போயிற்று. ஆனால் பின்னாட்களில் படித்ததிலும் மதுரையில் நாடக சபா ஏதும்
இப்படிப் பெயரில் இருந்ததாகப் படிக்கவில்லை.
இருந்திருக்கக் கூடும். கும்பகோணத்திலும் கூட, தினம் பாணாதுரை ஹைஸ்கூலுக்குப்
போகும் ஒரு வழியில், விஜய லக்ஷ்மி டாக்கீஸ்
என்று வெளியில் கேட்டுக்கு மேலே இருந்த வளைவில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் உள்ளே
கட்டிட வாசலில் மேலே வாணி விலாச
சபா என்றும் எழுதப்பட்டிருக்கும். இதை நான் ஆச்சரியத்துடன் பார்த்ததுண்டு. யாரைக்
கேட்டேன் என்பது நினைவில் இல்லை. அங்கு
முன்னால் ஒரு நாடக சபை இருந்தது என்று சொன்னார்கள்.
இவை எல்லாம் என்னை ஆச்சரியப்பட வைத்த விஷயங்கள். ஆனால் வெகு சாதாரணமாக பார்த்துக்
கடந்து விட்ட பல நிகழ்வுகள்
சாதாரணமாக என் நினைவில் பதிந்து, பின் வருஷங்களில் நான் படித்து அறிந்தவற்றோடு அவை
தொடர்பு பட்டு என்னை சிலிர்க்க
வைத்தவையும் இருந்தன. உடையாளூரிலிருந்து நடந்து வருபவனுக்கு கும்பகோணத்துக்குள்
நுழைகிறோம் என்பதைச் சொல்வது குறுக்கே
பாயும் அரசிலாறு. அந்த ஆரம்ப காலங்களில் அந்த ஆற்றின் மீது வாழை மரங்களை மிதவையாகக்
கொண்டு அதன் மீது வாழை
இலைகளையும் வாழைத் தார்களையும் அடுக்கி அதன் மீது இரண்டு பேர் உட்கார்ந்து கொண்டு
போவதை நான் பார்த்திருக்கிறேன்
அவர்கள் சுவாமி மலை தாராசுரம் போன்ற கிராமங்களிலிருந்து கும்பகோணம் காய்கறி
மார்க்கெட்டுக்கு சரக்கெடுத்துச் செல்பவர்கள். ஒரு
அணா செலவில்லாதே, லாரிக்கோ மாட்டு வண்டிக்கோ சத்தம் கொடுக்காதே அரசலாறே இலவசமாக
அவர்கள் சரக்கை மார்க்கெட்டுக்கு
எடுத்துச் செல்லும். இது ஆற்றில் தண்ணீர் இருக்கும் காலங்களில் தான்.
ஆற்றைக் கடந்து நேராகச் சென்றால் அந்த ரோடின் கடைசியில் இடது பக்கம் பெரிய தெருவும்
வலது பக்கம் திருமபினால் காந்தி
பார்க்குக்கும், டவுன் ஹைஸ்கூலுக்கும் இட்டுச் செல்லும். ஆனால் அரசிலாற்றின் மறு
கரையிலிருந்தே சௌராஷ்டிரர் வாழும் பகுதிக்கு
வந்து விடுவோம். ரோடின் இடதும் வலதுமாக சௌராஷ்டிரர்கள் வாழும் தெருக்கள்,
சந்துக்கள் பிரியும். அது என் தினப்படி பள்ளிக்குப்
போகும் வழி. ஒரு நாள் ஒரு சௌராஷ்டிரர் தெருவில், உள்ளே சுற்று தூரத்தில்
பிரம்மாண்டமான பேப்பர் ரோலை, ரோட் ரோலரின்
முன்னிருக்கும் இரும்பு உருளை கனத்திற்கு, அவ்வளவு பெரிசா இருந்ததைப் பார்த்தேன்.
அதைச் சுற்றி சிலர் நின்று கொண்டிருந்தனர்.
அந்த ரோலிலிருந்து கொஞ்ச நீளத்துக்கு காகிதத்தை உருளையிலிருந்து பிரித்து என்னவோ
அளந்து கொண்டிருந்தனர். நான் வழக்கம்
போல ஆச்சரியத்துடன் அங்கு அருகில் சென்று பார்த்தேன். அந்த நாட்டு ஓடு வேயப்பட்ட
வீட்டின் முகப்பில் சின்னதாக ஒரு போர்டு ஒரு
அடிக்கு மூன்றடி நீள் சதுரத்திற்கு ஒரு போர்டு. 'தேனீ' என்று எழுதப்பட்டிருந்தது.
அங்கு என்ன நடக்கிறது, அவர்கள் யார் என்பதெல்லாம்
எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஏதோ வினோதமாக இருந்தது, இவ்வளவு பெரிய உருளையாக
காகிதத்தைப் பார்த்தது ஆச்சரியப்
பட்டதைத் தவிர வேறு ஒன்றும் எனக்குத் தோன்றவில்லை. பின் வருடங்களில் தான், தேனீ
என்றொரு இலக்கியப் பத்திரிகை
எம்.வி.வெங்கட் ராமின் ஆசிரியத்வத்தில் ஒரு வருஷமோ இரண்டு வருஷங்களோ நடந்தது என்று
படித்த போது, அன்று பள்ளிக்குப்
போகும் வழியில் சௌராஷ்டிரா தெரு ஒன்றில் பார்த்த காட்சியையும் இணைத்துப் புரிந்து
கொண்டேன். அப்போதுதான் தேனீ
பத்திரிகைக்கான முன் ஆயத்தங்கள் அவை என்றும், சுற்றி இருந்தவர்கள் ஒரு வேளை
எம்.வி.வெங்கட் ராம், தி.ஜானகிராமன்,
கொனஷ்டை போன்றோராக இருந்திருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன். அன்று இந்த
இலக்கிய முன்னோடிகளைப் பற்றி எனக்கு
எதுவும் தெரியாது. ஏழெட்டு வருஷங்கள் கழிந்த பின் தான், ஹிராகுட்டில் வேலையிலிருந்த
போது, கலைமகள் பத்திரிகை மூலம்
இவர்களைப் பற்றி அறியவும், இவர்கள் எழுத்துக்களைப் படிக்கவும் தொடங்கினேன்.
பின் நாட்களில் எம்.வி.வெங்கட் ராமுடன் வெகு நெருக்கமாக, அந்நியோன்னியமாகப் பழகும்
சந்தர்ப்பங்கள் அடிக்கடி நிகழ்ந்தன.
அவையெல்லாம் மிக சுவாரஸ்யமான கதைகள் எம்.வி. வி தான் எனக்கு, தஞ்சை பிரகாஷ்,
பிரபஞ்சன், இருளாண்டி, தஞ்சைக் கவிராயர்
போன்றோரை என் வீட்டுக்கு அழைத்து வந்து எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தவர். மனதுக்கு
மிக இதம் அளிக்கும் கணங்கள், நிகழ்வுகள்
அவை. நான் விடுமுறையில் தெற்கே வரும் போதெல்லாம், தஞ்சை பிரகாஷைப் பார்க்காமல்
இருந்ததில்லை. அவரோடு சேர்ந்தே
எம்.வி.வெங்கட் ராமைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம் நாங்கள்.
எம்.வி.வெங்கட் ராம் அந்த சௌராஷ்டிரர் வாழும்
பகுதியிலேயே தான், ஒவ்வொரு முறையும் சந்திக்கும்போது வேறு ஒரு வீட்டிற்குக் குடி
போயிருப்பார்.
இன்னொமொரு புனித ஸ்தலம் எனக்கு மௌனி கும்பகோணத்தில் இருந்த போது வாழ்ந்த காமாட்சி
ஜோசியர் தெரு.
கும்பகோணத்திலேயே அகலமான அழகான தெருக்களில் அதுவும் ஒன்று,. காமாட்சி ஜோசியர்
தெருவைக் கடந்து, காவேரி பழைய
பாலத்தைத் தாண்டி மேலக் காவேரியில் அப்பா வீடு மாற்றிய போது, ஒவ்வொரு
காரியத்துக்கும் காமாட்சி ஜோசியர் தெரு வழியாகத்
தான் போக வேண்டும்.
இவர்கள் மாத்திரமல்ல, பிள்ளையார் கோயில் தெருவையும் சொல்ல வேண்டும். அது தான் தமிழ்
இலக்கியத்தின் புகழ் பெற்ற
மணிக்கொடிக் கால இரட்டையரான, ந.பிச்சமூர்த்தியும் கு.ப. ராஜகோபாலனும் வாழ்ந்த,
இரட்டையராகத் தெரியவந்த இடம். அது வழியாக காமாட்சி ஜோசியர் தெரு வழியாக நான்
எவ்வளவு ஆயிரம் முறை கடந்து சென்றிருப்பேன். இவையெல்லாம் நம் தமிழ் இலக்கிய
முன்னோடிகள் வாழ்ந்த தினம் நடமாடிய தெருக்கள் என்பது தெரியாமல்.
ஆனால் எனக்குத் தெரிந்த ஒரு பத்திரிகை, அதுவும் என் வகுப்பில் சக மாணவன், நண்பன்,
முன்னாலேயே சொல்லியிருக்கிறேன், ஆர்.
ஷண்முகம், தன் கவிதை, இலக்கியக் கட்டுரைகள் பிரசுரமான காவேரி பத்திரிகையை எனக்குக்
காட்டி என்னை வாய் பிளக்க வைத்தானே அந்த காவேரி பத்திரிகை அந்நாட்களில் வெளிவந்து
கொண்டிருந்தது. அதுவும் என் பள்ளிக்குச் செல்லும் வழியில், விஜய லக்ஷ்மி
டாக்கீஸ் இருந்த ரோடிலேயே சற்றுத் தள்ளி இருந்தது.
வெங்கட் சாமிநாதன்/16.10.08
vswaminathan.venkat@gmail.com |