யாழ்ப்பாணத்தில் எம்.ஜி.ஆர். சிலைகள் சேதம்!
தமிழகத்தில் தலைவர்கள் கண்டனம்!
இது பாரதத்திற்கெதிரான சதியா? அரசியல் ஆய்வாளர்கள் மண்டையுடைப்பு!

இது சம்பந்தமாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ.வும் கண்டன அறிக்கையொன்றினை வெளியிட்டுருந்தார். தமிழகத்திலிருந்து
வெளிவரும் தினத்தந்தி அதனைப் பின்வருமாறு வெளியிட்டிருந்தது:
'ஈழத்தமிழர்களின் பூர்வீகத் தாயக மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவம் அறுபது ஆயிரத்திற்கும் மேல் குவிக்கப்பட்டு, தமிழ் மண்ணை ஆக்கிரமித்துக்கொண்டு, தமிழ் இனத்தை அழித்து ஒழிக்க முற்பட்டு வன்கொடுமையும், அராஜகமும் செய்து வருகின்றனர். தமிழ் பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி கற்பழிப்பு, கொலை கொடுமைகளை செய்கின்றனர். சிங்கள ராணுவ ஆக்கிரமிப்பு பகுதியில்
வாழும் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. நோய்க்கு மருந்து இல்லை, வைத்திய வசதி இல்லை, பசிக்கு உணவு இல்லை, மின்சாரம் இல்லை, விளக்கு ஏற்ற மண் எண்ணெய் இல்லை.
இந்த அவலம் நிறைந்த சூழலில் தமிழர்கள் உள்ளத்தை வதைக்கின்ற விதத்தில் யாழ்ப்பாணத்திலும், வல்வெட்டித்துறையிலும் ஈழத்தமிழர்கள் நிறுவி இருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் சிலைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியும், சிலைகளுக்கு தார் பூசியும் சிங்கள ராணுவத்தினர் வெறியாட்டம் ஆடி உள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு மிக அருகில் கடற்கரையில் உள்ள கரையூர் என்னும் பகுதி
குருநகர் என்று அழைக்கப்படுகிறது.
அங்கு வாழும் மக்களில் பெரும்பாலும் மீனவர்கள். எம்.ஜி.ஆர். மீது அளவற்ற பக்தியும், பாசமும் கொண்டவர்கள். மிகப்பெரிய விழா நடத்தி மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு சிலை அமைத்தனர். அந்த சிலையை சிங்கள ராணுவத்தினரும், துணை ராணுவத்தினரும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் இந்திய சிற்பக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலையை வல்லவை மக்கள் மிகச் சிறப்பாக அமைத்து முக்கியமான நாள்களில் சிலைக்கு மாலை அணிவித்து போற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு வார காலத்திற்கு மேலாக சிங்கள ராணுவம் ஊரடங்கு சட்டத்தை போட்டு பொது மக்களின் நடமாட்டத்தை முடக்கி விட்டு எம்.ஜி.ஆர். சிலையில் தாரை கொட்டி சேதப்படுத்தி உள்ளது.
தமிழ் ஈழ மக்களின் போராட்டத்திற்கு அடிப்படையும் அரணும், அமைத்து கொடுத்ததில் எம்.ஜி.ஆருக்கு பெரும் பங்கு உண்டு. எனவே தமிழ் ஈழ மக்கள் எம்.ஜி.ஆரை நெஞ்சில் வைத்து போற்றுக்கின்றனர். தமிழர் வழிப்பாட்டுத் தலங்களையும், தமிழர் நூலகத்தையும் கடந்த காலங்களில் சூறையாடி நாசம் செய்த போக்கு மாறவே இல்லை. யாழ்பாணத்தில் தமிழர்கள் மிகுந்த மதிப்பு அளித்து நிறுவி இருந்த
காந்தியடிகள் சிலையையும், திருவள்ளுவர் சிலையையும் அவ்வையார் சிலையையும் சிங்கள ராணுவமும், போலீசும் உடைத்து நொறுக்கி செய்த அக்கிரமத்தைத் தொடர்ந்து இப்போது எம்.ஜி.ஆர். சிலையையும் சேதப்படுத்தி உள்ளனர்.
இந்த செயல் ஈழத்தமிழர்கள் மனதையும் தாய் தமிழகம் உள்ளிட்ட உலகமெங்கும் வாழும் தமிழர்கள் நெஞ்சத்தையும் காயப்படுத்தி கொந்தளிக்கச் செய்து உள்ளது. இந்த அராஜகத்தில் ஈடுபட்ட சிங்கள ராணுவத்திற்கும், ராணுவத்தை ஏவி இயக்கி வரும் சிங்கள அரசுக்கும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.' இவ்வாறு அந்த அறிக்கையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார் [ நன்றி: தினத்தந்தி].

தமிழகத்துக்கு வெளியில் எம்.ஜி.ஆருக்கு அதிக எண்ணிக்கையில் இரசிகர்களும், ஆதரவாளர்களுமிருப்பது இலங்கைத் தமிழர்கள் மத்தியில்தான். ஆறுபதுகளில் எம்.ஜி.ஆர் நடிகை சரோஜாதேவியுடன் இலங்கை வந்திருந்தபொழுது அவருக்கு இலங்கைத் தமிழர்கள் இலட்சக்கணக்கான் எண்ணிகையில் திரண்டு மகத்தான் வரவேற்பளித்திருந்தனர். எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் மீண்டும் மீண்டும் திரையிடப்பட்ட போதெல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக பல நாட்கள் ஓடி சாதனை படைத்தன. யாழ்நகரிலிருக்கும் ராஜா திரையரங்கில் எம்.ஜி.ஆரின் நூறாவது திரைப்படமான ஒளி விளக்கு முதல் முறை திரையிட்டபோது 169 நாட்கள் வரையில் ஓடியது. பத்து வருடங்கள் கழித்து மீண்டும் திரையிடப்பட்டபோது அரங்கு நிறைந்த காட்சிகளாக மீண்டும் நூறு நாட்களைக் கடந்து ஓடியது. எம்.ஜி.ஆர் ஈழத்தில் இஸ்லாமியத் தமிழர்கள் மத்தியிலும் மிகுந்த அபிமானம் பெற்றவர். அவரது 'பாக்தாத் திருடன்' கொழும்பில் எழுபதுகளினிறுதியில் திரையிடப்பட்டபோது நூறு நாட்களைக் கடந்து ஓடியது. 'குலேபகாவலி' பதின்மூன்றாவது தடவையாக எழுபதுகளில் திரையிடப்பட்டபோது எழுபது நாட்களைக் கடந்து ஓடியது.

குரலெழுப்பியதற்குக் காரணமானவர்களில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர். தனது இறுதிக் காலத்தில் ஈழப்போராட்ட நடவடிக்கைகளுக்கு பல வழிகளிலும் அவர் செய்த பங்களிப்புகள் பற்றி அண்மையில் வெளிவந்த விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் நூலிலும் குறிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரையில் அவர் ஒரு நடிகர் மட்டுமல்லர். அரசியல் தலைவரும் கூட. தமிழகத்தின் கோடிக்கணக்கான தமிழர்களின் இதயங்களில் சிம்மாசனமிட்டிருக்கின்றதொரு தலைவர். பாரதத்திலும் ஏனைய மாநில மக்களாலும் மதிக்கப்படுகின்ற முக்கியமான தலைவர்களிலொருவர். பாரத்தின் மிக முக்கியமான விருது 'பாரத ரத்னா' விருது. அந்த விருது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலருக்கே வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் எம்.ஜி.ஆர். ஆக எம்.ஜி.ஆரின் சிலைகளுக்கு இழைக்கப்படும் அவமரியாதை ஒரு சாதாரண நடிகருக்கு இழைக்கப்படும் அவமரியாதையல்ல. தமிழக, பாரத மக்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதையாகத்தான் அதனைக் கொள்ள வேண்டும்.
அதே சமயத்தில் எம்.ஜி.ஆரின் சிலைகளை இலங்கை இராணுவம் ஏன் இச்சமயத்தில் சேதப்படுத்தி அவமரியாதை செய்ய வேண்டும். அண்மைக்காலமாகக் குழந்தைகள், பெண்கள், அப்பாவிகளையெல்லாம் மிகப் பயங்கரமான முறைகளில் படுகொலை செய்து சர்வதேச சமூகத்தின் கடும் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கும் இலங்கை இராணுவத்தின் இத்தகைய செயல்களுக்குப் பின்னணியில் பாகிஸ்தானின்
உளவுப் பிரிவு இருப்பதற்கான சாத்தியங்கள்பற்றி அரசியல் ஆய்வாளர்கள் ஐயுறுகின்றார்கள். இத்தகைய நடவடிக்கைகளின் தீவிரத்தின் காரணமாகத் தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் விடயத்தில் ஓரளவுக்கு 'மெத்தனமாக'விருக்கும் இந்திய மத்திய அரசுக்கு எதிராக ஒரு போராட்ட அமைப்பொன்று உருவாகாதா என்ற நப்பாசையில் பாகிஸ்தானின் உளவுப் பிரிவு செயற்படுவதாகச் சிலர் சந்தேகிக்கின்றார்கள்.
இதன் காரணமாகத்தான் அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்ற இலங்கைக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதுவர் மேல் நிகழ்த்தப்பட்ட தாக்குதலையும் மேற்படி அரசியல் ஆலோசகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஏற்கனவே காஷ்மீர்ப் பிரச்சினையைப் பூதாகாரமாக்கி இந்தியாவின் இறைமைக்குப் பாரிய பாதிப்பொன்றை ஏற்படுத்தியுள்ள பாகிஸ்தானின் கனவு ஈழத்தமிழர்களின் பிரச்சினையை வைத்துத் தென்னிந்தியாவிலும், குறிப்பாகத் தமிழகத்திலும் இன்னுமொரு கிளர்ச்சிப் பிரதேசத்தை உருவாக்குவதன் மூலம் மேலும் பாரதத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளவிப்பதே இதன் காரணம் எனவும் மேற்படி ஆய்வாளர்கள் மேலும் கருதுகின்றார்கள். இதன் காரணமாகத்தான் இலங்கைக்கான தனது தூதர்களாக இந்தியாவுக்கெதிராகக் கடும் போக்கினைக் கடைப்பிடித்த முன்னாள் இராணுவ அதிகாரிகளை பாகிஸ்தான் அரசு அனுப்பி வைக்கிறதென்றும் அவர்கள் கருதுகின்றார்கள். இந்த விடயதில் பாகிஸ்தான் அரசு ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கப் பார்க்கிறது. இலங்கை அரசுக்கு உதவியதாகவும் முடிகிறது. அதே சமயத்தில் காஷ்மீரைப் போல் தமிழகத்திலும் இந்திய அரசுக்கெதிராக இன்னுமொரு போர்முனையைத் தூண்டி விடுவதன் மூலம் இந்தியாவின் உறுதியினைக் குலைத்ததாகவுமிருக்கிறது.

- ஊர்க்குருவி -