சிறுவர் இலக்கியம்!
'தேனுகா'வின் இரு நூல்கள்: 'முயலுக்கு மீண்டும் தோல்வி'! 'ராமுவின் காணாமல்போன மூக்கு'!
இலக்கியத்தின்
பல்வேறு கூறுகளில் சிறுவர் அல்லது குழந்தைகள் இலக்கியமும் முக்கியமானதொரு கூறு.
இன்றைய குழந்தைகளே
நாளைய உலகின் நாயக, நாயகியர்; தலைவர்கள்; அறிஞர்கள்.... குழந்தைகளுக்கு அறிவுலகின்
பலவேறு பிரிவுகளை, அன்றாட சமூக நிகழ்வுகளை, கடந்தகால வரலாற்று நிகழ்வுகளை / கதைகளை,
புனைகதைகளையெல்லாம் அவர்களது பால்யகாலத்துப் பிராயத்தினில் அறிமுகம் செய்து வைத்து
எதிர்கால நற்கனவுகளையெல்லாம் விதைப்பவை இச்சிறுவர் இலக்கியப் படைப்புகளே. அன்றைய
காலத்தில் குழந்தைகளுக்காக வெளிவந்த 'கண்ணன்' சஞ்சிகையின் இன்றைய தொகுப்புகளைப்
பார்ப்பவர்களெல்லாரும் அத்தொகுப்புகளில் இன்றைய பல பிரபல எழுத்தாளர்களின்
ஆக்கங்களைக் கண்டு கொள்ளலாம். தமிழகத்திலிருந்து 'அம்புலிமாமா', 'சுட்டிவிகடன்',
'கோகுலம்' போன்ற சஞ்சிகைகள் குழந்தைகள் இலக்கியத்துக்குத் தொடர்ந்தும் பங்காற்றி
வருகின்றன. இலங்கையிலிருந்து நாற்பதுகளில் வெளிவந்த 'ஈழகேசரி' பத்திரிகையின்
சிறுவர் பகுதியில் எழுதிய பலர் பின்னர் ஈழத்தமிழ் இலக்கியத்தின் பல்வேறு
பிரிவுகளிலும் கோலோச்சினார்கள். பின்னர் அறுபது எழுபதுகளில்
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த' வெற்றிமணி', 'சிரித்திரன்' வெளியிட்ட 'கண்மணி',
(சில இதழ்களே வெளிவந்த போதிலும்) மற்றும் 'ஈழநாடு' பத்திரிகையின் வாரவெளியீட்டில்
வெளிவந்த 'சிறுவர் மலரில்' எழுதிய பலர் இன்று தமிழ் இலக்கிய உலகில் பரவலாக அறியப்
பட்டவர்களாகவிருக்கிறார்கள். இன்றும் அந்தப் பணியினை வீரகேசரி வாரவெளியீடு
சிறுவர்களுக்காக முழுப்பக்கமொன்றினை ஒவ்வொரு வாரமுமொதுக்கிச் செய்து வருகின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் பல பதிப்பகங்கள் நூற்றுக்கணக்கில் குழந்தைகளுக்கான
படைப்புகளை ஆண்டுதோறும் வெளியிட்டு வருவதை அனைவரும் அறிவோம். ஆனால் ஈழத்திலும்
இப்பணியினை ஓசையில்லாமல் பதிப்பகமொன்று செய்து வருவதை நம்மில் எத்தனை பேர்
அறிந்திருப்போம். அதுவும் மிகவும் அழகாக, நேர்த்தியாக, தரமாக சிறுவர்களுக்கான
நூல்களைக் காலத்தின் தேவையறிந்து அப்பதிப்பகம் செய்துவருவது பாராட்டுதற்குரியது.
எழுத்தாளர் சுதாராஜ் இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும் நன்கறியப்பட்ட எழுத்தாளர்.
இவரது சிறுகதைகள் 'ஆனந்தவிகடன்' சஞ்சிகை நடாத்திய போட்டிகளில் பரிசுகளைப்
பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி இலங்கை அரசின் 'சாகித்திய மண்டல' பரிசு உட்படப் பல
விருதுகளை இவரது படைப்புகள் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இலங்கையில்
வசித்துவரும் எழுத்தாளர் சுதாராஜ் ஒரு பொறியியலாளர். இவர் 'தேனுகா' என்னும் தனது
சொந்தப் பதிப்பகம் மூலம் நூல்களை வெளியிட்டு வருகின்றார். மேற்படி 'தேனுகா'
பதிப்பகம் வெளியிட்ட இரு சிறுவர் நூல்களை அண்மையில் பதிவுகளின் நூலகப் பிரிவுக்கு
வழங்கியிருந்தார் தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்துவரும் கட்டடக்கலைஞரான குணசிங்கம்
அவர்கள் அவர்கள். 'ராமுவின் காணாமல் போன ஆடு', 'முயலுக்கு மீண்டும் தோல்வி'
என்பவையே அவ்விரு நூல்களுமாகும். இந்நூல்களின் இன்னுமொரு சிறப்பென்னவென்றால்...
இவற்றின் ஆசிரியர்களும் குழந்தைகளே.
'முயலுக்கு மீண்டும் தோல்வி'!
'முயலுக்கு
மீண்டும் தோல்வி' என்னும் குழந்தைகளுக்கான் கதையின் மூலகர்த்தா சிங்கள மொழியில்
குழந்தை இலக்கியத்துக்குப் பெரும் பணியாற்றிவரும் பிரபல எழுத்தாளரான குணசேன விதான
ஆவார். அவரது நூலினைத் தமிழ்ப்படுத்தியுள்ளார் எழுத்தாளர் சுதாராஜின் மகளான செல்வி
ஆரூத்ரா சுதாராஜ் அவர்கள். மேற்படி நூல் செல்வி ஆருத்ரா சுதாராஜ் மொழிபெயர்த்த
இரண்டாவது நூலாகும். இவர் ஏற்கனவே 2003இல் லிலியன் சுதர்மா த.சில்வாவின் 'அணில்
அப்புவுக்கு ஒரு பாடம்' என்னும் நூலினையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். புத்தளம்
இந்து மத்திய கல்லூரி மாணவியான செல்வி ஆருத்ரா சுதாராஜின் 'முயலுக்கு மீண்டும்
தோல்வி'யினை 'தேனுகா' பதிப்பகம் மிகவும் அழகாக, கண்ணைக் கவரும் சித்திரங்களுடன்
வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே
எல்லோரும் அறிந்த ஆமைக்கும், முயலுக்கும் இடையில் நடைபெற்ற ஓட்டப் பந்தயம் பற்றிய
கதையினை வேறொரு கோணத்தில் விரிவுபடுத்திச் சுவையாக எழுதியுள்ளார் குணசேன விதான.
முன்பு நடந்த போட்டியில் தான் தூங்கியதாலேயே தோற்றதாக முறையிட்ட முயலார்
மீண்டுமொருமுறை ஆமையினைப் போட்டிக்கு அழைக்கின்றார். ஆனால் இம்முறையும்
விளையாட்டுச் சட்டதிட்டங்களை மீறியதன் மூலம் மீண்டும் ஆமையே வெல்வதாகக் கதையினை
முடித்திருக்கின்றார் ஆசிரியர். எவ்விதம் முயலார் சட்டதிட்டங்களை மீறினாரென்று அறிய
ஆவலாயிருக்கிறதா? இருந்தால் மேற்படி நூலினைத் 'தேனுகா' பதிப்பகத்தாரிடமிருந்து
பெற்று அறிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: 'தேனுகா'
பதிப்பகம், இலக்கம் 6, 'ஷாப்பிங் காம்பிளெகஸ்', புத்தளம், இலங்கை. அவர்களது
தொலைபேசி இலக்கம்: 0714866945
'ராமுவின் காணாமல்போன மூக்கு'!
'ராமுவின்
காணாமல்போன மூக்கு' நூலினை எழுதியிருப்பவர் ஆர்த்தி பரமேஸ்வரன். இந்நூலின்
இன்னுமொரு சிறப்பு: மேற்படி நூலுக்கான ஓவியங்களை அனைத்தையும் வரைந்தவரும் இவரே.
இவர் இலண்டனிலுள்ள 'ரொல்வேர்த் மகளிர் கல்லூரி'யில் தனது உயர்தரக் கல்வியினை
முடித்துவிட்டுப் பின்னர் 'ஓவியக் கலை சம்பந்தமான ஒருவருடப் பயிற்சி நெறியினை'
Epsomn - University College for Creative Artsஇல்
முடித்தவர். தற்போது University College for Creative
Arts - Farhamஇல் வரைகலை அசைவியக்கம் பற்றிய
பட்டப் படிப்பினை மேற்கொள்ளவுள்ளார். 'தேனுகா' பதிப்பகம் ஏற்கனவே வெளியிட்டுள்ள
'பேசும் பொம்மைகள்', 'அபர்ணிக்காவின் நாய்க்குட்டி' ஆகிய சிறுவர் நூலகளுக்கும் இவரே
ஓவியங்கள் வரைந்தவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
'ராமுவின்
காணாமல்போன மூக்கு' கதை சர்க்கஸ் கோமாளிகளில் ஒருவனான ராமுவின் தொலைந்து போன சிவந்த
மூக்கு எவ்விதம் மீண்டும் கிடைக்கிறதென்பது பற்றிய கதை. சர்க்கசஸ் நிகழ்ச்சிகளில்
அந்தப் பொய் மூக்கினைக் கொண்டு குரங்குச் சேட்டை செய்து வருவோரையெல்லாம் சிரிக்க
வைக்கும் கோமாளிகளின் மேல் கொண்ட பொறாமையினால் சர்க்கஸ் குரங்கொன்று அந்த
மூக்கினைத் திருடி விடுகின்றது. திருட்டப்பட்ட அந்த மூக்கினை சர்க்கஸ் யானை
எவ்விதம் மீண்டும் ராமுவிடமே கொண்டுவந்து சேர்க்கிறது என்பதுதான் கதை. அது
எப்படியென்று அறிய விரும்புகிறீர்களா? அறிய விரும்பினால் 'தேனுகா' பதிப்பகத்துடன்
தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். முகவரி: 'தேனுகா' பதிப்பகம், இலக்கம் 6,
'ஷாப்பிங் காம்பிளெகஸ்', புத்தளம், இலங்கை. அவர்களது தொலைபேசி இலக்கம்: 0714866945
ஆஸ்திரேலியாவில் தொடர்புகளுக்கு: குணசிங்கம் - மின்னஞ்சல்: dcconsortium@gmail.com
-சிறுவர்மாமா - |