லண்டனில் சலங்கை நர்த்தனாலயாவின் ‘சலங்கைகளின் சங்கமம் 2010’.
-
நவஜோதி ஜோகரட்னம் (லண்டன் ) -.
‘பரதஇலக்கணம்’ ‘நாட்டிய விலாசம்’ஆகிய நூல்களையும், ‘ நாட்டிய ஸ்லோகால்’
என்ற வீடியோ சி.டி.யையும் வெளியிட்ட நாட்டிய விசாரத் ஸ்ரீமதி ஜெயந்தி
யோகராஜாவின் மாணவர்களின் ‘சலங்கைகளின் சங்கமம் 2010’ நிகழ்ச்சி லண்டன்
வின்சன் சேர்ச்சில் மண்டபத்தில் மிக விமரிசையாக இடம்பெற்றது.
புலம்பெயர்ந்து 1992 ஆண்டு முதல் ‘சலங்கை நர்த்தனாலயா
நுண்கலைக்கூடத்தின்’ அதிபராகச் செயற்பட்டு வரும் ஸ்ரீமதி ஜெயந்தி
யோகராஜா நெதர்லாந்து, ஜேர்மனி, லண்டன் ஆகிய நாடுகளில் நாட்டிய
ஆசிரியராகப் பணிபுரிந்து வருகின்றார். அவரிடம் நாட்டியத்தை பயின்ற
மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ‘சலங்கைகளின் சங்கமம் 2010’தை
அலங்கரித்தமை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.
மோகினியாட்டம், கூச்சுப்புடி, வீணை, சங்கீதம் மேலைநாட்டு
இசைக்கருவிகளையும் முறைப்படி பயின்ற ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜா அவர்கள்
தஷாவதாரம், கோலாட்டம், மணிப்புரி, செம்பு நடனம், பங்காரா, மயிலாட்டம்,
சிவலீலா (கூச்சுப்புடி) போன்ற பல்வகையான நாட்டியத்தியத்தினூடாக ஆடல்
என்றாலே ஆக்க மலர்ச்சி என்று, தனது மாணவர்களின் திறமைகளோடு
வெளிக்கொண்டுவந்து பார்வையாளர்களின் மிகுந்த பாராட்டைப்
பெற்றிருந்தார்.
இராகம் ராகமாலிகா, தாளம் ஆதியிலமைந்த சிவனுடைய ஐந்து விதமான லீலைகள்
சித்தரிக்கப்படும் முக்கியமான சிவலீலா கூச்சுப்புடி நடனத்தை நாட்டிய
விசாரத் ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவும் அவரது மகளும், மாணவிமான நாட்டியக்
கலாஜோதி சஸ்கியா யோகராஜாவும் இணைந்து வழங்கி, கலைகள் பரம்பரை மூலம்
கடத்தப்படுவதையும் நிரூபித்திருந்தனர்.
‘சலங்கைகளின் சங்கமம் 2010’ நிகழ்ச்சி;; பக்கவாத்தியக் கலைஞர்களான
(நட்டுவாங்கம); ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜா, (வாய்ப்பாட்டு) ஸ்ரீமதி
மங்களகௌரி கிருபாகரன், (வயலின்) சங்கீத கலாஜோதி சற்குணராஜா கனகசபை
மற்றும் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களான செல்வன் மேவின் மேகநாத்
மகேந்திரன் (மிருதங்கம்), சங்கீத கலாஜோதி பிரவீன் பிரதாபன்
(புல்லாங்குழல்), செல்வன் அகஸ்ரி யோகரட்னம் (கடம்) போன்றவர்களின்
கலைத்திறமையால் புதுப்பொலிவு பெற்றிருந்தது.
‘நாட்டியக் கலாசாரதி’ பட்டம் பெற்ற நாட்டிய விசாரத் ஸ்ரீமதி ஜெயந்தி
யோகராஜாவின் ‘நாட்டிய விலாசம்’ ‘நாட்டிய கிரியா வீடியோ’ இறுவெட்டு
ஆகியவற்றின் அறிமுகத்தினை திருமதி ஆனந்தராணி பாலேந்திரா வழங்கி பெருமை
சேர்த்திருந்தார்.
அறிவிப்பாளர் நவஜோதி ஜோகரட்னம் - செல்வி. சுகனியா மரியநேசன்
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தனர்.
நாட்டியக்கலை மனவெழுச்சிகளுக்கு பயிற்சி தரவும் - நம்பிக்கையை
வளர்க்கவும் - வாழ்க்கை முரண்பாடுகளை உணர்த்தவும் - தெய்வங்களுக்கு
மகிழ்ச்சி ஊட்டவும் பயன்பட்டன என்று அறிகின்றோம். அந்தவகையில்
இந்நிகழ்ச்சிகள் அமைந்திருந்தனவென்றால் அது மிகையாகாது.
நவஜோதி ஜோகரட்னம்
லண்டன்.
29.12.2010.
navajothybaylon@hotmail.co.uk |