மீள்பிரசுரம்: சங்கமம்.
இலங்கையில் தமிழர்களுக்கென தனி நாடு வேண்டும் - - ஜெயலலிதா -
-Monday,
09 March 2009 -சென்னை,மார்ச்.9- இலங்கையில் உள்ள தமிழர்கள் அங்குள்ள
சிங்களவர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் சட்டத்தின் முன் அனைவரும் சமம், கல்வி
மற்றும் வேலை வாய்ப்பில் சம உரிமை ஆகிய இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளை நாங்கள்
ஆதரிக்கிறோம். இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய போராட்டத்தை நாங்கள்
அங்கீகரிக்கிறோம். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுயநிர்ணய அதிகாரம்
பெற்ற தமிழர் நாடு வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
2008-ம் ஆண்டு துவக்கத்தில், இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்களையும், நவீன
சாதனங்களையும் இந்திய அரசாங்கம் அனுப்பியதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக்
காண்பித்தன. ஊடகங்களில் வெளி வந்த செய்திகளை காங்கிரஸ் தலைமையிலான, தி.மு.க. அங்கம்
வகிக்கும் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மறுக்கவில்லை. பின்னர், இந்திய
பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும், இந்திய பிரதமருக்கு மிக
நெருக்கமானவர்களும் இலங்கைக்கு சென்று வந்த தகவலையும் ஊடகங்கள் வெளிப்படுத்தின.
இந்தச் செய்திகளையும் மத்திய அரசு மறுக்கவில்லை.
இந்தக் கேள்விகளை எல்லாம் நான் வினவிய போது, இது மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள்
வருகிறது என்பதும், இதுகுறித்து மத்திய அரசு மாநில முதல்-அமைச்சரை கலந்து
ஆலோசிக்கத் தேவையில்லை என்பதும் கூட எனக்குத் தெரியவில்லை என்று கருணாநிதி
கூறினார்.
சென்ற வருடம் ஒரு மாத கால ரகசிய பயிற்சியை நூற்றுக்கணக்கான இலங்கை ராணுவ வீரர்கள்
அரியானா மாநிலத்தில் மேற்கொண்டார்கள். பயிற்சியை முடித்த சில இலங்கை ராணுவ
வீரர்களின் பேச்சுக்கள் அடங்கிய தொகுப்பு உட்பட இந்தப் பயிற்சி குறித்து ஜெயா
தொலைக்காட்சி வெளிச்சம் போட்டுக் காட்டியது. இது எனக்கு தெரிந்தவுடன், நான் இதை
எதிர்த்து குரல் கொடுத்தேன்.
இந்தப் பயிற்சி அதிநவீன மற்றும் தலைசிறந்த சாதனங்களை பெற்றுள்ள இந்திய ராணுவத்தால்
அளிக்கப்பட்டது. இந்திய அரசின் முழு ஒப்புதலோடு தான் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது
என்பது வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். வேறுவிதமாக சொல்ல
வேண்டுமென்றால், இலங்கையில் நடத்தப்படும் இனவெறி தாக்குதல் ஐக்கிய முற்போக்கு
கூட்டணி அரசின் முழு ஆதரவோடு மட்டுமல்லாமல், முழு ஈடுபாடு கொண்ட ஆதரவுடன்
நடத்தப்பட்டது.
ஒரு நாட்டிற்கு மற்றொரு நாடு ஆயுதங்களை அளிப்பதும், பயிற்சி கொடுப்பதும்
புதுமையானது அல்ல. ஆனால் இலங்கையை பொறுத்தவரையில், யார் தாக்கப்படுகிறார்கள்? இந்த
ஆயுதங்களும், பயிற்சியும் யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன? என்பது தான்
கேள்வி.
இலங்கை அரசு தன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும், ராணுவ பலத்தையும் அங்குள்ள
தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறது என்பது அனைவரும் நன்கு அறிந்த ஒன்றாகும்.
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகள் மீது தான் துப்பாக்கிச் சூடு
நடத்தப்படுகிறது என்று இலங்கை அரசு கூறலாம்.
ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது, விடுதலைப்புலிகள் மீது மட்டும்
நடத்தப்படும் தாக்குதல் அல்ல, பெரும்பாலான அப்பாவித் தமிழர்களின் மீது நடத்தப்படும்
தாக்குதல் இது என்பது தெளிவாகிறது. இதில் உள்ள முக்கியமான சாராம்சம் என்னவென்றால்,
இந்திய ஆயுதங்களும், தோட்டாக்களும், வெடி மருந்துகளும். அப்பாவி இலங்கைத்
தமிழர்களுக்கு எதிராக இன்று பயன்படுத்தப்படுகின்றன.
இதுமட்டுமல்லாமல், இலங்கை கடற்படை, கடலில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களையும்
சுட்டு வீழ்த்துகிறது. அண்மையில், இந்தியாவிற்கு சொந்தமாக இருந்து, பின் இலங்கைக்கு
தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவில் இந்திய மீனவரை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றது.
விதியின் திருவிளையாடலை என்னவென்று சொல்வது!
தொடர்ந்து இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுவந்த போதிலும், காங்கிரஸ் தலைமையிலான
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்தக் கொடுமைகளை எல்லாம் மவுனமாக வேடிக்கை
பார்த்துக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், இலங்கை அரசுக்கு ஆயுதங்களை அனுப்பியும்,
நவீன சாதனங்களை அளித்தும், இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்தும், இலங்கை
அரசுடன் ஒத்துழைக்கும் ஒரு அரசாக இருந்துள்ளது.
இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் என்னுடைய நிலைப்பாட்டை அனைவரும் அறிவர்.
இலங்கையில் உள்ள தமிழர்கள் அங்குள்ள சிங்களவர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும்
என்ற தமிழர்களின் உரிமைக் குரலை நாங்கள் அங்கீகரிக்கிறோம். சட்டத்தின் முன்
அனைவரும் சமம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சம உரிமை ஆகிய இலங்கைத் தமிழர்களின்
கோரிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய போராட்டத்தை
நாங்கள் அங்கீகரிக்கிறோம். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுயநிர்ணய
அதிகாரம் பெற்ற தமிழர் நாடு வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள்
ஆதரிக்கிறோம்.
ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் இறக்க காரணமான, ஏற்கெனவே
திசை மாறிப்போன ஆயுதம் ஏந்திய போராட்டத்தை தான் நாங்கள் எதிர்க்கிறோம். இந்த ஆயுதம்
ஏந்திய போராட்டத்தின் விளைவாக முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழக மண்ணில்
படுகொலை செய்யப்பட்டது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இவை இரண்டையும்
ஒன்று சேர்த்து இந்தப் பிரச்சினையை குழப்ப முயற்சி செய்கிறார் கருணாநிதி.
இலங்கையில் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் சண்டையில், ஒன்றும் அறியாத அப்பாவி
தமிழ் மக்கள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். அவர்கள் வீடு இன்றி அகதிகளாக தங்களுடைய
நாட்டிலேயே அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உணவு, உடை, மருந்து
எதுவுமின்றி, தங்க வசதியுமின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அவல
சூழ்நிலைக்கு பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
பலமாதங்களாக நிலவுகின்ற சூழ்நிலை இது தான்.
இப்படி அல்லல்படும் மக்களுக்கு, தந்தி மூலமாகவோ, அல்லது இந்திய தூதரகத்தின்
கீழ்மட்ட அதிகாரியை கடிந்து கொள்வதின் மூலமாகவோ, ஆயிரக்கணக்கில் துன்பப்பட்டுக்
கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவித நிவர்த்தியும் கிடைக்காது.
இலங்கையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்திய அரசு உணவு, உடை மற்றும்
மருந்துகளை ஏன் அனுப்பவில்லை? மனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு
உடனடியாக உதவி புரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதைத்தான் மாபெரும் தோல்வி என்று நான்
சுட்டிக்காட்டுகிறேன்.
இன்று நாம் உண்ணாவிரதம் இருப்பதினால், பசியினால் வாடும் இலங்கைத் தமிழர்களின் வயிறு
நிரம்பப் போவதில்லை. இந்த உண்ணாவிரத அறப்போராட்டம் ஒரு அடையாளமே. இந்த
உண்ணாவிரதத்தின் மூலம், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் துயர நிகழ்வுகள்
குறித்து, தமிழ் நாட்டு மக்கள் மிகவும் கவலை அடைந்து இருக்கிறார்கள் என்பதையும்;
இதுபோன்ற சம்பவங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் நடந்து கொள்கின்ற விதம், தமிழக
மக்களை வருத்தம் அடைய வைத்திருக்கிறது என்பதையும்; தமிழக அரசுக்கும், இந்திய
அரசுக்கும் தெரியப்படுத்துகிறோம்.
அ.தி.மு.க. சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதி என்ற முறையிலும், இலங்கைத்
தமிழர்களின் நிவாரணத்திற்காக நான் நிதி வசூல் செய்ய உத்தேசித்துள்ளேன்.
உண்ணாவிரத அறப்போராட்டங்கள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் உண்டியல்கள்
வைக்கப்பட்டுள்ளன. அனைவரும் தாராளமாக நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்
கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
நன்றி; http://sangamamlive.in/index.php?option=com_content&task=view&id=813
|