பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
மணமக்கள்! |
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
சிறுகதை! |
போனாலும்... - மீண்டும் ஒரு சஃபர் கதை
-
ஆபிதீன் -
'RESCUE' என்று சிவப்பு ஸ்டிக்கரில் பெரிதாக எழுதியிருந்த அரசாங்க வாகனம் ஒன்று ,
பிரதான சாலையான ஷேக் ஜாயித் ரோட்டின்
ஓரத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து கிடந்தது. பார்த்ததும், என்னை உருட்டித் தள்ளிய
எங்கள்வீட்டுப் பொடியனின் கேள்விதான்
ஞாபகத்திற்கு வந்தது. எவ்வளவோ தடவை நான் விழுந்திருக்கிறேன். எவ்வளவுதான் நீங்கள்
அடித்துச் சொன்னாலும் அதை நம்பாமல் ,
புத்திசாலியென்று என்று என்னை நினைத்துக்கொண்டு நான் எடுக்கிற முடிவுகள் உதைக்கிற
அபாரமான உதைகளால் அடிக்கடி விழுவேன் .
'என்னய்யா எழுதுறே நீ , இக்கிது புக்கிதுண்டு..' என்று எகிறுவார் ஓர் எழுத்தாளர்.
'மன்னிச்சிடுங்கண்ணே' என்றபடி மல்லாந்து
விழுவேன். 'இவ்ளோ வருஷமா அரபுநாட்டுல இருக்கியே அத்தா... என்ன சேர்த்தே?' என்று
அடிப்பார் பயணத்தைப் பணயம் என்று
குறிப்பிடும் பயில்வான். 'கடன்' என்று சொல்லிக் கண்ணீருடன் விழுவேன். நொடிதோறும்
விழுவேன்.
விழுவதற்காகவே நொடியில் எழுவேன்.
சரிந்து விழுவதற்காக நான் சிரமப்படவும் தேவையில்லை. 'பொத்தசுரைக்கா' மாதிரி ஓர்
உடல்வாகு. என் முயற்சியல்ல, 'இந்தா' என்று
குடும்பம் தூக்கிக் கொடுத்தது. புகழ்பெற்ற எங்கள் வீட்டுச் சண்டை ஒன்றை
கவனித்துக்கொண்டிருந்த ஒரு மரைக்கார் இப்படிச் சொன்னார்:
'நீங்களுவ அருவா, கம்புண்டு தூக்கிக்கிட்டு அடிச்சுக்கவே தேவையில்லை. சும்மா யார்
மேலெயாவது வுளுந்தாவே போதும், மவுத்..'.
இவ்வளவு பெருமைமிக்க பின்னணியுள்ள நான் , என்னைப் பாடாய்படுத்துகிற அரபி முதலாளி
மேல் விழுந்து அவனை நசுக்கிவிடலாம்
என்று பார்த்தால் நான் சாய ஆரம்பிப்பதற்குள் ஒய்யாரமான ஓர் ஒட்டகத்தைத் தூக்கி
என் மேல் வைத்து விடுகிறான். என்ன செய்ய?
அந்த காலத்தில், அவன் கம்பெனியில் வேலைக்கு சேர்ப்பதற்காக என்னை அனுப்பிய எங்கள்
ஊர் ஆள் ,'தம்பியை அனுப்பிக்கிறேன்,
ரொம்ப படிச்ச புள்ள, பாத்து ஏதாச்சும் வேலை குடுங்க' என்று சிபாரிசு செய்தார்.
அந்த மூதேவி மானேஜர் என்ன சொல்லலாம்?
'தம்பியா, ஒரு மலையே சரிஞ்சி இருக்கு இங்கெ' என்றிருக்கிறான். ராஸ்கல். உண்மையைச்
சொல்கிறான்.
அன்றிலிருந்து நான் விழும் வேகம் அதிகரித்தது. சிறு குன்றாக மாறிப்போனேன்.
அதற்கும் ஒரு வெடிகுண்டு வைத்து தகர்த்து விட்டானே
இந்தப் பயல். என்ன டாப் கிளாஸ் கேள்வி.. அதிர்ந்து விட்டேன்.
அந்தக் கேள்வியை எழுதுவதற்கு முன்பு , சிலமாதங்களுக்கு முன்பு படித்த ஒரு
புத்தகத்தைப்பற்றியும் ஓரிரு வரி எழுதிவிடுகிறேன்.
இல்லையேல் மறந்து விடும். 'கடவுள்' என்ற புத்தகம். 170 ரூபாய் கடவுள். கடவுள்தான்
கொடுத்தார் அந்தப் புத்தகத்தை. காசு எங்கே
என்னிடம்? தவிர, புத்தகத்தில்தான் கடவுளும் இருப்பார். ஓரிரு இலைக்கு மேல் அதிகம்
பறிக்கப்பட்டால் 'டானின்' என்கிற வஸ்துவை
அதிகம் சுரந்து 'குடு' என்ற மிருகத்திற்கு உணவு குடுக்காமல் விரட்டும் அதிசய
ஆப்பிரிக்க மரத்தைச் சொல்லும் சுஜாதாஸ்யமான
புத்தகம். அதில் காணப்பட்ட , 'எப்படி உலகம் உருவானது என்பதைவிட ஏன் உருவானது?'
என்பது போன்ற , விஞ்ஞானிகள் குழம்பும்
மெகா கேள்வியெல்லாம் அல்ல இப்போது இவன் கேட்டது. ரொம்ப ரொம்ப சாதாரண கேள்விதான்.
ஆனால் பொடிப்பொடியாய் என்னை
உதிர்த்து விட்டானே.. அல்லாவே, உன் முதுகில் கொஞ்சம் சாய்ந்து கொள்ளவா?
'சாய்ந்திருப்பது என் முதுகுதான் என்றுகூட தெரியாத
முட்டாளாக இருக்கிறாயே' என்று நீயும் எட்டி உதைக்காதே.
பதில்தான் சொன்னான். கேள்வி போன்ற பதில்.
ஒன்றுமில்லை, சும்மா ஒரு பொய்க்கோபம், அவனைப் பயமுறுத்துவதற்காக. ஊருக்குப்
போயிருக்கும்போது அந்த நாலு வயசுப்
பொடியனைப் பார்த்து நரம்புகள் புடைக்க கத்தினேன். 'வூடாடா இது? நரஹம். நரஹம்டா
நரஹம். எப்பப் பாரு, அதை ஏன் வாங்கிட்டு
வரலெ, இத ஏன் வாங்கிட்டு வரலெ, அதுக்கு காசு தாங்க, இதுக்கு காசு தாங்கண்டு.. ஒரு
நிமிஷம் மனுஷன் நிம்மதியா இருக்க முடியுதா
இங்கே? ஒரு பாட்டு கேட்க முடியுதா? அட, கொஞ்சம் படிக்கத்தான் முடியுதா?
போறேண்டா..போறேன். துபாய்க்கு இப்பவே போறேன்'
என்று வீடே கிடுகிடுக்க கத்திவிட்டு , போவது போல் ஓர் 'ஆக்ட்'டும்
கொடுத்துவிட்டு, நைசாக திரும்பிப் பார்த்தேன்.
குழப்பமான பார்வையுடன் அவன் என்னைப்பார்த்து மெதுவாகக் கேட்டான் : 'சூட்கேஸை
எடுத்துட்டு போவலெ?'
கடகடவென்று சிரிக்கும் சப்தம் கேட்கிறது. சூட்கேஸ் சிரிக்கிறதா? அதுவுமா? இல்லை.
அஸ்மா. மாப்பிள்ளை விழுவதைப் பார்த்து
ரசிப்பவளுக்குத்தான் மனைவி என்று பெயர்.
'நாந்தான் அப்பவே சொன்னேனே மச்சான், அவன்ட்டெ உஷாரா பேசுங்கண்டு' என்கிறாள்.
உண்மைதான். சொன்னாள்தான். வந்த
முதல்நாளே பட்டேன்தான். தான்.. தான்.. வருஷங்கள் கழித்து வீட்டில் நுழைந்ததுமே
'அடியை கொடுங்க' என்று அஸ்மா கேட்கிறாளே
என்று அசட்டுதனமாக இளிப்புடன் அவளை நோக்கினால் 'ச்சீ.. அவனுக்கு அடியை
போடுங்கண்டு சொன்னேன்' என்று ஜக்கரியாவைக்
காட்டினாள். 'போன தடவை இருந்தப்ப பேச்சே வரலையே இந்த படுவாவுக்கு? ரொம்ப விஷமம்
பண்ணுறான் போலக்கிதே இப்ப' என்று
சொல்லிக்கொண்டே - தோசைமாவு இருந்த பாத்திரத்தில் மண்ணைக் கலக்கிக் கொண்டிருந்த
ஜக்கரியாவை நெருங்கினேன், முத்தமிட .
பிள்ளைகளை முத்தமிடுவது எங்கள் நபிப் பெருமானுக்குப் பிடித்தமானது. 'அன்பு
காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார்' என்ற
அன்ணல். 'பேயன் பைத்தியக்காரன் மாதிரி செய்யாதீங்க. ஏண்டா செஞ்சாண்டு முதல்லெ
அதட்டுங்க அவனெ' - அஸ்மா அதட்டினார்
அன்போடு. மரியாதைக்கு மறுபெயரும் மனைவிதான்.
'ஏண்டா செஞ்சே?'
'அப்படித்தான் செய்வேன்' - மின்னல் வேகத்தில் வந்தது பதில். மின்னல் என்ன வேகம்,
தெரியுமா?
'வீணை யின்பக் குரலே வா
வீட்டின் இன்பச் சுடரே வா
தேனைப் பழித்த சுவையே வா
தேடும் நீண்ட விழியே வா'
- சேய்ச் செல்வத்தை இப்படித்தான் புகழ்ந்தார் புலவர் ஆபிதீன் காக்கா. பிறகு ,
'ஏங்கிமுகம் வீங்கிமிக ஏழையவன் தானழுதால்
ஏனென்றுங் கேட்கஒரு பேயுமில்லை எம்மவரே' என்று கொழும்பு சென்று குமுறினார் -
குடும்பத்தைப் பிரிந்து. அவர் எங்கே பிரிந்தார்?
ஊரில் இருந்தால், அதுவும் எழுத்தாளனாக இருந்தால், உதைத்து அனுப்பிவிட
மாட்டார்களா? துபாயில் மட்டும் என்ன வாழுது? வேலை
கொடுக்கிற மாதிரி இருந்த எங்கள் ஊர்க்கார முதலாளி நான் எழுதுவேன் என்று - யார்
மூலமாகவோ - தெரிந்ததும் பதறித்தான் போனார்.
'நல்லவேள சொன்னிங்க தம்பி.. தப்பிச்சேன். எழுதுறவன்லாம் பெரிய சோம்பேறியாவுலெ
இருப்பானுவ' என்றாராம். ஊர்ப் பேயன்களுக்கு,
மன்னிக்கவும், பேய்களுக்கு அரபியே பரவாயில்லை என்று முடிவெடுத்தேன். அதலபாளத்தில்
விழுந்தேன். விரிவாகச் சொல்ல அலுப்பாக
இருக்கிறது.
அட , வெட்டிப்பேச்சு விருதாப்பேச்சையெல்லாம் விடுங்கள், இப்போது நான் என்ன செய்ய
வேண்டும்? குழம்பிப் போனேன். இதென்ன
வேடிக்கை, கொஞ்சம் நடுங்கினால் அதைவைத்து நாலு வார்த்தை வேகமான வசனம்
பேசலாமென்றால் முதலிலேயே தூக்கி வீசி
விடுகிறானே பயல். எதிர்வீட்டு ராவியாபேகத்திற்கு பேய் பிடித்தபோது அவள்
மாப்பிள்ளை, 'டியே... யார் வூட்டுலேர்ந்து வந்திக்கிறா நீ?..
இப்பவே உன்னை அடிச்சி வெரட்டுறேன் பாரு தர்ஹாக்கு' என்று - சுற்றிலும் பொம்பளைகள்
உட்கார்ந்திருந்ததால், பந்தாவாக -
அதட்டியபோது 'பெண்' சொன்னது : 'போடா தடியா'. பறந்துபோய் பாங்காங்கில் விழுந்தார்
அவர். அந்த மாதிரியல்லவா இருக்கிறது.
'என்னா புள்ளே இவன்..' என்று அஸ்மாவிடம் பரிதாபமாகக் கேட்டேன். 'அப்படித்தான்
பேசுறான் இப்ப..' என்று பெருமையாகச்
சொல்லிக்கொண்டே அவனைப் பாசத்தோடு கட்டிக்கொண்டாள். என் பிள்ளைகளும் 'ஜக்கரியா
மச்சான் படலம்' பாடின.
எப்போதும் அவன் இருப்பது எங்கள் வீட்டில்தான். எங்கள் வீடு என்றால் அஸ்மாவின்
வீடு. அவள் நானா (அண்ணன்) வீடு , இதே
தெருவில் வெகுதூரத்தில் இருக்கிறது. ஆமாம், பக்கத்து வீடு. இதேவீட்டின்
பகுதியாகத்தான் அது முதலில் இருந்தது. கொல்லைவரை
நடுவில் சுவரெழுப்பி , நன்றாக வாழப்போகிறோம் என்று 'ஒற்றுமையாக'ப் பிரித்து
விட்டார்கள். இவன் ஏன் இங்கேயே இருக்கிறான்
என்றால் மாமி மேல் அத்தனை பாசம். பிறந்ததிலிருந்து மாமிதான் அவனை தூக்கி
வைத்துக்கொண்டிருக்கிறாள். ராத்திரி படுக்க மட்டும்
அவன் வீட்டுக்குப் போவான் தன் உம்மா-வாப்பாவின் தொணதொணப்பு தாங்காமல். அங்கேயும்
தொந்தரவுதானாம். அசந்து மறந்து
ஜோடிகள் கட்டிப்பிடித்துக் கொண்டால், 'என்னா வாப்பா, காதல் பண்ணுறீங்களா?' என்று
கேட்கிறானாம். என் மச்சினன் அதுமட்டுமா
பண்ணுகிறான்? பேசுகிறான் என்றால், எல்லாம் இந்த பாழும் டி.வி. செய்வது. அவனை
ஏமாற்றி , வீட்டார் பார்க்கும் 'மானாட மானோட
கொட்டையாட' விளைவிக்கும் விபரீதம். 'உம்மா.. இங்கே பாரு... பாலுலாம்
டிங்குடிங்குண்டு ஆடுது..'
தூங்கி எழுந்ததும் நேராக மாமி வீடு -> ஸ்கூல் -> மாமி வீடு. ஸ்கூலிலும் டீச்சர்
கேட்கிற கேள்விக்கு அதேமாதிரி பதில்தானாம்.
'ஏண்டா, பக்கத்து பையனை அடிச்சே?'. 'அப்படித்தான் அடிப்பேன்'. யு.கே.ஜி. டீச்சர்
ஏன் மறு கேள்வி கேட்கிறாள்? 'UKG is carrying 10
KGS' என்று வருத்தப்படும் டீச்சர் அவள். என் பிள்ளைகள் சிரித்துக்கொண்டே எல்லா
ரகளைகளையும் சொன்னார்கள். அவர்கள் மட்டும்
பேசவே தெரியாத பிள்ளைகள் போல. எஸ்ஸெல்ஸி படிக்கிற மகன் அனீஸிடம் வாத்தியார்
கேட்டிருக்கிறார்: 'முஹம்மது - அனீஸ் -
மரைக்கார். மூணு பெயர்.. முஸ்லீம் பையங்க ஏண்டா இப்படி பேரு வச்சிருக்கீங்க'
'நீங்க மட்டும் அட்டல் - பிஹாரி - வாஜ்பாயிண்டு வச்சுக்கலாமா?'
எப்படி? குரலும் கர்ணகடூரம். 'காண்டாமிருகம் மாதிரி இக்கிதுடா உன் குரல்' என்று
சொன்னேன் , ·போன் பேசும்போது. 'உங்க குரல்
மாதிரியே இருக்குண்டு எல்லாரும் சொல்றாஹா வாப்பா' என்றான். 'சரியாகக்
கேட்கவில்லை' என்று வைத்துவிட்டேன்
மகள் அஸ்ராவும் 'வெடுக்'தான். அஸ்மாவின் மகளாயிற்றே.. பிள்ளைகளுக்காக ஹந்திரி
கடையில் வாங்கிய புல்லாங்குழலை வாசித்துக்
கொண்டிருந்தேன் ஒருநாள். விற்றவன் , ராஜாவின் 'எனக்குப் பிடித்த பாடல் உனக்குப்
பிடிக்குமே'-ஐ பிய்த்து உதறினானே... ரவீந்திரனின்
'வார் முகிலே...'வை ரகளை பண்ணினானே.. எனக்கு மட்டும் ஏன் , காற்று மட்டும் -
அதுவும் 'பா...ங்..' என்று - வருகிறது? இஸ்லாமிய இன்னிசை வேந்தரை முயற்சிக்கலாமா? 'மவுத்தையே நீ மறந்து..' - குழலின் துவாரங்கள்
அடைத்துப்போய் காதுகள் வழியாக
காற்றெல்லாம் வெளியேறியதுதான் மிச்சம். சே, ஒன்றுமே சரிவரவில்லையே..
'அவன் தெரிஞ்சி செய்றான், நீங்க தெரியாம செய்றீங்க வாப்பா' என்று வாரினாள் அவள்.
கரெக்ட். தெய்வத்தின் குரல். குழந்தையும்
தெய்வமும் ஒன்று - குழி பறிப்பதில். விழுவுதற்கு காரணமெல்லாம் தெரியாமல் போய்
விழுவதால்தான். இனி தெரிந்தே விழுகிறேன்
தேன் மகளே.. உன் கல்யாணத்திற்காக நிறைய விழ வேண்டியிருக்கிறது.
வளர்ந்த இவர்களிம் பேசுவதை விட ஜக்கரியாவுடன் பேசிக்கொண்டிருக்கலாம்.
கொடகொடவென்று எதையாவது மழலையில் சொல்லிக்கொண்டிருப்பான். 'ர' எல்லாம் 'வ' ஆகும். போனமாசம் மஸ்கட் போன பொறையார்
மாமா அவனுக்கு பயணக்காசு
கொடுக்கவில்லையாம். இவன் கேட்டபிறகுதான் கொடுத்தாராம். 'கள்ளப்பயல பாவுங்க..'
என்று அவர் எல்லோரிடமும் சொன்னதற்கு, 'கேட்டாத்தான் கொடுப்பிங்களா?' என்று பதிலுக்கு இவன் கேட்டானாம். எல்லோரும்
சிரித்தார்களாம். அப்புறம்.. வீடு மாறும்போது
கொல்லையிலுள்ள மரங்களை வெட்டிவிட்டது அவனுக்குப் பிடிக்கவில்லை. அழுகை அழுகையாக
வந்ததாம்... நானும் எதையாவது
சொல்லிக்கொண்டிருப்பேன், அவனுக்கு விளங்குமா இல்லையா என்பதுபற்றியெல்லாம்
பொருட்படுத்தாமல். நான் எழுதும் விதமே
அப்படித்தானே?
'நாக மரங்கள் அதிகம் இருந்ததால் மட்டும் நம்மூருக்கு நாகவூர் என்று பெயர்
வரவில்லை - 'நானிலம் போற்றிடும் நாகவூர் தர்ஹா'
புத்தகங்கள் சொல்வதுபோல. நம் வீட்டுப் பக்கத்திலுள்ள நாகநாத சுவாமிகள்
கோயிலாலும்தான் அந்தப் பெயர் வந்ததுடா ஜக்கரியா. அதன்
ஸ்தல புராணம் கேள். முன்பொரு காலத்திலே சம்புபத்தன் என்னும் பிராமணன் தன்
குடு....'
எவ்வளவு அருமையாக நான் சொல்வதை கேட்டுக்கொண்டிருக்கிறான் என்று பார்த்தால் பயல்
தூங்கிக்கொண்டிருக்கிறான். சரி என்று
நகர்ந்து போனால் அவன் கால் ஜோராக ஆடுகிறது.
யாரும் கேட்காவிட்டால் என்ன, தெருக்கள் தோறும் ஊரில் வழிந்து ஓடும் துவேஷத்தை
ஒழிக்க சொல்லிக்கொண்டிருப்பேன். உங்கள்
மார்க்கம் எங்களுக்கு; எங்கள் மார்க்கம் உங்களுக்கு - புகழ்ந்து சொல்ல. இதுதான்
சரி. உதாரணம் சொல்லவா? நான் சிரிப்பாக
எழுதுவதாக ஒருவர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். என்ன, அப்படியெல்லாம்
சொல்லியிருக்க மாட்டாரா? அட, சொல்கிறார்.
பொய்தான். ஆனால், ஜிலுஜிலுவென்று இருக்கிறதே. சொன்னவர் மேல் அன்பும் பெருகிறது.
நானும் சொல்கிறேன், நீங்களும்தான் என்று.
அவருக்கு சந்தோஷம். இலக்கியம் தொலையட்டும், உறவு வளர்கிறதா இல்லையா? அதுவல்லவா
முக்கியம்?
ம்.. சொல்லலாம். ஊரோடு இருந்தால் , பிறசமூகத்தின் பெருமைகளை சொல்லிச் சொல்லி
பிள்ளைகளை வளர்க்கலாம். ஆவேசமும் ,
'உலகை மாற்றப்போகும் ஒரே மத'ப் பெருமையும் அவர்களுக்குக் குறையும் . அத்தனை
தூரத்திற்கு விட்டுப்பிரிந்துவிட்டு, எப்படி ,
யாரால் இவர்கள் மாறுவார்களோ என்ற பதட்டமல்லவா எப்போதும் ஆட்டிப் படைக்கிறது? ஏன்,
என் வாப்பாவும் - எத்தனையோ
வாப்பாக்கள் போல - பிரிந்துதான் இருந்தார்கள் மலேயாவில். மொத்த வாழ்க்கையில் 313
நாட்கள்தான் குடும்பத்தோடு ஊரில்
இருந்துவிட்டுப் போனார்கள். ஆனால் , நான் அடங்கித்தானே வளர்ந்தேன்? வாசிப்பா ,
நட்புக்கு இலக்கணம் வகுத்த நண்பர்களா (இப்ப
எதுக்கு சிரிக்கிறீங்க?) , வாப்பாவின் ஆசையா? அவர்களின் ஆசையாகத்தான் இருக்கும்.
'எல்லாரும் நமக்கு வேணும்ங்கனி' என்பார்கள்.
சொந்தங்களைப் பார்க்க அறந்தாங்கி , ஏம்பல் போகும்போதெல்லாம் ஆவுடையார்கோயிலில்
இறங்கி ,கோயிலில் நுழைந்து, ஒவ்வொரு
சிலையாக விவரித்து வளர்த்த வாப்பா... கல்லிலும் தெய்வம் காண்பவர்கள்
கபடமில்லாதவர்கள் என்று சொன்ன வாப்பா.. 'எல்லாப்
பறவைகளுக்கும் அத்திபழமே உணவாக இருக்க முடியாது' என்று சொன்ன மௌலானா ரூமியை
நேசித்த சீதேவி வாப்பா..
எல்லாம் சரிதான், கொஞ்சம் பிழைக்கத் தெரியாத ஏமாளியாகப் போய்விட்டேனே வாப்பா...
'கொஞ்ச நஞ்சமா?' என்பாள் அஸ்மா.
'ஊரோட வர்ரவன் பணக்காரனா இக்கிறாண்டா, வரும்போதே அவன் அரபியை 'போட்டுட்டு'
வர்றான். சூப்பர்மார்கெட்டா தொறக்குறான்.
உமக்கு அது புடிக்கலெ, கஷ்டப்படுறியும். ஓய், போடுறதா இருந்தா நம்ம நாட்டுலெயே
நல்லா போடலாம், வந்துடுறியுமா?' என்பார்
ஜப்பார்நானா. அவர் சொல்வது சரிதானா? முஸ்லீம் கட்சிகளே நூறு நூறாகப் பிரிந்து
ஆளுக்கு ஓர் உண்டியல் வைத்துக்கொண்டு
அள்ளுகின்றனவா? ஜப்பார் நானா என் உஸ்தாத் போன்றவர். ஹஜ்ரத்தின் மவுத்திற்குப்
பிறகு அவர்தான் ஆறுதலுக்கு. அவர் சொல்வது
எனக்கு விளங்குவதில்லை. உஸ்தாதின் கேள்விகள் விளங்கினால் நான் ஏன் கதை
சொல்லிக்கொண்டு இருக்கிறேன்? அதையும் சரியாகச்
சொல்கிறேனா? ஜக்கரியாவை விட்டுவிட்டு எங்கெங்கோ அலைகிறேன். என் அலைச்சல்
எழுத்தையும் விட்டுவைக்கவில்லை,
உங்களையும் விட்டுவைக்கவில்லை.
ஜக்கரியாவால் ஊரில் பொழுது போனது.
12
34
56
78
910
என்று , நேர்கீழான வரிசையில் சுவரில் அவன் கிறுக்கியிருந்ததைப் பார்த்தேன்.
கோணல்மாணலான எண்கள். புத்தியுள்ளவன்தான்,
சந்தேகமில்லை. Permanent Markerல் பிரமாதமான கிறுக்கல். Arabic Calligraphyக்காக
நான் வாங்கி வைத்திருந்தது. கடுப்பு வந்தது. கூடவே
கண்ணையும் சுழற்றியது. ஓர் இழவும் விளங்கவில்லையே... என்ன கணக்கு இது? கூட்டல்
போட்டிருப்பானோ? ஐந்தோடு ஐந்து
கூட்டினால் பதினொன்று என்று என் மகள் இரண்டு கைவிரல்களையும் வைத்துக்கொண்டு
வினோதமான ஒரு கணக்கு சொல்வாள்
சின்னவயதில். 10,9,8,7,6 என்று இடது கை விரல்களை - பெருவிரலிலிருந்து ஆரம்பித்து
- மடித்துக்கொண்டே வருவாள். 'இப்ப ரைட்
ஹேண்டில் அஞ்சு வெரல் இக்கிதா? 5+6=11' என்பாள். பதினோரு விரல்களாலும் தலையைப்
பிய்த்துக்கொள்வேன், ஏதோ எனக்கு முடி இருப்பது மாதிரி. அந்தக் 'கணக்கு' அவளது டீச்சர் சொன்னதாம். இப்போதும் எனக்கு
புரியமாட்டேன் என்கிறது. அதேபோல் ,
ஜக்கரியாவின் வகுப்பில் எதாவது சொல்லிக் கொடுக்கிறார்களா? முஸ்லீம்
பாடசாலைகளுக்கென்று தனியாக ஒரு கணக்கு இருக்கத்தான்
செய்யும். ஆனால் இப்படியா? ம்ம்.. வரிசையில் மட்டும் ஏதோ ஓர் ஒழுங்கு தெரிகிறதே..
மிஸ்டர் ராமானுஜம், கொஞ்சம் உதவிக்கு
வருகிறீர்களா? மகனிடம் கேட்டேன். 'அட, ஒண்ணு, ரெண்டு, மூணுதான் வாப்பா. அப்படி
அளகா - பக்கத்து பக்கத்துல - எழுதி வச்சிக்கிது
புள்ள' என்றான். இல்லை, இது சரிவராது, இடிந்து விழாத ஒரே ஒரு சுவரிலும் இப்படிக்
கிறுக்கினால் இடிதான் தலையில் விழுமென்று
ஓவியத்திற்கு மாற்றினேன். கிறுக்கர்களுக்கு ஓவியம் இயல்பாக வரும். க்ரையான்கள்
கொடுத்தேன். கப்பல் ஒன்றை வரையச்
சொன்னேன்.
கப்பலின் முனையில் கப்பலின் நீளத்தை விடப் பெரிதாக ஒரு பெரிய கரண்டியை
வரைந்திருந்தான்.
'இது எதுக்குடா?' என்றால் போகும்போதே மீன் பிடித்துக்கொண்டு போகுமாம். அதைவிட
வேடிக்கை அந்தக் கப்பல் , வீடு என்கிற இரண்டு
கோடுகளின் மேல் உட்கார்ந்திருந்தது. கப்பலுக்கு ஒரு காதும் இருந்தது.
சந்தேகமில்லை, இவன் வான்கோவேதான். கந்தூரியெல்லாம்
அதிகம் பார்த்தால் அப்படித்தான் கற்பனை வருமென்று கடற்கரைக்கு கூட்டிப் போனேன்.
நான் பெற்ற மகனுக்கு சாயந்தரமானால்
உசேன்போல்ட் ஞாபகம் வந்து விடும். உதறிக்கொண்டே கலெக்டர் ஆஃபீஸ் ஓடுவான்.
அங்கேதான் ஸ்டேடியம் இருக்கிறது. பள்ளி
மைதானம் பத்தாது என்று இதுவேறு. தினம் தினம் ஒரு விளையாட்டு. 'என்னடா இது?
·புட்பால், பேஸ்கட்பால்ண்டு எதாச்சும் ஒரு
விளையாட்டுல ஸ்பெஷல் அட்டென்சன் கொடுக்காம எல்லாத்தையும் போட்டு ஒழப்பிக்கிட்டு..
கேவலாமாவுலெ இக்கிது' என்றால் 'இதை
விட கேவலம் ஒண்ணு இக்கிது வாப்பா' என்கிறான் என்னவாம்? ஸ்கூல் சார்பாக
போட்டிகளுக்குப் போகும் எல்லா ஊர்களிலும் கிடைக்கும் தோல்விதான். தாளாளர் சொல்வதை தட்டாமல் கேட்கும் பி.டி வாத்தியார்
துணை. ஆனாலும் துவளாதவன் என் மகன்.
அஸ்ரா? கனவு மிதக்கும் கண்களோடு எப்போதும் படிப்பு. கணிதம் படிக்கிறாள்
கல்லூரியில். 5+5= பத்து சூர்யா.
அஸ்மாவோடு போகும்போது ஐடியல் துணை ஜக்கரியாதான். ஸ்கூட்டர் என்ற பெயருள்ள என்
புராதன கூட்ஸ்வண்டியில் , முன்னால்
அவன் நின்று கொள்ள பின் சீட்டில் பேரழகி - பூதம் போன்ற புர்க்காவோடு. ஆனால்
அவளுடையது உரசும்போதே, புர்க்காவைச்
சொல்கிறேன் , கிளம்பிவிடும் - ஸ்கூட்டர். சரியாக, கடற்கரைக்கு 3 கி.மீ தூரத்தில்
நின்றுவிடும். நாங்கள் புறப்பட்ட இடம் அதுதான்.
அஸ்மா வீடு. சே, என்று ஆட்டோ பிடித்து சேர்வோம். அவனை அங்கே விளையாட விட்டுவிட்டு
வஞ்சித்தோப்பு ஓரமாக அலைகளையும்
அவனையும் பார்த்தபடி நாங்கள் இங்கே விளையாட ஆரம்பிப்போம். எல்லாம் பேச்சுதான்.
'முதல்லெ மாதிரி முடியல புள்ளே.. மூச்சு
வாங்குது' . 'முதல்லெ சிகரெட்டை வுடுங்க'. 'அங்கேயா ? சுடும்டி'. 'சீ..
கோணப்பேச்சுக்கு மட்டும் குறைச்சலில்லெ'. 'உன் மவள்ட்டெயும்
சொல்லிவை.. திடீர்திடீர்ண்டு அறையிலெ நுழைஞ்சுடுறா'. 'அத சொல்லிக்கிட்டே ஏன் கை
இங்கே நோண்டுது? ச்சூ..யாரும் பாத்துடப்
போறாஹா'. 'பாக்க மாட்டாஹா, பயணத்துலேர்ந்து வந்திக்கிறாண்டு தெரியும்'. 'ம்..'
நிறுத்திவிடுகிறேன். 'ஏண்டா இதெல்லாம் எழுதுறே?' என்று ஈ-மெயில் வருகிறது.
கடவுளாகத்தான் இருக்கும்.
கடவுளை அறிய புத்தகமா வாங்குவார்கள்? சும்மா கடலைப் பார்த்துக்கொண்டிருந்தாலே
போதுமே... மனம் நிறைந்து விடும். எவ்வளவு
பெரும் கருணை.. தன் வரம்பு மீறாமல் , குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிற தர்ஹா
யானை போல கம்பீரமாயும் அடக்கத்தோடும்..
துலாவித் தழுவும் அலைகளை தும்பிக்கைகள் எனலாமா? பார்க்கப்பார்க்க அலுக்காத
பரவசம். கொல்லையில் தேங்காய்
பறித்துக்கொண்டிருக்கும்போது உம்மாதான் சொல்வார்கள், 'யார் தலையிலெயும் வுழாது
தம்பி. ஒரு சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நிக்கிது
மரம்லாம், தெரிஞ்சுக்க' என்று. நினைவுக்கு வரும். அது போலத்தான் கடலும்.
நாலுவருஷத்துக்கு முன்னால் சும்மா லே...சா கொஞ்சம்
சிணுங்கியது. எங்கள் ஊரில் மட்டும் நாலாயிரம் பேர் புதைந்தார்கள். இன்னும் அதன்
வீச்சம் காற்றில் பரவி நிற்கிறது. இ·தென்ன
கருணையா? என்று நடுக்கத்துடன் கேட்டால், ஆம். 'எதிரி' நாடுகளை அழிப்பதற்காக
பரிசோதனைகள் என்ற பெயரில் எங்கெங்கோ தன்
அடியில் குண்டுகள் நீங்கள் வைத்ததற்கு இந்த அளவாவது விட்டுவைத்ததே அது.
'மச்சான், எப்படியோ வருதும்மா... ராத்திரி பாத்துக்கலாம்'
அட, கொஞ்சம் இயற்கைக் காட்சியை சித்தரிக்க விடமாட்டாளே.. 'கைப்பிடியளவு கடலாய்
இதழ்விரிய உடைகிறது மலர் மொக்கு'
என்கிறாண்டி கவி பிரமிள். இரு, அப்படியே நாசர்மாமா பற்றியும் இங்கே
சொல்லிவிடுகிறேன். அறுபது வருடமாய் சிங்கப்பூர் சபராளியாக
இருந்து - ஊரோடு போய் தன் குடும்பத்தோடு இருக்கலாம் என்று வந்த எழுத்தாளர்.
'சுள்ளடி' என்று நாங்கள் அழைக்கும் கடற்கரைக்கு
தவறாமல் வருவார். பேசிக்கொண்டிருப்பேன். இங்கே, இதே இடத்தில்தான் என்னிடம்
அழுதார். 'தம்பி.. தயவு செய்து அந்த மாதிரி
பேத்தனமா முடிவு எடுத்து ஊரோட வந்துடாதீங்க. சல்லிக்காசுக்கு மதிக்க மாட்டாளுவ..
'மச்சான்..மச்சான்'டு இருந்தா என் பொண்டாட்டி -
என்னெட்டேர்ந்து காசு வந்த வரைக்கிம். இப்ப தன்னோட புள்ளைங்க சம்பாதிக்க
ஆரம்பிச்ச உடனே என்னய தூக்கி எறிஞ்சிட்டா..
வேலைக்காரன வுட இப்ப கேவலமா பொய்ட்டேன் தம்பி.. ப்ளீஸ், வெளில யார்ட்டெயாச்சும்
சொல்லிடாதீங்க..' என்றார்.
கண்கலங்கி விட்டது எனக்கு. மதநல்லிணக்கக் கூட்டங்களில் முன்நின்று செயல்படும்
முக்கியமான ஆள். 'பைத்துல்மால்' எனும்
பொதுநிதிக்கான அமைப்பு எங்கள் ஊரில் ஏற்படக் காரணமாக இருந்தவர். அவருடைய
நகையுணர்வும் ரொம்பவும் ரசிக்கத்தக்கது. சென்ற
முறை, ஈகைப்பட்டினத்தில் அவர் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு போய்விட்டு , வரும்
வழியில் சரவணா ஹோட்டலில் ஏதோ டி·பன்
வாங்கினேன். வாசலில் அவர் நின்றுகொண்டிருந்தார். ஊர் போவதற்காக யார் வண்டிக்காகவோ
காத்திருக்கிறார் போல. என்
ஸ்கூட்டரிலேயே அவரையும் கூட்டிக்கொண்டு போகலாம் என்ற எண்ணம். அவருக்கும் ஒரு
நெய்தோசை பார்சல் வாங்கிக்கொண்டேன்.
பார்சல்களை அவர்கையில் கொடுத்து, 'ஊர் வர்ற வரைக்கிம் இத கையில் வச்சிக்கிட்டு
பின்னால உக்காந்துக்குங்க மாமா, தப்பா
எடுத்துக்காதிங்க' என்றேன். 'அட நீங்க ஒண்ணு தம்பி, தோசை வாங்கி
கொடுத்திருக்கீங்க. ஒரு சிமெண்ட் மூட்டைய தோள்ல வச்சாக்கூட
தூக்கிக்கிட்டு வருவேன்' என்றார்.
கஷ்டப்படுறவனுக்கெல்லாம் நகைச்சுவை சும்மா பொங்குகிறது.
அவரைப்போல எவ்வளவோ பேர் ஊரில். இவராவது வந்து அடிவானத்தைப்
பார்த்துக்கொண்டிருக்கிறார், எப்போது அதில் இணைவோம்
என்பது போல. பலபேர் வீட்டுத்திண்ணையிலேயே முடங்கி விடுவார்கள் , அதுநாள்வரை
அவர்களின் ரத்தம் உறிஞ்சிய மனைவியும்
மக்களும் தினந்தினம் தலையில் கொட்டுகிற அவமானத்தைத் தின்றுகொண்டு. சங்கிலி
போடாதவரை சந்தோஷம்தான்.
நானும் அப்படித்தான் ஆவேன், சந்தேகமேயில்லை. 'உங்கள யாரு போவ சொன்னா? இங்கேயே
சம்பாதிங்களேன்..' என்று இப்போதும்
அஸ்மா சொல்கிறாள். சம்பாதிக்க முடியாது, மூதலீடில்லாமல் என்று தெரிந்த பிறகுதான்
ஆனந்தமாக ஆறுதல் சொல்லலாமே..
ரொம்பவும் வீறாப்போடு பணம் கொண்டுபோனவனெல்லாம் அதிகபட்சம் ஒரு வருடத்திற்குள்
மூளை குழம்பிப்போய் திரும்ப வந்து
தொலைவதைப் பார்க்கும்போது எப்படி முடிவு எடுப்பது? என் மூலதனமோ ஒரு புத்தகமாக
இருந்து தொலைகிறது.
Recession-இல் மாட்டிக்கொண்டு விழிக்கிற துபாயின் நிலைமையோ கவலைக்குரியதாக
இருக்கிறது. வலையுலகில் சில மாதங்களுக்கு
முன்பு உலாவிய அலிபாபா ஜோக்கை படித்தீர்களா? இப்போது 'அலிபாபாவும் 30
திருடர்களும்' மட்டும்தானாம். மீதி 10 பேர்?
அவர்களுக்கு வேலை போய்விட்டது. நீங்கள் படிக்கும் இந்த நேரத்தில் அலிபாபா
மட்டும்தான் இருப்பான். அநேகமாக கடவுள் பற்றி தன்
'ப்ளாக்'கில் எழுதிக்கொண்டிருப்பான் என்று நினைக்கிறேன். அவனிடம் இந்த செய்தியைச்
சொல்லவும்: 'மூணு பேர் செய்ற வேலையை
ஒரே ஆளா செய்றவனையெல்லாம் ஊருக்கு அனுப்பு' என்றது ஒரு கம்பெனி. முட்டாள் எனக்கு
ஆச்சரியம். நண்பர்தான் உடைத்தார்.
அதாவது, 'பத்து பேர் செய்ற வேலையை ஒரே ஆளா செய்றவங்களை வச்சுக்க' என்று
அர்த்தமாம். Gone are the days....
அமெரிக்காவுக்கு விழுந்த அடியில் இங்கே ஆயிரம் 'ப்ராஜக்ட்'கள் நின்று போனாலும்
ஆடம்பரங்களை குறைத்துக் கொள்ளாத அரசாங்கம்.
வெள்ளியில் முக்கிய நரகல் போல விறைத்து நட்டிக்கொண்டு நிற்கும் ஒரு குறி. பெயர்
'புர்ஜ் துபாய்'. 'புர்ஜ்' என்றால் Tower. உலகிலேயே
உயரமாம். உலகு எவ்வளவுப்பா உயரம்? அப்புறம்.. சொகுசு மெட்ரோ. Dream Train. 28
பில்லியன் திர்ஹத்தை இதுவரை விழுங்கி
விட்டதாம். நாள்குறித்து, நாலே வருடங்களுக்குள் 'கமுக்கமாக' பாதிவேலையை முடித்தது
சாதனை. இதற்காகவே நாலுதடவை அது
நிற்கலாம். அலுவலகம் அருகேயுள்ள ஸ்டேஷன்களைப் பார்த்து , 'எப்படித்தான் அடியில்
இப்படித் தோண்டினார்களோ?' என்று
வியந்ததற்கு , 'இதைவிடப் பெரிய குழியை முதலாளி அபு கலிஃபா நமக்கு தோண்டி
வைத்திருக்கிறார் யா ஹபீபி' என்றான் ஆறிய
கம்பெனியின் 'சூடானி'. அப்படியாவது நாடு முன்னேறினால் சரிதான். இந்த
செலவையெல்லாம் யார் தலையில் கட்டுவார்கள்? 'பிஸ்மி'
சொல்லி, பஸ் கட்டணத்தை மூணு மடங்கு கூட்டு; 'அட்டை'யாக உறிஞ்சு. ஆச்சா?
'Guardian'ஐ மேற்கோள் காட்டி , 'துபாயில் கஞ்சித்தொட்டி' என்று ஒரு நண்பர் போட்ட
பதிவைப்பார்த்த அன்று எனக்கு தூக்கமே
வரவில்லை, தெரியுமா? 'அட நீங்க ஏன் கவலைப்படுறீங்க? துபாயத்தான் அபுதாபிட்ட
வித்துட்டாரே நம்ம ஷேக்கு..' என்று வேறு திகில்
காட்டுகிறார்கள். அரபு நாடுகளை உலகபோலீஸ்களிடம் விற்றுவிட்டதை விடவா திகில்?
ஈரானை வைத்து விளையாடும் இன்னொரு
'விளையாட்டு'ம் காத்திருக்கிறது தலைமேல் கத்தியாக. 'போங்கடா எல்லாரும்' என்று
எந்த நிமிடம் விரட்டுவானோ? கொஞ்சிக் குலாவிய
வெள்ளைக்காரன்களையே 'உங்கள் தேனிலவு முடிந்துவிட்டது' என்று கெஞ்சி அனுப்பிக்
கொண்டிருக்கிறார்கள். 'ஹிந்தி'யும்
பாகிஸ்தானியும் எந்த மூலைக்கு? அதிகம் பேசினால் 'புர்ஜ் துபாய்'-இன் கூர்முனையில்
வைத்து பிளந்து விடுவார்கள் பிளந்து.
நிலைமை ரொம்ப மோசம். பார்க்க: டபுள்யூடபுள்யூடபுள்யூ...
பத்துக்கு ஒன்பது வாடிக்கையாளர்களின் காசோலைகள் எங்களுக்கு 'பவுன்ஸ்' ஆகின்றன.
அபு கலிஃபாவின் மூஞ்சு அசல் குரங்காக
இருக்கிறது. 'மாலிஷ்' (பரவாயில்லை), அல்லா மாலிக்' என்று அவன் சொல்கிறான்.
ஏனென்றால் ரியல் எஸ்டேட் மன்னனான அவனது
காசோலைகளின் கதியும் அதுதான். இந்தநிலையில் எப்படி 'மாஷ்' (சம்பளம்) கொடுப்பான்?
மாசி சம்பால்தான் கொடுப்பான் - மாசி
வாங்கிக்கொடுத்தால். 'அரபி வாலுலெ தீப்பிடிச்சி' என்கிறான் 'innocent' குரலில்
செக்ரடரி. சேட்டா, தீயணைப்பு வண்டிகள் நெருப்பில்
சிக்கிக்கொள்கின்றன. பரவாயில்லையே, முந்தைய வரியையே தலைப்பாக இந்தக் கதைக்கு
வைத்துவிடலாம் போலிருக்கிறதே.
அன்றைக்குக் கூட 'படக்' என்று ஒரு வரி வந்தது. 'சரியான சமயத்தில் வரும் / out of
service பஸ் '. ம்.. கம்பெனியால் காசு வருகிறதோ
இல்லையோ கச்சிதமாக 'பஸ்க்கூ' வருகிறது. அதையா அஸ்மாவுக்கு அனுப்ப முடியும்?
உதைப்பாள், நாலு கால்களால்.
போனமுறை ஊர்போனதே பெரும்பாடு. சொந்த டிக்கெட்டில்தான் போய் வந்தேன். நொந்த
உள்ளத்திற்கு ஜக்கரியா மட்டும் ஊரில்
இருந்திருக்காவிட்டால் ரொம்பவும் பாடாகத்தான் போயிருக்கும். அவன் உதவியால்
கார்ட்டூன்கள் பார்த்து கவலையை மறந்தேன்.
யாரையும் பார்க்க விடமாட்டான். கெஞ்சிக்கெஞ்சி , பரவாயில்லை ரகமான 'ஜனங்க
டி.வி'யில் செய்திகள் பார்த்தேன். 'அடக்குங்க வாப்பா,
பார்க்கவே வெறியாவுது' என்பான் அனீஸ்.
'இல்லடா.. நல்ல ப்ரோக்ராம்லாம் இருக்கு இதுலெ.. 'நில்லு, தமிழ்ச் சொல்லு'ண்டு
ஒண்ணு. ரொம்ப நல்லாருக்கும். பனியனுக்கு சுத்தமான
தமிழ் என்னா தெரியுமா? மெய்யொட்டி. நல்லாருக்கில்லெ?'
'அப்ப ஜட்டிக்கு என்னா, 'கீழ் மெய்யொட்டி'யா? சரியான லூசு வாப்பா நீங்க' -
பொரிவான். சீரியல் பார்க்க இயலாத எரிச்சலில் சிரிப்பாள்
அஸ்மா, என் மாமியாரோடு. 'மாப்புள வந்து ரெண்டு மாசத்துக்கு மேல ஆவுதே..பயணம்
போவலையா? ' என்று கவலைப்படும் மாமியார்.
அவர்கள் என்னிடம் நேரடியாக சொல்ல மாட்டார்களாம். வெட்கம். உம்மா அப்படிக்
கேட்டதாக அஸ்மா சொல்வாள். வெட்கங்கெட்ட
நானும் கேட்டுக்கொண்டிருப்பேன். அங்கே, என் வீட்டிலோ , 'ஹை.. Pigமாமா
வந்துடிச்சி' என்று என்னைக் கூப்பிடுகிற தன் மகள்
வயிற்றுப்பேத்தியின் வாயில் அடிக்காமல் , 'வந்து நாளாச்சே தம்பி..' என்று
வம்பளக்கும் உம்மா.. எல்லார் வீட்டு அடுப்பங்கரை
ரகஸ்யங்களையும் பேசி முடித்துவிட்டு, 'ம்ம்.. நமக்கு ஏன்மா வீண் பொல்லாப்பு?'
என்று முடிப்பார்களாம் என் உம்மா - என் மகள்
சொல்வாள். அவ தனி. அவதானி.
'அடுப்பங்கரை ரகஸ்யம்' என்றால் என்னவா? 'நம்ம மச்சான் ரொம்ப நல்லஹதான். ஆனா,
ராத்திரி ஒம்பது மணிக்கு மேலெ பேய்
புடிச்சிடுது' என்று - அடுப்பங்கரையில் - பேசிக்கொள்ளப்படும் விஷயங்கள்தான்.
பிடிக்காவிட்டால் இவர்களுக்கு 'பார பைத்தியம்' பிடித்து
ஆட்டுகிறதே.. எச்சிப்பிசாசு மாதிரி ஏறி அமுக்குகிறார்களே... அதைமட்டும் ஏன்
மறைக்கிறார்களாம்?
நம்ம கதைக்கு வருகிறேன். லூசு என்னை லூசு என்று சொல்லிய அவனை ஓங்கி அறையலாம்
என்று வந்தது. கோர்ட்டுக்கு
போய்விட்டால் என்னாவது? 'இந்தகாலத்து பிள்ளைகள் தன் வாப்பாக்களிடம் எவ்வளவு
·ப்ரீயாகப் பேசுகிறார்கள்' என்று
சமாதானப்படுத்திக்கொண்டேன். என் வாப்பாவிடம் நான், என் தம்பிகள் தங்கச்சிகள்
அப்படிச் சொன்னதேயில்லை. பயணத்திலிருந்து
அவர்கள் வந்தாலே எங்கள் வீடு 'கப்சிப்' என்றாகிவிடும். கண்டிப்பல்ல, மரியாதை.
எதிரில் வந்தால் நைஸாக நகர்ந்து விடுவோம். வலிய
அவர்கள் எங்களை இழுத்து வைத்து பேசினால்தான் உண்டு. கடைசி சபருக்கு முன்பு வரை
அவர்கள் கொண்டுவந்த சாப்பாட்டு
ஐட்டங்களைத்தான் மறக்க முடியுமா? டப்பாவில் அடைக்கப்பட்ட பழங்கள்...அப்புறம் ,
கறுப்பு நிறத்தில் ஒருவித அரிசி... பிசினரிசி
என்போம். உம்மா அதை அவித்துச் சமைக்கும் விதம் அற்புதம். காலைப் பசியாறலின்போது
அந்தப் பழங்களும் பிசினரிசியும் ரவாவில்
செய்த'துல்லிசோறு'ம் கண்டிப்பாக இருக்கும். அதெல்லாம் வாப்பா தினமும் மலேயாவில்
சாப்பிடுவது போலிருக்கிறது என்று
நினைத்துக்கொண்டிருந்தால் வாப்பாவின் நண்பரான ஆதம்காக்காதான் என்னிடம் - நான்
வேலைதேடி அந்தப்பக்கம் சென்ற சமயம் -
சொன்னார்: 'சூப்பு வித்துப் பொளச்சாரு உம்ம வாப்பா இங்கே. மூணு வேளையும்
காஞ்சிப்போன ஆப்பம்... எப்பப்பார்த்தாலும் உங்களுவ
நெனப்புதான். நீம்பரு எளுதுன காயிதம்லாம் காமிப்பாருங்குனி ரொம்ப பெருமையா..'
ஊரில் காலூன்ற எடுத்த முயற்சிகள் அத்தனையும் சொந்தங்களின் துரோகங்களால்
தோற்றுப்போக, தன் பிள்ளைகளாவது பிறந்த
மண்ணில் பெருமையோடு வாழ நினைத்த வாப்பா.. ஆனால் பணரீதியாக அவர்களால் எனக்கு உதவ
முடியவில்லை. படித்துமுடித்த
நானும் சென்னையில் முயற்சித்திருக்கிறேன். வெறும் 150 ரூபாயும் ஒரு டேபிளும்
கொண்டுபோய் விளம்பர ஏஜென்ஸி
வைத்திருக்கிறேன். முக்கியமான வேலை , கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி மானோக்ராம்
ஆர்டர்கள் பிடித்து செய்வது. எந்த ஆங்கில
எழுத்துக்களைப் பார்த்தாலும் அவைகளை விதவிதமான வடிவத்தில் சேர்த்துப் பிணைத்து
வரைவேன். அப்போது உதவவில்லை. ஆனால்
அஸ்மாவுடன் சேரும்போது உதவிற்று, பல சுளுக்குகளுடன். எங்கோ போகிறேனே, மண்ணடி
மாமேதைகளோடு மாரடித்து சாக்கடையாக
சஃபரில் விழுந்த கதையை பிறகு சொல்கிறேன்.
ஜப்பார் நானா சொல்வார் : 'எல்லாம் உம்ம தப்புங்கனி.. ஆண்டவன் ஒமக்கு தனீயா ஒரு
தெறமை தந்தான். வரையறது. எங்களாலெ
முடியுமா? ஹஜ்ரத்தை வரைஞ்சியுமெ.. எவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட்லாம் டிரை
பண்ணியிக்கிறான்.. ஆனா நீம்பர் வரைஞ்சதுதான்
பெஸ்ட்'
'ஏன்?'
'அது ஹஜ்ரத் மாதிரியே இந்திச்சி'
'வேற ஆளை வரைஞ்சிப்பேன் போலக்கிது'
'உம்மை கெடுக்குறதே இந்த எடக்கு பேச்சுதான். அத முதல்ல விட்டுத் தொலையும்.
இங்கேயே அளகா வளராம.. அரபுநாட்டுக்கு
ஓடிட்டியுமே.. - கம்ப்யூட்டர்லெ புடுங்கப் போறேண்டுட்டு'
'அப்ப எனக்கு யாரும் சப்போர்ட் பண்ணல நானா. சொல்லமுடியாத கஷ்டம் , அவமானம் '
'கொஞ்சம் பொறுத்துப்பார்த்திருக்கலாம் நீம்பரு. நம்ம ஊருலேர்ந்து ரெண்டுபேரு
ஒரேசமயத்துலெ சினிமாவுக்கு வசனம்
எழுதப்போனானுவ. பயங்கரமா கஷ்டப்பட்டானுவ. ஒத்தவன் திரும்பிட்டான் முடியாம. ஏன்?
அவனுக்கு ஊர்வந்தா சோறு இந்திச்சி.
வராம, அங்கேயே நிண்டான்லெ இன்னொருத்தன், அவன்தான் ஜெயிச்சான்'
'யாரு, இந்த குதிரை, நாய்க்குலாம் வசனம் எழுதி சம்பாதிச்சாரே, அவர்தானே?'
'அவனேதான். ஒரு தட்டுல சோத்தை வச்சிட்டு அந்த ப்ரொடியூசர் சொல்வானாம் 'அடேய்
சாயபு.. பீய வச்சிருக்கேன் தட்டுல, தின்னு'ண்டு.
திண்டிருக்கான் அழுவிக்கிட்டே. ஆனா இண்டஸ்ட்ரிலெ பெரிய ஆளாயிட்டான். பொறுக்கனும்,
வளர்றதுக்கு'
இதையெல்லாம் எடுத்துச் சொன்ன அவர் ஏன் வளரவில்லை என்று கேட்கச் சொன்னது என்
மண்டைப்பூச்சி. பிறக்கும்போதே பிறந்தது.
பொறு என்றேன். வேறு என்ன சொல்ல? வளரவேண்டுமே..
கை நடுங்குகிற இந்த வயதில் இனிமேல் என்ன செய்வேன்? நடக்காததை எழுதிப் பிரயோசனம்
இல்லை. 'அடுத்த மாசம் துபாய்
போயாகனுமே, இந்த மாசத்தை ஓட்டப் பணம் வேணுமே' என்று இந்த கடங்கார வாழ்க்கையை
நினைத்து கவலைப்பட்டு
தலைசாய்ந்திருந்த நேரத்தில், ஸ்கூலிலிருந்து திரும்பிய ஜக்கரியா இன்னொரு கேள்வி
கேட்டான். வீசினான் என்பதுதான் சரி.
'இன்னும் போவலெ மாமா?' - குழந்தை.
'குழந்தைகள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள், உங்களிடமிருந்து அல்ல' என்று ஒரு
ஞானி சொன்னானே, அதே குழந்தை. 'கழிச்சல்ல
போவான், மாமாவ அப்படிலாம் கேக்கக்கூடாது. அஹலுக்கு தெரியாது எப்ப போவனும்டு?'
என்று அஸ்மா கடுகடுத்தாள். 'அவனை ஏன்
திட்டுறா புள்ளே?' என்றதற்கு 'அப்படித்தான் திட்டுவேன்' என்றாள். ஓ, இவள்தான்
வில்லா? உனக்கு ஜக்கரியாவே தேவலாம்டி.. உன்னைத்
தெரியாதா? என்னையும் சேர்த்து 'மொத்தமாக' நாலு பேர் இருந்த ஒரு புகைப்படத்தைக்
கொடுத்து ,'இணையத்தில் போடப்போகிறேன்,
தலைப்பு சொல்லு புள்ளே' என்றதற்கு 'மூணு அறிவாளிகள்' என்றவள் நீ. மனைவி மக்களோடு
ஊரில் வாழ்பவர்கள் அறிவாளிகள்.
ரொம்ப கரெக்ட். யாரால் நான் முட்டாள் ஆனேன்?
நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள்
இருக்கின்றனர் என்கிறான் அல்லாஹ். எச்சரிக்கை எண்
: எட்டுலட்சத்து ஒண்ணு, நிச்சயமாக. விரோதிகளை ஏன் படைத்தான் என்று கேட்டு
விரோதியாக வேண்டாம். விரோதிகள் எதற்கு?
சகித்துக்கொள்ளத்தான்.
நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சாய்ந்தேன். ஒன்றும் ஆகவில்லை - அஸ்மாவின் நெஞ்சு.
கவலை வந்தால் அவள் மார்புதான்.
வராவிட்டாலும் அவள் மார்புதான் என்பது சஃபர் குறிப்பு. எங்கே தொட்டாலும் பால்கோவா
போல இனிப்பவள். 'எல்லாம் உங்க
குலாப்ஜானுக்குத்தான்' எனும் அஸ்மா நரை தெரியும் இந்த வயசிலும் பேரழகு. ஐஸ்வர்யா
அழகாக இருந்தால் எப்படி இருப்பாளோ
அப்படி இருக்கிறாள் , இன்னமும். இத்தனை மொபைல் வசதிகள் இருக்கிறதே, மனைவி ,
பிள்ளைகள் பேசும்போது அவர்களின் மணம்
வீசுவது போல ஒன்று கண்டுபிடித்தால் என்னவாம்? அஸ்மாவின் மணம் அன்னாசி, இல்லை,
டொரியான் பழம். டொரியான்பழத்தை
நீங்கள் சாப்பிட்டதில்லையே? வாப்பா கொண்டுவருவார்கள் அப்போதெல்லாம். குடலைப்
புரட்டும் மலநாற்றம் அடிக்கும் முதலில்.
சகித்துகொண்டு சாப்பிட ஆரம்பித்துவிட்டால் சுவையில் சொக்கி விடுவீர்கள் சொக்கி.
பிள்ளைகளுக்கு என்ன மணம்? அவர்களே மணம்தான். இந்த அரபுநாட்டு வாசம் மட்டும்
அடிக்கக்கூடாது. போதும் பட்டது. ஆனால்,
இயலுமா? ஒரே ஒரு முறை வாப்பா என்னை வழியனுப்பி வைத்திருக்கிறார்கள். நாகவூர்
ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வீடு வரை பொங்கிப்பொங்கி அழுதார்களாம். கண்ணெல்லாம் சிவந்து போய்விட்டதாம். உம்மா
சிரித்துக்கொண்டே இதைச் சொல்லும்போதெல்லாம்
என் கண்கள் சிவக்கும். கண்களால் அவ்வளவுதான் செய்ய முடியும்.
இந்த ஜக்கரியா என்னாவான் ? பத்தாவது முடிப்பதற்குள் வந்து 'பைக் மெஸ்ஸஞ்ச'ராகப்
போவானா அல்லது 'ETA'வில் ('எல்லாம் தமிழ்
ஆட்கள்' என்பதன் சுருக்கம்) இன்ஜினியர் ஆவானா? என் மகனும் சபராளிதானா? எங்கே?
பாத்ரூம் வாசலில் பழியெடுக்க வைக்கும்
'பளபளா' துபாயா? அல்லாவே, வேண்டவே வேண்டாம். சவுக்கடி பட்டாலும் சவுதியே பெட்டர்.
அதிகாலை 3 மணியிலிருந்து 8
மணிவரை ஆளுக்கு 15 நிமிடங்கள் - காலைக்கடனுக்காக - தரப்படுகிற ஒருவரின் 'தேறா'
அறையில் ஒரு வேடிக்கை நடந்தது.
நிலைமை புரியாமல், புதிதாக விசிட்விசாவில் வந்த ஒருவருக்கு முதல்நாள் 20 நிமிடம்
கொடுக்கப்பட்டது. அடுத்தநாளும் அதே 20
நிமிடங்களை அவர் எடுத்தவுடன் பெரிய சண்டை. 'இன்னொரு ஆளோட 5 நிமிசத்தை கடன்
வாங்கிதான் நேத்து கொடுத்தோம் -
இண்டர்வ்யூ போறீங்களேண்டு. இன்னமே முடியாது , இடத்த காலி பண்ணுங்க'. எனக்கும்
இதுபோன்ற அனுபவங்கள் ஏராளம் உண்டு.
பார்க்கிறீர்களா என் பின்பக்கத்தை? இப்போதுதான் தப்பித்திருக்கிறேன், இந்த
விஷயத்தில் மட்டும். அலுவலகம் இருப்பது அல்-ரிகா ரோடு
என்றாலும் தங்கியிருப்பது அல்-கூஸ். சோனாபூர் மாதிரிதான் இந்தப் பகுதியும்.
'Oasis' மாதிரி ஓரிரண்டு 'கேம்ப்'கள் இருந்தாலும்
மற்றதெல்லாம் ஆடுமாடுகளுக்கான 'மஜ்பா' (பண்ணை) போன்றது. பல்லாயிரக்கணக்கான
தொழிலாளர்கள் - படுக்கையில் bedpan
வைக்காத குறையுடன் - அடைபட்டுக் கிடக்கும் இடம். நான் தங்கியிருப்பது ,
சாக்கடைகள் கருநிறத்தில் மலத்துடன் வழிந்தோடும் ஏரியா.
எப்போதும் டேங்கர்களின் உறுமல். கழிவு வெளியேற்ற காசு வசூலித்த அரசாங்கம்
கண்மூடியிருப்பதாலும் , காசு வாங்கிக்கொண்டு
டேங்கர்களில் அள்ளும் பட்டான்கள் அதை அல்-அவீர் சென்று வெளியேற்றாமல் நைஸாக -
அபராதத்திற்கு பயப்படாமல் - இங்கேயே
கலந்துவிடுவதாலும் உருவாகும் நரகம். ஐந்து நிமிட மழைக் காலத்திலோ சொல்லவே
வேண்டாம். தாங்க இயலாதவர்கள் துணிந்து
வீதிக்கு வந்து போராடுவதும் அவர்களைக் கொத்தாக 'cancel' செய்து அனுப்புவதும்
நடக்கிறது. இந்த 'அல்-குஸ்'ஸில்தான் எனக்கு
தனியறை - நின்றுகொண்டே தூங்க. கம்பெனி உபயம். இதேபோன்ற நிலையில்தான் பத்துவருடம்
நான் தங்கியிருந்த ராஸ்-அல்-கோர்
பகுதியும் இருந்தது. அங்குள்ள சாக்கடையும் சகதியும் சரியானதும் இங்கே
வந்திருக்கிறேன். ரூமை விட்டு வெளியே வந்து நின்றால்
வெகு தூரத்தில் கண் சிமிட்டும் ஏழு நட்சத்திர 'Burj-al-Arab'. ஏன் இத்தனை
இடைவெளி?
அன்று 'பர்துபாய்' நண்பரின் அறைக்குப் போயிருக்கும்போதுகூட ஒருவன் மூக்கைச்
சுளித்துக்கொண்டு சொன்னான், 'இங்கே யாராச்சும்
அல்-கூஸ் ஆளு வந்திக்கிறாங்களா?'.
என் கதைகள் நாறுவதற்கான காரணத்தை இப்போது தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று
நம்புகிறேன்.
கடவுளே, வழியே பிறக்காதா என் தாய்த் திருநாட்டில்? வயதாகி, ஊரோடு ஒரேயடியாகப்
போகுபவர்களுக்கு அரசாங்கம் உதவித்தொகை
கொடுத்தால் என்ன? மானத்தோடு மரணம் வர மனமிரங்குவானா ஆண்டவன்? பல கேள்விகள்... '
வெறும் ஐநூறு திர்ஹம்
சம்பளத்திற்காக பொசுக்கும் வெயிலில் ரோடு போடுகிற, கட்டிடம் கட்டுகிற ஜீவன்களைக்
காட்டிலும் உன்னை நல்ல நிலையில்தானே
வைத்திருக்கிறேன் , என்னை வணங்கு' என்று கடவுள் சொல்லக்கூடும். தெரியாமல்தான்
கேட்கிறேன், வணங்கிய அவர்களை ஏன் அவர்
கைவிட்டார்? வணங்கு... இப்படி கேட்டுப் பெறுவது பற்றியே பல கேள்விகள் இருக்கின்றன
எனக்கு. 'கேட்காதது கிடைக்காது. கேட்பதும்
முறைப்படி கேட்காவிட்டால் கிடைக்காது' என்பார்கள் ஹஜ்ரத்.
'ஏன் என்ற கேள்வி என்று கேட்காமல் வாழ்க்கை இல்லை'.. ரொம்ப நல்ல பாட்டு. படம் ,
ஆயிரத்தில் ஒருவனா? ஏன் இதைக்
கேட்கிறேன் என்று தெரியவில்லை. பத்தாயிரத்தில் ஒரு சபராளிக்கு குடும்பத்தோடு
வாழும் கொடுப்பினை - ஒரு ·ப்ளாட்டிலிருந்து
இன்னொரு ·ப்ளாட்டுக்கு மாறிமாறிப் போய் ஊர் வதந்திகள் பரப்பும் திருக்கூட்டத்தில்
'சங்கம'மாக. லட்சத்தில் ஒரு சபராளிக்கு மட்டும்
கேள்வி கேட்காத , கேட்காமலேயே அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ணுகிற வாழ்வு. பெருமைக்கு
எருமை மேய்க்கும் மற்றவனெல்லாம்?
செத்தான். வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள் கோடி கோடி கோடி கோடி
எண்ணிறந்த கோடியே.. - சிவவாக்கியார். இவர்
எப்போ Gulfக்கு வந்தார்டி?
நான் கேட்ட , கேள்விப்பட்ட கேள்விகளை வைத்து கோடிப் பக்கங்கள் எழுதலாம். எதற்கு,
எரிக்கவா? நாளாயிற்றே என்று சிறுகதை
எனும் பெரும் வதை தந்தேன், அவ்வளவுதான். ஆமாம், கேள்விகளோடு நிப்பாட்டினால்
போச்சா? தலைக்குப்புற என்னை விழவைத்த
ஒரு பதிலையும் எழுதவேண்டாமா முடிவாக? எல்லாக் கேள்விகளுக்கும் பதில்களும் உண்டு.
என்ன ஒன்று, நமக்கு அது தாமதமாகத்
தெரியும். சமயத்தில், இறந்துபோனபிறகு தெரியலாம். அது எப்படி தெரியும்? என்று
கேட்காதீர்கள். அதுதான் சொன்னேனே...
வேண்டுமானால் நீங்கள் இங்கே வாருங்கள்.
அந்த பதிலால் நான் அடைந்த அதிர்ச்சிக்கு நிகராக 'மூலம்' சம்பவத்தைச் சொல்லலாம்.
என்னுடையது அப்புறம், இது
வேறொருவருடையது. அப்போது நான் 'கராமா'விலுள்ள ஒரு 'வில்லா'வில் தங்கியிருந்தேன்.
பழைய அரபி வீடு. அதிலுள்ள நாலு
அறைகளில் கிட்டத்தட்ட நூறுபேர் தங்கியிருந்தோம். வாடகைக்குப் பிடித்து அதை
நடத்திக்கொண்டிருந்தவரின் ரூமில்தான் நான்
இருந்தேன். 'குரங்காட்டி வீடு' என்றால் எல்லோருக்கும் தன் குடும்பத்தைத் தெரியும்
என்று பெருமையாகச் சொல்வார். இந்தப் பெருமை
எதிலெல்லாம் வருகிறது என்று ஆச்சரியப்பட்டு , பட்டப்பெயரை யாராவது கிண்டல்
செய்தால் 'ஆமா.. ஊர்ல உள்ளவன்லாம் குரங்குங்க.
நாங்கதான் ஆட்டி வைக்கிறோம்' என்பார். எங்களையும் இங்கே ஆட்டிவைத்துக்
கொண்டிருந்தார் - வாடகை விசயத்தில். அதை
விடுவோம், வேலைமுடிந்து களைப்பாக நான் ஒருநாள் ராத்திரி வந்தபோது அறையில் யாரும்
இல்லை, அவரைத் தவிர. சோகமாக
இருந்தார். வயதான குரங்குதான் வந்துவிட்டதே, என்ன சோகம்? 'பட்டக்ஸ்லெ சின்ன கட்டி
மாதிரி இந்திச்சிங்க.. மலையாளி டாக்டர்ட்டெ
போனேன். 'பைல்ஸ்'ண்டு சொல்லிட்டான்..' என்று சொன்னார். தரையில் அமர்ந்த நான்
அசுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டிருக்கும்போதே..
அவர், அந்த குரங்காட்டி.. 'பாருங்க பாய்' என்று சடாரென்று வழித்து...
அமீரகமே இருளில் விழுந்ததில் அதிர்ச்சியடைந்து சுதாரிப்பதற்குள் - நான் ஏதோ
சந்தேகப்படுகிறேன் என்று நினைத்துக்கொண்டு -
அடுத்த நொடியில் வேறொன்றும் செய்தார். என் கையை எடுத்து 'அதில்' வைத்துவிட்டார்.
அடப்பாவி...
இதேபோல அதிர்ச்சியும், அருவருப்பும், பயமும் தந்த பதில். அது கேள்வியா பதிலா?
தெரியவில்லை. கேடு கெட்ட சபரில் அதை
கேட்டுத்தான் ஆகவேண்டும்.
'பாடாவதி சபர்' என்று சொல்வார்கள். ரொம்ப வருடங்களாக ஊருக்கே போகாதவரை அப்படிச்
சொல்வார்கள். பத்திருபது வருடங்கள்
கழித்துப் போனால் ஓர் உலக்கையைப் போட்டு அவரை தாண்டச் சொல்லும் ஊர்களும் உண்டு.
என்னமோ ஒரு சம்பிராதயம்.
உலக்கையால் சாத்தாதவரைக்கும் நல்ல சம்பிரதாயம். உள்ளேபோன பிறகு அடிப்பார்களோ
என்னவோ. திரும்ப இல்லம் வந்து சேர
உதவுவதற்காக , இறைவசனமான 'இன்னல்லதீ ·பர்ள அலைக்கல் குர்ஆன ளராதுக இலா மஆத்'-ஐ ,
வெற்றிலையால் சுவற்றில் எழுதி
(தாளில் எழுதி ஒட்டிவிட்டு, ஒவ்வொருமுறையும் அதை 'டிக்' அடித்துச் செல்லும்
சுறுசுறுப்பான ஆட்களும் உண்டு) விட்டுப் போன
கணவர் , அத்தனை வருடங்கள் கழித்து - அரை மைய்யத்தாக - வந்தால்
அடிக்கவேண்டியதுதான். எதையுமே முழுசா செய்யனும்,
இல்லையா? ஆறு மாதத்திற்கு மேல் மனைவியைப் பிரிவதே ஹராம். இது ஹதீஸ் அல்ல, காமம்
தாங்காமல் படுக்கையை திட்டிப்
பாடிக்கொண்டிருந்த ஒரு பெண்ணைக்கண்டு அதிர்ந்து , இரவில் நகர் உலா சென்ற கலிஃபா
உமர் ரலியல்லாஹ் அவர்கள் ,
வெளிநாட்டிலிருந்த தன் படைகளுக்குப் போட்ட உத்தரவு - ஆயிரத்து முன்னூத்தி சொச்சம்
வருடங்களுக்கு முன்பு. தனது மகளும் ரசூல்
(ஸல்) அவர்களின் மனைவியுமான அன்னை ஹ·ப்ஸா அவர்களிடம் கேட்டபிறகுதான் அந்த ஆறு
மாதக் கணக்கு தெரிந்ததாம் உமருக்கு.
என் அஸ்மாவே சொல்கிறாளே, 'ஆறு மாசத்துக்கு மேல தாங்கலம்மா...' என்று.
'இஸ்லாமிய' நாடுகளுக்கு இதெல்லாம் தெரியாதா? தெரியும். ஆனால் 'தொழில்வளம்' பெருக
வேண்டுமே... அதனால்தான் , துள்ளும்
எங்கள் துபாய் 'இங்கேயே தணித்துக்கொள்வீராக' என்று தெருவுக்கு நாலு 'ஹோட்டல்கள்'
வைத்திருக்கிறது. கோடம்பாக்கம் மஜூதித்தெரு
கிராக்கிகள் ஒரு லட்ச ரூபாய் ஒப்பந்தத்தில் வந்து குத்தாட்டம் போடுவதெல்லாம்
அங்கேதான். கொஞ்சம் மிஞ்சுதையும் குடியோடு அங்கே
கொட்டுகிற, அல்லது அரபி வீடுகளில் வேலைக்கு வந்து சாகும் பல்வேறு ஆசிய இனப்
பெண்களை அப்படியே 'செட்-அப்' செய்து
விழுந்து கிடக்கிற மசுரான்கள் - ஐய்யய்யோ , இப்படிலாம் வெளிப்படையா எலக்கியத்துல
எளுதலாமா? - ஊர் எப்படிப் போகமுடியும்?
உயிரைத்தான் விடமுடியும். இழுத்து மூடப்படும் கம்பெனிகளால் வேலை இழப்பு என்கிற
வெலவெலப்பு வேறு... மனநோயாளிகளாகி,
தற்கொலைகளும் அதிமாகிவிட்டன என்பதால், இந்தியத் தூதரகத்தோடு இணைந்து - ஓர்
இஸ்லாமிய அமைப்பு இங்கே 'கவுன்ஸிலிங்'
மையம் தொடங்கிற்று சென்றமாதம் - 'உண்மை உணர்' என்ற பெயரில். இந்த மாதம்
உண்மையிலேயே எண்ணிக்கை கூடிவிட்டது.
மையங்களைச் சொன்னேன்.
வாழ்பவர்கள் பக்கம் வருகிறேன். பொறுப்பு, கடமைகள் என்று என்று தன்னை
அடக்கிக்கொண்டு பல கனவுகளோடு வாழும் சில
'பாடாவதி'க் கேசுகள் பக்கம்.
30 வருடமாக ஊருக்கே போகாதவர்களில் ஒருவர் அவர். எந்த ஊர்க்காரர் என்பது
முக்கியமல்ல, இங்கே அவர் இருக்கும்போது ஊரில்
அவருக்கு ஏழெட்டு பிள்ளைகள் பிறந்தது முக்கியம். தன்னால் இயலும்போது - குப்பை
பொறுக்கியாவது - மனைவிக்கு பணம்
அனுப்புகிறார் இப்போதும். 'புள்ளைங்க என்ன பாவம் செஞ்சிச்சி தம்பி?' என்று அவர்
கேட்கும்போது அழுகை வந்துவிடும் - அவருக்கும் ,
நமக்கும். பெரும்பாலும் அவரைப் பள்ளிவாசலில்தான் பார்க்கலாம். ·பாத்திஹா ஓதும்
இடங்களிலும் பார்க்கலாம். 'வத்னி மரைக்கார்'
என்று கேலியாக அவரைச் சொல்வார்கள். மண்ணின் மைந்தனான அரபியைத்தான் 'வத்னி' அல்லது
'லோகல்' என்று சொல்வது வழக்கம்.
விசாவெல்லாம் காலாவதியாகி எத்தனையோ வருடங்களாகி , எந்த 'லேபர்' அதிகாரிகளிடமும்
மாட்டாமல், ஷார்ஜா, அல்-ஐன், அபுதாபி
என்று என்று இங்கேயே - இறைவனின் அளப்பரிய கருணையால் - உழன்றுகொண்டு வரும்
இவருக்கும் அந்தப் பெயர். இருக்கட்டும்,
'ஏர்போர்ட்டுலேந்து நே..ரா நை·ப் ரோட்டுக்கு வந்து இறங்குனவன் அத்தனை பேரும்
அவுட்' என்று கிண்டலாக சொல்லப்படும் நை·ப்
ரோட்டில் ('மதறாஸி'கள் கூடும் இடம்) அந்த வத்னி மரைக்காரிடம் ஒருவர் கேட்டார்:
'ஏன் ஊருக்கே போவலெ நீங்க?'. 'ப்ச்.. வுடுங்க
தம்பி'. 'ஏன்?'
'போனாலும் திரும்பிதானே வரனும்?' என்றார் வத்னி மரைக்கார்.
*** *** *** *** *** *** *** *** ***
abedheen@gmail.com
http://abedheen.wordpress.com |
|
|
|
©
காப்புரிமை 2000-2009 Pathivukal.COM. Maintained By:
Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
Press and Media Council Of
Canada .
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|