பயனுள்ள மீள்பிரசுரம்:
காமிக்ஸ்பூக்கள் வலைப்பதிவு
பூந்தளிர் - மறக்க இயலாத சிறுவர் இதழ்!
- அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் -
தமிழக
சிறுவர் இலக்கிய உலகில் தனக்கென தனியிடத்தை பிடித்த இதழ்
பூந்தளிர்! இதுவரை இதன் இடத்தை நிரப்ப ஒரு இதழ் கூட தமிழில்
வரவில்லை. நம்மில் பெரும்பாலோனோருக்கு காமிக்ஸ் வடிவம் என்பது
அறிமுகமானதே பூந்தளிர் இதழால்தான் என்பது என் கருத்து! எழுத்துக்
கதைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்த அக்கால சிறுவர்
இதழ்களிடையே படக்கதைகளுக்கு மூன்றில் ஒரு பங்கு பக்கங்களை ஒதுக்கி
ஏறக்குறைய ஒரு காமிக்ஸ் போலவே வெளி வந்த ஒரு அறிவுப் பெட்டகம்தான்
பூந்தளிர்.
பூந்தளிர் முகிழ்ந்த வரலாறு
கேரளாவில் பூம்பட்டா (Poompatta-வண்ணத்துப்பூச்சி) என்ற சிறுவர்
இதழை வெற்றிகரமாக நடத்தி வந்த பைகோ (PAICO) நிறுவனம் சிறுவர்
இதழ்களின் பொற்காலமான 1984ம் வருடம் அக்டோபர் முதல் தேதியன்று
'குழந்தைகளுக்கான புதுமைப் பத்திரிக்கை' என்ற ஸ்லோகத்துடன்
பூந்தளிரை மாதம் இருமுறை இதழாக தொடங்கியது. அப்போது ரத்னபாலா,
பாலமித்ரா, அம்புலிமாமா, கோகுலம், பாப்பா மஞ்சரி போன்ற சிறுவர்
இதழ்கள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் இதே காலக்கட்டத்தில்
கேரளாவில் 9 சிறுவர் இதழ்கள் பூந்தளிரை போன்ற உள்ளடக்கத்துடன்
வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 1987ஐ போலவே 1984ம்
வருடமும் தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் தவர்க்க இயலாத ஒரு வருடம்
ஆகும். ஏனெனில் இந்த வருடத்தில் தான் ராணிக்காமிக்ஸ் அழகியைத் தேடி
தனது பயணத்தை தொடர்ந்தது, லயன் காமிக்ஸ் சிங்க நடை போட்டு
சிகரத்தில் ஏறியதும் இந்த ஆண்டுதான். மேத்தா காமிக்ஸ்
வெளிவரத்தொடங்கிய ஆண்டும் 1984தான்.
ரூ. 2/- விலையில் 260, கோல்டன் டவர்ஸ், ராயப்பேட்டை ரோடு , சென்னை
14 என்ற முகவரியில் இருந்து வெளிவந்தது பூந்தளிர். அப்போது 20, 25
பைசாக்கள் தான் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட
பாக்கெட் மணி என்பதை இங்கு நினைவில் கொள்ளவும்.
பைகோ
நிறுவனத்தின் தினேஷ் வி.பை பூந்தளிரின் (கௌரவ) ஆசிரியராக
இருந்தார். துணை ஆசிரியராக நமது வாண்டுமாமாதான் நியமிக்கப்பட்டார்.
சிறுவர் இலக்கியம் என்றால் பாடல்கள், விடுகதைகள், சிறுகதைகள் என்ற
நிலையை மாற்றி சித்திரங்களின் மூலம் கதை சொல்வதே குழந்தைகளை
எளிதில் கவரும் என்பதை பூந்தளிரின் மூலம் நிரூபித்து காட்டினார்
வாண்டுமாமா. பூந்தளிர் வெறும் கதைகளை மட்டும் வெளியிடும் பொழுது
போக்கு இதழாக அல்லாமல் ஒரு அறிவூட்டும் இதழாக (Edutainment)
வாண்டுமாமாவின் கைவண்ணத்தில் வெளிவந்தது.
பூந்தளிர் வெளிவந்த காலக்கட்டத்தில் சிறுவர் இதழ்களில் படக்கதைகள்
(Comics) வெளிவந்தாலும் அவை சிற்சில பக்களுக்கு தான் வெளிவரும்.
ஏனெனில் தமிழகத்தில் காமிக்ஸ்களை உருவாக்கும் திறன் கொண்ட
ஓவியர்கள் மிகச்சிலரே இருந்தனர். நான் அறிந்த வரையில் செல்லம்,
வினு (கோகுலம்) , சுப்பு (ரத்னபாலா), ஜெயராஜ் (ரேகா காமிக்ஸ்),
ரமணி (கோகுலம்), தாமரை (தினமணிக் கதிர், ரத்னபாலா), ஷங்கர்
(அம்புலிமாமா, இராமகிருண விஜயம்), ஸ்ரீகாந்த் (பொன்னிக் காமிக்ஸ்)
போன்ற தமிழக ஓவியர்கள் காமிக்ஸ் துறையில் பங்களிப்பு
செய்திருக்கின்றனர். இவர்களுள் ஓவியர் செல்லம் அவர்களின்
படைப்புகள் தமிழ் காமிக்ஸ் உலகில் எல்லோரின் கவனத்தை பெரிதும்
கவர்ந்தவை ஆகும்.
வாண்டுமாமா அடிப்படையில் ஓர் ஓவியர், இதழ் வடிவமைப்பாளர் , சிறுவர்
இலக்கியங்களைப் படைப்பதில் சாதனைப் படைத்தவர், அயல்நாட்டு
இலக்கியங்களை தமிழ் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்
என்பதில் தீராத ஆர்வம் கொண்டவர், சிறுவர் இலக்கிய உலகில் புது புது
உத்திகளை புகுத்துவதில் மன்னர். சிறுவர் இலக்கியத்தில் அவர் தொடாத
துறைகளே இல்லை எனலாம். இவ்வளவு தகுதிகளை கொண்ட வாண்டுமாமாவுக்கு
பைகோ நிறுவனம் மிகுந்த சுதந்திரத்தையும், பூந்தளிரை ஒரு முன்மாதிரி
சிறுவர் இதழாக கொண்டுவர வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தது.
இந்திய காமிக்ஸ் உலகின் பிதாமகன் ஆனந்த்பை -ஆல் (Anand Pai)
உருவாக்கப்பட்ட அமர்சித்திரக்கதா (Amar Chitra Katha), டிங்கிள்
(TINKLE) ஆகியவற்றின் வெளியீட்டாளர்களான இந்தியா புக் கௌஸ் (India
Book House) உடன் வியாபார ஒப்பந்த செய்திருந்தது பைகோ நிறுவனம்.
எனவே டிங்களில் வெளிவந்த காமிக்ஸ் படைப்புகள் வாண்டுமாமா வின்
சுவையான மொழிப்பெயர்ப்புடன் பூந்தளிரில் வெளியாயின.
டிங்கிள் பத்திரிக்கையில் அயல்நாட்டு காமிக்ஸ்களுடன் போட்டி போடும்
வகையில் எண்ணற்ற காமிக்ஸ் கதாப்பாத்திரங்கள், கதைகள்
உருவாக்கப்பட்டன. மிகவும் திறமைவாய்ந்த நிறைய ஓவியர்களுக்கு
டிங்கிளில் வாய்ப்பளிக்கப்பட்டது. அவர்களுள் காக்கை காளியை
உருவாக்கிய பிரதீப் சாத் (Pradeep Sathe), சுப்பாண்டியை உருவாக்கிய
வி. பி. ஹால்ப், (V.B. HALBE), ஹோட்ஜாவுக்கு உயிர் கொடுத்த ராம்
வாயிர்கர் (RAM WAEERKAR), மற்றும் மகாரா (MAKARA), திலிப் கடம்
(DILIP KADAM). நான்ரே (M.N.NANGRE) போன்றோர் முக்கியமானவர்கள்.
டிசம்ர் 1980ல் 28 பக்கங்களுடன் ரூ. 2.50 விலையில் மாத இதழாக முழு
வண்ணத்தில் வெளிவந்தது டிங்கிள். இரண்டு வருடங்களுக்கு பின் மாதம்
இருமுறை ஆனது (Jan 1983). கிட்டத்தட்ட 67 டிங்கிள் இதழ்கள்
பூந்தளிர் வெளிவருவதற்கு முன்னரே வெளிவந்து விட்டன. இதனால்
காமிக்ஸ் கதைகளுக்கு வற்றாத நீரூற்றாக டிங்கிளை பூந்தளிர்
பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.
லூயிஸ் எம். ஃபெர்னான்டெஸ் (Luis M. Fernandes -script writer),
பிரதீப் சாத் (Illstrator) கூட்டணியின் காக்கை காளியும், ஆனந்த்
பை, மோகன்தாஸ் கூட்டணியின் கபீஷும்தான் பூந்தளிரின் ஆரம்பகால
இதழ்களில் வெளிவந்த முக்கியமான காமிக்ஸ் பாத்திரங்கள்.
பூந்தளிர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கபீஷ். தன் மந்திர
வாலின் வாலின் உதவியால் எதிரிகளிடம் இருந்து வன விலங்குகளை
காக்கும் கபீஷ் கதைகள் ரங் ரேகா என்ற நிறுவனத்திடம் இருந்து
பெறப்பட்டு வெளியிடப்பட்டன. ஆரம்ப கால டிங்கிள் இதழ்களில் கூட
கபீஷ் கதைகள் வெளிவரவில்லை குறிப்பிடத்தக்கது. இக்கதைகளில் கபிஷ்
நண்பர்களாக கரடி பபூச்சா, மான் பிந்து, கழுகு பஞ்சா, முயல் முத்து,
அதன் அத்தை காரணி, யானை பந்திலா, வில்லன்களாக நரி சிகால், மந்த
புத்தியுடைய புலி பீலு, வேட்டைக்காரன் தோப்பையா ஆகியோர் வருவர்.
காக்கை காளி என்ற காமிக்ஸ் பாத்திரம் பூந்தளிர் வாசகர்களால் மறக்க
இயலாத ஒன்று. இக்கதைகளில் வரும் அப்பாவி முதலை துப் துப் அதனுடைய
வில்ல நண்பன் நரி சமந்தகன் ஆகியோரின் சதிகளை காளி முறியடிப்பதுதான்
கதை. பெரும்பாலான சமயங்களில் முதலை துப் துப்பின் முட்டாள் தனத்தை
(அல்லது அப்பாவி தனத்தை)பயன்படுத்தியே காளி சமந்தகனின் திட்டங்களை
முறியடிக்கும்.
முதல் வருட இதழ்களில் சுப்பாண்டி, தந்திகார மந்திரி, வேட்டைக்கார
வேம்பு போன்ற காமிக்ஸ் பாத்திரங்கள் வெளிவரவில்லை. ஏனெனில் மூல
இதழான டிங்கிளில் கூட அவை அப்போது உருவாக்கப்படவில்லை. ஹாட்ஜா தனி
கதாபாத்திரமாக அறிமுகப்படுத்தப்படவில்லை.
விலங்குகள், பறவைகள் பற்றி காமிக்ஸ் வடிவில் விளக்கும் அஸ்வின்,
பிரதீப் சாத் கூட்டணியின் இரண்டு காமிக்ஸ் ஸ்டிரிப்புகள், (உ.தா:
புலியைச் சந்தியுங்கள், கரடியை சந்தியுங்கள்), லூயிஸ் எம்.
ஃபெர்னான்டெஸ், ஆனந்த் மாண்ட் கூட்டணியின் அறிவியல் உண்மைகளை
விளக்கும் காமிக்ஸ் ஸ்ட்ரிப்புகள் இவற்றுடன் காமிக்ஸ் வடிவ
நாட்டுப்புறக் கதைகளும் டிங்கிளில் இருந்து மொழிமாற்றம்
செய்யப்பட்டு பூந்தளிரில் வெளியிடப்பட்டன.
இந்தியா புக் கௌஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட 'DOG DETECTIVE
RANJA' என்ற காமிக்ஸ் கதைகள் Partp Sharma, Luis M. Fernandes,
Pradeep Sathe கூட்டணியால் உருவாக்கப்பட்டு டிசம்பர் 1983லிலேயே
டிங்கிளில் வெளிவரத்தொடங்கின. இக்கதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டு
துப்பறியும் ரஞ்சன் என்ற பெயரில் பூந்தளிரில் வெளியிடப்பட்டன.
டிங்கிளில் காமிக்ஸின் கதை எழுதியவர், ஸ்கிரிப்ட் எழுதியவர்,
ஓவியர் இவர்களின் பெயர்களை வெளியிடுவார்கள். பூந்தளிரிர் அவை
தவிர்க்கப்பட்டிருக்கும். விதிவிலக்காக கபீஷ் கதைகளில் மட்டும்
உருவாக்கியவர்களின் பெயர்கள் இடம்பெற்றன.
அச்சும், வடிவமைப்பும்
பூந்தளிர் தொடக்கம் முதல் இறுதி வரை ஒரே அளவில்தான் அதாவது
ஒன்றுக்கு எட்டு (1x8) என்று சொல்லப்படும் 140 செ.மீ. x 200 செ.மீ
அளவில் இரண்டு வண்ணங்களில் வெளியிடப்பட்டது. எழுத்துருக்களின்
வண்ணம் கருப்பாகவும் பின்னனி வண்ணம் காவி, பச்சை, சிவப்பு என மாறி
மாறியும் அச்சிடப்பட்டன. இந்த இருவண்ண முறை நமது லயன் குழும
இதழ்களிலும், இரத்னபாலா இதழிலும் பின்பற்றப்பட்டது.
முதல் சில ஆண்டுகள் பூந்தளிர் ஒவ்வொரு எழுத்தாக கோர்த்து அச்சிடும்
முறையான டிடில் பிரஸ் முறையில்தான் அச்சிடப்பட்டிருக்கவேண்டும்.
ஏனெனில் அச்சில் இப்போதுள்ள (ஆப்செட் முறை) நேர்த்தி இருக்காது.
ஆசிரியர் குழு சென்னையில் இருந்தாலும் கொச்சியில் உள்ள பைகோ
அச்சகத்தில் தான் பூந்தளிர் அச்சிடப்பட்டது.
வாண்டுமாமா இயற்கையாகவே நல்ல ஓவியராகவும், வடிவமைப்பில் ஆர்வம்
கொண்டவராகவும் இருந்தார். மேலும் அவருக்கு கிடைத்த ஓவியர்கள் குழு
திறமைசாலிகளாக இருந்ததால் வடிவமைப்பில் பூந்தளிர் சமகால இதழ்களை
விட நேர்த்தியாக இருந்தது.
போட்டிகள்
பூந்தளிரில் 'பூந்தளிர் அறிவுப் புதிர் போட்டி' என்ற பெயரில்
குறுக்கெழுத்துப் போட்டி தொடர்ந்து வெளிவந்தது. சரியாக எழுதிய
மூன்று நபர்களுக்கு ரூ. 50 பகிர்ந்து வழங்கப்பட்டது. இதை தவிர
ஒட்டுப் படப்போட்டி, கதையின் முடிவை ஊகிக்கும் போட்டி என வகை
வகையான போட்டிகள் பூந்தளிர் நடத்தப்பட்டன.
அயல்நாட்டுப் படைப்புகள்
'எட்டுத் திக்கும் உள்ள இலக்கியங்களை இங்கு கொண்டு வந்து
சேர்ப்போம்' என்ற பாரதியின் கூற்றை தமிழ் சிறுவர் இலக்கிய உலகில்
மெய்யாக்கியவர் வாண்டுமாமா. நமது நாட்டை போலவே கிரேக்கமும் எண்ணற்ற
புராணக்கதைகளை கொண்டது. பூந்தளிரின் முதல் 21 இதழ்களில் தொடராக
வெளிவந்த கிரேக்க புராணக் கதைகளின் மொழிப்பெயர்பும், வரையப்ட்ட
சித்திரங்களும் படிப்பவரை மெய்மறக்கசெய்யும். இத்தொடருக்கு
வரையப்பட்ட சித்திரங்கள் ஓவியர் செல்லத்தின் பாணியை ஒத்திருப்பதை
காண்க.
வாசகர் கடிதங்கள்
ஆரம்பக் கால இதழ்களில் வாசகர் கடிதங்கள் இடம் பெற்றாலும் பின்பு
அவை மறக்கப்பட்டன. எழுத்தாளர் பூவண்ணன், அரவக்குறிச்சிப்பட்டி
எம்.அசோக்ராஜா, திருச்சி ராஜி ராதா போன்ற வெகுஜன
பத்திரிக்கைகளிலும் எழுதிப் புகழ்பெற்றவர்கள் கூட பூந்தளிரில்
வாசகர் கடிதங்கள் எழுதியுள்ளனர்.
கேரள மாநில நாட்டுப் புறக்கதைகள்
டிங்கிளின் ஆங்கிலப்பதிப்பில் இருந்து எப்படி காமிக்ஸ்
ஸ்டிரிப்புகள் பெறப்பட்டதோ அதே வழியில் பூந்தளிரின் அண்ணனான
பூம்பட்டாவிடம் இருந்து மலையாள நாட்டுப்புறக்கதைகள் பெறப்பட்டு
பூந்தளிரில் வெளியிடப்பட்டன. இவற்றில் பெரும்பான்மையான கதைகளுக்கு
சந்திரா என்பவர் ஓவியங்களை வரைந்திருப்பார்.
எளிய வழியில் ஆத்திசூடி, நன்னெறி
சிறுவயதில் பள்ளியில் ஔவையின் ஆத்திசூடி, நன்னெறி பாடல்களை
வாத்தியார் சொல்ல படித்திருக்கிறோம். ஆனாலும் அதில் ஒரு இயந்திரத்
தனம் இருக்கும். பாடலை முதலில் சொல்லி விட்டு பிறகு கருத்தை
சொல்வார்கள். கருத்து மனதில் ஒட்டாது. (பாடலும் ஒட்டாது என்பது
வேறு விஷயம்).
ஆனால் பூந்தளிரில் வாண்டுமாமா கதை சொல்வது போல பாடலின் கருத்தை
முதலில் தனது தேன் சொட்டும் வார்த்தைகளால் சொல்லி விட்டு பிறகு
பாடலை சொல்வார். பாடலில் உள்ள கடின வார்த்தைக்கு எளிய பொருளையும்
சொல்வார். அதிலும் குறிப்பாக ஓவியர் செல்லத்தின் சித்திரங்கள்
வாண்டுமாவின் கருத்தை பசு மரத்து ஆணி போல மனதில் பதிக்கும்.
சிறுகதைகள்
தொடக்கக் கால பூந்தளிர் இதழ்களில் கேரள நாட்டு எழுத்தாளர்கள்
படைத்த சிறுகதைகள் இதழுக்கு மூன்று நான்கு என்ற அளவில் வெளிவந்தன.
மெல்ல மெல்ல தமிழ் நாட்டுக் கதைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
அறிவியல் மற்றும் பொதுக் கட்டுரைகள்
கதைகள் மட்டுமன்றி அறிவியல் உண்மைகள், உலக நடப்புகள், வரலாற்று
நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் சிறுவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
என விரும்பினார். இதனால் பூந்தளிரில் நிறைய அறிவியல்
கட்டுரைகளுக்கு இடம் அளிக்கப்பட்டது. பதினோராவது இதழில் இருந்து
வெளிவந்த இந்த நாளில் அன்று நடந்து என்ற தொடர் வரலாற்று நிகழ்வுகளை
உரிய புகைப்படங்களுடன் வெளியிட்டது. எனக்கு தெரிந்து மிக மோசமாக
வடிவமைக்கப்பட்ட பூந்தளிர் பக்கங்கள் இவைகள்தான்.
விளம்பரங்களை பற்றிய ஒரு கட்டுரையில் செல்லத்தின் சித்திரங்கள்
கட்டுரையை படிக்காமலே கட்டுரை என்ன சொல்ல வருகிறது என்பதை
விளக்கும் பாங்கை கீழே காணுங்கள்.
ஓவியர்கள்
முதல் ஆண்டு முழுக்க பூந்தளிரில் ஆதிக்கம் செலுத்திய ஓவியர்கள்
நமது செல்லம், உமாபதி, ராமு, சுதர்ஸன், விசு, உதய், பவித்ரா
போன்றவர்கள். ஓவியர் கல்பனா ஆத்திச்சூடிக்கும், பாடல்களுக்கும்
முதல் சில இதழ்களுக்கு மட்டுமே வரைந்திருப்பார் பின் அந்த பணியை
செல்லம் தொடர்ந்தார்.
செல்லத்தை பொருத்தவரை முதலில் துணுக்குகள், சிரிப்புகளுக்கு
மட்டுமே சித்திரங்களை வரைந்தார். பின்பு தொடர்கதைகள், சிறுகதைகள்,
பாடல்களுக்கு வரையும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதழுக்கு இதழ்
செல்லத்தின் கைவண்ணம் பூந்தளிரில் அதிகரித்துக்கொண்டே வந்தன.
ஓவியர் உமாபதி (அவரது பெயர் குறிந்து சற்றே சந்தேகம் உண்டு.
ஏனெனில் அவரது கையெழுத்தை ஜமாபதி என்று கூட படிக்கலாம்). நீண்ட
காலம் பூந்தளிர் படைப்புகளுக்கு உயிரூட்டிய இவர் தொடக்கக்
காலத்தில் வந்த வாண்டுமாமாவின் புலிக்குகைத் தொடருக்கு சித்திரம்
தீட்டினார்.
ஓவியர் ராமு அக்காலக் கட்டத்தில் வெகுஜன இதழ்களில்(குறிப்பாக
தினமணிக்கதிர்) புகழ்ப்பெற்று விளங்கினாலும் பூந்தளிரிலும்
சிறுகதைகளுக்கும் பாடல்களுக்கும் சித்திரங்களை தீட்டித் தந்தார்.
எழுத்தாளர்கள்
கெளசிகன், மூர்த்தி ஆகிய பெயர்களிலும் தொடர்கள், மொழி மாற்றுக்
கதைகள், அயல்நாட்டு இலக்கியங்கள், அறிவியல், வரலாற்றுக் கட்டுரைகள்
போன்றவற்றை வாண்டுமாமா படைத்து வந்தார். இவருடன் பி.வி. கிரி, கே.
இராதாகிருஷ்ணன், பாபநாசம் குறள் பித்தன், கே. விஸ்வநாதன், சிற்பி
சோமு, வித்வான் வி. துரைசாமி, தமிழ்முடி, டாக்டர் என். ஸ்ரீதரன்,
திசை முத்து, பூவண்ணன், வண்ணை கணேசன், போன்ற எழுத்தளார்கள் கதைகள்,
கட்டுரைகளை எழுதியுள்ளனர்.
கவிஞர்கள்
இதழுக்கு இரண்டு சிறுவர் பாடல்கள் பூந்தளிரில் வெளிவந்தன. (நான்
ஒரு பாடலை கூட படித்ததில்லை.) திருச்சி வாசுதேவன், தளவை
இளங்குமரன், புலேந்திரன், வானம்பாடி, ஆர்.பி. சாரதி, தமிழ்முடி,
இமயபாரதி, அழகனார், ரவி வர்மா, சித்திரப்பிரியா, அழகு பழனிச்சாமி,
கா.பி. தங்கவேலன், குன்றக்குடியான் போன்ற கவிஞர்களின் படைப்புகள்
பூந்தளிரில் தொடர்ந்து வெளிவந்தன.
புதிய முயற்சிகள்!
'அதிர்ஷ்டக் குழந்தைகள்' என்ற தலைப்பில் சிறந்த குழந்தைகளின்
புகைப்படங்களை பரிசுகளுடன் (ரூ. 30, 20, 15) வெளியிடப்பட்டன.
கவிதைகள், பாடல்கள், சிறுகதைகள், ஓவியங்கள், விடுகதைகள் போன்ற
சிறுவர்களின் படைப்புகள் 'உங்கள் பக்கம்' என்ற தலைப்பில்
வெளியிட்டன. வாசகர்களின் அறிவு பூர்வமான கேள்விகளுக்கு 'நீங்கள்
கேட்டவை' என்ற தலைப்பின் கீழ் பதில்கள் வெளியாயின. அவற்றில் சில
கேள்விகள் மீண்டும் மீண்டும் அச்சேறியதையும் காணமுடிகிறது.
பள்ளி மாணவர்களுக்கு சித்திரம் தீட்டும் போட்டிகள் பள்ளிகளில்
நடத்தப்பெற்றன. தமிழத்தின் எல்லா பகுதிகளிலும் இப்போட்டி
நடத்தப்படும் என்று அறிவித்திருந்தாலும் சென்னையில் மட்டுமே
நடத்தப்பட்டது.
ஆனால் மேற்கண்ட முயற்சிகள் ஒரு சில இதழ்களுடன் முடிந்து போனது ஏன்
என்று புரியவில்லை.
நடப்புச் செய்திகள்
ஆரம்பகால பூந்தளிர் இதழ்களில் பள்ளிகளில் நடந்த விழாக்கள், சிறுவர்
சிறுமியர்களின் சாதனைகள், விழாக்களைப் பற்றிய நடப்புச் செய்திகள்
(Current News) வெளியிடப்பட்டன. இதுவும் காலப்போக்கில் குறைந்துக்
கொண்டே வந்து விட்டன.
பரிசுகள்
தற்காலத்தில் புத்தகங்களுக்கு ஒட்டும் லேபிள்கள், டைம் டேபிள்கள்
போன்றவை எளிதில் மாணவர்களுக்கு கிடைக்கின்றன. ஆனால் 80களில் வண்ண
லேபிள்கள் என்பது பட்டிணத்தோடு தொடர்புடைய சில பணக்கார
மாணவர்களுக்கு மட்டுமே கிட்டக்கூடியவை. அத்தகையை சூழ்நிலையில்
பூந்தளிர் பரிசாக அளித்த லேபிள்கள் வாசகர்கள் மத்தியில் எவ்வளவு
வரவேற்பை பெற்றிருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு
விடுகிறேன். இந்த அறிவிப்புக்கு இரண்டு முழுப் பக்கங்களை
ஒதுக்கப்பட்டிருப்பதையும கவனிக்கவும்.
காலத்திற்கு ஏற்றார் போல பூந்தளிர் தனது வாசகர்களுக்கு அளித்த
மேலும் சில சுவாராஸ்மான பரிசுகள் கீழே.
பெரியவர்களாலும் படிக்கப்பட்ட பூந்தளிர்!
பூந்தளிரை எனக்கு அறிமுகப்படுத்தியது எனது அப்பாதான். அப்பாவும்
பெரியப்பாவும் பூந்தளிர் படிப்பார்கள். எனது அப்பா, சித்தப்பா,
பெரியப்பா ஆகியோர் திருச்சிக்கு அடிக்கடி செல்வார்கள். அவர்கள்
மூலமாக பூந்தளிரை 1986ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வாங்கினேன். சில
சமயங்களில் பக்கத்து ஊரான மண்ணச்சநல்லுருக்கு செல்லும் வாய்ப்பு
கிடைத்தபோது நானே பூந்தளிரை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். அந்த
மகிழ்ச்சிக்கு இணை ஏது?
துரைராஜ் என்ற எனது ஆசிரியர் பள்ளிப்பருவத்தில் என்னுடன் பூந்தளிர்
படிப்பார். அவருக்காகவே பூந்தளிரை பள்ளிக்கு எடுத்துச் செல்வேன்.
அறிவுப் புதிர் போட்டியில் என்னால் நிரப்ப இயலாதக் கட்டங்களை
அவர்தான் நிரப்பித் தருவார். எல்லா கட்டங்களையும் நிரப்பி
விட்டாலும் கூட சில சமயங்களில் மட்டுமே பூந்தளிருக்கு அவற்றை
அனுப்பி வைப்பேன். ஒரு முறை கூட பரிசு வாங்கியதில்லை. ஆனாலும்
இங்கு பெற்ற அறிவினால் இந்தியா டுடே, வாரமலர் இதழ்களில் தலா இரண்டு
முறை பரிசுகள் பெற்றிருக்கிறேன்.
சுருங்க சொல்ல வேண்டுமானால் மாணவப் பருவத்தில் உள்ள சிறுவர்களுக்கு
என்னென்ன தேவையோ அவற்றை எளியை நடையில் சித்திரங்களுக்கு
முக்கியத்துவம் கொடுத்து அளித்தது. எனவே தான் பூந்தளிர் படிப்பதை
பெரியவர்கள் ஊக்குவித்ததோடு அவர்கள் படிக்கவும் செய்தார்கள்.
சிரிப்பு மற்றும் செய்தித் துணுக்குகள்
பூந்தளிரில் இடம் நிரப்பிகளாக (Fillers) சுவராஷ்யமான செய்திகளும்,
சிரிப்புகளும் வெளியிடப்பட்டன. கீழேயுள்ள ஸ்கேனில் முதல் துணுக்கு
உங்களுக்கு ஆர்வமூட்டும் என்று நினைக்கிறேன். சிரிப்புகளில் விசு,
உதய் இவர்களின் ஓவியப் பாணி ஒரே மாதிரியாக இருப்பதை கவனிக்கவும்.
மேலும் பொதுஅறிவை வளர்க்கும் செய்திகள் முழு பக்கத்திலும்
வெளியிடப்பட்டன. செல்லத்தின் சித்திரங்கள் படிக்கும செய்திகளுக்கு
மேலும் சுவையூட்டுவதாக அமைந்திருந்தன. பூனையிடம் இருந்து
தப்பிக்கும் எலி என்ற வசனமற்ற காமிக்ஸ் பூந்தளிரின் ஒவ்வொரு
இதழிலம் இடம்பெற்றன.
தொடர்கள்
யானைகளை மையமாகக் கொண்ட கதைகள்
மற்றும் யானைகளை பற்றிய துணுக்குகளுடன் வெளிவந்த 'யானைக்கதைகள்',
கிரேக்கப் புராணக்தைகள் ஆகியத் தொடர்கள் வாண்டுமாமாவால்
எழுதப்பட்டன. கே. இராதகிருஷ்ணன் 'வீரன் விஜயவர்மன்' என்ற
தொடர்கதையை எழுதினார். பூந்தளிரின் 13ம் இதழில் இருந்து வெளியான
வாண்டுமாமாவின் 'புலிக்குகை' ஒரு புகழ்ப்பெற்ற தொடர்கதையாகும்.
விளம்பரங்கள்
முதலாண்டுப் பூந்தளிரில் முழுக்க முழுக்க பைகோ நிறுவனத்தின்
விளம்பரங்கள் மட்டுமே வெளியாயின. ஒரே ஒரு முறை சந்தனுவின்
ஓவியப்பயிற்சி பற்றிய விளம்பரம் வெளியானது. மகாபாரதக் கதையை 60
இதழ்களாக பூந்தளிர் அமர் சித்திரக் கதை வெளியிட்டது. அதனை பற்றிய
இரண்டுப்பக்க விளம்பரம் உங்களின் பார்வைக்கு.
சென்னையில் பைகோ பொம்மை உலகம் என்ற நிறுவனத்தையும் பைகோ நிறுவனம்
நடத்தியது. இதைப் பற்றிய விளம்பரங்களும் பூந்தளிரில் வெளிவந்தன.
மேற்படி நிறுவனத்திற்கு சென்று பொம்மைகள் வாங்கிய பாக்கியவான்கள்
யாரேனும் நமது வட்டத்தில் உண்டா என தெரியவில்லை?
பின் அட்டையில் பூந்தளிர் மற்றும் பூந்தளிர் அமர்சித்திரக்கதைகளின்
விளம்பரங்கள் மிகவும் அட்டகாசமாக இருக்கும். செல்லத்தின்
கைவண்ணத்தை கீழே காணுங்கள்.
மொழிப்பெயர்ப்பு
வாண்டுமாமாவின் மொழிப்பெயர்ப்பு வெகு இயல்பாக உறுத்தாத வகையில்
இருக்கும். விஜயன், வாண்டுமாமா இவர்களின் திறமையை இந்திரஜால்
காமிக்ஸ்களின் தமிழ் பதிப்பை படித்து ஒப்பிட்டால் தெளிவாக உணர்ந்து
கொள்ள முடியும்.
வெகுஜன இதழ்களின் பாதிப்பு
துக்ளக், ஆனந்த விகடன் போன்ற இதழ்கள் கற்பனைச் செய்திகளை தினசரி
வடிவில் வெளியிட்டு (பெரும் பாலும் நடப்பு செய்திகளை கலாய்க்கும்
பாணி) வாசகர்களை மகிழ்விக்கும். பூந்தளிரும் ஒருமுறை மகாபாரத
நிகழ்வுகளை செய்தித்தாள் வடிவில் வெளியிட்டு அசத்தியது.
புதிர்கள், விளையாட்டுகள்
அக்காலக் கட்டதில் பிரபலமாக இருந்த வித்யாசங்களை கண்டறிதல்,
புள்ளிகளை இணைத்து உருவங்களை உருவாக்குதல், வழிக் கண்டுபிடித்தல்
போன்றவற்றுடன் டிங்கிளில் வெளிவந்த TINKLE TRICKS & TREATS என்ற
பகுதி 'பூந்தளிர் புதிர்கள்' என்ற பெயரில் வெளிவந்தன. வாண்டுமாமா
அவற்றை எப்படி எடிட் செய்துள்ளார் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது.
பள்ளிப் பருவத்தில் காகிதங்களில் உருவங்கள் செய்வது, எளிய மேஜிக்
செய்வது, விளையாட்டுப்பொருட்கள் செய்வது போன்றவை மற்றவர்களிடம்
இருந்து நம்மை உயர்த்தி வைக்க பயன்பட்டன. எங்கள் பள்ளியில் நான்
மட்டுமே பூந்தளிர் வாசகன். பூந்தளிரில் வெளிவந்த எத்தனையோ
விஷயங்கள் என்னை மற்றவர்களை விட ஒரு படி உயர்த்தியே வைத்திருந்தன.
பூந்தளிரின் போற்றத்தக்க 'லெட்டரிங்'
தொடக்கால பூந்தளிரில் வெளியான காமிக்ஸ் கதைகளில் வசனங்கள் கைகளால்
எழுதப்பட்டன. இரண்டு திறமைமிக்க எழுத்தோவியர்கள் (Lettering
Artists) பூந்தளிரில் பணிப்புரிந்து இருக்க வேண்டும். நான்
அறிந்தவரையில் இவ்வளவு அழகான, சீரான எழுத்துத்திறனை தமிழில்
எங்கேயும் கண்டதில்லை. மிகவும் போற்றத் தக்கவகையில் லெட்டரிங்
பணியை செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை என்பது சற்றே
வருத்தற்குரிய செய்திதான்.
முதல் வருடத்தின் சிறந்த காமிக்ஸ் கதை!
முதல் வருடத்தில் எத்தனையோ காமிக்ஸ் கதைகள் பூந்தளிரில்
வெளிவந்திருந்தாலும் கதை, ஓவியத் தரம், கதை போதிக்கும் நீதி என
எல்லாவற்றிலும் என்னை கவர்ந்தது 'புண்ணிகோடி' என்ற கர்நாடக
நாட்டுபுறக் கதைதான். இதனை கதையாக்கம் செய்தவர் சுப்பா ராவ் (Subba
Rao), சித்திரம் தீட்டியவர் சந்திரநாத் (K. Chandranath).
உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தும் தாய், கன்று, புலி ஆகிய
பாத்திரங்களின் கண்களை காணுங்கள்.
எப்படி? எப்படி?
பூனைக்கு எலி பகையானது எப்படி? நாய் மனிதனுக்கு நண்பனாது எப்படி?
குதிரை மனிதனுக்கு அடிமையானது எப்படி? வானில் மனிதக்கூட்ட வடிவ
நட்சத்திரங்கள் தோன்றியது எப்படி? என இயற்கை நிகழ்வுகளுக்கு
கற்பிதம் செய்து கதை சொல்வதும், கேட்பதும் எல்லோருக்கும்
பிடித்தவை. இது போன்ற நிறைய கதைகள் காமிக்ஸ் வடிவிலும், எழுத்துக்
கதைகளாகவும் பூந்தளிரில் வெளிவந்துள்ளன. ஒத்த கதையம்சம் கொண்ட இரு
கதைகளை இரண்டு வடிவங்களில் கீழே காணுங்கள்.
இன்னும் பல செய்திகள்...
மேலே நீங்கள் படித்த விமர்சனம் பூந்தளிர் முதலாண்டு இதழ்களை
அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.
ஐந்து ஆண்டுகள் வெற்றிகரமாக வெளிவந்த பூந்தளிர் ஆறாம் ஆண்டில் 3
இதழ்களுடன் நின்று போனது. இதற்கு தொழிலாளர்கள் பிரச்சினைதான்
காரணம் என்று அப்போது கூறப் பட்டது.
சில ஆண்டுகளுக்கு பின்னர் பார்வதி பதிப்பகத்தால் வாண்டுமாமாவை
ஆசிரியராக கொண்டு பூந்தளிர் மீண்டும் வெளியிடப்பட்டது. சில
ஆண்டுகளுக்கு பின்னர் அதுவும் நின்று போனது சோகத்தின் உச்சம்!
பூந்தளிர் போலவே பூம்பட்டா இதழும் தற்போது வெளிவரவில்லை.
நன்றி: காமிக்ஸ்பூக்கள்
வலைப்பதிவு;
http://ayyampalayam.blogspot.com/2009/06/blog-post_09.html