அணுசக்தி நூல் வெளியீடு அறிவிப்பு!
- சி. ஜெயபாரதன், கனடா -
அன்புள்ள
வாசகர்களே, "அணுசக்தி" என்னும் எனது இரண்டாம் நூலைத் தமிழினி பதிப்பகம் சமீபத்தில்
வெளியிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக
[2000-2006] திண்ணை, பதிவுகள் வலை இதழ்களில் வண்ணப் படங்களுடன் வந்த 40 கட்டுரைகள்
அதில் தொகுக்கப் பட்டுள்ளன. 1964 இல் வெளிவந்த "ஆக்க வினைகளுக்கு அணுசக்தி" என்னும்
எனது முதல் நூல் சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது.
"யுத்தம் என்பது அழிவியல் விஞ்ஞானம்", என்றோர் அறிஞர் கூறிச் சென்றுள்ளார்.
இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த 1940 ஆண்டுகளில் ஐரோப்பிய, அமெரிக்க
விஞ்ஞானிகளால் படைக்கப் பட்டப் பேரழிவு அசுர ஆயுதமே அணுப்பிளவு அணுகுண்டும்
[Fission Bomb], அதற்குப் பின்னால் ஆக்கப்பட்ட அணுப்பிணைவு ஹைடிரஜன் குண்டும்
[Fusion Bomb], பேரழிவுப் போராயுதங்கள் விரிவாகி அவற்றின் பெருக்கமே தற்போது
போருக்குக் காரணமாகி உலக நாடுகளைப் பயமுறுத்தி அமைதியைக் கொந்தளிக்க வைக்கிறது!
ஆனால் திசை திருப்பி அணுசக்தியைக் கட்டுப்படுத்தி மனிதருக்கு ஆக்கசக்தி யாகவும்
மாற்ற முடியும். உலகெங்கும் தற்போது நூற்றுக் கணக்கான அணுமின் நிலையங்கள்
பாதுகாப்பாக இயங்கி மின்சாரம் பரிமாறி வருகின்றன. பெரும்பான்மையான அணுசக்தி
நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி வந்தாலும், தவிர்க்க முடியாத பயங்கர அணு உலை
விபத்துகள் அமெரிக்காவின் திரிமைல் தீவு நிலையத்திலும், பழைய சோவித் ரஷ்யாவின்
செர்நோபில் நிலையத்திலும் நேர்ந்து ஆயிரக் கணக்கான மக்கள் தீராத இன்னல்களில்
இன்னும் வருந்தி வருகிறார்கள்.
அணுசக்தியின் மேற்கூறிய ஆக்க வினைகளையும், அணு
ஆயுதங்களின் அழிவுத் தன்மையும் இந்த நூல் தயக்கமின்றி, தணிப்பின்றி, தடுப்பின்றி
விளக்கமாய் எடுத்துக் காட்டுகிறது. சென்ற நூற்றாண்டில் ஐம்பது ஆண்டுகளாக அணுசக்தியை
விருத்தி செய்த விஞ்ஞானிகளைப் பற்றிய விபரங்கள் உள்ளன. எக்ஸ்-ரே கண்டுபிடித்த
ராஞ்சன் முதல், கதிரியக்கம் கண்டுபிடித்த மேரி கியூரி, ஐரீன் கியூரி, லிஸ் மைட்னர்,
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்ஸ் போஹ்ர், எட்வெர்டு டெல்லர் மற்றும் அணுப்பிளவில்
[Nuclear Fission] அணுக்கருத் தொடரியக்கம் உண்டாக்கிய என்ரிகோ ·பெர்மி வரை அனைவரது
வரலாறுகளும் அந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஆய்வுச் சோதனைகளில் முன்னேறிக்
கொண்டிருக்கும் கதிரியக்க மில்லாத அணுப்பிணைவு [Nuclear Fusion] ஆராய்ச்சி
பற்றியும் விபரங்களும் உள்ளன. உலக அணுமின் உலைகளைப் பற்றி மட்டுமின்றி பாரத அணுமின்
நிலையங்களின் வெற்றிகரமான இயக்கங்களும், முன்னேற்றங்களும், அவற்றில் நிகழ்ந்த
விபத்துகளும் கூறப் பட்டுள்ளன.
நாற்பது அணுசக்திக் கட்டுரைகளை வாரந் தோறும் தளராது
வலைப் பதிப்பில் பொறுமையாக வண்ணப் படங்களுடன் ஏற்றிய மதிப்புக்குரிய திண்ணை
அதிபர்கள் ராஜாராம், துக்காராம் எனது பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியவர்கள்.
அவற்றில் சில கட்டுரைகளைப் பதிவுகள் மாத இதழில் சிறப்புடன் வெளியிட்ட ஆசிரியர் வ.ந.
கிரிதரனுக்கும் எனது நன்றி. மேலும் நூலை வெளியிட என்னை ஊக்குவித்த மதிப்புக்குரிய
நண்பர் ஜெயமோகனும், அவர் தூண்டிச் சிறப்பாக வெளியிட்ட தமிழினி பதிப்பகத்தின் அதிபர்
வசந்த குமாரும் என் நன்றிக்கு உரியவர்கள்.
அன்புடன்,
சி. ஜெயபாரதன், கனடா
அணுசக்தி நூல் விலை : ரூ 270
(415 பக்கங்கள்)
நூல் கிடைக்குமிடம்:
தமிழினி பதிப்பகம்
63. பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை: 600014
jayabarat@tnt21.com |