தேவகாந்தனின் கதா காலம் நாவல் -சுவையானதோர் இலக்கிய விருந்து!
- என்.கே.மகாலிங்கம் -
[கட்டுரைக்காக, தலைமை உரையின் திருத்திய பதிப்பு]. தேவகாந்தனின் கதாகாலம் நூல் அரங்கேற்றம் அல்லது வெளியீடு முதலாவது அமர்வில் நடைபெற்றது. அது சம்பிரதாய பூர்வமாக நடைபெற்ற நிகழ்ச்சி. அதில் நூலைப் பற்றிய குற்றம் குறை காணும் விமர்சனங்களுக்கு இடம் இருக்கக் கூடாது என்று நம்புபவர்கள் இருக்கின்றார்கள். அதனால், இந்த இரண்டாவது அமர்வு. பொதுவாக நடன அரங்கேற்றம் என்று இன்று வழங்கப்படும் சொல்லாடல் அன்று நூல் அரங்கேற்றத்துக்கும் உரித்தானதே. கூடவே, அன்று, அதாவது, சங்க காலத்தில,; -அப்படியான ஒரு காலம் இருந்தது உண்மையோ கற்பனையோ- எதுவாக இருந்தாலும், நக்கீரனை முக்கண்ணன் எ¡¢த்து விடுமாப் போல் பார்த்தபோது அவரைப் பார்த்து சொன்னதாகக் கூறப்படும் வீர வசனமான நெற்றிக் கண்ணைக் காட்;டினாலும் குற்றம் குற்றமே என்பது இன்றும் இந்நூலை மதிப்பிடும்போது பொருத்தமானதே. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. சங்கப் பலகை ஒரு நூலை ஏற்றுக் கொண்டால் அது நல்லது என்றே கொள்ளப்படும். அந்த வகையிலும் இவ்விடத்தை சங்கப்பலகையாக எடுத்து இந்நூலை சொற் குற்றம், பொருட் குற்றம், பிற குற்றம் போன்றவற்றை ஆய்ந்து நாம் அரங்கேற்றி வைப்போம்.
கதா காலம் என்ற இந்நாவல், உங்களுக்கு எங்களுக்கு உலகத்திற்குத் தெரிந்த, மூவாயிரம் ஆண்டுகளாக வழங்கிவரும் மகா பாரதக் கதையை வைத்தே எழுதப் பட்டுள்ளது. நீங்கள் அனைவருமே ஏதோ ஒருவகையில் இக்கதையைக் கேட்டிருப்பீர்கள். வாசித்திருப்பீர்கள். ராஜாஜி எழுதிய வியாசர் விருந்தாகவோ பள்ளியில் மகாபாரதச் சுருக்கமாகவோ பாரதியின் பாஞ்சாலி சபதமாகவோ எஸ்.ராமகிருஸ்ணனின் உபபாண்டவமாகவோ அரவானாகவோ கர்ணன் படமாகவோ தொலைக்காட்சியில் வந்த மகா பாரத படமாகவோ
வாரியாரின் சொற்பொழிவுகளாகவோ வாசித்தும் பார்த்தும் கேட்டும் இருப்பீர்கள். இப்படியாக எங்கள் வாழ்வில் எம் நிழல் போல் எம்முடன் ஒட்டி வந்த இந்த இதிகாசத்தை திரும்பவும் நாவலாக எழுத தேவகாந்தன் எப்படித் துணிந்தார். அதில் வெற்றி பெற்றும் விடுவேன் என்று அவருக்கு எப்படி நம்பிக்கை வந்தது? அந்த அசாத்தியத் துணிச்சல் சிலவேளை முட்டாளுக்கும் வரும். சிலவேளை தன்னம்பிக்கையுள்ளவனுக்கும,; ஆற்றல் உள்ளவனுக்கும் வரும். இவர் உண்மையிலே நல்ல ஆற்றலுள்ளவர் என்பதை வாழ்வியலாக நடந்து கொண்டிருக்கும் அக்கதையை தன் திறமையான எழுத்தில் நாவலாக, தற்கால வடிவமான நாவலில், வடித்து தந்ததனின் மூலம் நிரூபித்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். என் கணிப்பீட்டை பொறுத்தளவில், இந்நூல் சங்கப் பலகையில் ஏற்றி வைக்கக் கூடியதென்றும், கூடவே, தகுதி காண் பரீட்ஷையில் வெற்றியும் அடையும் என்றும் சொல்வேன்.
கதா காலம் என்பது இந்நாவலின் தலைப்பு என்றும், உபதலைப்பாக மகா பாரதத்தின் மறு வாசிப்பு என்றும் போடப்பட்டுள்ளது. இக்கதை காலாகாலமாக வியாசர், உக்கிரவஸ், வைசம்பாயனர், ஜைமினி, சஞ்சயன், பின்னர் சூதர், , மாகதர், பாணர், நடர் போன்றவர்களால் சொல்லப்பட்டு வந்து இன்று எங்கள் சிறுகதை ஆசி¡¢யர்கள், நாவலாசிரியர்கள் கையில் கிடைத்துள்ளது. எத்தனையோ பேரால் சொல்லப்பட்டு, உபகதைகள், கிளைக்கதைகள்; சேர்க்கப்பட்டு, பெருகி வந்த ஆற்றைப் போல, வந்துள்ளது. இப்பாரதக் கதையை முழுவதாக அறிந்தவர், வாசித்தவர் எவரும் இல்லை என்றும், அதேவேளை எல்லாருக்கும் கொஞ்சமாவது தெரியும் என்றும் எஸ்.ராமகிருஷ்ணன் சொல்வார்.
வியாசர், பாரதக் கதையை குருகுல, ஷத்திரிய ஆண்கள் சம்பந்தமான கதையாக மட்டுமே எழுதி இருக்க, அதில் விடுபட்ட அல்லது முக்கியத்துவம் கொடுக்கப்படாத பெண் பாத்திரங்களான சத்தியவதி, காந்தாரி, குந்தி, மாத்ரி, அம்பை, துரோபதை ஆகியவர்களை மையப்படுத்தி, ஆண் பாத்திரங்களை பின்னகர்த்தி, அவர்களுக்கும் அனைத்துப் பாத்திரங்களுக்குமே மானிடத்தன்மையைக் கொடுத்து, அதாவது பாரதக் கதையில் காணப்படும் அமானுஷ்யத் தன்மையையும், மர்மங்களையும் விடுவித்து, மனித இயல்பு நிலைக்கு அல்லது யதார்த்த வியாக்கியானத்துக்கு உட்படுத்தக் கூடியதாக அவர்களை இறக்கி, அழகான, கலைத்துவமான தமிழ் நடையில் ஜெயக் கதை
என்ற பெயரில் படைத்துள்ளார், தேவகாந்தன். அது இலங்கைத் தமிழ் உரை நடைக்கும், இலக்கியத்துக்கும் புதியது. செழுமை சேர்ப்பது. அனைவருக்கும் தொ¢ந்த கதையை, சிலவேளை சேலையை அடித்தடித்து தோய்த்து நைந்து பழசாகிப் போனது போன்ற ஒரு கதையை, பாரதியாரும், இராமகிருஷ்ணனும், தங்கள் தமிழ் நடையால், பார்வையால்; புதிதாக்கித் தந்துள்ளனர். திரும்ப திரும்பப் படிப்பதற்கும் சுவைப்பதற்கும் உரியதொன்றாக்கியுள்ளனர்.
பாரதியின் பாஞ்சாலி சபதத்தை எத்தனை தரம் வாசித்திருக்கின்றோம். இருந்தும், அது அதன் சுவையை இழக்கவில்லை. அதுபோலவே, தேவகாந்தனின் நாவலில் பல இடங்களைத் திரும்ப திரும்ப படித்தாலும் சுவை குன்றாது. பாரதியரின் சூரியாஸ்தமனம் பற்றிய பகுதி அதன் கற்பனைக்காகவும் கலைக்காகவும் வாசித்து மகிழக் கூடியது போல, இவரின் சில பக்கங்களையும் பலருக்கும் வாசித்துக் காட்டி
மகிழக் கூடியதாகவும் இருக்கும். உயர் வகுப்பு மாணவர்களுக்கு விரசமில்லாத ஆனால் பால் சம்பந்தமான பந்திகளையும் பக்கங்களையும் வாசித்துக் காட்டி ரசிக்கவும் முடியும். உதாரணமாக, அர்ச்சுனன் துரோபதையைத் தேடி அவளறைக்குச் செல்கையில் யுதேஷ்ரனும் அவளும் இருந்த நிலையை வர்ணிக்கும் இடம், அர்ச்சுனன் திரும்புவது, பின்னர் வனவேகுவது, அங்கே நாக கன்னிகையைக் காண்பது, சந்தனு கங்கையைக் காண்பது, பராசுரன் ஜோஜனகந்தியைக் கண்டு மயங்குவது, பெண்ணுரு எடுத்து வந்த விஷ்ணுவுடன் இன்பம் துய்த்த
அரவானின் இன்பத் துய்ப்பு. இப்படிப் பல இடங்களை நாம் ரசிக்கலாம். தேவகாந்தன் வாத்சாயனாரின் கலையில் கைதேர்ந்தவராக இவ்விடங்களைப் படைத்துள்ளார். டி.எச்.லோறன்சின்; லேடி சட்டலிஸ் லவர்ஸில் வரும் கேம்ஸ்மனுக்கும் லேடி சட்டலிக்கும் நடைபெறும் இணைவிழைச்சு ரசவாத வர்ணனை இவரது.
பத்துப் பகுதிகளில் இந்த நாவல் சொல்லப் பட்டாலும் சொல்லும் முதுசூதன், இளம் சூதன் ஆகியோரின் களம் வேறுபட்டன. வட பாரத நகரில் ஆரம்பித்த கதை சொல்லி, தென்மேல் கிராமம் ஒன்று, அத்தினாபுரம் கலா மண்டபம், வடகீழ் தேசம், கீழ்ப்புறத் தேசம், வட புறத் தேசம், இலங்கையின் கிழக்கு மாகாணம், அதுவும் நவீன காலம், வடமேல் புறத் தேசம், இலங்கையின் தென்மராட்சி என்று களங்களை மாற்றி ஒரே பாரதக் கதை, இடம், காலம் என்ற எல்லைகள் ஒரு பொருட்டல்ல என்று கூறக் கூடியதாக அக் கதையை சூதர்கள் சொல்லி வருகிறார்கள் என்ற அர்த்தப்படக் கூடிய உத்தியைக் கடைப்பிடித்துத் தேவகாந்தன் கதை சொல்லும் முறைமை வியக்கத்தக்கது.
இருந்தும், கதாகாலம் என்னில் சில கேள்விகளையும் எழுப்பின என்று சொல்லத்தான் வேண்டும்:
முதலாவது: மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் இவ்விதிகாசம் வியாசர், வைசம்பாயனர், சூதர், பெளராணிகர்,
போன்றோர்களால் காலங்காலமாக எடுத்துச் சொல்லப்பட்டு வந்திருக்கின்றது. சமூகம், சூழல், இடம், காலம் போன்றவற்றாலும்
கதைசொல்லிகளின் கற்பனைக்கும் ஆற்றலுக்கும் கேட்போ¡¢ன் விருப்பத்துக்கும் இசைவாக அக்கதை மாற்றமடைந்து, மறு வாசிப்புச் செய்யப்பட்டுத் தான் வந்திருக்கும் என்பதை நாம் நம்பத்தான் வேண்டும். தேவகாந்தனும் தற்காலத்துக்கு உகந்தமாதிரி தற்கால மாந்தரின் அறிவுவாதக் கொள்கைக்கும் தாக்க முறைமைக்கும் ஏற்றதுபோல, யதார்த்தப் பாங்கில், பாரதக் கதையை, இக்காலத்தில் நம்ப முடியாத பகுதிகளை நீக்கி விட்டு நாவலாக்கித் தந்திருக்கிறார். அது சில இலக்கியவாதிகளைத் திருப்திப்படுத்தலாம். ஆனால், காலங்காலமாக ‘தருமத்தைச் சூது கவ்வும், தருமம் மறுபடி வெல்லும்’ என்று நம்பியுள்ளவர்களைத் திருப்திப்படுத்துமா? பாஞ்சாலியின் துகிலைச் துச்சாதனன் உரிகின்றான். அவள் உலகத்தை மறந்து, உட்சோதியுள் கலந்தாள். கண்ணனை வேண்டினாள். அவனருளால் ‘தம்பி களற்றிடக்
களற்றிடத் துணி புதிதாய் வண்ணப் பொற் சேலைகளாம் -அவை வளர்ந்தன வளர்ந்தன, வளர்ந்தனவே’ என்பதை நம்பியவர்களையும் அனைத்தையும் இழந்து அநாதரவாய் நிற்கும் ஏழை மக்களுக்கும், யுத்தம், பஞ்சம், சுனாமி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உயிரை இறை நம்பிக்கையால் இன்னும் வைத்திருப்போருக்கும், கூந்தலும், துகிலும் மாறி மாறி அவள் நிர்வாணத்தை, மத்தின் மையச் சுழற்சி போன்ற பொறிமுறையால் மானம் காப்பாற்றப்பட்டது என்று தேவகாந்தன் தன் அறிவுவாத தாக்கத்தால் மறுவாசிப்புச் செய்திருந்தாலும், அது இறைவனின் செயலே என்றுதான் மகாசனம் நம்பினார்கள். நம்புவார்கள். மர்மங்கள், அதிமானுட, அபெளதீகச் செயல்கள் இறைவன் செயல்கள் என்ற மானிட நம்பிக்கை அவர்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால்தான் இன்றும்
மகாபாரதம் பொது ஜனங்கள் மத்தியில் வாழுகின்றது. பேசப்பட்டு வருகின்றது.
இரண்டாவது: பாஞ்சாலி சபதத்தை எழுதிய பாரதி அதற்கான ஒரு விளக்கத்தில் ‘பல தரனுடைய தொழில் செயும் மகாசனமும்
பொதுப்படைப்படையான குடிகள். இவர்களே தேசத்துக்கு உயிராவர். இவர்களைச் சூத்திரர் என்பது இக்கால வழக்கு. சூத்திரா; என்னும் பெயரைச் சில மூடர் இழிவான பொருளில் வழங்குவது பற்றி நூலில் அப்பெயர் தரவில்லை’ என்கிறார். பாரதியார் வேத, இதிகாசங்களை மூலத்தில் பயின்றவர் என்பதைக் குறிப்பிட வேண்டும். தேவகாந்தன் சில இடங்களில் ‘சூத்திரர்களிலும் பார்க்க ஈனர்கள்’ என்று குறிப்பிடுவதை தவிர்த்திருக்கலாம். இது ஷத்திரியர்களின் கதை. என்றாலும் பாரதியின் கருத்தின்படி சத்திரர்கள் அப்படியான கருத்தில் சொல்லப்படவில்லை என்றும் தெரிகின்றது.
மூன்றாவது: கதா காலம் நாவல் நல்ல நடையில், நவீன தமிழில் எழுதப் பட்டது என்று ஏற்கெனவே சொன்னேன். நவீன மொழியில்
புழங்கு தமிழ்ச் சொற்களைக்; கையாள வேண்டும் என்பதும் ஓர் அடிப்படை. அதாவது வழக்கொழிந்த சொற்கள், பழந் தமிழ் சொற்கள் எனக்கு இடைஞ்சலைத் தந்தன. தமிழர்களாகிய, தமிழ் படித்த நாமே பல சொற்களுக்கு அகராதியைத் தூக்க வேண்டிய நிலை சிலவேளைகளில் இடம்பெறுகின்றது. உதாரணமாகப் குறைந்தது முப்பது சொற்களுக்கு மேற்பட்ட அப்படியான சொற்களை என்னால் சுட்டிக் காட்ட முடியும். இருந்தாலும், உதாரணமாகச் சில: நிதம்பம், கபாடம், முருக்கம், கொழுமுனை, கதா சரஸ், பவம், தவனம், அட்டி, செவியறிவுறூஊ. தேவகாந்தன் மொழி நடை அழகானது. ஆனால், வாக்கிய அமைப்பு சிலவேளைகளில் இடர் தருகின்றது. முதல் ஐந்து பக்கங்களிலும் அப்படிப்பட்டவை அதிகம். எந்த எழுத்தையும் வாசிக்க ஆரம்பிக்கையில் அப்படித்தான் இருக்கும் என்பது நாம் அறிந்ததே. அவர் வாக்கியங்களை கலைத்துப் போட்டிருக்கின்றார். எழுவாயை பயனிலை இடத்திலும் பயனிலையை எழுவாய் இடத்திலும் மாறிப் போட்டிருப்பார். பெயர்த்தொடர், வினைத் தொடர், போன்றவை நீண்டதாக, வினைமுற்று அற்றிருக்கும். அப்படி எழுதுபவர்கள் காற்புள்ளி அரைப்புள்ளிகளைப் போட்டு அப்படியான சிக்கல்களைத் தீர்த்திருப்பார்கள். அதற்கு நன்றாக மெய்ப்புப் பார்ப்பவர், பதிப்பாசிரியர்கள் மேல் நாட்டில் உதவுவார்கள். இந்தப் பிரச்சினை,; ஆங்கில வாக்கிய அமைப்பை, அதாவது றழசன ழசனநச ஐ அதிகம் மாற்ற முடியாது என்பது தெரியும். தமிழில் அதற்கு நெகிழ்ச்சி அதிகம். சொற்களை இடம் மாற்றியும் போடலாம். ஆனால், வினைமுற்றையும் நீக்கி, தொடர்களையும் கலைத்துப் போட்டால். அதன் சிக்கல் இன்னும் கூடிவிடும்.
இந்தச் சிக்கல்கள் தேவகாந்தனின் கதாகாலத்தில் சொற்குற்றம், பொருட்குற்றம் ஆகியவற்றைக் காணும் நக்கீரர்களுடையது. ஆனால், அவை இவர்ன் ஒட்டு மொத்த நாவலைச் சுவைப்பதற்கு தடையற்றவை.
இன்னுமொரு குறிப்புடன் என்னுரையை முடித்துக் கொள்கிறேன். தேவகாந்தனை எனக்கு கடந்த ஐந்து மாதங்களாகத்தான் தெரியும். நல்ல மனிதப் பண்புகள் உள்ளவர். பழகுவதற்கு இனியவர். எளிமையானவர். அவர் தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்திருக்கிறார். அங்கு செல்வதற்கு முன் ஈழநாடு பத்திரிகையில் வேலைசெய்திருக்கிறார். இவை அனைத்தும். அவரிடம் துருவி துருவிக் கேட்டதால் கிடைத்தவை. அப்படியில்லாவிட்டால் அவையும் கிடைத்திருக்கா. அவர் 12 நூல்களை வெளியிட்டிருக்கிறார் என்று கடைசியாக இரண்டு
நாட்களுக்கு முன்னர் தான் சொன்னார். அதற்கு முன் ஒரு இரண்டாண்டுகளுக்கு முன் வரன், தேவகாந்தன் என்பவர் ஆயிரம்
பக்கங்களுக்கு மேற்பட்ட ஒரு நாவலை ஐந்து பாகங்களாக எழுதியுள்ளார். அந்தப் பெரிய புத்தகத்தை எழுதியதற்காகவே அவர்
பேசப்படுவார் என்று சொன்னார். தலையணை அளவு புத்தகங்களை வாசித்தது இளமையில். இப்போது அப்படியானவற்றைக் கண்டாலே எனக்குக் கிலி. அதனால் செல்வத்திடம் அதன் இரண்டு பாகங்களைக் கண்டபோது அதை வாங்காமலே விட்டு விட்டேன். அதன் முன்பின்னாக இவரின் பேட்டியொன்றை இலங்கைப் பத்தி¡¢கை ஒன்றில் வாசித்தேன். நல்ல, ஆழமான, விஷயமறிந்த பதில்கள் அவற்றில்
இருந்தன. அதைவிட, கதாகாலம் நாவலை மட்டும் தான் இப்போது வாசித்திருக்கிறேன். இதை வைத்து, அவர் முக்கியமான
நாவலாசிரியர் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும். அதனால் அவா¢ன் மற்ற நூல்களைத் தரும்படி அவரிடம்
கேட்டேன். தன்னிடம் இல்லை என்று கையை விரித்து விட்டார். அப்படிப்பட்டவரை நாங்கள் வாசித்து, அறிந்திருப்பது எப்படி? என்பது கேள்விக் குறியே.
அடுத்தது, அவர் அவர் இலங்கை எழுத்தாளரா? இந்திய எழுத்தாளரா என்ற கேள்வி. அக்கதையெல்லாம் அவரின் நாவலைப் பொறுத்தளவில் அவசியமில்லாதவை. இலங்கை எழுத்தாளருக்கில்லாத இலக்கியத் தரமான தமிழ் நடை அவருக்குக் கைவந்துள்ளது. எஸ்.ராமகிருஷ்ணனின் நடையை நாம் சிலேகித்துப் பேசுகின்றோம். அது போன்ற கொஞ்சம் வித்தியாசமான நடை இவருடையது. இந்தப் பண்பு இலங்கை எழுத்தாளர்களுக்கு இல்லை. கருத்தே அவர்களின் கவனம்.
அடுத்தது, இவரை ஏன் எழுத்தாளர்களோ வாசகா;களோ அதிகம் கண்டுகொள்ளவில்லை என்ற கேள்வி? அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன என்பது என் அபிப்பிராயம். ஓன்று, அதற்கு இவரே அதிகம் காரணம். இவர் 1986 இல் தன் முதற் புத்தகத்தை இந்தியாவில் ஏதோவொரு பதிப்பகம் மூலம் போட்டிருக்கின்றார். அவருடைய பன்னிரண்டு புத்தகத்தில் பத்து அங்கே வெளிவந்துள்ளன. இந்தியப் பதிப்பகத்தார் நூலகங்களுக்குப் போட்டு தங்கள் காசை எடுத்தவுடன், இவருக்கு ஓரளவு றோயல்டியை கொடுத்தவுடன் இரண்டு பகுதியாரின் வேலையும் முடிந்தது. அதனால், எங்களைப் போன்ற வாசகர்களுக்கும் எட்டவில்லை. இரண்டு, இந்திய விமர்சகா; பலர்
இவருடன் நெருங்கிப் பழகியும் இருக்கிறார்கள். உதாரணமாக வெங்கட் சாமிநாதன், ஜெயமோகன் என்று இன்னும் பலர். அவர்களும் இவரைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் இரண்டொரு கதைகள், கவிதைகள் எழுதிய புலம்பெயர்ந்;த படைப்பாளிகள் அவர்கள் கடைக்கண்ணின் பார்வைக்கு உட்பட்டுள்ளனர். இனிமேல் புலம்பெயர்ந்துள்ளதால் இவரும் கவனிக்கப்படுவார். ஆனால் அவர்தான் நான் இங்கிருந்து போய் விடுவேன் போய் விடுவேன் என்று விளையாட்டுக் காட்டுகின்றார். ஆனால், கோவணச் சாமியார் குடும்பஸ்தன் ஆகிய
கதைதான் இங்குள்ள பலருக்கும் நடந்துள்ளது என்பதை அவருக்கு நான் அடிக்கடி ஞாபகம் ஊட்டிக் கொண்டிருக்கின்றேன். அதற்கு அவர் புறநடையும் ஆகிவிடலாம். யார் கண்டது?
கதா காலம் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய தமிழ் நாவல்.
mahalingam3@hotmail.com
பதிவுகள்: மே 2005 இதழ் 65 -மாத இதழ்