ஒரு நாடகத்தின் உயிர்ப்பு: பா.அ.ஜயகரனின் ‘ஒரு காலத்தின் உயிர்ப்பு’
நாடக அளிக்கை குறித்து....
-தேவகாந்தன்-

இயற்கையின்
அழகை இவ்வளவு நெஞ்சுகொள்ளும் விதமாகப் பிரதியாக்கம் பெற்ற நாடகம் தமிழில்
இல்லை. வசந்த காலம் தொடங்கியுள்ள சூழ்நிலையில் நீர் வீழ்ச்சியின் ஒலி
லயமும், பறவைகளின் கீதமும், இலை தளிர்களின் வர்ணங்களும் ஒளி
ஒலியமைப்புகளாலன்றி வார்த்தைகளில் காட்சியாக்கப்பட்டிருப்பது இங்கே
கவனிக்கப்படவேண்டியது. இயற்கை குறித்த லயம் பார்வையாளன் மனத்துள் இறங்கியது
நிஜமாயே நடந்தது. களத்தின் தேர்வுபோல் பாத்திரங்களின் தேர்வும் அளவாகவும்,
பொருத்தமாகவும் இருந்தன. இளைஞனின் உரையாடலில் வரும் பதப் பிரயோகமும், பிரயோக விதமும்
பார்வையாளரிடையே அதிருப்தியாயிருந்தன என்பதை நானறிவேன். அதைப் பின்னால்
வரும் நிகழ்வுகளில் தன்னைச் சிறப்பாக வெளிப்படுத்துவதின்மூலம் நாடகன்
ஈடுகட்டிவிட்டதாகச் சொல்லமுடியும். ஆனாலும் நிகழ்த்துகையில் விழுந்துள்ள
இந்த வலிமையீனத்தின் மூலங்களை ஓர் ஆழ்ந்த பரிசீலிப்பின்றி
விட்டுவிடக்கூடாது. நெறியாளுநராகவும், பிரதியாக்ககாரராகவுமுள்ள
பா.அ.ஜயகரனுக்கு இந்தப் பொறுப்பு மிகவும் அதிகமுண்டு.

ஆய்வுக்காக மலையுச்சி வரும் இளமங்கைக்கு உணர்ச்சி
வெளிப்படுத்தலுக்கான வெளி மிகமிகக் குறைவே. ஆயினும் அப் பாத்திரம்
நிறைவளிப்பதாகவே அளிக்கை இருந்தது. நிகழ்த்துகையின் முடிவில் மனத்தில்
சுமந்துகொண்டு பார்வையாளன் திரும்பும்படியிருந்த பாத்திரம் வனவிலாகா
பாதுகாவலனாக ஒரு காலத்தில் இருந்த முதியவர்தான். இப் பாத்திரத்தில் நடித்த
பி.ஜே.டிலிப்குமாரின் வெளிப்பாட்டுத் திறன் நாடகத்தில்
உச்சமடைந்ததென்றாலும் மிகையான மதிப்பீடாக இருக்க முடியாது. நாடகன்
பாத்திரமாக மாறிவிட்டிருந்த நிஜமே அங்கு நிகழ்ந்துவிட்டிருந்தது.
எவ்வளவு திருப்தியிருந்தபோதும், நாடகப் பனுவல்; குறித்து
அய்யங்களும் சுயவிளக்கங்களும் எழுந்து கொண்டேயிருப்பதைத் தவிர்க்க
முடியவில்லை. முதியவனின் சீன வயோதிபத் தோற்றம் எதையாவது முன்மொழிகிறதா? சீன
உருவக் கட்டமைப்பு வெறும் காட்சி ரசனைக்கானது என்றால் சரியானதோ,
ஏற்புடைத்தானதோ விளக்கமாகாது.
எனக்கு ‘மலைகளை அகற்றிய மூடக் கிழவன்’ என்ற சீனப்
பழங்கதைதான் ஞாபகத்துக்கு வந்தது. இது மா சே துங்கினால் பல தடவைகள்
எடுத்துச் சொல்லப்பட்ட கதையுமாகும். மூடக் கிழவனென வந்திருந்தாலும்,
கிழவனது தன் வம்சத்தின்மீதும், மனித குலத்தின்மீதும் இருக்கும் நம்பிக்கை
அழகாக விளக்கப்படும் கதை அது. தன் சமூகத்தின் சிரமத்தை துடைத்தெறிகிற
மூர்க்கம் கிழவனது அந்த நம்பிக்கையில் மிளிரும். ‘ஒரு காலத்தின்
உயிர்ப்’பிலும் ஒரு வகையான நம்பிக்கையே தொனிக்கிறது. வாழ்தலிலான நம்பிக்கை
அது. சீனக் கிழவன் மாதிரியிலான இவ் வார்ப்பில் பிரதியாக்ககாரருக்கு இந்த
எண்ணம் திட்டமிட்டதாய் இருந்ததா எனச் சொல்ல முடியாதெனினும், என் மனத்தில்
கிளரும் உணர்வு இது சார்ந்ததுதான்.
மேலும், வெளி கடக்கும் நவீன பிரதியாக்கமாகவும் இதை
ஒருவகையில் இனங்காண முடியும். வௌ;வேறிடங்களின, நாடுகளின், பிரபஞ்சங்களின்
பாத்திரங்களை ஒரு புள்ளியில் சந்திக்கவைத்து கதையை நிகழ்த்திக் காட்டும்
உத்தி இது. கனடாவைக் களனாகக் கொண்டு, பல்லின கலாச்சாரத்தை
மய்யப்படுத்துவதாகவும்கூட இதை அர்த்தம் படுத்திக்கொள்ளமுடியும். இது
பார்வையாளனின் சிந்தனைக்கு விடப்பட்டுள்ள இடைவெளி.
இவ் வெளி சமீப கால பிரதியாக்கங்களில் காணக் கிடைக்காதது.
லூன் பறவை குறித்த விபரம் பனுவலில் மிக வன்மையானது. லூன்
பறவை ஒரு நீர்த் தளத்தையே தனதாக்கிக்கொள்கிறது. மனிதனுக்கு அதுதான் வீடு.
நாடெனவும் படிமப்படுத்த முடியும். தனக்கான இடத்தைச் சுவீகரித்துக்கொண்ட
பின்னர், தன் வாழ்வின் துணையைத் தேடுகிறது அப் பறவை. துணையென்பது தனிமனித
வாழ்வுக்கு எப்படியாயினும், மனித குலத்துக்கு ஆதாரமானது.

பெண் பாத்திரம் கொண்டுவரும் கடிதத்தின்மூலம் தெரியவரும்
முதியவரின் காதல் வாழ்தலின் அறைகூவல்தான். அவர் வயதுக்கு அக் காதல் உடல்
சார்ந்திருக்கவேண்டிய அவசியமில்லை. அது அவ்வாறே சார்ந்திருப்பினும்
அதிலொன்றுமில்லை. ஆனால் தன் காதலை நாடிச் செல்லப் புறப்படும் அந்த
இறுதிநேரத்தில், லூன் பறவையின் கூவல் கிளர்கிறது, பறவைகள் கீதமிசைக்கின்றன,
முதியவன் செலவழிந்து சிலையாகி கைக்கோலோடு நின்றுகொண்டிருக்கிறான். தன்
‘இடம்’ என்பது வாழ்தலின் அறுதியாகி நின்றதிர்கிறது. வார்த்தைகளற்று வெறும்
ஒலியிலும், நெறியாள்கையிலும் இத்தனை அர்த்தங்களும் மௌனமாய்
வெளிப்படுத்தப் படும்போது பார்வையாளன் பிரமித்துப் போகிறான். நாடகம்
முடிவுறும்போது உறைவு கலைந்து அதிர்வு தொடங்குகிறது. நீண்டநேரத்துக்கு அது
பார்வையாளனைவிட்டு விலகுவதில்லை.
கனடாத் தமிழ் நாடகப் போக்கின் உயிர்ப்பை இப்போது
துல்லியமாய்த் தெரிகிறது இந்த நல்ல நாடகத்தின் மூலம்.
சரி, இது குறிப்பிடும்படியான நல்ல நாடகம் என்பதில்
அபிப்பிராய பேதமில்லை. ஆனால் இது மிகச் சிறந்த நாடகமா? இல்லையெனில், சிறந்த
பனுவல் கைவசப்பட்டிருந்தும், இதை ஒரு மிகச் சிறந்த நாடகமாகாமல் செய்ததெது?
ஒரு நவீன நாடகப் பனுவலானது, அதன் நிகழ்த்து முறைமையிலேயே
ஆதாரம் கொண்டிருக்கிறது. ஒளி ஒலி அமைப்புகள், அரங்க நிர்மாணம் யாவும் ஒரு
நவீன நாடக அளிக்கையில் பிரதானமானவை. ஒரு நவீன நாடகப் பிரதியை வெறும்
நாடகமாக நீர்த்துப்போகச் செய்ய இவற்றால் முடியும். தொழில்நுட்பத்தின் சகல
அனுகூலங்களும்தான் ஒரு நாடகத்தை நவீன நாடகமாக்குகின்றன என்பதை நாம்
மறுத்துவிட முடியாது.
முப்பக்க அரங்காக நடைபெறும் தெருக்கூத்தில்தான் நவீன தொழில்
நுட்ப வசதிகள் உதாசீனிக்கப்படுகின்றன. சொல்லப்போனால் இவை தெருக்கூத்து
வகையான நாடகங்களில் திட்டமிட்டே ஒதுக்கப்படுவதாகவும் சொல்லலாம். ஆனால் நவீன
நாடகம் தனக்கான உத்திகள் பலவற்றையும் தொழில்நுட்பத்திலிருந்து
பெற்றுக்கொண்டே ஆகவேண்டும். நீர்வீழ்ச்சியின் அவ்வப்போதான ஒலியிலிருந்தும்,
சொல்லாடலின் ஊடுகளிலிருந்தும்தான் அரங்கம் ஒரு மலையுச்சியென்பது
பார்வையாளனுக்குக் காட்டப்படுகிறது. பிரத்தியட்சங்களில் இது
வெளிப்படுத்தப்பட்டிருந்தால், அது விளைத்திருக்கக்கூடிய பாதிப்பு
அளப்பரியதாயிருந்திருக்கும்.
ஒலி, ஒளி, அரங்க நிர்மாணம், ஒப்பனை ஆகிய முக்கிய
விஷயங்களில் ஒப்பனை மட்டும் நன்றாகவிருந்தது என மட்டும்தான்
சொல்லக்கூடியதாயிருந்தது. ஒளியமைப்பென்பது அரங்கின் நிகழ்வுகளைப்
பார்வையாளன் பார்ப்பதற்காக ஒளியூட்டல் என்ற எண்ணம் முற்றாக
மாற்றப்படவேண்டும். ஒளி காலங்களைக் காட்டக்கூடியது, இன்ப
துன்பங்களையென்றும், இன்னும் பல்வேறினையும் உணர்வுகளிலேற்றக் கூடியது.
மட்டுமில்லை. அது காலங்களை நகர்த்திக் காட்டக்கூடியதுமாகும். நம்
தொழில்நுட்பக் கலைஞர்கள் இவை குறித்து நிறையவே இன்னும்
அறியவேண்டியதிருக்கிறதுதான்.