இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவமபர் 2010  இதழ் 131  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!

புகலிட இலக்கியமும் பண்பாடும்

- சு. குணேஸ்வரன்


அறிமுகம்
சு. குணேஸ்வரன்ஈழத்திலக்கியத்தின் அறாத்தொடர்ச்சியாக புகலிட இலக்கியம் கடந்த 80 களிலிருந்து வளர்ச்சியடைந்து வருகின்றது. 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் மேற்குலக நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் வாழ்வு பல்கலாசார சூழலுக்குள் பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வகையில் புகலிடத்திலிருந்து எழுதப்படுகின்ற கவிதை சிறுகதைகளை ஆதாரமாகக் கொண்டு புகலிடத்தமிழர்கள் மத்தியில் பண்பாடு
பற்றி நோக்குகின்றது இக்கட்டுரை.

பண்பாடு
இனத்தாலும் மொழியாலும் பிறவற்றாலும் முற்றிலும் வேறுபட்ட சூழலில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதனாலே அப்பண்பாட்டுச் சூழலின் தாக்கம் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்விலும் செல்வாக்குச் செலுத்த ஆரம்பிக்கின்றது. புகழ்பெற்ற மானிடவியலாளரான ‘எட்வர்ட் பர்னட் டைலர்’ பண்பாடு என்பதற்கு பின்வருமாறு வரைவிலக்கணம் தருகிறார். “பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்கநெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும், மனிதன் சமுதாயத்தில் ஓர் உறுப்பினராக இருந்து கற்கும் பிற திறமைகளும் பழக்கங்களும் அடங்கிய முழுமைத் தொகுதியாகும்.”(பண்பாட்டு மானிடவியல்)

தமிழர் சமுகம் தன் இனக்குழுமத்துடன் தன் சொந்த நாட்டில் வாழ்ந்தால் இந்த முழுமைத் தொகுதியைக் கற்றுக் கொள்வதில் எந்தச் சிக்கல்களும் இல்லை. ஆனால்> புவிப்பரப்பிலிருந்து சிந்தனைவயப்பட்ட நிலை வரை எமது தமிழ்ப்பண்பாட்டோடு ஒப்புமை காண முடியாத சூழலில் அவர்கள் வாழ்கின்ற போது புதிய பிரச்சனைகளும் முரண்பாடுகளும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

புலம்பெயர்ந்தோர் கவிதையில் பண்பாடு
புகலிட இலக்கியமும் பண்பாடும் பண்பாடு பற்றிய சிந்தனை புலம்பெயர்ந்தவர்களில் எழுத்துக்களில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதற்கு ஆதாரமாக முதலில் கவிதைகளை நோக்குவோம். பண்பாட்டு மாற்றம் என்பது (culture change) புலம்பெயர்ந்தவர்களின் தொழில் முறையாலும் அவர்களின் அன்றாட நடைமுறைத் தேவைகளாலும் ஏற்பட்டு விடுகின்றன. இது கவிதைகளில் எப்படி முரணாக வருகின்றது என்பதைப் பார்ப்போம்.

“…………………………….
இன்று ஒரு தமிழ்த் திருமண நாள்
கோட்
அதற்கு மட்டுமான ரவுசர்
பொருத்தமான சப்பாத்து
ஒரு அவன்!
அவளோ எமது கலாசாரத்தைக் காவ வேண்டும்
குளிரோ வெயிலோ
கூனியோ குறுகியோ!
காவினாள்.
சாறி
தலையில் கனகாம்பரம்
நெற்றியில் பொட்டு
கழுத்தில்தாலி
போதாததிற்குஅணிகலன்கள்.
அதேஅவள்!
………………………
நாமோ வேட்டியைக் கொன்றவர்கள்.
சரத்தை எம் வீட்டுக் கதவுவரை மட்டும்
உலவ சுதந்திரம் கொடுத்தவர்கள்.
ஆனாலும் கோட் ரை உடன் மேடை ஏறி
எமது கலாசாரம் வேண்டி முழங்குவதிலும்
வெட்கம் கெட்டவர்கள்.
எங்களுக்கு வேண்டும் எங்கள் கலாசாரம்.
அச்சடித்தபடி!
அதைக் காவுவதற்கு பெண்களும் வேண்டும்.
தூ …!”
(ரவி – சுவிஸ்)

இன்னொரு கவிதையில்;

“ புலம்பெயர்ந்து வந்ததனால்-நாம்
பொன் கொண்டோம் பொருள் கொண்டோம்
பெருந்தொகையில் கார் கொண்டோம்
தங்கத்தால் கத்தி செய்து பிள்ளைக்குத்தான் கேக்கு
வெட்டிவிட்டோம் …இதுபோல
குங்குமத்தின் மகிமைதனை
குலமகளும் மறந்துவிட்டாள்.
கரிய நெடுங்கூந்தல் கரைச்சலென்று
கன்னியரும் அறுத்துவிட்டார்- சூழ்நிலையால்
சீரான பட்டுச்சேலை பாரமென்று கிழவியரும்
ஜீன்சுக்குள் புகுந்துவிட்டார்.
புலம்பெயர்ந்து வந்ததனால் புதிய பெயர் கொண்டோம்
சுதந்திரமாய் பறந்தவெம்மை
ஒரு கூட்டுக்குள் தானடைத்தோம்
ஊருக்காய் உறவுக்காய் ஒருகணமும்
ஊராலும் உறவாலும் மறுகணமும்
உள்ளம் தானுடைந்து உருக்குலைந்து போகின்றோம்..”
(அம்பி)

இந்த இரண்டு கவிதைகளின் அர்த்தப்படுத்தலுக்கும் கவிஞர்களின் காலத்திற்கும் இடையில் உள்ள தலைமுறை இடைவெளியை புரிந்துகொள்ள வேண்டும். நம்பிக்கைகள்> கருத்துக்கள்> வழக்காறுகள் ஆகிய அறிதல்சார்கூறுகளும் விழுமியங்கள்> நெறிமுறைகள்> விதிகள்> குடிவழக்குகள்> வழக்கடிபாடுகள்> மரபாண்மைகள்> அன்பளிப்புகள்> வழக்கங்கள்> பழக்கங்கள் ஆகிய நெறியியல் சார்கூறுகளும் எமது தமிழ்ச் சூழலில் இருந்து மெல்லமெல்ல விலகி> புதிய பண்பாட்டுச் சூழலில் பண்பாட்டு மாற்றத்தையும் (culture change)> பண்பாட்டுக் கலவையையும்; (culture comlex) ஏற்படுத்தும்போது அது பாரதூரமான தாக்கத்தை புலம்பெயர்ந்த தமிழரிடம் கொண்டுவருகிறது.

அவர்கள் பேசும்மொழி> பழக்கவழக்கங்கள்> எமது இளம் தலைமுறைகளுக்கு கிடைக்கின்ற கல்விச்சூழல்> அவர்களின் பிறநாட்டு நண்பர்களின் தொடர்புகள்> உறவுநிலைகள்> எமது மரபுகளை ஏற்றுக் கொள்வதில் காட்டும் தயக்கங்கள் எனப் பல விடயங்களைக் கூறலாம். குறிப்பாக மொழி நுண்மையான ஆய்வுக்குரியது. இது புலம்பெயர்ந்து வாழும் தலைமுறை இடைவெளிகளை மனங்கொண்டே கூறமுடியும். மொழியாயினும் சரி > அந்நாட்டுக் கலாசாரத்திற்கு ஏற்ற வாழ்வு முறையாயினும் சரி எமது தமிழ்ப்பண்பாட்டின் பார்வையில் முரண்பாட்டுக்கும் சிக்கலுக்கும் உரியதே.

பின்வரும் கவிஞர்களின் கவிதைவரிகளைப் பார்ப்போம்.

“ தமிழ் பேசி
கவி பாடி
கருத்துக்கள் கக்கிய
உதடுகள்
முரண்பாடு கொண்டு
சிக்கித் தவிக்கின்றன.
சிந்தனையும் தான்”(நிருபா)

“சூழல் மொழியே வாழும் மொழியாய்ச்
சுவைபட வளர்கிறது.
வாழும் மொழியாய் வளரும் மொழியாய்
வாயில் தவழ்கிறது.
நாளும் பொழுதும் நாவிலும் மொழியே
நமதாய் வருகிறது.
ஆளும் மொழியாய் நாளும் அதுவே
நாவில் திரிகிறது.”(அம்பி)

“இழந்தோம்
நாட்களை இழந்தோம்
உறவுகளை இழந்தோம்
பதிவுகளை இழந்தோம்
தேசத்தையும் மண்ணையும்
மொழியையும் மறந்து
புதிய தலைமுறை வாழ்கிறது”(செழியன்)


அச்சூழலில் பிறந்து கல்வி கற்று வாழும் மூன்றாவது தலைமுறைப் பிள்ளைகள் பிறப்பால் தமிழ்ப் பிள்ளைகளாக இருந்தபோதிலும், அவர்கள் வேற்றுமொழி பேசுபவர்களாக வளரவேண்டிய சாத்தியப்பாடுகள் தான் அதிகம்.

இங்கு பிரச்சனை மூன்றாவது தலைமுறையினருக்குத் தான். அவர்களிடம் எமது இனத்தின் அடையாளத்தை எவ்வாறு கையளிப்பது என்ற பிரச்சனை வருகிறது. இந்நிலையில் இன்று புலம்பெயர்ந்த பெரியவர்கள் எல்லாம் முன்நின்று கோயில்கள் சங்கங்கள் தமிழ் விழாக்கள் என்று சொல்லிக் கொண்டாலும் எமது அடையாளமாக மிஞ்சப் போவது தமிழில் அல்லாத பண்பாட்டுப் பேணுகைதான்.

“தமிழை தமிழ்ப் பண்பாட்டுக்கு அப்பாலே கொண்டு செல்லுகின்ற பொழுது> தமிழின் பண்பாட்டுப் படிமங்களிடையே தமிழைப் பேணுவது என்பது ஒரு முக்கிய பிரச்சனையாக இன்னுமொரு பத்தாண்டில் மேற்கிளம்பப் போகின்றது. அப்பொழுது தமிழ்த் தன்மையின் சாரம் என்ன என்ற கேள்வி மேலெழும்பும்”(பேரா கா.சிவத்தம்பி) என்று பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களிள் கூற்று இன்னமும் பொருத்தமாகவே இருக்கின்றது.

நெறிமுறைகள் என்று வரும்போது மொழியை விடவும் மிகப் பாரதூரமான விளைவுகளை அந்நியக் கலாசாரம் எமது தமிழ்ப் பண்பாட்டுக்குள் ஏற்படுத்துகின்றது. தமிழர்களின் உறவுநிலைகளில் இந்த மாற்றம் நிகழ்தலை விரும்பியோ விரும்பாமலோ மறுத்தாக வேண்டிய கடப்பாடு எமது தமிழ் வாழ்வு நிலைக் கூடாக ஏற்படுகின்றது.

“நாளை உன் மகன்
எங்காவது ஒரு Bar இல் Disco வில் உரசக்கூடும்;
உறவு காதலாகக் கூடும்
எமக்கொரு பேரன்
கறுப்பு வெள்ளை அல்லது கலர்களில்
பிறக்கக் கூடும்.”(ஆதவன்)

“ ……………………………..
நான் அழகானவளா?
என்னை உனக்குப் பிடித்திருக்கிறதா?
பெண்ணே
நீ அழகானவள் என்பதில் எந்தப் பொய்யுமே இல்லை.
உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.” (கொய்யன்)

“ஆண்மோகம் பெண்போகம் காரணமாய்
வந்த நோய்க் கலப்பே.
ஆனாலும் இன்று அதிகம் பலியாவது
அப்பாவிக் குழந்தைகளே!” (மகேஸ்வரி)


உதாரணத்திற்காக மேலே குறிப்பிட்ட மூன்று கவிதைகளிலும் ஓடுகின்ற கவிதைச்சரடு யாதெனில்; ஒழுக்கவியலானது அந்நிய கலாசார வாழ்வுக்குள் கேள்விக்கு உள்ளாவதேயாகும். தனிமனித உணர்வுகள்> விருப்பு வெறுப்புக்கள்> பாலியற் தேவைகள்> உறவுநிலைகள் என்பவற்றில் இந்தக் கேள்வி அந்நிய கலாசார சூழலிலே தமிழ்ப் பண்பாட்டை கைக்கொள்ளல் என்ற வகையில் ஏற்படுகின்றது. “1950 60 களில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த இந்தியர்கள் அமெரிக்காவை சொர்க்கம் என நம்பினார்கள். அவர்களின் பிள்ளைகள் 13>14 வயது வந்தவுடன் ‘டேற்றிங்’ போதைப் பொருள் பாவனை> ஆபாச தொலைக்காட்சி என்பவற்றிற்கு அடிமையாகி சிதைந்ததை தம் கண்ணெதிரே கண்டார்கள். இதேபோல் இங்கிருந்து புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் பணம் ஈட்டும் சுயநலத்தினால் தங்கள் பரம்பரைகளை மட்டுமல்ல அவர்களது அந்நியச் செலாவாணியின் முறையற்ற செல்வாக்கின் காரணத்தால் எங்கள் எதிர்காலப் பரம்பரையையும் சிதைக்கத் தான் போகிறார்கள்” (பேரா.கா.சிவத்தம்பி) என்ற கருத்து சிந்தனைக்குரியது. மேலே குறிப்பிட்ட இக்கூற்றுக்கு பொருந்துமாற்போல் கவிதைகளை விட சிறுகதைகளையே எடுத்துக் காட்டலாம்

ஏனெனில் பண்பாடு என்பது ஓடுகின்ற நீரோடைபோல். காலத்திற்கும் மனித வாழ்வு நெருக்குவாரங்களுக்கும் ஏற்ப அடிப்படையை மாற்றாமல் சிலவற்றையே மாற்றுகின்றது. ஆனால் அந்நிய கலாசாரத்தில் இது பலத்த சிந்தனைக்கு உரியதாகும்.

“பண்பாட்டு மாற்றம் ஒரு சிக்கலான நிகழ்வாகும். இதைப் பல காரணிகள் இயக்குகின்றன. அவற்றுள் கண்டுபிடிப்புக்கள் வெளிப்படுத்துதல்கள்> பரவல்> பண்பாட்டுப் பேறு> ஓரினமாதல்> நவீனமயமாதல்> தொழில்மயமாதல்> நகரமயமாதல்> புரட்சி போன்றவை முதன்மையாகச் செயல்படுகின்றன.” (பக்தவத்சலபாரதி- பண்பாட்டு மானிடவியல்)

இந்தவகையில்> சிற்சில மாற்றங்களை புலம்பெயர்ந்த தமிழர் வாழ்வில் அந்நிய கலாசார சூழல் ஏற்படுத்துதல் தவிர்க்க முடியாது. இவ்விடத்தில் எமது தமிழர் சமுகம் பேணிவரும் மீளுருவாக்கம் பற்றியும் சிந்தித்தல் வேண்டும். ஏற்கனவே குறிப்பிட்டது போல் விழாக்கள்> சடங்குகள் முதலியனவற்றை புலம்பெயர்ந்த தேசத்திலும் நடவு செய்கின்றபோது எமது சமுக அடுக்குகளில் புரையோடிப் போயிருக்கும் அதிகாரம்> சாதி> வர்க்கம் என்பன மீண்டும் அங்கு முளைகொள்ளத் தொடங்குகின்றன. தமிழ்வாழ்வு> மேலைத்தேயவாழ்வு இரண்டிற்குள்ளும் மூச்சுத் திணறி வாழும் இரட்டை வாழ்வே இறுதியில் மிஞ்சிப்போகின்றது.

“சிரிக்க முயன்றும் தோற்றுப் போகிற
இயந்திர மனிதன் நான்.
இறால் போட்டு சுறா பிடிப்பவர்க்கிடையில்
அகப்பட்டதென்னவோ
தலைவிதிதான்.
எத்தனை நாளைக்குத் தானம்மா
சவாரி மாடென நிற்பது?
நுகத்தடி கண்டிய காயங்கள்
கழுத்தில் மாலை போல்.
ஊர் நினைப்பும் உற்றார் உறவினர் பற்றிய
துடிப்பும்/எப்போதாவது ஒரு நாள்
மண்ணுக்குத் திரும்பி வருகிறதான
கனவும் நினைவும்
நிழலாய்த் தொடரும் இரட்டை வாழ்க்கை.
குளத்து நீரில் தாமரை இலைபோல்
ஓட்டவும் முடியாது> வெட்டவும் முடியாது
தவிக்கிற மனது” (பாலகணேசன்)


என்று கூறுகின்ற குரல் தான் இன்றைய புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இரட்டை வாழ்வுக்கு பொதுமையான குரலாக ஆகிவிடுகின்றது. “இந்தத் தமிழர்கள் செய்யவேண்டிய பணிகள் பல உள்ளன. அவற்றுள் முதலாவது தமக்குப் பின் வரும் சந்ததியின் தமிழ்த்தன்மையை (அடையாளத்தை) உறுதிப்படுத்திக் கொள்வதாகும். யாழ்ப்பாணத்தையும் மட்டக்களப்பையும் நோர்வேயிலும்> கனடாவிலும் நாற்று நடவு செய்ய முனையாது அவ்வவ் நாடுகளின் பண்பாடுகளோடு எவ்வாறு இணைந்து கொள்வது என்பது பற்றிச் சிந்தித்து அடிப்படைத் தமிழ்ப் பிரக்ஞையை பேணிக் கையளிப்பதற்கான வழிமுறையை அறிவுபூர்வமாக மேற்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் மொரிஷியசிலும் றெயூனியோவிலும் தமிழுக்கும்> தமிழருக்கும் ஏற்பட்ட கதிதான் இவர்களுக்கும் ஏற்படும்.” (‘புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஓர் அறைகூவல்’ என்ற டாக்டர் க. இந்திரகுமரின் நூலுக்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் எழுதிய அணிந்துரையில்)

புகலிட இலக்கியமும் பண்பாடும் ஈழத்து நவீன கவிதையின் ஓட்டத்திற்கூடாகவே தடம் பதித்துச் செல்கின்ற புலம்பெயர் கவிதைகள் அதற்குள்ளேயே சில விலகலையும் நிகழ்த்தியிருக்கின்றன. அந்த விலகல் தமிழ்ப் பண்பாட்டால் பண்பட்ட மனங்களுக்கு கொஞ்சமும் பரிட்சயமில்லாத அந்நிய கலாசார வாழ்வுச் சூழலியே நிகழுகின்றது.

1. புதிய நிலவமைப்பு> அதற்கேற்ப இயற்கைச்சூழல்.
2. பல்கலாசார வாழ்வுப் பின்னணி.
3. மொழி வேறுபாடு.
4. வளர்ச்சியடைந்த சமூகம்.

என்பவற்றைக் கருத்திற் கொள்ளும்போது இவர்களின் படைப்புக்களையும் படைப்பு மனோபாவங்களையும் புரிந்து கொள்ள முடியும். இதுவே ஈழத்து தமிழ் இலக்கியச் சூழலில் அதிகமும் பேசப்படாத அந்நியம்> தனிமை> நிறவாதம்> பாலியற்பிரச்சனை என்பவற்றை பொருளாகக் கொண்ட கவிதைகள் அங்கிருந்து வெளிவருவதற்கும் காரணமாக அமைந்துள்ளன. இவை அடிப்படையில் அவர்களின் படைப்புக்களில் புதிய உணர்வு உள்வாங்கல்களுக்கு இடங்கொடுத்து வெளிப்படுவதைக் கண்டுகொள்ளலாம்.

எமது மரபின்படி ‘தனித்திருத்தல்’ என்பது அதிகம் இல்லை. சங்க இலக்கியங்களும் கூட தலைவன் வேறு இடத்திற்கு தொழில் நிமிர்த்தம் சென்றாலும் குறிப்பிட்ட பருவ காலத்திற்கு இடையில் திரும்பி வருவேன் என்று வாக்குக் கொடுத்து விட்டே செல்கின்றான். பாலைநில ஒழுக்கமும் தலைவனுடன் தலைவி உடன்செல்லலையே குறிப்பிடுகின்றது. எமது மரபின்படி திருமணம் முடித்த பெண்; கணவன் வெளியூர் சென்றவிடத்து அவளின் தாய் தகப்பன் வீட்டில் தங்க வைக்கப்படுகின்றாள். ஆரம்பத்தில் இருந்த தாய்வழிச் சமூக அமைப்பும்> கூட்டுக்குடும்ப அமைப்புக்களும் கூட எப்போதும் தனித்திருத்தலை விரும்பியனவாக இல்லை. கூட்டுக்குடும்பம் பின்னர் உடைந்து கருக்குடும்பமாகியபோதும்> எமது உறவுமுறைகளும் தொடர்புகளும் பாரம்பரிய சடங்குகளிலும்> விழாக்களிலும்> நிகழ்வுகளிலும் தொடர்ந்து வாழ்ந்து வந்தன. தனிமை வாழ்வும் உலகமயமாக்கல் கலாசாரத்திற்கு உள்ளே அமிழ்ந்து போன நிலையில் தனிமனிதனின் உணர்வுகள் ஒரு பொருட்டாக கருதப்படவில்லை. எல்லாமே பிம்பங்களாகவும்> மாயைகளாகவும் மாறிப்போய் விடுகின்ற நிலையிலே மனிதனுக்கு அப்பாற்பட்ட சடப்பொருட்களும் உள் உணர்வுகளும் கவிதையாவதைக் கண்டுகொள்ளலாம்.

புகலிட இலக்கியமும் பண்பாடும் இன்றைய உலகமயமாக்கல் இதனை இன்னமும் வேகமாக்கியிருக்கின்றது.  உலகமயமாக்கல் ‘கலாசாரத்தை’ பண்டமாகவும் பொருளாகவும் பார்க்கத் தொடங்கி விட்டதால் மனித உறவுகளும் உணர்வுகளும் பின்தள்ளப்பட்டு எல்லாமே இலாப நட்டக் கணக்காகி விடுகின்றன. இந்த கலாசாரத்துள் சிக்குண்டு போனமையைத்தான் இந்த புலம்பெயர் படைப்புக்களில் உள்ளடங்கியுள்ள சில கவிதைகள் எமக்குக் காட்டுகின்றன.

புலம்பெயர்ந்தோரின் சிறுகதைகளில் பண்பாடு புலம்பெயர் கவிதைகளை விடவும் சிறுகதைகளில் தமிழர்தம் பண்பாட்டுப் பெறுமானத்தை மேலும் இலகுவாக அறிந்து கொள்ளமுடியும். புகலிடச் சூழலை மையப்படுத்திய தேர்ந்தெடுத்த சிறுகதைகளிலிருந்து இதனை ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டலாம். பண்பாட்டைப் பிரதிபளிக்கும் தனித் தொகுப்பு என்று அல்லாமல் அச்சூழலிலிருந்து எழுகின்ற படைப்பாளிகளின் சில கதைகளாவது இதனை வெளிப்படுத்தத் தவறுதில்லை.

வழிவழியாக எமது மூத்த தலைமுறைகள் மண்ணில் கைக்கொண்;ட மரபுகள் பழக்கவழக்கங்களை கைவிட முடியாத நிலையும்> அந்நிய கலாசாரத்துக்குள் தம்மை உடனடியாக மாற்றிக்கொள்ள முடியாத நிலையும் இங்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு ஏற்படுகிறது. இளைஞர் யுவதிகளாக சென்றோர் இரண்டு கலாசாரத்துக்குள்ளும் ஒத்துப்போகவேண்டியோராய் உள்ளனர். புதிய தலைமுறைகள் பிறப்பால் தமிழராக இருந்தாலும் அவர்களின் மொழி> பழக்கவழக்கம் அந்தந்த நாட்டு கலாசாரத்திற்கு உட்பட்டதாகவே அமைந்து விடும் நிலை ஏற்படுகிறது. இது குறிப்பாக இளைஞர் யுவதிகளின் செயற்பாடுகள் பெற்றோருக்கு பலவித நெருக்கடிகளை தோற்றுவித்து விடுகின்றது.

“அங்கு ஏற்படுகிற சமூக> உளவியல் மாற்றங்களால் எங்களுடைய ஆடைமுறைமை மாறுகிறது. வாழ்க்;கை முறைமை மாறுகிறது. அங்குள்ள சீதோசன நிலைகளால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். அங்குள்ள பாடசாலைகளில் கல்வி கற்கப்போகின்ற பிள்ளைகள் பிற பண்பாடுகளுக்கு பரிச்சயமாகி விடுகிறார்கள். அவர்கள் மற்றைய பண்பாடுகளின் அம்சங்களை நன்கு அறிந்தவர்களாக வருகிறார்கள். அந்தப்பண்பாட்டின் நியமங்கள் எங்கள் வீடுகளுக்குள் வருகிறது. இதனால் இரு வேறுபட்ட மனோநிலை வீடுகளில் ஏற்படுகிறது. பெற்றோர்கள் சடங்குகளை தமிழ்ப் பண்பாட்டைக் கொண்டவர்களாகவும்> பிள்ளைகள் அதை விரும்பாதவர்களாகவும் வளர்க்கப்படுகின்றனர். பெற்றோர்கள் இச்சடங்குகளை விரும்பக் காரணம் இந்தச் சடங்குகள்தான் அவர்களின் சமூக ஒருமைப்பாட்டிற்கான தளமாகும்” (பேரா.கா.சிவத்தம்பி) என்ற கூற்று அங்கு வாழும் புதிய தலைமுறை பற்றி தெரிந்து கொள்ள உதவுகின்றது. மொழி புரியாமை மிக முக்கியமான பிரச்சனையாக உள்ளது. உடையில் இருந்து உறவுமுறைகள் வரை வித்தியாசமான வாழ்வுச் சூழலாக உள்ளபோது பண்பாட்டு நெருக்கடிகள் தமிழரை முரண்பட வைக்கின்றது. சக்கரவர்த்தியின் ‘மனசு’>அ. முத்துலிங்கத்தின் ‘கொம்புளானா’> அளவெட்டி சிறிசுக்காந்தராசாவின் ‘மரபுகளும் உறவுகளும்’ > கலைச்செல்வனின் ‘கூடுகளும்’> ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘அரங்கேற்றங்கள’;> ரதியின் ‘நிறமில்லை’> >ஷோபாசக்தியின் ‘பகுத்தறிவு பெற்ற நாள்> தனது மற்றது நான்காம் பிரஜை>’ கோவிலூர் செல்வராஜனின் ‘புதிய தலைமுறை’> ஆசி. கந்தராஜாவின் ‘ஒட்டுக்கன்றுகளின் காலம்> முன்னிரவு மயக்கங்கள்’> ஆகிய சிறுகதைகளை உதாரணமாகச் சுட்டலாம்.

பொ. கருணாகரமூர்த்தியின் சிறுகதைகளில் ‘ஒரு கிண்டர்கார்டன் குழந்தையின் ஆத்ம விசாரங்கள் > விண்ணின்று மீளினும் > வண்ணத்துப் பூச்சியுடன் வாழ முற்படல்’> ஆகிய கதைகளில் இந்தப் பண்பாட்டு நெருக்கீட்டை அறிந்து கொள்ளமுடிகின்றது. புலம்பெயர் தமிழர்களின் புதிய தலைமுறைகளுக்கு ஏற்படும் குழப்பங்களை ஒரு குழந்தையின் கேள்விகளிலும்> தந்தையின் பதிலுக்கூடாகவும்>பொ. கருணாகரமூர்த்தி எடுத்துக் காட்டுகின்றார். கடவுள் நம்பிக்கையும்> தத்துவமும் எமது அறிவார்ந்த செயற்பாடுகளுடன் ஒப்பிடப்படும்; போது ஒன்றுக்கொன்று முரணாக அமைகின்றது. இது புதிய தலைமுறைக் குழந்;தைகளின் மனங்களின் விசாரணையாக விரியும்போது விடைகூறமுடியாத நிலை தமிழ்ப்பண்பாட்டால் கட்டமைக்கப்பட்ட தலைமுறைகளுக்கு ஏற்படுகின்றது. ஜேர்மனியில் வாழும் ஒரு தமிழ் இளைஞன் தாய்லாந்துப் பெண் ஒருத்தியுடன் வாழ முற்படும்போது அவனுக்குள் ஏற்படும் முரண்பாடுகளை வெளிப்படுத்துவதோடு> அவனைச் சூழ்ந்த தமிழ்ச்சமூகத்தின் ஒதுக்குதலுக்கு அவன் ஆளாவதையும் ‘வண்ணத்துப்பூச்சியுடன் வாழ முற்படுதல்’ என்ற சிறுகதை சித்திரிக்கின்றது.

“சித்தார்த்தன் என்னைப் பாருங்கள் நல்ல தாம்பத்தியம் என்பது வெறும் மோகங்களாலோ செக்சினாலோ அமைந்து விடுவதில்லை. அங்கே ரசனைக்கலப்புகளும் கருத்துப் பரிமாற்றங்கள் இதெல்லாம் இருக்கவேணும். அப்போதுதான் அது சுவைபடும். எங்களுடைய வாழ்க்கையைப் பாருங்கள் குறைந்தபட்சம் எங்கள் சாப்பாட்டு ரசனையாவது ஒத்துப் போகின்றதாவென்று ……நான் கிராமத்தில் பிறந்து நாகரிகம் தெரியாமல் வாழ்ந்துவிட்ட ஒரு பட்டிக்காட்டுப் பெண். உங்கள் கவிதையிலும் இலக்கியத்திலும் தத்துவத்திலும் எனக்கு எக்காலத்திலும் ஈடுபாடு வரப் போவதேயில்லை. எனக்காக நீங்கள் உங்களின் எத்தனையோ உறவுகளையும் நண்பர்களையும் இழந்துவிட்டீர்கள். எதிர்காலம் பற்றி எனக்குத் தெரிகின்ற காட்சிகளையும் கோலங்களையும் இரண்டாவது மொழி ஒன்றில் எடுத்துச் சொல்ல எனக்குத் திறமை இல்லாமலிருக்கு வருந்துகிறேன். இது நானே எடுத்துக் கொண்ட தீர்க்கமான முடிவுதான்” (வண்ணத்துப்பூச்சியுடன் வாழ முற்படுதல்) என்று கூறும் தாய்லாந்துப் பெண்; சில நாட்களிலேயே பிரிந்து சென்றுவிடுகிறாள். இதனூடாக வேற்றுநாட்டுப் பெண்ணை திருமணம் செய்து வாழ்தல் என்பது தமிழரைப் பொறுத்தவரையில் கடினம் என்பதே இக்கதையில் உணர்த்தப்படுகின்றது. இதுபோன்ற இளைஞர்களின் பிரச்சனைகளை உணர்த்தும் சிறுகதைகள் பல உள்ளன.

கலாமோகனின் அதிகமான சிறுகதைகள் பண்பாட்டு நெருக்கீட்டை ஐரோப்பிய கலாசாரப் பின்னணியில் மிக அருகருகாக வைத்துப் பார்க்கின்றன. இவரின் கதைகளில் தமிழ்ப்பண்பாட்டு ஒழுக்கவியல் மரபின் தகர்வை மிக நுண்மையாக அவதானிக்கமுடியும். தனிமை> இழப்பு> பாலியல் நெருக்கீடு> ஒழுக்கவியல் மரபின் தகர்வு அல்லது படிப்படியான வீழ்ச்சி என்பவற்றை இவரின் கதைகள் கூறுகின்றன. கலாமோகனின் ‘நிஷ்டை’ தொகுப்பிலுள்ள ‘இரா>கனி> இழப்பு>ஈரம்> தெரு>’ மற்றும் உதிரியாக வெளிவந்த ‘புகார்> பாம்பு> 20 ஈரோ’ ஆகிய சிறுகதைகளையும் இதற்கு சான்றாக காட்டலாம். எம். வேதசகாயகுமார் ஈழத்தமிழ்ச் சிறுகதைகள் என்ற நீண்டதொரு கட்டுரையில் கலாமோகனின் படைப்புப் பற்றிக் கூறும்போது

“ஈழத்தமிழ் ஒழுக்கவியல் மரபின் மீது கலாமோகனின் படைப்புலகம் நிகழ்த்தும் கலகங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். ஈழத்தமிழ் ஆண்களோடு உலகின் வெவ்வேறு இனப் பெண்கள் உடலுறவு கொள்ள இச்சை கொள்கின்றனர். தயக்கமின்றி இவர்களால் உடன்படவும் முடிகிறது. ஒழுக்கவியல் மரபின் தகர்வை> கலாசார இழப்பை இவை உறுதி செய்கின்றன. ஆனால் இச்சுதந்திரம் ஈழத்தமிழ்ப் பெண்களுக்கு இவர் படைப்புலகில் மறுக்கப்படுகின்றது. இவர்களும் ஒழுக்கநெறி பிறழலாம். ஆனால் ஈழத் தமிழ் ஆண்களோடுதான். இந்த இரட்டை நிலைப்பாடு இவர்கள் படைப்புலக நேர்மையைக் குறித்த ஐயங்களைத் தோற்றுவிக்கின்றன.” (வேதசகாயகுமார்)

புகலிட இலக்கியமும் பண்பாடும் பலத்த விவாதங்களை ஏற்படுத்திய நா. கண்ணனின் ‘நெஞ்சு நிறைய’> அரவிந் அப்பாத்துரையின் ‘அனுபவம் தனிமை’ என்பவற்றை சாருநிவேதிதாவின் ‘உன்னத சங்கீதம்’ கதையின் அருகருகாக வைத்துப் பார்க்கும்போதுதான் இந்த கலாசார நெருக்கீடு அல்லது ஒழுக்கவியல் மரபின் தகர்வு தொpய வருகின்றது ஆனால் கலாமோகனும்> ஷோபாசக்தியும் கருணாகரமூர்த்தியும் முன்வைக்கும் இந்நெருக்கீட்டை மேலே குறிப்பிட்ட மூவரின் படைப்புக்களுடனும் வைத்துப் பார்க்க முடியாது. ஆனால் கோட்பாட்டு ரீதியாக கருணாகரமூர்த்தியை தவிர்த்து மற்றவர்களின் படைப்புக்கள் ஒரே கோட்டில் வரக்கூடியவை. கல்வி கற்கும் மாணவர்களின் நிலையோ வேறாக இருக்கிறது. தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு இடையிலான அவர்களின் புரிந்துணர்வில் தமிழ் - பிரெஞ்சு கலாசாரம் செல்வாக்குச் செலுத்துவதால்; முரண்பாடுகளுக்கு வழிவகுக்கின்றது. இதனை ரமேஸ் சிவரூபனின் ‘மலர்வு’ என்ற சிறுகதையில் நோக்கும்போது> “எல்லாவற்றுக்கும் உச்சக் கட்டம்போல் அந்தச் சம்பவம் நடந்தது. அன்று வதனிக்கும் நீச்சல் வகுப்பு இருந்தது மாலையில் நான் அவர்கள் வீட்டிற்குப் போனபோது மிகவும் சோர்வாகக் கண்களெல்லாம் சிவந்து கட்டிலில் படுத்திருந்தாள். ஏன்? என்ன நடந்தது? எனக் கேட்டபோது> நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருக்கும்போது சக வகுப்பு மாணவனாகிய ஆப்பிரிக்க இளைஞனொருவன் என்னை நீருக்கடியில் அமிழ்த்தி கட்டிப்பிடித்தபடி நிறைய நேரம் வைத்திருந்தான். அதனால் மூச்சுத் திணறி களைத்து விட்டேன் என்றாள். எனக்குக் கோபம் வந்தது. இனிமேல் நீ நீச்சல் வகுப்பிற்குப் போகக் கூடாது.அந்த நாளில் மெடிக்கல் எடுத்துக் கொடுத்துவிடு என்றேன்………..ஏன் போகக்கூடாது? அவன் விளையாட்டாகத்தான் செய்தான். இது சாதாரணம். எல்லோரும் இப்படி அடிக்கடி விளையாடுவோம் என்றாள் வதனி. ………இல்லை இனிமேல் நீ போகவேண்டாம் என்றேன்.…………அவன் என்னை என்ன கெடுத்தா விட்டான்? நீ இப்போதெல்லாம் என் மீது சந்தேகப்படுகிறாய். நீ ஒரு சந்தேகம் பிடித்;த பிராணி. என்று கத்தினாள் வதனி. இது என் கோபத்தை அதிகாpத்தது. நிதானமிழந்து அவள் கன்னத்தில் அடித்து விட்டேன். என்னை அடிக்க நீ ஆர்? உன்னை எனக்குப் பிடிக்கவில்லை. உடனடியாக வெளியே போ இனிமேல் இந்த வீட்டுப் பக்கம் வராதே! எனப் பிரெஞ்சில் கத்தினாள் வதனி. எனக்கு வந்த கோபத்தில் அவளைத் தரக்குறைவாக ஏசிவிட்டு வெளியேறினேன். அவள் கொஞ்சம் து}ரத்தில் இருந்தபோது அவளுக்கிருந்த உரிமைகளைப் பற்றிப் பேசிய நான் அவள் எனக்குரியவளாகப் போகிறாள் என்ற நிலை ஏற்பட்டு மிக அண்மைக்கு வந்தபோது சந்தேகம் கொண்ட சாதாரண மனிதனாகிப் போனதை தாமதமாகவே உணர்ந்து கொண்டேன்.”(ரமேஷ் சிவரூபன்)

இந்தப்பண்பாட்டு நெருக்கடியை புரிந்து கொள்வதற்கு

1. இளைஞர்கள் தமிழர் அல்லாத பிற நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்தல்.
2. தாய் தந்தையரின் விருப்புக்கு மாறாக தமிழ் இளைஞர் யுவதிகள் பிறநாட்டு இளைஞர் யுவதிகளை நண்பர்களாக ஏற்றுக் கொள்ளல்.
3. பிறநாட்டுச் சூழலின் மத்தியில் அந்நாட்டுக் கலாசாரத்தையே கைக்கொள்ளல்.

ஆகிய நிலைமைகளின் ஊடாகவே இப் பண்பாட்டு நெருக்கடியை விளங்கிக் கொள்ளமுடியும். இது@ திருமணம்> நட்பு> உறவு> என்பவற்றுள் ஏற்படும் பண்பாட்டு மாற்றம் என்பதற்கு மட்டும் பொருந்தக் கூடியது. ஷோபாசக்தியின் ‘ரவுடி ரதி’ என்ற சிறுகதையில் முற்றிலும் பிரெஞ்சு கலாசாரத்துக்குள் மாறிவிட்ட யுவதி ஒருவரின் நடத்தைக் கோலங்கள் பெற்றோருக்கு பெரும் பிரச்சனையாகத் தோன்றுவதும் எடுத்துக் காட்டப்படுகிறது. இதேபோல்> “தாங்கள் ஒழுக்கந் தவறி நடந்து கொண்டே தங்கள் சமூகப் பெண்பாலரிடம் தமிழ்ப் பண்பாட்டை கட்டிக் காக்க விழையும் ஆண் வர்க்கத்தினரின் முகத்திரைகளை ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் அரங்கேற்றங்கள்> சந்திராதேவியின் கலாசாரங்கள் ஆகிய கதைகள் கிழித்தெறிகின்றன.”( கலாநிதி நா. சுப்பிரமணியம்)

மனைவி பிள்ளைகளை ஈழத்தில் விட்டுவிட்டு வந்திருக்கும் ஒரு ஆணுக்கு அந்நிய நாட்டுப் பெண்ணுடன் ஏற்பட்ட நட்பு உடலுறவு வரை செல்ல முனையும்போது> “வாயை மூடு அஞ்ஜெலா . நான்காண்டுகளுக்கு மேலாக என் ஸ்பரிசம் இன்றி எனது உடல் சுகம் கிட்டாமல் துப்பாக்கி வேட்டுக்களுக்கும் செல் அடிகளுக்கும் பயந்து கொண்டு என் மனைவி என் செல்வங்களுடன் உயிரைப் பாதுகாக்க அங்கே போராடிக் கொண்டிருக்கிறாள். உனது வாதம் வேண்டுகோள் நியாயமாகப் பட்டால் என் மனைவியும் அங்கே இந்த சுகத்திற்காக உன்னைப்போல் ஒருவனைத் தேடிப்போயிருக்கலாம்” (முருகபூபதி) என்று லெ.முருகபூபதி ‘மழை’ சிறுகதையில் எழுதுவது> ஒருவகையில் புலம்பெயர்ந்த மண்ணில் பாலியல் ரீதியான தவறிழைத்தல்களை எடுத்துக்காட்டவும்> மறுபுறத்தில் அவர்களை சாpயான பாதையில் நெறிப்படுத்தலுக்காகவும் என்று கூறலாம். கருணாகரமூர்த்தியின் ‘வண்ணத்துப் பூச்சியுடன் வாழ முற்படல்> சுண்டெலி> கலைஞன்> தரையில் ஒரு நட்சத்திரம்> ஆகிய சிறுகதைகளும்> பார்த்திபனி;ன் ‘ஐம்பது டொலர்ப் பெண்ணே> தொpய வராதது> இழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ ஆகிய சிறுகதைகளிலும் இந்த உலகளாவிய மானிய நேயம் படைப்புக்களில் ஒன்றுபடுவதைக் கண்டுகொள்ளலாம்.

பார்த்திபனையும் கருணாகரமூர்த்தியையும் பொறுத்தவரையில்

1. புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்களின் செயற்பாடுகள்;.
2. அந்நிய கலாசார சூழலில் தமிழ்ப்பண்பாட்டு மனம் எதிர்கொள்ளும் மானிட அவலங்கள்.
3. பெண்கள் எதிர்கொள்ளும் உடல் உள சிதைவுகள்

ஆகியவற்றை தமது கதைகளில் வெளிப்படுத்துகின்றனர். மிகுந்த துயருடனும் கழிவிரக்கத்துடனும் வாசக மனங்களில் இரண்டு படைப்பாளிகளும் ஏற்றியும் விடுகின்றனர். நடுவானில் விமானம் வெடித்துச் சிதறியபோது யாருக்கும் தொpயாது செத்துப்போன பாலுவும்> கேட்ட காசு கொடுக்காததால் ஏதோ ஒரு நாட்டில் தெருவில் விட்டுவிட்டு வந்தபோது செத்துப் போன புனிதாவும்> பார்த்திபனின் கதைகளில் இந்த நூற்றாண்டை உலுக்கி விடக்கூடிய துயரக்கதைகளின் பட்டியலில் சேரக்கூடியவர்கள். ஆனால் பார்த்திபனிடத்தில் வெளிப்படும் துயர் கவிந்த கதைகள் கருணாகரமூர்த்தியிடம் மிக அடங்கிய குரலில் வெளிப்படுவதனையும் கண்டு கொள்ளலாம்.

இன்றைய புலம்பெயர்ந்த இளைஞர்களின்> புலம்பெயர்ந்தவர்களின் உண்மையான முகத்தைக் காட்டக்கூடிய கதைகளாக அவை இருக்கின்றன. புலம்பெயர் வாழ்பனுபவத்தினூடாக சில முக்கியமான படைப்புக்களைத் தருபவர்களில் அடுத்து குறிப்பிட வேண்டியவர்கள் கலாமோகனும்> ஷோபாசக்தியும். இருவரிடமும் கதை> கதைமொழி> கதைக்குரிய வடிவம் என்பவற்றில் அதிக ஒற்றுமை காணக் கிடைக்கின்றது.

1. நவீன எழுத்து வடிவம் சார்ந்த பிரக்ஞை.
2. தமிழர் ஒழுக்கவியல் மரபின் சரிவுகளை படைப்பில் கொண்டு வருதல்.

தமிழ்ப் பண்பாட்டால் கட்டமைக்கப்பட்ட மாந்தர்களின் ஒழுக்கவியல் மரபினை உலுக்கிவிடக்கூடியவையே இவரது சிறுகதைகள். ஆண்-பெண் உறவுநிலை குறித்தும்> சமூகத்தில் மறைந்திருக்கும் பிறழ்வான நடத்தைகள் குறித்தும்> இவரின் கதைகள் கேள்வி எழுப்புகின்றன. அவற்றை எந்தவித விமர்சனமுமின்றி> பூடகமுமின்றி சமூகத்தின் முன் வைக்கும் கலாமோகன@;;  பலத்த விவாதங்களுக்குரிய களங்களையும் தோற்றுவித்திருக்கின்றார்.
இவரின் ‘கனி’ என்ற கதை தமிழ்நாட்டில் மிகுந்த விவாதத்திற்கு உட்படுத்தப்பட்ட கதை. ‘ஈரம்> கனி> இழப்பு> 20 ஈரோ> ஆகிய கதைகளை இவ்வாறு குறிப்பிடலாம்.

‘ஜெயந்தீசன் கதைகள்’ தொகுப்பில் சமூகத்தின் மீது கலாமோகன் வைக்கும் குற்றச்சாட்டுகள் பல. போலி> ஆடம்பரம்> சாதி> சீதனம்> கண்மூடித்தனமான மரபுப் பேணுகை என்பவற்றை ஜனரஞ்சக ஊடகத்திற்குரிய மொழி நடையில் முன்வைக்கின்றார். தமிழரின் தற்கால வாழ்வின் மீதான கேள்வியாக அமையும் இக்கதைகள் புலம்பெயர் படைப்புலகில் இன்னொரு தளத்தில் முக்கியமானவை. ஏற்கனவே கலாமோகனுடன் ஒப்பிட்டவாறு தமிழ்ப்பண்பாட்டின் சரிவுகளை வெளிப்படு;த்தும் பல கதைகள் ஷோபாசக்தியிடமும் உள்ளமை உள்ளார்ந்து நோக்கும்போது புலப்படும். ‘பகுத்தறிவு பெற்ற நாள்> பத்துக் கட்டளைகள்> காய்தல்’ ஆகியன இவ்வகையில் ஆய்வுக்குரியன.

முதல்முதலில் ‘பயண இடைவெளியில்’ பெண் உடலும் உளமும் சிதைக்கப்படல் மிகத் தாமதமாகவே புலம்பெயர் படைப்புலகில் வெளிப்படுகிறது. அந்த வெளிப்பாடுகளில் மூன்று கதைகள் மாத்திரம் இதுவரை கிடைத்துள்ளன. ஒன்று ஷோபாசக்தியின் ‘தனது மற்றது நான்காம் பிரஜை’> ஏனையவற்றுள் சுமதிரூபனின் ‘யாதுமாகி நின்றாள்’> பார்த்திபனின் ‘வந்தவள் வராமல் வந்தாள்’ ஆகியவை. இந்த அனுபவம் முதல் முதலில் இவர்களிடமே பதிவாகின்றது.

தொகுப்பு
புகலிட இலக்கியமும் பண்பாடும் புலம்பெயர்ந்த தமிழரின் வாழ்க்கை இன்று பல்வேறுவிதமான நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. அது மொழியிலும்> குடும்ப உறவுநிலைகளிலும்> இனம் சார்ந்த மரபுவழிப்பட்ட பேணுகையிலும் பலத்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஆனாலும் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் (கனடா - ரொரன்ரோ) தமிழர்கள் குவிந்து வாழ்கின்ற சூழல் இன்று ஏற்பட்டிருப்பதனால் மொரீசியஸில் தமிழுக்கும் தமிழ்ப்பண்பாட்டுக்கும் நேர்ந்த அவலம் போல அச்சப்படவேண்டிய அவசியம் இப்போது இல்லை.சில தலைமுறைகளுக்குப் பின்னர் தமிழ்ப்பண்பாடு அதன் அடையாளமாகப் பேணுவது தொடரக்கூடும். அது தமிழ் மொழியினூடாக அல்லாத அந்தந்த நாட்டு மொழி உணர்வுக்கூடாகவே தொடர வாய்ப்புண்டு. இந்த நிலையில் எமது அடையாளத்தைப் பல விதத்திலும் கட்டிக்காக்க வேண்டிய தேவை தாய்ச்சமூகத்திற்கும் புலம்பெயர்ந்த சமூகத்திற்கும் பொறுப்பான கடமைகளாகவுள்ளன. இதனை இலக்கியத்திற்கு ஊடாக மட்டுமன்றி சமூகவியல் மொழியில் பண்பாட்டு ஆய்வுகளினூடாகவும் நோக்கினால் மேலும் பல உண்மைகள் வெளிவர இடமுண்டு. (இலங்கை திருகோணமலையில் கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் காணி காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய தமிழ் இலக்கிய விழா 2010 ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

உசாத்துணை
1. பக்தவத்சலபாரதி ; 1999> பண்பாட்டு மானிடவியல்> சென்னை> மணிவாசகர் பதிப்பகம்.
2. சிவத்தம்பி கா. பேராசிரியர் ;1988> தமிழ்ப்பண்பாட்டின் மீள்கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும். கொழும்பு.
3. நித்தியானந்தம். வி கலாநிதி ;2002> புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழாpன் பண்பாட்டுத் தனித்துவம்- சில அவதானிப்புகள்> கொழும்பு தமிழ்ச் சங்கம்.
4. குணேஸ்வரன். சு : 2006> “இருபதாம் நூற்றாண்டில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் கவிதை புனைகதைகள் பற்றிய ஆய்வு” (பதிப்பிக்கப்படாத
முதுதத்துவமாணி ஆய்வேடு) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்> உயர்பட்டப் படிப்புகள் பீடம்.
5. புலம்பெயர்ந்தோர் கவிதைகள் (தேர்ந்தெடுத்தவை)
6. புலம்பெயர்ந்தோர் சிறுகதைகள் (தேந்தெடுத்தவை)

kuneswaran@gmail.com
http://kathiyaalkal.blogspot.com/2010/10/blog-post_24.html


 
aibanner

 ©©©© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்