இலங்கை நிலை: ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஷ விரிக்கும் வலையும் சமாதான முன்னெடுப்புகளும்!

அண்மைக்காலமாக
இலங்கையில் மீண்டும் அதிகளவில் அப்பாவித் தமிழ் மக்கள் நாளாந்தம் அரச ஆயுதப்
படைகளால் படுகொலை செய்யப்பட்டு வருவது அதிகரித்து வருகின்றது. வயது
வேறுபாடின்றிக் குழந்தைகளென்ற ஈவு இரக்கமின்றி தமிழ் மக்கள்மேல் அரசு தன் ஆயுதப்
படைகளின் மூலம் கொடிய அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இலங்கையின்
சமாதானத்தை வலியுறுத்தும் சர்வதேச நாடுகள் பல விடுதலைப் புலிகளால்
மேற்கொள்ளப்படும், அல்லது மேற்கொள்ளப்படுவதாகச் சந்தேகிக்கப்படும்
தாக்குதல்களையிட்டுத் தெரிவிக்கப்படும் கண்டனத்திலுள்ள கடுமையினைத் தமிழ் மக்கள்
மீதான அரச படைகளின் தாக்குதல்கள், படுகொலைகள் விடயத்தில் காட்டுவதில்லை.
இதே சமயம் அண்மையில் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளை நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ள சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கையின் சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா 'உலகம் இன்று சமாதானத்தை தேடி அலைந்து கொண்டிருக்கின்றது. எவரது கண்களுக்கும் சமாதானம் தெரிவதாகக் காணமுடியவில்லை. எங்கு நோக்கினாலும் பயங்கரவாதமும், வன்முறைகளும் மேலோங்கிய வண்ணமே உள்ளன. பயங்கரவாதத்தை, வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென்பதற்காக பல்வேறு உலக நாடுகள் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன. இலங்கை இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதில் அரசாங்கம் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வருகின்றது. சமாதானத்தை எவராலும் தனித்து நின்று எட்டமுடியாது. இன, மத, மொழி, அரசியல் பேதங்களை மறந்து இலங்கையர் என்ற அடிப்படையில் எல்லோரும் ஒன்றுபட்டு முயற்சித்தால் மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும். சமாதான முன்னெடுப்புகளில் ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டைகளை அகற்றுவதற்கு காத்திரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கு புரிந்துணர்வு மிக அவசியமானதாகும். புரிந்துணர்வும் விட்டுக் கொடுப்பும் இல்லாது போனால் ஒரு போதும் சமாதானத் தீர்வைக் கொண்டு வர முடியாது போகும். அதேசமயம், போரின் மூலம் தமது இலக்கை அடைய முடியுமென எவரும் எதிர்பார்க்கக்கூடாது. அது சாத்தியப்படக்கூடியதொன்றல்ல. உலகின் எந்தவொரு நாடும் தமது பிரச்சினைகளுக்கு யுத்தத்தின் மூலம் தீர்வு தேடிக் கொண்டதற்கான வரலாறே கிடையாது. இறுதியில் பேச்சுகள் மூலமே தீர்வுகளை எட்டிக்கொள்ள முடியுமென்பது தான் யதார்த்த பூர்வமானதாகும்' என உரையாற்றியுள்ளதாகத் தினக்குரல் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வளவுதூரம் தத்துவம் பேசும் ஜனாதிபதியும், சுகாதார அமைச்சரும் நினைத்தால் மிக இலகுவாக இலங்கையில் சமாதான முயற்சிகளை ஆரம்பித்து விட முடியாதா? எதற்காக அப்பாவித்தமிழ் மக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட வேண்டும்? இலங்கையின் ஜனாதிபதி சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதி. அவர் நினைத்தால் தன் கையிலுள்ள அதிகாரங்களைப் பாவித்து மிகவும் இலகுவாக சமாதான நகர்வுகளை முன்னெடுக்கலாமே? ஏன் முடியாமலுள்ளது. எதற்காக ஒற்றையாட்சியில் தீர்வு என்று திடீர்க் குத்துக்கரணமடித்து ஒரேயடியாகச் சமாதான நிகழ்வுகளைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும்? விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் அது ஒரு போராட்ட அமைப்பு. இலங்கையின் பெரும்பான்மைச் சிங்கள அரசுகளால் தொடர்ச்சியாகத் தமிழ் மக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்கு, ஒடுக்குமுறைகள் காரணமாக, மாற்றாந்தாய் மனப்பான்மை காரணமாக உருவான நீதியான விடுதலைப் போராட்டமொன்றின் விளைவாக உருவானதோர் விடுதலை அமைப்பு. இன்று தமிழ் அமைப்புகள் பல்வேறு கோணங்களில் சிதறுண்டு நிற்பதற்கு முக்கிய காரணங்களாக ஸ்ரீலங்கா அரசின் பிரித்தாளுந் தந்திரமும், சர்வதேச, பிராந்திய அரசியல் சக்திகளின் தமது நலன்சார்ந்த உளவுத்துறைச் செயற்பாடுகளுமே முக்கியமான காரணங்களாகப் படுகின்றன.
இந்நிலையில்
மகிந்த ராஜபக்சவின் விடுதலைப் புலிகளை நோக்கிய நேரடி அழைப்புக்கு மறைமுகமான
காரணங்களிலொன்று விடுதலைப் புலிகளைச் சர்வதேசரீதியில் பலவீனமடையச் செய்வதாகும்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒருதலைபட்சமான யுத்தநிறுத்த
அறிவிப்பினைத் தொடர்ந்து அன்றைய இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால்
முன்னெடுக்கப்பட்ட அண்மைக்கால சமாதான முன்னெடுப்புக்கள் கிளிநொச்சியினைச் சர்வதேச
அரசியலில், குறிப்பாகத் தெற்காசிய அரசியலில் முக்கியத்துவமானதொரு நகராக உருமாற்றி
விட்டது. இலங்கைக்கு விஜயம் செய்யும் பிறநாட்டு அரசியல்வாதிகள்
அதன்பின்னர் கிளிநொச்சிக்கும் விஜயத்தை மேற்கொள்ளத் தொடங்கி விட்டார்கள். இலங்கை
அரசுக்கு இணையாக விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் கருதத் தொடங்கினார்கள்.
இவற்றால் துவண்ட இன்றைய மகிந்த ராஜபக்ஷவின் அரசு எவ்விதமாவது தற்போது நடைபெறும்
சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் நடைபெறும் சமாதான நகர்வுகளிலிருந்து சர்வதேச
சமூகத்தை மெதுவாகக ஓரங்கட்டி விடவேண்டுமென்று முடிவுசெய்து செயற்படுவதுபோல்
தெரிகிறது. முதற்படியாக விடுதலைப் புலிகளின்மேல் கனடா மற்றும ஐரோப்பிய
ஒன்றியத்தின் தடைகளைக் கொண்டுவருவதில் வெற்றி கண்ட அரசு அதன்பின்னர் தமிழ் மக்கள்
மீதான தனது வன்முறைகளை அதிக அளவில் கட்டவிழ்த்துள்ளது. விடுதலைப் புலிகளின்
உட்கட்சி முரண்பாடுகளையும், சக அமைப்புகளினுடான முரண்பாடுகளையும் மேலும்
கொழுந்துவிட்டுப் பற்றியெரிய வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. விடுதலைப்
புலிகள் மீதான இத்தகையதொரு நிழல்யுத்தம் காரணமாக அவர்களை மீண்டுமொரு
யுத்தத்திற்கு வலிந்து அழைத்து, அவர்களது தாக்குதல்களை அதிகரிக்க வைத்து
இவற்றின்மூலம் சர்வதேச சமூகத்தின் பார்வையிலிருந்து அவர்களை மேலும் ஒதுக்கி வைக்க
முயலலாமென எண்ணி அரசியல் காய்களை நகர்த்தி வருகிறது. இதனோரங்கமாகவே விடுதலைப்
புலிகளை நேரடிப் பேச்சுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைத்திருப்பதை நோக்க
வேண்டும். விடுதலைப் புலிகளை மெதுவாக நேரடிப்பேச்சுவார்த்தை என்ற வலைக்குள் விழ
வைப்பதால் இலங்கை அரசு சர்வதேச சமூகத்தின் நிர்ப்பந்தங்களிலிருந்து விடைபெற்று
தன்னிச்சையாக நடவடிக்கைகளைத் தொடரமுடியும். குறிப்பாக நோர்வேயை அமைதிக்கான
முயற்சிகளிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு இலங்கை அரசு முயல்வதற்குக்
காரணங்களிலொன்று அதனை விடுதலைப் புலிகளின் சார்புநாடாகக் கருதுவதுதான். அடுத்தது
விடுதலைப் புலிகளின் சார்பான சக்தியொன்றுக்கு மேற்குநாடுகளின் அதிக அளவிலான ஆதரவு
இருப்பது தெற்கின் இனவாத சக்திகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவற்றின்
காரணமாக சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் திகழும் நோர்வே போன்றதொரு நாட்டின் ஆதரவுடன்
செயற்படும் சமாதான நகர்வுகளை மெதுவாக இலங்கை அரசுக்கும், விடுதலைப்
புலிகளுக்குமிடையிலானதொரு அரசியல்நகர்வாக மாற்றி அமைத்தால் அதன் பின் அமைதி
முயற்சிகளையிட்டுச் சர்வதேச சமூகத்திற்குத் தற்போதுள்ளதுபோல் பதில்சொல்ல வேண்டிய
தேவையிருக்காது. தற்போதுள்ள நிலையில் பேச்சுவார்த்தைகள் சீர்குலைந்து மிகப்பெரிய
அளவிலான மோதலொன்று வெடித்து, பொதுமக்களின் அழிவும் அதிகரிக்குமானால் ஐக்கிய
நாடுகளின் அமைதிப்படை இலங்கையில் நுழைவதற்குரிய சாத்தியமுண்டு. அவ்விதமொரு
நிலையேற்பட்டால் அதன்பின் நாடு பிளவுபடுவது தவிர்க்க முடியாமல் போய்விடும். அதே
சமயம் நோர்வேயை அப்புறப்படுத்தி, மேற்குநாடுகளால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்ட
ஐரிஸ் புரட்சிகர இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நடத்துவதால் (நேரடியாக
பேச்சுவார்த்தையை நடத்த முடியாமல் போகும் பட்சத்தில்) நோர்வேயின்
மத்தியஸ்த்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை IRAயின் மத்தியஸ்த்துக்குக்
கொடுக்கப்போவதில்லயென இலங்கை அரசு கணக்குப் போடுகிறது.
ஆனால்
விடுதலைப் புலிகள் இதனை உணர்ந்திருப்பதைப் போல்தான் தெரிகிறது. "ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவின் சொல்லுக்கும் செயலுக்கும் நிறையவே இடைவெளி தெரிகின்றது. எமது
தாயகத்தில் எமது மக்கள் மீது மிகக்கொடிய வன்முறைகளைப் புரிந்து கொண்டு அரச
பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுக்கொண்டு மறுபுறத்தால் நேரடிப் பேச்சுக்கு
வருமாறு எங்களை அழைக்கிறார். சமாதான அனுசரணையாளர்களோடு இணைந்து நல்லதொரு
முடிவை எட்டக்கூடிய அரிய வாய்ப்பு இருக்கின்றபோதிலும் கூட அதனை உதாசீனப்படுத்தி
விட்டு நேரடியாகப் பேசவருமாறு ஜனாதிபதி எங்களுக்கு அழைப்பு விடுப்பதை போலித்தனமான
ஒரு அறிவிப்பாகவே நாங்கள் பார்க்கிறோம்.'' என இந்தியாவின் என்.டி.வி.
நிறுவனத்துக்கு அளித்த செவ்வி ஒன்றில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்
பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கருத்துத் தெரிவித்திருப்பதும், மீண்டும்
இந்தியாவின் ஆதரவினைத் தீவிரமாக விடுதலைப் புலிகள் வேண்டி நிற்பதும் இதனைத் தான்
புலப்படுத்துகின்றது. இதற்கு ஓரளவு பலனும் கிடைத்திருப்பதைத்தான் அண்மைய
இந்தியாவின் அரசியல் நகர்வுகள் காட்டி நிற்கின்றன். தமிழ் மக்கள் மீதான
படுகொலைகளை இலங்கை இராணுவம் நிறுத்த வேண்டுமெனவும், இலங்கையின் சிறுபான்மைச்
சமூகத்தினரின் பிரச்சினைகளுக்கு சுயாட்சி கொடுக்கும்வகையில் திட்டங்களை
வேகப்படுத்த வேண்டுமெனவும் அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கையின்
மங்கள சமரவீராவுக்கு மன்மோகன்சிங் தலைமையிலான இந்திய அரசு உறுதியாகக்
கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே சமயம் அண்மையில் நெய்வேலி
நிலக்கரி நிறுவனப் பங்குகள் தனியார் மயப்படுத்தல் விடயத்தில் காட்டிய எதிர்ப்பினை
தமிழக முதல்வர் திரு.மு.கருணாநிதி இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் அமைதிக்கான
முயற்சிகளை முன்னெடுப்பதற்கும் காட்டினால் எதிர்காலத்தில் மேலும் பல அரசியல்
நகர்வுகளை உறுதியற்ற இந்திய மத்திய அரசு மேற்கொள்ளலாம்.
- நந்திவர்மன் -